Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 090 (Abiding in Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

1. கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் அதிக கனிகளைக் தரும் (யோவான் 15:1–8)


யோவான் 15:1-2
1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். 2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

கர்த்தருடைய பந்தியை அனுசரித்தபிறகு, இயேசுவும் அவருடைய சீடர்களும் பரிசுத்த மலையாகிய எருசலேமைவிட்டு இறங்கி, அதன் வாசல்களைக் கடந்து, கதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து, ஒலிவ மலைக்கு ஏறிச்செல்லும் திராட்சைத் தோட்டங்களின் பதையில் நடந்தார்கள். அவ்விதமாக அவர்கள் நடந்துபோகும்போது, திராட்சைச் செடியின் உதாரணத்தைப் பயன்படுத்தி, சீஷர்களுடைய விசுவாசத்தின் பொருளையும் அவர்களுடைய அன்பின் நோக்கத்தையும் இயேசு அவர்களுக்கு இன்னும் விளக்கிச் சொன்னார்.

உலகம் முழுவதும் திராட்சைச் செடிகளை நட்ட ஒரு திராட்சைத் தோட்டக்காரனாக இயேசு இறைவனைச் சித்தரித்தார். சங்கீதம் 80:8-16 மற்றும் ஏசாயா 5:1-7 ஆகிய வேதப்பகுதிகளில் வாசிப்பதைப்போல பழைய ஏற்பாட்டு மக்களும் அவ்விதமான திராட்சைத் தோட்டமாயிருக்கிறார்கள். அவைகள் நல்ல கனிகளைக் கொடாத காரணத்தினால் இறைவன் அத்தோட்டத்தின் மீது பிரியமாயிருக்கவில்லை. ஆகவே இறைவன் ஒரு புதிய கிளையை நட்டுவைத்தார். வளர்ந்து மெய்யான திராட்சைச் செடியாகி, ஆவிக்குரிய கனிகளை அதிகமாக தரும்படி நாட்டப்பட்ட அந்த கிளை பரிசுத்த ஆவியினால் பிறந்த அவருடைய குமாரனே. பரிசுத்த ஆவியானவர் மனிதர்களுடைய வாழ்வில் உண்டுபண்ணுகிற கனிகளாகிய விலையேறப்பெற்ற ஆவிக்குரிய குணாதிசயங்களைப் பற்றியே இயேசு தம்முடைய சீஷர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகறார். மனிதனுக்குள் ஒரு மிருகம் காத்துக்கொண்டிருக்கிறது. யாராவது அதைத் தூண்டிவிட்டால் அது வெளிப்பட்டு மற்றவர்களை மிதித்து, அவர்களை விழுங்கிப்போடும் என்ற மனித போதனை வஞ்சனையானது என்பதை அவர் அறிந்திருந்தார். இயேசு இந்த நிலையில் தம்முடைய போதனைகளின் ஆரம்ப நிலையையே முன்வைக்கிறார். அவர் மட்டுமே இறைவன் ஏற்றுக்கொள்ளத்தக்க கனிகளைத் தருபவர். அவர் மட்டுமே சமாதானம் பண்ணுகிறவரும் திருச்சபையைக் கட்டுகிறவருமாயிருக்கிறார். இந்த உதாரணத்திலுள்ள எதிர்மறையான காரியத்தை இயேசு முதலில் காண்பிக்கிறார். யார் ஒருவன் தன்னுடைய மனதைத் திறந்து, திராட்சைச் செடியிலிருந்து வரும் உயிர்திரவத்தைத் தன்னுள் செல்ல அனுமிக்கவில்லையோ, அவன் ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்க மறுப்பதால், அவன் பயனற்ற கிளை என்று இறைவனால் வெட்டிப்போடப்படுவான். நற்செய்தியின் கனிகளை இறைவன் உங்களில் காணாவிட்டால், அல்லது கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் விளைவுகளை உங்களில் காணாவிட்டால், அவர் உங்களைத் தம்முடைய குமாரனாகிய திராட்சைச் செடியிலிருந்து வெட்டிப்போடுவார்.

ஆயினும் பரிசுத்த ஆவியானவரின் உயிர்ச்சாறை உங்கள் வாழ்வில் கண்ட மாத்திரத்திலேயே உங்களிலுள்ள வளர்ச்சியின் அடையாளத்தைக் கண்டு, ஒரு கொடியாக உங்களை நிலைநிறுத்துவார். அந்த உயிர்ச்சாறு உங்களில் இலைகளையும் கனிகளையும் உண்டுபண்ணும். நீங்கள் அதிக கனிகளைக்கொடுக்கும்படி திராட்சைத் தோட்டக்காரன் உங்களிலுள்ள பயனற்ற பாகங்களை நீக்கி உங்களைச் சுத்தம்செய்கிறார். இந்தக் கனிகள் உங்களுடையவைகள் அல்ல, அவை கிறிஸ்துவினால் உங்களில் தோன்றுகிற கனிகள். நாம் பயனற்ற பணியாளர்கள்; அவரே எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக இருக்கிறார். திராட்சைச் செடிகள் அடுத்த வருடத்தில் அதிக கனிகளைக்கொடுக்கும்படி ஒவ்வொரு இலையுதிர்க்காலத்திலும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மனிதர்களுடைய தவறுகளையும் இறைவன் இவ்வாறு வெட்டியெறிய வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அவர்களுடைய கடினத்தன்மை நீங்கி அவர்களுடைய பாவங்கள் அழிந்துபோகும். அப்போதுதான் கிறிஸ்துவின் சாயல் உங்களில் முதிர்ச்சி பெறும். உங்களிடமிருந்து உங்களைக் காப்பதற்கு இறைவனிடம் பல்வேறு வழிமுறைகள் உண்டு. உங்களை உடைக்கக்கூடிய நிகழ்ச்சிகள், தோல்விகள் மற்றும் வேதனைகள் உங்களுக்கு நேரிடலாம். நீங்கள் உங்களுக்காக வாழாமல், கிறிஸ்துவில் வாழக்கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது அவருடைய வல்லமையினால் ஒரு அன்புள்ள நபராக நீங்கள் மாறுவீர்கள்.

யோவான் 15:3-4
3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். 4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

இயேசு உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருகிறார். இயற்கையான பாவ சுபாவத்தின் காரணமாகவும் பல்வேறு பாவங்களினிமித்தமாகவும் இறைவன் திராட்சைக் கொடிகளை வெட்டிப்போடுவதில்லை. நாம் அவரை விசுவாசித்தபோது அவர் ஆரம்பத்தில் நம்மைத் தீவிரமாகச் சுத்திகரிக்கித்திருக்கிறார். “எங்களுடைய சடங்குகளினாலும் விண்ணப்பங்களினாலும் எதிர்காலத்தில் நாங்கள் சுத்திகரிக்கப்படுவோம்” என்று நாம் சொல்வதில்லை. அவர் நம்மை அப்போது சுத்திகரித்தார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் முற்றிலுமாக மன்னித்து நம்மை தம்முடைய சிலுவையில் மீட்டுக்கொண்டவர் அவரே. சுத்திகரிப்பின் வல்லமை நற்செய்தியிலிருக்கிறது. நம்முடைய முயற்சிகளோ, நம்முடைய பாடுகளோ, நம்முடைய முதிர்ச்சியோ அல்ல, இறைவனுடைய வார்த்தை மட்டுமே நம்மைச் சுத்திகரிக்கிறது. இறைவன் ஆதியிலே தம்முடைய வார்த்தையினால் படைத்ததைப்போல, நாமும் நம்முடைய இருதயத்தை கிறிஸ்துவின் வார்த்தைக்குத் திறந்துகொடுக்கும்போது, நம்மைத் தம்முடைய வார்த்தையினால் சுத்திகரிக்கிறார். ஞானஸ்நானமோ கர்த்தருடைய பந்தியோ நம்மைச் சுத்திகரிப்பதில்லை, இயேசுவின் வார்த்தைகளில் நாம் வைக்கும் விசுவாசமும் அதை நாம் ஆழமாகத் தியானித்தலுமே நம்மைச் சுத்திகரிக்கிறது. நீங்கள் வேதாகமத்தின் ஏதாவது ஒருபகுதியை ஒவ்வொரு நாளும் வாசியுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்கினால் நல்லது. அவ்வாறு நீங்கள் ஆவிக்குரிய போஷாக்கைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் காய்ந்துபோய்விடுவீர்கள்.

நம்முடைய வளர்ச்சியும் கனிகொடுத்தலும் ஒரு வார்த்தையிலேயே தங்கியிருக்கிறது என்கிறார். அது “நிலைத்திருங்கள்” என்ற வார்த்தையாகும். இந்த வார்த்தை 15-ம் அதிகாரத்தில் 10 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து பல அர்த்தங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். நாம் அவரில் நிலைத்திருக்கிறோம்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறார். அவரில் நாம் நிலைத்திருப்பதால் நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவருடைய வல்லமையும் உயிர்ச்சாறும் நம்மில் பாய்ந்தோடுகிறது. அனைத்தும் அவரிடத்திலிருந்தே புறப்பட்டு வருவதால் நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டும். நாம் அவரைவிட்டு விலகியிருந்தால் அவருடைய அன்பின் வல்லமை நம்மில் அற்றுப்போகும். ஒரு கொடி நொடிப்பொழுதேனும் கொடியைவிட்டு நீங்கமானால் அது தன்னுடைய சாரத்தை இழந்து வாடிப்போகும். ஒரு திருச்சபை வாடி, செத்து காணப்படுமானால் அது எவ்வளவு அசிங்கமான காட்சியாயிருக்கும். நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டும் என்றும், நம்முடைய வளர்ச்சிக்காக அவர் எப்போதும் நம்மில் செயல்பட வேண்டும் என்றும், நாம் கனிகொடுக்கவும், செயல்படவும் தக்கதாக அவர் நம்மை இரவு பகலாகக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்வதுதான் விசுவாசிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். நிலைத்திருப்பதும் நம்முடைய சொந்தச் செயல் அல்ல, அது பரிசுத்த ஆவியானவருடைய கிருபை. யாரும் சுயமாகக் கிறிஸ்துவில் நிலைத்திருக்க முடியாது. ஆனால் நாம் கிறிஸ்துவில் நிலைத்திருப்பதற்காக நன்றி சொல்லவும் விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போது அவருடைய கிருபையினால் நாம் மட்டுமல்ல மற்றவர்களும் அவரில் தொடர்ந்து நிலைத்திருப்பார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகத்தில் நாட்டப்பட்ட இறைவனுடைய பரிசுத்த திராட்சைச் செடியாக நீர் இருக்கிறீர். உம்மிடத்திலிருந்தே நாங்கள் அனைத்து நற்குணத்தையும் பெற்றுக்கொள்கிறோம். எங்கள் இருதயம் அனைத்து தீமைகளின் பிறப்பிடமாயுள்ளது. நற்செய்தியினால் நீர் எங்களைச் சுத்திகரித்ததால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாங்கள் எப்போதும் அன்பின் கனிகளைக் கொடுக்கும்படியாக நீர் உம்முடைய நாமத்தினாலே எங்களைக் காத்துக்கொள்ளும். உம்மையல்லாமல் நாங்கள் எதுவும் செய்யமுடியாது. தங்கள் பலவீனத்தினால் தங்களுக்காக வாழ நிலைக்காமல் உம்மில் நிலைத்திருக்கும்படி நீர் எங்கள் சகோதர சகோதரிகளைப் பெலப்படுத்தும்.

கேள்வி:

  1. இயேசு எவ்வாறு மெய்யான திராட்சைச் செடியானார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:28 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)