Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 040 (Feeding the five thousand)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

1. ஐயாயிரம் பேரைப் போஷித்தல் (யோவான் 6:1-13)


ஓய்வு நாளில் சுகப்படுத்தி, அதன் மூலம் இறைவனுடைய அன்புக்கும் சட்டவாதிகளுடைய வீணான சிந்தனைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் காண்பித்து இயேசு தன்னுடைய தெய்வீகத்தை எருசலேமில் வெளிப்படுத்தினார். அவர்கள் அவரை வெறுத்து, அவரைத் தொலைத்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வடக்கேயுள்ள கலிலேயாவுக்குக் கொண்டுபோனார். அங்கு அவருக்கும் அவருடைய எதிரிகளுக்குமிடையிலான மோதல் உச்சத்தை அடைந்தது. வடக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டம் இன்னும் அவர் செல்லுமிடமெங்கும் அவரைப் பின்தொடர்ந்தது.

யோவான் 6:1-4
1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2 அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். 3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 4 அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.

எருசலேமிலிருந்த நியாயப்பிரமாணவாதிகளை கிறிஸ்து கடிந்துகொண்டதால், அவர்கள் அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, அவரை வேவு பார்த்தார்கள். அவருடைய தருணம் இன்னும் வராத காரணத்தினால் அவர் சனகதரின் நியாய விசாரணையிலிருந்து பின்வாங்கி கலிலேயாவைச் சென்றடைந்தார். முந்திய மூன்று நற்செய்திகளில் அங்கு அவர் பல அடையாளங்களை நிகழ்த்தியதாக நாம் வாசிக்கிறோம். அவருடைய வருகையைப் பற்றி கேள்விப்பட்ட மக்கள் நடுவில் பெரிய ஆரவாரம் காணப்பட்டது. ஆனால் இயேசு அதனால் தொந்தரவடையாமலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் இருந்தார், காரணம் அவர் தலைநகரத்தில் சந்தித்த நயவஞ்சக மனநிலை கிராமங்களிலும் பரவி அவரைத் தாக்கும் என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் யோர்தானுக்கு கிழக்கிலுள்ள கிலோனுக்கு தன் சீடர்களுடன் தனித்திருக்கும்படி சென்றுவிட்டார். ஆயினும் அவருடைய வார்த்தையைக் கேட்பதில் அதிக ஆர்வமுள்ள மக்கள் கூட்டம், அவருடைய அற்புதங்களை அனுபவிக்கும்படி அவரைப் பின்தொடர்ந்தது. அவருடைய மரணத்தின் நேரம் இன்னும் வராத காரணத்தினால் அந்த வருடம் அவர் பஸ்காவை அனுசரிக்க எருசலேமுக்குப் போகவில்லை. அவரைச் சுற்றியுள்ள மக்களுடன் அவர் அந்த விருந்தைக் கொண்டாடினார், அது பஸ்காவுக்கு பதிலாகக் காணப்பட்டது. அதன் மூலம் பெருமகிழ்ச்சியோடு இரட்சகர் பரலோக விருந்தில் தன்னுடைய பரிசுத்தவான்களுடன் கலந்துகொள்வார் என்பதைக் காண்பித்தார்.

யோவான் 6:5-13
5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 6 தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 7 பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். 8 அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: 9 இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். 10 இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். 12 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 13 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.

மக்கள் கூட்டம் வருதைப் பார்த்த இயேசு, தன்னுடைய பரலோக பிதாவை நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அவருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்தி, பசியாயிருக்கிறவர்களை அவருடைய கவனத்தில் விட்டுவிடுகிறார். இத்துடன் அற்புதம் ஆரம்பமாகியது. குமாரன் மனிதர்களுடைய இருதயத்தை வெளிப்படுத்தும் பணியை பிதா அவரிடம் கொடுத்தார்.

முதலாவது, பிலிப்புவை நோக்கி வருகிற மக்களுக்கு உணவளிக்கும்படி கேட்டுக் கொண்டதின் மூலம், சீடர்களுடைய விசுவாசம் வளர்ச்சியடைகிறதா அல்லது பொருளாதார ரீதியாகவும் உலகப்பிரகாரமாகவுமே இன்னும் சிந்திக்கிறார்களா என்று அவர்களைப் பரிசோதித்தார். நாம் உணவு தயாரிக்கும் இடத்தைப் பற்றியே சிந்திப்போம், இயேசுவோ தன்னுடைய பிதாவைக் குறித்துச் சிந்தித்தார். பண விஷயங்களையும் அதிக செலவுள்ள வாழ்க்கையையும் நாம் சிந்திப்போம், ஆனால் இயேசுவோ பரலோக உதவியாளரைப் பற்றி சிந்தித்தார். விசுவாசத்திற்கு திரும்பாமல் பிலிப்பு உடனடியாக எவ்வளவு செலவாகும் என்று சிந்திக்க ஆரம்பித்தார். பணத்தை மட்டுமே பார்ப்பவர்கள் தெய்வீக வாய்ப்புகளைக் காணத் தவறுகிறார்கள். சீடர்களுடைய கணக்குகள் நியாயமானவையே: அந்த இடத்தில் அப்பங்களைத் தயாரிக்கும் இடமோ, மாவரைக்கும் இடமோ, அவற்றைச் செய்வதற்குரிய நேரமோ அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் மக்கள் நீண்ட நேரம் கர்த்தருக்கு செவிகொடுத்து பசியடைந்தவர்களாக அங்கிருந்தார்கள்.

திடீரென பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலினால் அந்திரேயா ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் வைத்திருந்த ஒரு சிறுவனைக் கவனிக்கிறார். அவர் அச்சிறுவனைப் பார்த்து, “உன்னிடத்திலிருக்கும் மீன்களையும் அப்பங்களையும் தருவாயா” என்று கேட்டார். இந்த உணவு முற்றிலும் போதாது என்று அவர் அறிந்திருந்த காரணத்தினால் அவருக்கும் சந்தேகங்கள் இருந்தது. சீடர்கள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்றும் இறைவனுடைய சித்தம் என்ன என்றும் இயேசு என்ன செய்யப் போகிறார் என்றும் அறியாதபடியால்,அவர்கள் தங்களுடைய இயலாமையை அறிக்கையிடும்படி இயேசு அவர்களை நடத்தினார்.

ஒரு பெரிய விருந்தில் இருப்பதைப்போல வரிசையாக மக்களைப் பந்தியிருக்கச் செய்யும்படி இயேசு சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

நிலத்தை மூடியிருந்த பசுமையான புற்தரை மக்களிடையே துளிர்த்த விசுவாசத்திற்கு அடையாளமாயிருந்தது. ஐயாயிரம் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் மிகப்பெரிய மக்கள் கூட்டம்தான். அவர்களில் பலர் இதற்கு முதல் இயேசுவையோ அவருடைய அற்புதங்களையோ கண்டதில்லை. இருப்பினும் இயேசுவின் வார்த்தையின்படி பந்தியிருந்தார்கள்.

இயேசு அமைதியாக அப்பத்தை எடுத்து அதன் மூலம் அத்தருணத்தில் தன்னுடைய படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தச் சித்தமானார். ஐந்து அப்பங்களுக்காக நன்றி சொல்லி அவற்றை பிதாவுக்கு முன்பாக வைத்தார். இறைவன் சிறியதை ஆசீர்வதித்து பெருகச் செய்வார் என்று அவர் விசுவாசித்தார். இருக்கும் கொஞ்சத்திற்காக நன்றி கூறுதலும் அவருடைய பிதாவை கனப்படுத்தியதுமே அந்த அற்புதத்தின் இரகசியம். இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற கொஞ்சத்திற்கு நீங்கள் நன்றியுள்ளவராயிருக்கிறீர்களா, அல்லது அதை எடுத்துக்கொண்டு முறையிடுகிறீர்களா? உங்களுக்கு இருக்கும் கொஞ்சத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? இயேசு சுயநலமற்றவராயிருந்தார். இறைவனுடைய அன்பு அவரில் நிறைந்திருந்தது. அவர் தன்னுடைய பிதாவைக் கனப்படுத்தி இறைவனுடைய ஆசீர்வாதங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.

நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டிருக்கும் இந்த அற்புதம் எந்தவித ஆரவாரமுமின்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள் மட்டுமே அவர் அப்பங்களைப் பிட்டபோது மேலும் அப்பங்கள் உருவானதையும் அது முடிவற்றுப் பெருகியதையும் நேரடியாகக் கண்டிருப்பார்கள். அவர்கள் போய் தேவையான ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு, திரும்ப வந்து மற்றவர்களுக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். இது கிருபையின் அடையாளம். கடவுள் பாவமன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் அளவில்லாமல் கொடுக்கிறார். உங்களுக்கு விருப்பமான அளவு எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு கூடிய மட்டும் அவரை விசுவாசியுங்கள். ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல அவர்களையும் ஆசீர்வதியுங்கள், இவ்வாறு நீங்கள் மற்றவர்களின் ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாறலாம்.

கானாவில் இயேசு தண்ணீரை இரசமாக மாற்றினார், கோலனில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் போதியளவு அதிகரித்துக் கொடுத்தார். இந்த அற்புதம் செய்யப்படுவதற்கு முன்பிருந்ததைவிட இறுதியில் அதிகமான அப்பங்களும் மீன்களும் மீந்திருந்தது ஆச்சரியமானது. மீதியாக பன்னிரெண்டு கூடைகள் அளவுக்கு உணவிருந்தது, அவற்றை வீணாக்கக்கூடாது என்று இயேசு கட்டளையிட்டார். இன்று ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினியால் சாகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் பலர் மீதியான தங்கள் உணவுகளை குப்பைத் தொட்டியில் போடுவது எத்தனை வெட்கக் கேடானது. உங்கள் கவனமின்மையினால் எதையும் வீணாக்காதீர்கள், கிருபையின் துணிக்கைகளைச் சேகரியுங்கள். இறைவனுடைய அருளின் திரட்சியை நீங்கள் நாடி நின்றால் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.

தன்னுடைய கரத்திலிருந்து பெற்றுக்கொண்ட உணவை இயேசு அதிகரிக்கச் செய்தபோது அந்த சிறுவனுடைய மனநிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவனுடைய கண்கள் ஆச்சரியத்தினால் விரிவடைந்திருக்கும். அவனால் அந்த அற்புதத்தை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே உம்முடைய பொறுமைக்காகவும் அன்பிற்காகவும் உமக்கு நன்றி. எங்களுடைய விசுவாசக் குறைவை எங்களுக்கு மன்னியும். எங்களுடைய துன்ப நேரத்தில் உம்மிடம் திரும்பவும், எங்களுடைய திறமைகளில் தங்கியிராமல் உம்முடைய ஆதாரங்களில் தங்கியிருக்கவும் எங்களுக்குப் போதித்தருளும். நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் திரளான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் சிறிய அளவிலான பொருளாதார ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. எங்களுக்கிருப்பதில் எங்களை ஆசீர்வதித்தருளும், எங்களுக்குக் கொடுத்திருக்கும் எதையும் வீணடிக்காமலும், எங்கள் வரங்களை புறக்கணிக்காமலும் இருக்க எங்களுக்கு உதவியருளும்.

கேள்வி:

  1. ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததில் இருக்கும் இரகசியம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:19 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)