Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 080 (Men harden themselves)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)

5. மனிதர்கள் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு தங்களை கடினப்படுத்துகிறார்கள் (யோவான் 12:37-50)


யோவான் 12:37-41
37 அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 38 கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. 39 ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: 40 அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான். 41 ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

எருசலேமில் இயேசு தன்னுடைய அன்பின் காரணமாக பல அற்புதங்களைச் செய்தார். யாரெல்லாம் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தார்களோ அவர்கள் அவருடைய வல்லமை எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால் குறுகிய மனதுடையவர்கள், பழமைவாதிகள் அவரை ஏற்றுக்கொள்ளத் தவறினார்கள். காரணம் அவர்கள் தங்கள் இனவெறி மற்றும் தவறான கருத்தின் அடிப்படையில் அவரை அளவிட முயன்றார்கள்.

தங்கள் சுயசிந்தனைகளினால் நிறைந்த பலர் இறைவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் மெதுவாகப் பேசுபவர், நாம் அவருக்கு முழு மனதுடன் செவிகொடுக்க வேண்டும்.

ஆனால் கலகக்காரர்கள் நற்செய்தியின் மூலமாகப் பேசும் பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுக்காமல் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல, இறைவன் தன்னுடைய கோபத்தின் காரணமாக அவர்கள் செவிகொடுக்க முடியாதபடி அவர்களுடைய கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் எடுத்து விடுகிறார். அதன் காரணமாக அவர்களால் தங்களுடைய தேவையைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இறைவன் சிலருக்கு இரட்சிப்பையும் சிலருக்கு நியாயத்தீர்ப்பையும் கொடுக்கிறார்.

சில குடும்பங்கள், கோத்திரங்கள் மற்றும் இனங்கள் இறைவனுடைய கோபத்திற்குக் கீழாக வாழ்வதைக் கவனித்துப்பாருங்கள். அவர்களைத் தன்னுடைய சரியான பாதையில் நடத்தும்படி அவர் பலமுறை முயற்சி செய்தபிறகும் அவரைவிட்டு நிரந்தரமாக விலகுபவர்களை அவர் நிராகரித்து விடுகிறார். பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்குச் செவிகொடுக்க மறுப்பவர்களை இறைவன் கடினப்படுத்துகிறார். அவருடைய அன்பை வேண்டுமென்றே தங்கள் காலின் கீழ்போட்டு மிதிப்பவர்களையும் கிறிஸ்துவின் செயலைப் புறக்கணிப்பவர்களையும் இறைவன் தண்டிக்கிறார். இறைவன் தன்னுடைய பரிசுத்தத்தின் காரணமாக கீழ்ப்படியாதவர்களைப் படிப்படியாகக் கடினப்படுத்தி அழிவிற்கு ஒப்புக்கொடுக்கிறார்.

இறைவனை எதிர்ப்பவர்களை அவர் கடினப்படுத்துகிறார் என்ற கருத்து புதுமையானதல்ல, அவருடைய மகிமையோடு தொடர்புடையது. ஏசாயா மக்களை விடுவிக்கும்படி அனுப்பப்படாமல், அவர்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டபோது இதைப் புரிந்துகொண்டார் (ஏசாயா 6:1-13). அன்பைப் பற்றிப் பிரசங்கிப்பது, இறைவனுடைய கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி மக்களை எச்சரிப்பதைவிடக் கடினமானது. அவருக்கு முன்பாக எந்தத் தீமையும் நிற்க முடியாது. அவருடைய மகிமையின் பிரகாசத்தில் அவை பறந்துபோகும். இயேசு இறைவனுடைய அன்பின் மனுவுருவாதலால், அவருடைய ஆள்த்துவம் மக்களைப் பிரிக்கிறது. ஏசாயா தன்னுடைய தரிசனத்தில் கண்டவர்தான் இயேசு என்று யோவான் தைரியமாக வலியுறுத்துகிறார். ஏனெனில் பிதாவும் குமாரனும் தங்கள் பரிசுத்தத்திலும் மகிமையிலும் ஒன்றாயிருக்கிறார்கள்.

யோவான் 12:42-43
42 ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். 43 அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.

நற்செய்தியாளனாகிய யோவானுக்கு பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தாரிடம் செல்வாக்கிருந்தது (யோவான் 18:15). பொதுமக்கள் இயேசுவை விட்டுத் தூரமாக விலகியிருந்தபோதிலும், தலைவரர்களில் சிலர் அவரை விசுவாசித்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். இறைவன் இயேசுவுடன் இருக்கிறார் என்றும் அவருடைய வார்த்தைகள் வல்லமையும் சத்தியமும் நிறைந்தவைகள் என்றும் அவர்கள் அறிந்திருந்தபோதிலும், வெளிப்படையாக அவருக்குச் சாட்சி கொடுக்க அவர்கள் தயங்கினார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு எதிராக இயேசுவைப் பற்றி ஆலோசனைச் சங்கம் எடுத்த முடிவை ஏன் ஏற்றுக்கொண்டார்கள்? அவர்கள் சத்தியத்தைவிடவும் பாதுகாப்பையும் புகழையும் முக்கியப்படுத்தினார்கள். பரிசேயரினால் இவற்றிற்கு ஆபத்து வந்தவிடும் என்று அஞ்சினார்கள். எருசலேமில் இருக்கிற யாரும் இயேசுவை ஆதரித்தால் அவர்களைப் புறம்பாக்கி விடுவோம் என்று பரிசேயர்கள் பயமுறுத்தியிருந்தார்கள். ஆகவே இந்தத் தலைவர்கள் தங்கள் அந்தஸ்தை விட்டுக்கொடுக்க மனதில்லாமல், தடையுத்தரவையும் உபத்திரவத்தையும் கண்டு பயந்தார்கள். யூத மக்களை விட்டுப் புறம்பாக்கப்பட்ட எவரும் எந்தப் பொருளையும் விற்கவோ வாங்கவோ முடியாது. திருமணம் செய்யவோ, மற்ற மக்களோடு சேர்ந்து விண்ணப்பிக்கவோ முடியாது. அவர்கள் சமுதாயத்தை அசுத்தப்படுத்தும் குஷ்டரோகிகளைப்போல பார்க்கப்படுவார்கள்.

ஏன் இந்த மக்கள் தலைவர்கள் இரகசியமாக கிறிஸ்துவை விசுவாசித்தபோதிலும், வெளிப்படையாக அதை அறிக்கை செய்யவில்லை? அவர்கள் இறைவனுடைய புகழ்ச்சியைப் பார்க்கிலும் மனிதருடைய புகழ்ச்சியை அதிகம் நாடினார்கள். பரிசுத்தமான இறைவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமாயிருக்கவில்லை. அவர்கள் தங்கள் ஆண்டவரைக் காட்டிலும் தங்களையே அதிகமாக நேசித்தார்கள்.

ஒரு மனிதன் இயேசுவை இரகசியமாக விசுவாசித்துக் கொண்டு தனக்கு இயேசுவைப் பற்றி தெரியாது என்பதுபோல நடிப்பவர்களுக்கு ஐயோ. அப்படிப்பட்டவன் ஒரு ஆபத்தான நேரத்தில் இயேசுவை மறுதலிக்கக்கூடியவன். அவன் இறைவனால் வரும் கனத்தையும் பாதுகாப்பையும்விட தன்னுடைய பாதுகாப்பையும் மதிப்பையுமே எதிர்பார்க்கிறான். கர்த்தர் தன்னுடைய நன்மையான சித்தத்தினால் அவர் உங்களை நடத்துவார் என்ற நம்பிக்கையில் உங்கள் இரட்சகரும் கர்த்தருமாகிய அவரை அறிக்கை செய்யுங்கள்.

யோவான் 12:44-45
44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். 45 என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

இயேசு தன்னுடைய போதனையின் சாரத்தைக் கடினமான வார்த்தையின் மூலம் எடுத்துக்கூறி, மக்களை மனந்திரும்ப அழைத்தார். ஆயினும் ஆவிக்குரியவர்களுக்கு அவருடைய கூற்று எளிமையாகவே இருந்தது. “என்னை விசுவாசிக்கிறவன் என்னிடத்தில் அல்ல” என்ற வார்த்தைகள் சற்று முரண்பாடானது போல தோன்றும். ஆனால் அவர் தன்னைப் பின்பற்றி வருபவர்களை தன்னிடத்தில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவர்கள் அனைவரையும் தன்னுடைய பிதாவினிடத்தில் நடத்துகிறார். அவர் தனக்கென்று சிறப்பான உரிமைகள் எதையும் வைத்துக்கொள்ளாமலும் அனைவரும் தன்னை மட்டுமே நம்ப வேண்டும் என்று எண்ணாமலும் இருப்பதைப் பார்க்கிறோம். மனிதர்களுடைய விசுவாசத்தில் பிதாவையே இயேசு முக்கியப்படுத்துகிறார். ஆகவே அவர் எந்த வகையிலும் இறைவனுடைய மகத்துவத்தைக் குறைத்துப் போடாமல் தொடர்ந்து அதை வெளிப்படுத்தி மகிமைப்படுத்துகிறார்.

அதேவேளையில் குமாரன் மூலமாக அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. குமாரனை விசுவாசிக்காமல் யாரும் மெய்யாக இறைவனை விசுவாசிக்க முடியாது. பிதா அனைத்து விசுவாசிகளையும் தம்முடைய குமாரனுக்குச் சொந்தமாகக் கொடுத்து, அவரை அனைத்து தெய்வீக குணாதிசயங்களினாலும் அலங்கரித்திருக்கிறார். ஆகவே தாழ்மையுள்ள குமாரன் எந்த அகங்காரமும் இல்லாமல், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொல்ல முடியும். நாம் முழுவதும் கீழ்ப்படியத்தக்கதாக இறைவனுடைய வல்லமையையும் மகிமையையும் சுமந்துவரும் இறைவனுடைய உண்மையான அப்போஸ்தலர் இயேசுவே. இறைவனுடைய ஜீவன், ஒளி, மற்றும் மகிமையின் சாராம்சத்தை இயேசுவே காண்பிக்கிறார். இயேசு தன்னுடைய வாழ்விலும் உயிர்த்தெழுதலிலும் வெளிப்படுத்திய இறைவனையல்லாமல் நமக்கு வேறு இறைவனைத் தெரியாது. அவர் தன்னுடைய தாழ்மையினால் பிதாவின் நிலைக்கு உயர்த்தப்பட்டார். உண்மையில் ஏசாயாவின் தரிசனத்தில் தோன்றியவர் இயேசுதான், ஏனெனில் பிதாவுக்கும் குமாரனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

யோவான் 12:46-48
46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். 47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். 48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

ஆப்பிரிக்காவின் பல கிராமங்களில் ஒரு பயங்கர நோய் பரவியது. மக்கள் காய்ச்சலினால் தங்களுடைய காட்டுக் குடிசைக்குள் தூக்கித் தூக்கி எறியப்படுவார்களாம். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சூரிய வெளிச்சத்தில் நடந்தால் அந்த நோயின் கிருமிகள் அழிக்கப்படும் என்று அங்கு விரைந்து சென்ற மருத்துவர் அறிந்துகொண்டார். ஆகவே அவர் மக்களை நோக்கி “நீங்கள் உங்கள் இருளடைந்த காட்டுக் குடிசைகளிலிருந்து வெளியே வந்து சுகமடையுங்கள். உங்களைப் பாதித்திருக்கும் கிருமி சூரிய வெளிச்சத்தினால் அழிந்து போகும்” என்று கூப்பிட்டுச் சொன்னார். பலர் அதை நம்பி குடிசைக்கு வெளியே சென்று சுகமடைந்தார்கள். மற்றவர்கள் வலியின் காரணமாக மருத்துவர் சொன்னதை நம்பாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள். மருத்தவரும் சுகமாக்கப்பட்ட சிலரும் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் சூரிய வெளிச்சத்திற்குப் போகவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஐயோ, நீங்கள் சொன்னது எங்களுக்கு மிகவும் எளிமையாகத் தோன்றியது. நாங்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் களைப்படைந்திருந்தோம்” என்று பதிலுரைத்தார்கள். அப்போது அந்த மருத்துவர் அந்த மக்களைப் பார்த்து, “நீங்கள் நோயினால் சாகவில்லை, என்னுடைய வார்த்தைகளை நம்பாததால்தான் சாகிறீர்கள்” என்று கூறினார்.

இந்த உதாரணம் கிறிஸ்துவின் வல்லமையை விளக்குகிறது. அவர் தீமையை வெற்றி கொண்டு, பாவ இருளின்மீது உதிக்கும் நீதியின் சூரியனாயிருக்கிறார். அவருடைய அதிசமான ஒளிக்குள் வருகிற எவரும் இரட்சிக்கப்படுகிறார்கள். மக்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்து விடுவிப்பதைத் தவிர அவருக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. அனைத்து அழிவு சக்திகளிலிருந்தும் அவருடைய வார்த்தை நம்மை விடுவிக்கும். அவருடைய வார்த்தையைக் கேட்டு, விசுவாசித்து, பற்றிக்கொண்டு, அவரிடம் வந்து, அவருக்குக் கீழ்ப்படியும் எவரும் என்றென்றும் வாழ்வார்கள். மரணம் அவர்கள் மீது ஆளுகை செய்யாது.

ஆனால் யார் அவருடைய வார்த்தையைக் கேட்டு அதை தன்னுடைய இருதயத்தில் வைக்கவில்லையோ அவர்கள் பாவத்தில் மூழ்கி, இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு, புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள். இவ்விதமாக நற்செய்தி அவிசுவாசிகளுடைய அழிவுக்குக் காரணமாயமையும். நீங்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து அதன்படி வாழ முடிவு செய்துள்ளீர்களா?

யோவான் 12:49-50
49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். 50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

இயேசு இறைவனுடைய வார்த்தையாயிருக்கிறார். இறைவன் சிந்திப்பதையும் விரும்புவதையுமே இயேசுவின் பேச்சில் நாம் கேட்கலாம். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து உங்களுக்கு வரும் நேரடியான செய்தியாவார். குமாரன் கீழ்ப்படிவுள்ளவராக, பிதாவின் சத்தத்தைக் கேட்டு அதை மனிதர்களுடைய மொழிகளில் இயேசு நமக்குக் கொடுக்கிறார். அவர் குற்றமுள்ள உலகத்தைப் பார்த்து இவ்வாறு பேசுகிறார்: “நான் நித்தியமானவர். உங்களுடைய பிதாவாக இருப்பேன். என்னுடைய கிருபையினால் நான் உங்களுக்க முடிவற்ற வாழ்வைக் கொடுப்பேன். நீங்கள் இறைவனுடைய கோபத்திற்கும் அழிவிற்கும் காரணமானவராயிருக்கலாம். ஆயினும் நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி நான் என்னுடைய பரிசுத்த மகனை உங்களுக்காகப் பலியிட்டேன். நீங்கள் மரிப்பதில்லை. என்னுடைய மேசியாவின் கரத்திலிருந்து நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி உங்களை அழைக்கிறேன். யார் அதைப் பெற்றுக்கொள்ளவில்லையோ அவர்கள் பரதீûஸக் காணாமாட்டார்கள், மெய்வாழ்வைப் பெற மாட்டார்கள்.” இந்த வார்த்தைகளின் மூலமாக இறைவன் மனித குலத்திற்கு இலவசமான இரட்சிப்பை வாக்களிக்கிறார். ஆனாலும் யாரெல்லாம் கிறிஸ்துவைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இறைவன் தந்த அழகிய வாழ்வைப் புறக்கணித்தபடியால் குழியில் விழுவார்கள்.

விண்ணப்பம்: பிதாவே நீர் எங்களுக்க நித்திய வாழ்வைக் கொடுப்பதால் உமக்கு நன்றி. நாங்கள் உம்மை மேன்மைப்படுத்தி மகிழ்ச்சியினால் உம்மைத் துதிக்கிறோம். நீர் எங்களை மரணத்திலிருந்து ஜீவனுக்குத் திருப்பியிருக்கிறீர். பாவத்தின் ஆளுகையிலிருந்து உம்முடைய அன்புக்குத் திருப்பியிருக்கிறீர். உம்முடைய குமாரனுடைய வார்த்தைகளை எங்கள் இருதயத்தில் வைத்து, அவற்றை எங்கள் மனதில் இருத்தும், அப்போது நாங்கள் கனி கொடுப்போம். உம்முடைய நற்செய்தியினால் பலரை உயிர்ப்பியும். மற்றவர்களும் மரணமடையாமல் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, உம்முடைய நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்க எங்களுக்குக் கற்றுத்தாரும்.

கேள்வி:

  1. கிறிஸ்துவில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)