Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 055 (Jesus the light of the world)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஈ) உலகின் ஒளியாகிய இயேசு (யோவான் 8:12-29)


யோவான் 8:12
12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

இயேசுவே தெய்வீக ஒளியாவார். அவருக்கு அருகில் வருகிற எவரும் அவர்களுடைய பாவங்களை அறிந்துகொண்டு, நியாயம் தீர்க்கப்பட்டு, வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டு, சுகப்படுத்தப்பட்டு கிறிஸ்துவில் வெளிச்சமாக மாறுகிறார்கள். இயேசுவைத் தவிர வேறு எந்த வெளிச்சமும் நமக்கு ஒளிகொடுத்து, நம்முடைய தீய இருதயத்தைக் குணப்படுத்த முடியாது. அனைத்துத் தத்துவங்களும் சமயங்களும் அளவிட்டுப் பார்க்கும் போது பெலவீனமானவை. ஏனெனில் அவை கற்பனையான விடுதலையையும் பரதீûஸயுமே வாக்குப்பண்ணுகிறது. உண்மையில் அவைகள் இன்னும் ஆழமான குருட்டுத் தனத்திற்குள் வழிநடத்தி அவர்களைக் கட்டும். அவருடைய வெளிச்சமோ ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும் பிரகாசமுள்ள சூரியனைப் போன்றது. நாம் இயேசுவை விசுவாசத்தினால் அணுகி, சுயவெறுப்புடன் அவரைப் பின்பற்ற வேண்டுமாயின் இந்த ஆத்தும சுகம் ஒரு நிபந்தனையாக இருக்கிறது. இவ்விதமாக நாம் தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றும்போது நாம் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மாறுகிறோம். நம்முடைய இலக்காகிய பிதாவின் மகிமைக்கும் குமாரனுடைய ஜீவப் பிரகாசத்திற்கும் நாம் சென்றடைய அவருடைய வெளிச்சம் நமக்கு வழிகாட்டும்.

யோவான் 8:13-16
13அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். 14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள். 15 நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; 16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

“நானே” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு யூதர்கள் இடறலடைந்தார்கள். அவர் பெருமையுள்ளவராக தன்னை உலகத்தின் வெளிச்சம் என்று கூறுவதாக நினைத்தார்கள். அவருடைய சாட்சி மிகைப்படுத்தப்பட்ட பொய் என்றும் ஆத்துமாக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

"அதற்கு மறுமொழியாக இயேசு கூறியது: “என்னைக் குறித்த சாட்சி உண்மையுள்ளதாயிருக்கிறது. காரணம் நானே எனக்கு சாட்சி கொடுக்காமல், நான் எப்போதும் இணைந்திருக்கிற இறைவனுடைய சத்தியமே எனக்குச் சாட்சி கொடுக்கிறது. நான் என் பிதாவினிடத்திலிருந்து வந்தேன் என்றும் மீண்டும் அவரிடமே செல்கிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. நான் என்னைப் பற்றிப் பேசுவதில்லை, ஆனால் என்னுடைய வார்த்தைகள் இறைவனுடைய சத்தியமாயிருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் வல்லமையும் ஆசீர்வாதமும் நிறைந்த சத்தியமாயிருக்கிறது.”

“உங்களுடைய வார்த்தைகள் மோலோட்டமானவைகள், ஏனெனில் மனிதன் வெளிப்புறத்தை மட்டுமே காண்கிறான். நீங்கள் உங்களை நீதிபதிகள் என்று நினைத்துக்கொண்டு, உங்களால் சரியாக நியாயத் தீர்ப்பிட முடியும் என்று உங்கள் திறமைகளை நம்புகிறீர்கள். காரியங்களின் தோற்றுவாயையும், இயங்குவிசையையும், அவற்றின் விளைவுகளையும் அறியாத காரணத்தினால் தவறு செய்கிறீர்கள். இவற்றிற்கான ஆதாரம் நீங்கள் என்னை அறியாதிருப்பதேயாகும். நீங்கள் என்னுடைய மனிதத் தன்மையை மட்டும் வைத்து என்னைப் பற்றி முடிவெடுக்கிறீர்கள், ஆனால் நான் எல்லாக் காலத்திலும் இறைவனில் நிலைத்திருக்கிறேன். இதை நீங்கள் உணர்ந்துகொண்டால் உலகத்தின் அடிப்படைத் தன்மையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

இயேசுவே ஒரே வேளையில் இவ்வுலகத்தின் நீதிபதியாகவும் மனுவுருவான சத்தியமாகவும் இருக்கிறார். அவர் நம்மை நியாயம் தீர்க்கவோ நம்மை அழிக்கவோ வராமல், இரட்சிக்க வந்தார். அவர் பரிதாப நிலையிலுள்ளவர்கள், கடுமையான குற்றவாளிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகிய ஒருவரையும் புறக்கணிக்காமல், அவர்களைத் தன்னுடைய அன்புக்குள் இழுத்துக்கொள்ளவே விரும்புகிறார். யாரையும் நீங்கள் இழிவாகக் கருதாமல், அவர்களில் இயேசு உருவாக்க நினைக்கும் சாயலை உய்த்துணருங்கள்.

யோவான் 8:17-18
17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. 18 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.

நம்முடைய பெலவீனத்தின் காரணமாக, இயேசு நியாயப்பிரமாணத்தின் நிலைக்கு இறங்கி வந்தார். அவர் அதை உங்களுடைய நியாயப்பிரமாணம் என்று குறிப்பிடுகிறார். அதற்கு பாவிகளாகிய உங்களுக்கு தேவையான ஒழுங்கமைப்பு அது என்று பொருள். இந்த நியாயப்பிரமாணத்தின்படி ஒருவன் தன்னுடைய நியாயத்தை நிலைநிறுத்த விரும்பினால் அவன் இரண்டு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும். அதனடிப்படையிலேயே நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் (உபா. 17:6; 19:5). இயேசு அவர்களுடைய கோரிக்கையை எதிர்க்கவில்லை. அவர் தன்னுடைய அறிக்கையை முதல் சாட்சியாகவும், அவருடைய பிதாவை இதை உறுதிப்படுத்தும் சாட்சியாகவும் கருதினார். பிதா தனக்கும் குமாரனுக்கும் இடையில் சிறப்பான ஒருமைப்பாட்டைப் பேணுகிறார். இந்த ஒருமைப்பாடின்றி குமாரன் எதையும் செய்ய முடியாது. இது பரிசுத்த திரித்துவத்தின் இரகசியமாகும். இயேசு இறைவனுக்குச் சாட்சி கொடுப்பதைப் போல, இறைவனும் இயேசுவுக்குச் சாட்சி கொடுக்கிறார்.

யோவான் 8:19-20
19அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். 20 தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

யூதர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளும் விருப்பம் அவர்களிடத்தில் இல்லை. மாறாக வெளிப்படையான தேவதூஷணத்தில் அவரை அகப்படுத்த விரும்பினார்கள். ஆகவே அவர்கள், “பிதா என்று யாரை அழைக்கிறீர்?” என்று இயேசுவிடம் கேட்டார்கள். யோசேப்பு இறந்துபோய் வெகுகாலம் ஆகிவிட்டது. “என் பிதா” என்று சொல்லும்போது யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவரே நேரடியாக இறைவனைத் தன்னுடைய பிதா என்று சொல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

இயேசு அவர்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை, ஏனெனில் இயேசுவை அறியாமல் இறைவனை அறிய முடியாது. பிதாவில் குமாரன் இருக்கிறார், குமாரனில் பிதா இருக்கிறார். குமாரனைப் புறக்கணிப்பவன் எப்படி உண்மையாக இறைவனை அறிந்துகொள்ள முடியும்? ஆனால் யார் குமாரனை விசுவாசித்து, அவரை நேசிக்கிறார்களோ அவர்களுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். குமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான்.

இந்தக் காரியங்கள் காணிக்கை படைக்கப்படும் தேவாலயத்தின் ஒரு முனையில் பேசப்பட்டது. காவலாளிகள் தேவாலயம் முழுவதிலும் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் போர்ச்சேவகர்கள் ஒருவரும் இயேசுவைக் கைதுசெய்யத் துணியவில்லை. இறைவனுடைய புயமே அவருக்குப் பாதுகாப்பாயிருந்தது. அவர் காட்டிக்கொடுக்கப்படும்படி இறைவன் நியமித்த நேரம் இன்னும் வரவில்லை. பரலோக பிதா மட்டுமே உங்கள் முடிவை நிர்ணயிக்க முடியும்.

விண்ணப்பம்: ஓ, கிறிஸ்துவே நாங்கள் உம்மைக் கனப்படுத்தி, உம்மில் அன்புகூருகிறோம். நியாயத்தீர்ப்புக்கு பாத்திரவான்களாகிய எங்களைத் தண்டியாமல் நீர் இரட்சிக்கிறீர். உம்மிடத்தில் வருகின்றவர்களை ஒளியூட்டும் உலகத்தின் ஒளி நீரே. உம்முடைய அன்பின் கதிரியக்கத்தினால் எங்களை மறுரூபப்படுத்தி, நாங்கள் உம்மை அறியும்படி எங்கள் இருதயத்தை மென்மையாக்கும்.

கேள்வி:

  1. இயேசு தன்னைக் குறித்து உலகத்தின் ஒளி என்று சாட்சி பகர்வது பரலோக பிதாவைக் குறித்த நம்முடைய அறிவுடன் எவ்வாறு தொடர்புடையதாயிருக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 08:11 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)