Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 087 (Paul at Athens)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)


அப்போஸ்தலர் 17:30-34
30 அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். 31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 32 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள். 33 இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான். 34 சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.

அனைத்தையும் படைத்தவராகிய இறைவனுடைய மேன்மையையும் அவருடைய படைப்பாகிய மனிதன் இறைவனுடைய சாயலைப் பிரதிபலிப்பதால் மனித வாழ்வின் பொருளையும் கிரேக்க தத்துவ ஞானிகளுக்கு பவுல் விளக்கப்படுத்தினார். ஒரு மனிதன் தன்னில் இருக்கும் இறைவனுடைய குணாதிசயத்தைக் கெடுத்தால் அவன் இறைவனுடைய நீதியான தண்டனைக்கு ஆளாவான். இறைவன் அனைத்து மனிதர்களையும் நியாயம் விசாரித்து அவர்களுக்குக் தண்டனை வழங்குவதற்கென்று ஒரு நாளை நியமித்திருக்கிறார். ஒவ்வொரு மனசாட்சியும், உண்மையின் அடிப்படையில் அமைந்த எந்தக் கருத்தும், அனைத்து மதங்களும் இறைவன் இவ்வுலகத்தின் மனிதர்கள் ஒவ்வொருவரையும் நியாயத் தீர்ப்பிடுவார் என்பதை வலியுறுத்துகின்றன. இறைவனுடைய இந்த நியாயத்தீர்ப்பை யாரும் தவிர்க்க முடியாது. மேலும் இந்த நியாயத்தீர்ப்பின் அளவுகோல் இறைவனாகவே இருக்கிறார்: “நான் பரிசுத்தராயிருப்பதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார். பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு பவுல் முன்வைத்த நான்காவது உண்மை இறைவனுடைய நியாயவிசாரணையையும் நியாயத்தீர்ப்பையும் பற்றியது.

வரவிருக்கின்ற இந்த நீதியின் தண்டனையிலிருந்து தப்புவதற்கு மனிதர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, மனமாற்றமடைந்து, தங்கள் உள்ளங்களைப் புதிதாக்கிக்கொள்ள வேண்டும் என்று பவுல் அழைப்பு விடுக்கிறார். நாம் இலட்சியவாத நோக்கங்களைப் பின்பற்றுவதோ, தெய்வங்களையும் ஆவிகளையும் குறித்த மூடப்பழக்கவழக்கங்களில் பங்கேற்பதோ இல்லை. ஆனால் நாம் அனைவருமே மனுக்குலத்தின் முடிவாகிய நடுத்தீர்வை நாளை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறோம். வாழ்வின் பொருள் கனவுகளிலோ, இறைநம்பிக்கையற்ற சிந்தனைகளிலோ அல்லது இவ்வுலகத்தின் கலையையும் கலாச்சாரங்களையும் அனுபவிப்பதிலோ தங்கியிராமல், அந்த நடுத்தீர்வை நாளுக்கு ஆயத்தப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. ஒரு மனிதன் இந்த நடுத்தீர்வை நாளுக்கு ஆயத்தப்படுவதை இறைவன் அவனுடைய விருப்பத்தேர்வாக விட்டுவிடவில்லை. மாறாக, இறைவன் இவ்வுலகத்தில் எங்கும் குடியிருக்கும் மனிதர்கள் அனைவரும் இறைநம்பிக்கையற்ற மூடத்தனமான நம்பிக்கைகளையும் உயிரற்ற தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் நம்பாமல் அவற்றை விட்டு விட்டு தன்னில் நம்பிக்கை வைத்து அவரிடத்தில் திரும்ப வேண்டும் என்று அழைக்கிறார். இறைவன் மட்டுமே உயிராயிருக்கிறார். இந்த நடுத்தீர்வையின் நாள் இல்லாமல் மெய்யான இறைபக்தியில்லை. இவ்வாறு அத்தேனர்களோடு பவுல் பேசியபோது அவர்களுக்கு மனந்திரும்பும்படி அவர் விடுத்த அழைப்பு அவரது ஐந்தாவது செய்தியாக இருந்தது.

அப்போஸ்தலனாகிய பவுல் நீண்ட முகவுரைக்குப் பிறகு தன்னுடைய பிரசங்கத்தின் இரண்டாம் பாகத்திற்கு வருகிறார். அப்பகுதியில் இந்த நியாயத்தீர்ப்பு பரிசுத்தமும் குற்றமற்றவரும் மரணத்தை வென்றவருமாகிய இயேசு என்னும் மனிதனாலேயே நிறைவேற்றப்படும் என்று எடுத்துரைக்கிறார். இந்த மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே இறைவன் இறந்தவர்களிலிருந்து உயிரோடு எழுப்பியிருக்கிறார். அவர் இன்றும் உயிருள்ளவராக இருந்து பாவம், மரணம் ஆகியவற்றையும் அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டிருக்கிறார். ஆகவே அவர் அனைத்து மனிதர்களையும் நியாயத்தீர்ப்பிட உரிமையும் அதிகாரமும் உடையவராயிருக்கிறார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே மனிதனுடைய நீதிபதி என்பதுதான் மார்ஸ் மேடையில் பவுலுடைய ஆறாவது பிரசங்கக் குறிப்பாயிருந்தது.

பாவிகளை அழித்து ஒழிப்பது கிறிஸ்துவினுடைய திட்டமல்ல. தம்முடைய சமாதானத்தின் அரசை நிறுவி அனைத்து மக்களுக்கும் விடுதலையைக் கொடுப்பதே அவருடைய திட்டமாகும். இறைவனுடைய அதீனத்திற்குள் நாம் செல்வதற்கு தத்துவஞானக் கருத்துக்களை அறிந்துகொள்வதால் நமக்குக் கிடைக்காது. அது நம்பிக்கையின் மூலமாகவும் முற்றிலும் நம்மை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலமாகவுமே நமக்குக் கிடைக்கும். இந்த நம்பிக்கைக்குள் வர கிறிஸ்து நமக்கு உதவிசெய்து, புதிய உடன்படிக்கையை அவர் நமக்குக் கொடுக்கிறார். அதன் மூலமாக நாம் வரவிருக்கும் அந்த நீதியான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு வழி உண்டாகிறது. நாமாகவே மனந்திரும்பி நம்முடைய மனோபலத்தினால் நாம் மனமாற்றம் அடைய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. மனந்திரும்புதல், மனமாற்றம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் அவரே நமக்கு உதவிசெய்கிறார். இது வெறும் நம்பிக்கையாக மட்டுமின்றி உயிருள்ள கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் உறவாகவே மலருகிறது. நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தி, நமது நடத்தையை தூய்மைப்படுத்தும் செயலை பரிசுத்த ஆவியின் வல்லமை நமக்குக் கொடுக்கிறது. கிறிஸ்துவில் நாம் வைக்கும் நம்பிக்கை நம்முடைய உள்ளான மனிதனைப் புதுப்பிக்கிறது. அதனால்தான் நாம் கிறிஸ்துவைப் பின்பற்றினால் பல தெய்வங்களையோ, ஆவிகளையோ அல்லது தத்துவங்களையோ நம்ப முடியாது. நாம் நம்மை முற்றிலுமாக நமது மீட்பருக்கு ஒப்புக்கொடுக்கும்போது அவர் நம்மைத் தம்முடைய சாயலில் உருவாக்குகிறார். பவுலுடைய பிரசங்கத்தின் ஏழாவது குறிப்பை நீங்கள் கவனித்தீர்களா? நிலையான விடுதலைக்கான வழியாகிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கத்தக்கவர் கிறிஸ்து மட்டுமே தத்துவஞானமல்ல.

கிறிஸ்துவின் வாழ்வில் நாம் அதிகம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம் அவருடைய உயிர்த்தெழுதலாகும். அவருடைய உயிர்தெழுதலில்தான் இறைவனுடைய வல்லமையும், பரிசுத்தமும், ஞானமும் உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மரணத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்தார். அவருடைய உயிர்தெழுதலினால் அனைத்து துக்கமும் கண்ணீரும் மேற்கொள்ளப்பட்டது. மனிதன் சந்திக்கப்போகும் நீதியான நியாயத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அல்லது வாழ்க்கை பொருளற்றது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மனித வாழ்விற்கு நம்பிக்கையில்லை என்று நாம் கருதத் தேவையில்லை. நாம் துறவறக் கருத்துடைய ஸ்தோக்கியர்களுடைய சிந்தனைக்கு உட்படக்கூடாது. தூய்மை, மகிமை, மகிழ்ச்சி ஆகியவை ஒளிரக்கூடிய எதிர்கால நிலை வாழ்வை நாம் நம்பிக்கையோடு தேட வேண்டும். பவுலுடைய பிரசங்கத்தின் எட்டாவது குறிப்பும் மிகவும் முக்கியமானதுமானது. அது தத்துவஞானிகள் வாழ்வளிப்பவராகிய உயிருள்ள கிறிஸ்துவை நம்பவேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பாகும். அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையினால் அவருக்குள் நமக்கு நிலைவாழ்விருக்கிறது. இந்த இறுதிக் கருத்துடன் வரலாற்றில் இந்த உண்மை எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதையும் அவர்களுக்கு பவுல் காண்பித்தார். அவர்கள் கிறிஸ்தவ வாழ்வை ஏற்றுக்கொள்வதற்கு உதவியாயிருக்கும் அடிப்படையான புரிதலையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

மனிதனுடைய தத்துவத்தின்படி வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிவடைகிற காரணத்தினால், பவுல் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசியபோது அது அவர்களுக்கு நகைப்பிற்குரியதாக இருந்தது. நிலைவாழ்வில் நுழையும் வாசலோடு மனிதனுடைய அனைத்து சிந்தனைகளும் முடிவடைந்து விடுகின்றன. மனிதனுடைய சிந்தனை ஆற்றலுக்கு உட்பட்டதும் அதன்படி சாத்தியமானதுமாக இருக்கும் அளவில் மட்டுமே தன்னால் சிந்திக்க முடியும் என்று உண்மையான சிந்தனையாளன் அறிக்கை செய்கிறான். கிறிஸ்துவின் உயிர்தெழுதல் மனித அறிவிற்கு புரிந்துகொள்ள முடியாததாகவும் சாத்தியமற்றதாகவும் தோன்றுகிறது. அத்தேனர்கள் கிறிஸ்துவின் திறக்கப்பட்ட கல்லறையினிமித்தம் இடறலடைந்தார்கள். அது அவர்களுக்கு ஏற்க முடியாததாயிருந்தது. அவர்களுடைய தத்துவங்கள் அனைத்தும் மனிதனுடைய கற்பனா சக்திக்கும் மனித சிந்தனையில் குறைபாட்டிற்கும் உட்பட்டதாகவே இருந்தது. முழுமையான அவநம்பிக்கையில் அகப்பட்டிருந்த அவர்களுடைய புரிதல் மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைக் குறித்து மிகவும் குழப்பத்தில் இருந்தது. பரிசுத்த ஆவியானவரினாலே அன்றி ஒருவராலும் கிறிஸ்துவைப் பற்றிய இரகசியங்களை யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்று பவுல் தன்னுடைய கடிதத்தில் வெளிப்படையாக எழுதுகிறார். இவ்வாறு தன்னுடைய சுய ஆவியினால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு மனிதன் இறைவனுடைய ஆவியானவர் தன்னுடைய வாழ்வில் குடிகொள்வதற்கு இடந்தர முடியாதவனாயிருக்கிறான்.

அத்தேனேயில் இருந்த உலகத்தின் முக்கியமான தத்துவஞானிகளும் அவர்களுடைய சீடர்களும் பவுலை பொதுஇடத்தில் வைத்து அவமானப்படுத்தியது பவுலுக்கு ஒரு கசப்பான அனுபவமாயிருந்தது. அவர்கள் பவுலைவிட்டுத் திரும்பிப் போகும்போது “நீ சொல்லுகிற காரியங்களை இன்னொரு சமயத்தில் கேட்போம்” என்று பரிகசித்தவர்களாக சென்றார்கள். ஆனால் அவர்கள் இன்னும் ஒரு முறைகூட அவர்கள் இறைவனுடைய வார்த்தையைக் கேட்கவில்லை. காரணம் பவுல் துக்கத்தோடு அமைதியாக அந்நகரத்தைவிட்டு வெளியேறி விட்டார். தத்துவஞானிகளின் பெருமை கிறிஸ்துவினால் உண்டாகும் விடுதலையைக் குறித்து தப்பெண்ணம் கொண்டது. பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் கடிதத்தில் தத்துவஞானத்திற்கும் நம்பிக்கைக்கும் இருக்கும் துல்லியமான, தீர்க்கமான வித்தியாசத்தை தெளிவுபடுத்துகிறார் (1:12-2:15). கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தின் இப்பகுதியை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பவுலுக்கு அத்தேனே பட்டணத்தில் ஏற்பட்ட அனுபவத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

இருப்பினும் மாபெரும் படைப்பாளியாகிய ஒரே இறைவனைக் குறித்து பவுலுடைய பிரசங்கமும் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பாக மனந்திரும்பி, உயிர்தெழுந்த கிறிஸ்துவை நம்பவேண்டும் என்ற அவருடைய அழைப்பும் பயனற்றதாயிருக்கவில்லை. சிலர் கிறிஸ்துவை விசுவாசித்து பவுலைச் சேர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய சிந்தனைகள் கிறிஸ்துவினால் மறுரூபமடைந்தது, அவர்கள் நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டார்கள். மார்ஸ் மேடையின் அங்கத்தவர்களில் ஒருவரும் மதிப்பிற்குரிய ஒரு பெண்மணியும் அவர்களில் அடங்கும். இறுதியில் அங்கு மனமாற்றமடைந்தவர்கள் சிலரே. அந்த பெருமை மிகுந்த தத்துவஞானிகளிருந்த அத்தேனே பட்டணத்தில் ஒரு தாழ்மையான திருச்சபை உருவானது. மரணத்திலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்துவின் வாழ்வை அவர்கள் நிறைவாக வாழ்ந்தார்கள்.

விண்ணப்பம்: பரிசுத்த இறைவனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்முடைய அரசு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதிலோ, தத்துவங்களைப் புரிந்துகொள்வதிலோ இல்லாமல் உம்முடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புவதில் இருப்பதால் உமக்கு நன்றி. அவர் எங்களை வரப்போகும் இறுதி நீதித் தீர்ப்பிலிருந்து எங்களைத் தப்புவித்து, நிலைவாழ்வின் மகிழ்ச்சியினால் எங்களை நிரப்புகிறார்.

கேள்வி:

  1. இறுதி நாளில் இறைவனுடைய நீதித் தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி யாது?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)