Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 079 (The Father glorified amid the tumult)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)

4. குழப்பத்தின் நடுவில் பிதா மகிமைப்படுகிறார் (யோவான் 12:27-36)


யோவான் 12:27-28
27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.

இயேசு தன்னுடைய ஆளுமையில் பாடுபட்டார். அவர் ஜீவனின் அதிபதியாக இருந்தும் மரணம் தன்னை விழுங்குவதற்கு அனுமதித்தார். அவர் கர்த்தாதி கர்த்தராயிருந்தும், மரணத்தின் அதிபதியாகிய பிசாசு அவரைக் கூடியமட்டும் சோதிக்கும்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். இயேசு நம்முடைய பாவங்களை விருப்பத்துடன் சுமந்து, இறைவனுடைய கோபத்தின் நெருப்பு தன்னைச் சுட்டெரிக்க ஒப்புக்கொடுத்தார். நாம் இரட்சிக்கப்பட்டு பிதாவோடு இணைக்கப்படும்படியாக அவர் தன்னுடைய மகனைக் கைவிட்டார். யாருமே பிதாவிற்கும் குமாரனுக்கும் ஏற்பட்ட இந்த வேதனையை அறிந்துகொள்ள முடியாது. திரித்துவத்தின் ஒருமை நம்முடைய மீட்புக்காக படுவேதனையை அனுபவித்தது.

கிறிஸ்துவின் சரீரம் இந்த அழுத்தும் பாரத்தைச் சுமக்கக்கூடாதிருந்தது. அவர் “பிதாவே, இந்த வேளையிலிருந்து என்னைக் காப்பாற்றும்” என்று கதறினார். ஆனால் ஆவியானவரின் பதில் தெளிவாக அவருடைய மனதில் ஒலித்தது: “நீர் இந்தத் தருணத்திற்காகவே பிறந்திருக்கிறீர். இந்தத் தருணம்தான் நித்தியத்தின் நோக்கமாகும். முழு மனுக்குலமும் இறைவனோடு ஒப்புரவாகும் இந்நேரத்தை, அனைத்துப் படைப்புகளும் சிருஷ்டிகரோடு ஒப்புரவாகும் இத்தருணத்தைத்தான் முழுப் படைப்பும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்நிலையில்தான் இரட்சிப்பின் திட்டம் நிறைவேறும்.”

இந்த நிலையில் “பிதாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்” என்று சத்தமிட்டார். குமாரன் தன்னுடைய மாம்சத்தில் இந்த விண்ணப்பத்தை ஏறெடுக்காமல், பரிசுத்த ஆவியானவரினால் இந்த வேண்டுதலை முன்வைத்தார். “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. நீர் ஒரு பயங்கரமான இறைவன் அல்ல என்றும் தூரத்தில் இருந்துகொண்டு மனிதர்களைப் பற்றி அக்கறையற்றிருப்பவர் என்றும் மக்கள் இனி உம்மைக் கருதாமல், அழிந்துகொண்டிருக்கும் தீய உலகத்தைக் காப்பதற்காக தன்னுடைய ஒரே மகனை ஒப்புக்கொடுக்கும் அன்புள்ள இறைவன் என்பதை உலகம் அறிந்துகொள்ளட்டும்.”

குமாரனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்க இறைவன் தயங்கவில்லை. அவர் பரலோகத்திலிருந்து பதிலுரைத்தார், “நான் உம்மில் என்னுடைய நாமத்தை மகிமைப்படுத்தினேன். இன்னமும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குக் கீழ்ப்படிவுள்ள, தாழ்மையான குமாரன். உம்மைப் பார்க்கும் எவரும் என்னைப் பார்க்கிறார்கள். நீர் எனக்குப் பிரியமானவர். நீர் சிலுவையைச் சுமப்பதால் உம்மைத் தவிர வேறு எதிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை. உம்முடைய பதிலாள் மரணத்தினூடாக, வாழ்வின் பிரச்சனைகளின் நடுவில் என்னுடைய மகிமையை நான் வெளிப்படுத்துவேன். உண்மையான பரிசுத்தம் மற்றும் மகிமையின் பொருளை நீர் உம்முடைய சிலுவையில் வெளிப்படுத்துவீர். தகுதியற்றவர்களும் கடின இருதயமுடையவர்களுமான மக்களுக்காக நீர் செய்யும் இந்தத் தியாகம் தூய்மையான அன்பாகும்.”

தொடர்ந்து பரலோகத்தின் சத்தம் தெளிவாகத் தொனித்தது: “நீர் கல்லறையிலிருந்து உயிருடன் எழுந்து, என்னிடத்தில் பரமேறி வந்து, என்னுடைய வலது பாரிசத்தில் அமரும்போது உம்மை மகிமைப்படுத்தி, உம்முடையவர்கள் மீது நான் பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தளுருவேன். பரிசுத்த ஆவியானவர் மூலமாக எண்ணற்ற பிள்ளைகள் மறுபிறப்படையும்போது பிதாவாகிய என்னுடைய நாமம் அதிகமாக மகிமைப்படும். அவர்கள் தங்கள் பரிசுத்த நடக்கையினால் என்னை மகிமைப்படுத்துவார்கள். இறைவனுடைய மக்களின் பிறப்பிற்கு உம்முடைய சிலுவை மரணமே காரணமாகும். மகிமையில் நீர் பரிந்துபேசுவதினால் திருச்சபையின் வெற்றி உறுதிசெய்யப்படுகிறது. உம்மில் மட்டுமே பிதா அளவில்லாமல் மகிமைப்படுகிறார்.”

யோவான் 12:29-33
29 அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30 இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று. 31 இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். 32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். 33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.

இயேசு தம்முடைய பிதாவுடன் பேசியதை அந்த மக்கள் கூட்டத்தால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அதை இடிமுழக்கம் என்று கருதினார்கள். இறைவன் அன்பானவர் என்பதை அவர்களால் அறியமுடியவில்லை. அவருடைய மெல்லிய சத்தத்தை அவர்களால் கேட்கவும் முடியவில்லை. இறைவனுடைய குமாரனில் வெளிப்படுகிற மகிமையில் இவ்வுலகத்தின் நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிவிட்டது என்பதையும் அவர்கள் அறியவில்லை.

கிறிஸ்து சிலுவையில் உயர்த்தப்பட்டு, தன்னுடைய மரணத்தினால் நமக்கு மறுவாழ்வு கொடுத்ததிலிருந்து சாத்தான் தன்னுடைய அடிமையாகளாயிருந்த நம்மை இழக்க ஆரம்பித்து விட்டான். குமாரன் தன்னுடைய சித்தத்தைப் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்த காரணத்தினால் பொல்லாங்கனுடைய வல்லமைகள் பறிக்கப்பட்டன. முழு உலகமும் அவனுடைய ஆட்சிக்குக் கீழாக இருக்கிறதென்பதால் இயேசு பிசாசை இவ்வுலகத்தின் அதிபதி என்று அழைத்தார். ஆயினும் அவர் தன்னுடைய நீதியின் வாளால் அவனைத் தாக்கி, அவன் மீது வெற்றிகொண்டார். இப்போது நாம் இயேசுவின் நாமத்தினால் விடுதலையுள்ள பிள்ளைகளாயிருக்கிறோம்.

நாம் அவருடைய சிலுவையை நோக்கி கவரப்பட்டிருக்கிறோம். இயேசுவைச் சாதாரணமாக நிலத்திலோ தன்னுடைய படுக்கையிலோ மரிக்க விடாமல் சாத்தான் அவரைச் சிலுவையில் உயர்த்தி அவமானச் சின்னமாக மரிக்கும் அளவிற்கு அவரை வெறுத்தான். எப்படி மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பின் சிலை இறைவனுடைய தண்டனையை முடிவுக்குக் கொண்டுவந்ததோ, அவ்விதமாகவே சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் தோள்கள் மீது மனுக்குலம் அனைத்திற்குமான தண்டனை சுமத்தப்பட்டது. சிலுவையில் அறைப்பட்ட இயேசுவை நோக்கிப்பார்க்கும் எவரையும் இறைவன் தண்டிப்பதில்லை. நாம் கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசம் நம்மை அவருடனும் அவருடைய மரணத்துடனும் இணைக்கிறது. கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் ஐக்கியம் அவருடைய வல்லமையோடும் மகிமையோடும் நம்மை இணைக்கிறது. அவர் எவ்வாறு பாவத்தையும் மரணத்தையும் தன்னுடைய பரிசுத்தத்தினால் மேற்கொண்டாரோ அப்படியே நம்மையும் அவரண்டை இழுத்துக்கொண்டு மகிமைப்படுத்துவார். அவரை விசுவாசிக்கிறவர்கள் ஒருபோதும் கெட்டுப்போகாமல, அழிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள்.

யோவான் 12:34
34 ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.

யூதர்கள் அவரை நெருக்கி அவர்தான் மேசியா என்பதற்கான தெளிவான அடையாளத்தைக் காண்பிக்கும்படி அவரை வலியுறுத்தினார்கள். அவருடைய உண்மைத் தன்மையை அவர்கள் ஆய்ந்தறிய விரும்பினார்கள். தானியேல் ஒன்பதாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள மனித குமாரன் என்பவர் யார் என்பதற்கான விளக்கம் அவர்களுக்குத் தெரியும். அவரே மேசியா என்றும் அனைத்து மக்களின் நியாயாதிபதி என்றும் அவர்கள் அறிவார்கள். ஆயினும் அவர்கள் இயேசுவின் வாயினால் அவருடைய தெய்வீக குமாரத்துவத்தைக் குறித்த அறிக்கையைக் கேட்க விரும்பினார்கள். உண்மையில் அவர்கள் இயேசுதான் இறைமகன் என்பதை விசுவாசிக்காவிட்டாலும் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதை அவர்கள் மேம்போக்காக ஒத்துக்கொண்டார்கள். அவர் தன்னை வெளிப்படையாக மனித குமாரன் என்று அறிவித்துவிட்டால் அவர் மீது தேவதூஷணம் சொன்னார் என்று குற்றம் சாட்டுவதற்கு சில எதிரிகள் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். தர்க்க ரீதியான ஆதாரங்களைக் கேட்பவர்களுக்கு இயேசு தான் யார் என்பதை அறிவிக்கவில்லை. அவ்வித தர்க்கரீதியான ஆதாரங்கள் எதையும் கேட்காமல் எளிமையாக மனுஷ குமாரனே இறைமைந்தன் என்பதை எளிமையாக பரிசுத்த ஆவியானவரினால் நம்புபவர்களுக்கே அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்.

யோவான் 12:35
35 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.

இயேசுவே உலகத்தின் ஒளியாயிருக்கிறார். ஒளிக்கு நாம் விரிவான விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. சாதாரண மனிதர்களும் ஒளியைப் பார்த்து, அதை இருளிலிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்ளக்கூடும். பகல் நேரத்தில் வெளிச்சம் இருப்பதால் ஒருவன் நடக்கவோ ஓடவோ முடியும். ஆனால் இரவில் யாரும் வேலைசெய்ய முடியாது. சூரியன் இருக்கும்போதுதான் நாம் வேலைசெய்ய வேண்டும். யூதர்கள் தன்னுடைய ஒளியின் இராஜ்யத்திற்குள் வரவிரும்பினால் அவர்களுக்கு சொற்ப காலம்தான் இருக்கிறது என்று இயேசு அவர்களை எச்சரித்தார். அந்த நேரத்தில் அவர்கள் தீர்மானம் எடுத்து, அதில் உறுதியாக இருந்து, தங்களை ஒப்புக்ககொடுக்க வேண்டும்.

ஆயினும் யாரெல்லாம் ஒளியைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இருளில் இருப்பதால் தங்கள் வழியை அறியாதிருக்கிறார்கள். இதைக் குறித்து இயேசு யூதர்களுக்கு ஏற்கனவே முன்னறிவித்திருக்கிறார். அவர்கள் வழியை அறியாமல் ஒரு இலக்கின்றி நம்பிக்கையற்றுத் திரிவார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த இருள் சாதாரண இருள் அல்ல. அது மனிதனுடைய இருதயத்தில் தீமை தோற்றுவிக்கும் இருளாகும். அவ்விதமாகவே ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் இருளடைந்தவனாக வாழ்கிறான். யார் தங்களைக் கிறிஸ்துவிற்குக் கொடுக்கவில்லையோ அவர்கள் இருளினால் மேற்கொள்ளப்படுகிறார்கள். ஏன் இன்று “கிறிஸ்தவ நாடுகள்” என்று கருதப்படுபவை இருளின் பிறப்பிடங்களாக உள்ளன என்பதை நாம் இதன் மூலம் அறியலாம். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறக்கும் அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் அல்ல. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் சொற்பமானவர்களே. ஒளியின் இராஜ்யத்திற்குள் வராதவர்கள் இருளினால் மேற்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பெற்றோரிடமிருந்து நற்செய்தியின் ஆசீர்வாதங்களை நீங்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு உங்களை ஒப்புக்கொடுப்பது உங்களுடைய பொறுப்பு.

யோவான் 12:36
36 ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.

விசுவாசத்தினால் நீங்கள் கிறிஸ்துவில் இணையும்போது அது உங்களில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும். நற்செய்தி அணுக்கதிர்களையும்விட வலிமையான மகிமையின் கதிர்களை உங்கள் வாழ்க்கையில் பாய்ச்சும். அணுக்கதிர் அழிவை உண்டுபண்ணும், ஆனால் கிறிஸ்துவின் ஒளிக்கதிர் உங்களில் நித்திய வாழ்வை உண்டாக்கி, உங்களை வெளிச்சத்தின் பிள்ளையாகவும் பலருக்குக் கலங்கரை விளக்கமாகவும் மாற்றும். சத்தியத்தினாலும், தூய்மையினாலும், அன்பினாலும் நிறைந்த கிறிஸ்துவின் அரவணைப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இருளிலிருந்து தன்னுடைய ஒளிக்குள் வந்து, பரிசுத்தமாயிருக்கும்படி கிறிஸ்து உங்களை அழைக்கிறார்.

எருசலேமிற்குள் நுழைவதற்கு முன்பாக இயேசு இந்தப் பிரசங்கத்தைத்தான் செய்தார். ரோமர்களையோ, ஏரோதையோ தாக்குவதன் மூலமாக அவர் போராட முற்படவில்லை. அவருடைய போராட்டம் முடிந்து விட்டது. உலகத்தின் நியாயத்திர்ப்பு நெருங்கிவிட்டது. ஒளி இருளில் பிரகாசிக்கிறது, விசுவாசிகள் இரட்சிக்கப்படுவார்கள், அவிசுவாசிகள் இழந்து போவார்கள். பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையிலான போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிவிட்டது. இறைவன் தன்னை விசுவாசிக்கும்படி மக்களை வற்புறுத்துவதில்லை. நீங்கள் ஒளியின் பிள்ளையாகிவிட்டீர்களா? அல்லது இன்னும் இருளின் அடிமையாகவே இருக்கிறீர்களா?

விண்ணப்பம்: நீரே உலகத்தின் ஒளி என்று உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக, கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. உம்முடைய இரக்கத்தின் ஒளிக்கதிர்களிடமாக எங்களை இழுத்துக்கொண்டு எங்களையும் இரக்கமுள்ளவர்களாக்கும். நாங்கள் பணத்தையும், அதிகாரத்தையும், உலக வெற்றிகளையும் நோக்கிக்கொண்டிராமல், நடைமுறையில் உம்மைப் பின்பற்றி ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ள எங்களுக்குத் துணைசெய்யும்.

கேள்வி:

  1. ஒளியின் பிள்ளைகள் என்பதன் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)