Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 033 (The Believer Considers Himself Dead to Sin)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

1. விசுவாசி தன்னைப் பாவத்திற்கு மரித்தவனாக நினைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:1-14)


ரோமர் 6:1-4
1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. 2 பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? 3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

ரோமர் 1 முதல் 5 அதிகாரங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் சட்டப்படி நீதிமான்களாக்கப்பட்டு, இறைவனுடைய கோபத்திலும் தண்டனையிலுமிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்பதைக் காண்பிக்கிறார். இந்த நீதிமானாக்கப்படுதல் இறைவனோடு சமாதானத்தையும் உலக மக்கள் மீதான அன்பையும் உண்டாக்குகிறது என்பதை ரோமர்களுக்கு அவர் விளக்குகிறார்.

இந்த உண்மையை முதலில் அவர் முன்வைத்த பிறகு, இலவசமாகக் கிடைக்கும் நீதியின் எதிரிகள் கேட்கும் முக்கியமானதும் இறை நிந்தனையானதுமான கேள்விக்கு பதிலுரைக்கிறார்: கிருபை பெருகும்படி நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா? இறைவனுடைய உண்மை காணப்படும்படி நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?

இந்தக் கெடுநோக்குள்ள கேள்விக்குப் பதிலளிக்கும்போது, விசுவாசிகளுடைய வாழ்வில் பாவத்தின் மீது எப்படி இறுதியாக வெற்றி பெறுவது என்ற வழியை விவரிக்கிறார். ஆகவே, பின்வரும் பத்தியை வாசித்து தன்னுடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தாத விசுவாசி முற்றிலும் குணமடைய முடியாது. நம்முடைய இந்தப் பாடம் ஒரு கொள்கை விளக்கமல்ல, நடைமுறைப் பரிசுத்த வாழ்விற்கான வழிகாட்டுதல்.

“உங்கள் பாவங்களுக்கு எதிராகப் போராடி அவற்றை மேற்கொள்ளுங்கள்” என்று பவுல் ஆலோசனை கூறவில்லை. ஏனெனில் தன்னுடைய சொந்த சக்தியினால் ஒருவரும் தங்களுடைய பாவங்களை மேற்கொள்ள முடியாது என்பதை அவர் நன்கு அறிவார். உங்களுக்கு எதிராக போராடும்படி அவர் உங்களை அழைக்கவில்லை. உங்களுடைய பழைய மனிதனுக்கு மரிப்பதைத் தவிர பாவத்தை மேற்கொள்வதற்கு வேறு வழி இல்லை என்பதைத்தான் பவுல் இங்கு சாட்சியிடுகிறார்.

நம்மில் உள்ள பாவத்தின் வல்லமைக்கு மரிப்பது எப்படி? இதற்குப் பவுல் எளிமையாக பதிலுரைக்கிறார்: “நாம் மரித்தோம்”. பாவத்தை அழிப்பதற்கு இதுதான் இலகுவான வழி. இந்த மரணத்தை அவர் நடந்து முடிந்த ஒன்றாக இறந்த காலத்தில் குறிப்பிடுகிறார். இந்த மரணம் நம்முடைய முயற்சிகளைச் சார்ந்ததல்ல. அதற்காக நாம் இனிமேல் போராட வேண்டிய அவசியமும் இல்லை. அவர் காண்பிப்பதைப் போல நம்முடைய திருமுழுக்கு தீய மனிதனுடைய அடக்கத்தையும் சுயநலத்தின் மரணத்தையும் அடையாளப்படுத்துகிறது. கிறிஸ்தவ திருமுழுக்கு என்பது வெறும் வெளிச்சடங்கு மட்டுமல்ல. அது வெளியான சுத்திகரிப்போ, உடலின் மீது தண்ணீரை ஊற்றுதலோ அல்ல. அது நியாயத் தீர்ப்பு, மரணம் மற்றும் அடக்கம் செய்தலாகும். திருமுழுக்கில் நீங்கள் தண்ணீருக்குள் மூழ்கும்போது, இறைவன் உங்களை மரணத்திற்கு நியாயந்தீர்த்தார் என்பதை அடையாளப்படுத்துகிறீர்கள். பழைய மனிதனை அழித்துப் போடுகிற செயல் நம்முடைய உடலில் செய்யப்படுகிற காரியம் அல்ல. அது கிறிஸ்துவினுடைய பதிலாள் மரணத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாக ஆவியில் செய்யப்படுகிறது. உடன்படிக்கையின் அன்பில் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்படுவதையும், அவர் மீது நமக்கு தோன்றும் அன்பையும், அவருடைய உண்மையின் உதாரணத்தில் நாம் நிலைத்திருப்பதையும் நம்முடைய திருமுழுக்கு குறித்துக் காண்பிக்கிறது.

கிறிஸ்து நம்முடைய பாவத்தை நீக்கியபோது, அவருடன் நம்முடைய பெருமைக்கு நாம் மரணமடைந்தோம். இவ்வாறு சிலுவை என்பது தீய மனிதனைக் குத்திக் கொலை செய்வதாகும். இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் தன்னைத்தான் வெறுத்து, தன்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு மனிதனும் அனுதினமும் மரணமடைய வேண்டும் என்று அறிக்கை செய்கிறான். நம்முடைய மரணம் ஒரு உளவியல் யுத்தத்தினால் ஏற்படுவதல்ல. அது “எல்லாம் முடிந்தது” என்று சொல்லி இயேசு தம்முடைய உயிரைச் சிலுவையில் விட்டபோது நடைபெற்ற ஒன்றாகும். நீங்களும் இதை விசுவாசித்தால் மீட்கப்படுவீர்கள் பாவத்தின் வல்லமையில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

கிறிஸ்து சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டதோடு மட்டுமன்றி, அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அந்த உயிர்த்தெழுதலின் மூலமாக நமக்கு அவர் முடிவற்ற வாழ்வைக் கொடுக்கிறார். கிறிஸ்துவின் மரணத்தோடு நாம் இணைவதன் மூலமாக நாம் சுய வெறுப்பைப் பெற்றுக்கொள்வதோடு, அவருடைய உயிர்தெழுதலில் இணைக்கப்படுவதன் மூலமாக நாம் அவருடைய வாழ்வின் வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம். ஆகவே, நம்முடைய விசுவாசம் என்பது வெறும் அறிவோ உபதேசமோ அல்ல, அது கிறிஸ்து நம்மில் பிறந்ததைப் போல அவருடைய வல்லமை நம்மில் வளருவதாகும். அவர் நம்மில் வளர்ந்து, செயலாற்றி, வெற்றிபெற்று நம்முடைய உடலில் உள்ள தீமையை மேற்கொள்கிறார். வெற்றி பெறுகிறவர்கள் நாம் அல்ல, அவரே நம்மில் வெற்றி பெறுகிறார்.

மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் என்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுடைய மாபெரும் மகிமையான வெற்றியாகும். தம்முடைய குமாரனுடைய உயிர்த்தெழுதலின் மூலமாக அவர் தம்முடைய நித்திய மகிமையையும் அசைக்க முடியாத நீதியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். தம்முடைய குமாரனுடைய ஒப்புரவாக்குதலையும், மரணத்தின் மீதான வெற்றியையும், பரிசுத்த வாழ்வின் வெளிப்பாட்டையும் ஏற்றுக்கொள்வதன் மூலமாக அவர் இதைச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இறைவனுடைய வல்லமை நிச்சயமாக செயல்பட்டது. விசுவாசத்தினால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிற விசுவாசிகளிலும் இந்த தெய்வீக வாழ்வின் புதுமை செயல்படுகிறது. கிறிஸ்தவம் என்பது மரணம் அல்லது பயத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் அல்ல. அது நம்பிக்கை, வாழ்வு, வல்லமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் ஆகும்.

நாம் கிறிஸ்துவைத் தொழுதுகொள்வதன் மூலமாக கிறிஸ்து நமக்குத் தூரமானவரல்ல, நட்சத்திரங்களுக்கு அப்பால் வாழ்ந்துகொண்டு, நம்மைக் குறித்து சிந்திக்க நேரமில்லாதவராக இருக்கும் ஒருவர் அல்ல என்பதை நாம் அறிக்கை செய்கிறோம். அதற்கு மாறாக நாம் அவரைத் தொழுதுகொள்ளும்போது, அவருக்கும் நமக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத உறவையும், தம்முடைய முழு வல்லமையோடு அவர் நம்மில் வாழ்வதையும், எல்லாக் காலத்திலும் அவர் நம்முடன் இருந்து, நம்மைப் பரிசுத்தத்திற்கு நடத்துகிறார் என்பதையும் அறிக்கை செய்கிறோம். இவ்வாறு உங்களுடைய திருமுழுக்கு கிறிஸ்துவினுடைய மரணத்தோடும் வாழ்வோடும் உங்களுக்கிருக்கிற ஐக்கியமாக இருப்பதுடன் உங்களுடைய விசுவாசம் புதிய உடன்படிக்கையாக இருக்கிறது. கிறிஸ்துவோடு இணைந்திருக்கிற ஒவ்வொருவரும் தாங்கள் கிறிஸ்துவோடு சிலுவையில் மரித்து, அவரோடு புதிய வாழ்வுடையவர்களாக உயிரோடு எழுந்திருக்கிறோம் என்பதை அறிக்கை செய்கிறார்கள்.

விண்ணப்பம்: ஓ, கர்த்தராகிய கிறிஸ்துவே, நீர் உம்முடைய சிலுவையில் என்னுடைய மரணத்தை நிறைவேற்றி முடித்தீர். உம்முடைய உயிர்த்தெழுதலில் என்னுடைய வாழ்வைப் பிரகடனப்படுத்தினீர். உம்மை விசுவாசிக்கிற அனைவரோடும் சேர்ந்து, நான் உம்மைத் தொழுகிறேன். அவர்கள் விசுவாசத்தில் உம்மோடு மரணமடைந்து, ஆவியில் உம்மோடு எழுந்திருக்கிறார்கள். மகிமையின் பிதாவே, உம்மை நாங்கள் தொழுகிறோம். உம்முடைய குமாரனுடைய உயிர்த்தெழுதலின் மூலமாக உம்முடைய மகிமையை வெளிப்படுத்தியதாலும், உம்மில் எங்களுக்கு நீர் வாழ்வளித்ததாலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய கிருபையில் நிலைத்திருக்கவும், தூய்மையிலும், பாவத்திற்கு விலகியிருப்பதிலும், உண்மையிலும், அன்பிலும், பொறுமையிலும் அவருடைய கட்டளையின்படி வாழ எங்களுக்கு உதவி செய்தருளும். அப்போது உம்முடைய வாழ்வு அனைத்து விசுவாசிகளுடைய வாழ்விலும் வெளிப்படும்.

கேள்வி:

  1. திருமுழுக்கின் பொருள் யாது?

நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்
பெறுவீர்கள்.

(அப்போஸ்தலர் 2:38)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 11:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)