Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 032 (The Grace of Christ)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
இ - நீதிமானாக்கப்பட்டவர்களுக்கு இறைவனோடும் மனிதர்களோடும் புதிய உறவு ஏற்படுகிறது (ரோமர் 5:1-21)

3. கிறிஸ்துவின் கிருபை மரணம், பாவம், நியாயப்பிரமாணம் ஆகியவற்றை மேற்கொண்டது (ரோமர் 5:12-21)


ரோமர் 5:12-14
12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

மரணத்தின் இரகசியத்தைப் பவுல் நமக்கு தெளிவுபடுத்துகிறார். பாவம்தான் மரணத்தின் காரணம் என்பதைக் காண்பிக்கிறார். நம்முடைய ஆதிப் பெற்றோர் இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அதனால் மரணத்தை அறுவடை செய்தார்கள். நாம் அனைவரும் ஒரே இனமாக இருப்பதால் எல்லாரும் கெட்டவர்களாக மாறிப்போனார்கள். அத்தருணத்திலிருந்து மரணம் அனைத்து மக்களையும் ஆளுகிறது. நியாயப்பிரமாணவாதிகளையும் பழைய உடன்படிக்கையின் தேவபக்தியுள்ளவர்களையும் மரணம் விட்டுவைக்கவில்லை. பாவம் வெளிப்படையாக வந்தபோது நியாயப்பிரமாணத்தினால் பாவத்தின் சம்பளம் மரணம் என்று தீர்ப்பெழுதப்பட்டது.

நாம் அனைவரும் பாவிகளாக இருப்பதால்தான் மரணமடைகிறோம். மனித குலத்திற்கு நிலைவாழ்வு இல்லை. நாம் மரணத்தின் விதையை நமக்குள் சுமந்திருப்பதால் நாம் மெதுவாக மரணத்தை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், நாம் மனந்திரும்பி இரட்சகரை விசுவாசிக்கும்படி இறைவன் நமக்கு நேரம் கொடுக்கிறார். அப்போது நாம் கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலமாகப் புதுவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

ரோமர் 5:15-17
15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. 16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. 17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

முதலாவது ஆதாமின் மூலமாக பாவம் மற்றும் மரணம் ஆகியவற்றின் இரகசியத்தைப் பவுல் விளக்குகிறார். அதற்குப் பிறகு இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியையும் வாழ்வையும் குறித்துப் பேசுகிறார். நம்முடைய முதல் தந்தையாகிய ஆதாம் “வரப்போகிற கிறிஸ்துவுக்கு மாதிரியாக இருந்தார்” என்றும் குறிப்பிடுகிறார்.

பாவமும் மரணமும் ஆதாமின் மூலமாகப் பலருக்குப் பரவியது என்றும் அதேபோல இறைவனுடைய கிருபையும் நித்திய வாழ்வாகிய ஈவும் கிறிஸ்துவின் மூலமாக அநேகருக்குப் பரவியது என்றும் பவுல் குறிப்பிடவில்லை. ஏனெனில் கிறிஸ்து ஆதாமைவிட வித்தியாசமானவராகவும் மேன்மையானவராகவும் இருக்கிறார். நம்முடைய கர்த்தர் வாழ்வைக் கொடுக்கிறவர் மட்டுமல்ல கிருபையையும் வரங்களையும் அதிகமதிகமாகப் பெருகச் செய்கிறவர். மரணத்தைப் போல இறைவனுடைய கிருபை பயங்கரமானதாகவும் பாடுபடுத்துகிறதாகவும் இல்லாமல், உயிர்ப்பிக்கிறதாகவும், பலனளிக்கிறதாகவும், வளருகிறதாகவும், வலுவான வாழ்வளிக்கிறதாகவும் இருக்கிறது.

பாவத்தின் மீதான இறைவனுடைய தண்டனை முதல் மனிதனில் ஆரம்பித்து தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது. ஆனால் நீதிமானாக்கப்படுதல் ஒரு மனிதனில் ஆரம்பிக்கப்படவில்லை, கிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்தின் மூலமாக அனைத்துப் பாவிகளையும் ஒரே நேரத்தில் நீதிமான்களாக்கினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.

நம்முடைய ஆதிப் பெற்றோரின் பாவத்தின் நிமித்தமாக வந்த மரணம் முழு மனுக்குலத்தின் மீதும் பயங்கரமான அரசனாக உருவெடுத்ததைப் போல, தம்முடைய மாபெரும் கிருபையினால் கிறிஸ்து திறந்து வைத்த இந்த விடுதலையும் நன்மையுமான ஊற்று, அனைத்து விசுவாசிகளுக்கும் பிரவாகித்து ஓடுகிறது. ஆயினும் மரணம் மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்களை ஆண்டு கொண்டதைப் போல இறைவனுடைய கிருபை கட்டாயத்தின் பேரில் ஆட்சி செய்வதில்லை. ஆனால் யாரெல்லாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்துவுடன் என்றென்றும் ஆட்சி செய்வார்கள். உண்மையில் கிறிஸ்துவின் மேன்மைகளை நாம் ஆதாமுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஏனெனில் இறைவனுடைய கிருபையும் அவர் அருளும் வாழ்வும் மரணம், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவைகள்.

ரோமர் 5:18-21
18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். 20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. 21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

ஆதாமையும் கிறிஸ்துவையும் குறித்த தன்னுடைய சட்டபூர்வமான ஒப்பீட்டுக்கு பவுல் இப்போது திரும்புகிறார். ஆயினும் இந்தப் பகுதியில் அவர் நபர்களை முதலில் ஒப்பிடாமல் அவர்களுடைய செயல்களையும் அவற்றின் விளைவுகளையுமே ஒப்பிடுகிறார். ஒருவருடைய கீழ்ப்படியாமையினாலே தண்டனை அனைத்து மனிதர்கள் மேலும் ஆண்டுகொண்டது, ஒருவருடைய நீதி மற்றும் சத்தியமுள்ள செயலினாலே அனைத்து மனிதர்களுக்கும் நித்திய வாழ்வு கொடுக்கப்படுகிறது. பரலோகத்தின் கொடை எவ்வளவு அற்புதமானது! முதலாவது மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் அனைத்து மனிதர்களும் பாவத்திற்கு அடிமையானார்கள். முதலாவது கீழ்ப்படிதலினாலே அனைவரும் நீதிமானகளாக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இறுதியாக, ஆதாமுடைய பாவத்தையும் கிறிஸ்துவின் நீதியையும் ஒப்பிடும்போது பவுல் நியாயப்பிரமாணம் என்னும் பிரச்சனைக்குள் நுழைகிறார். இரட்சிப்பின் வரலாற்றில் மீறுதலை வெளிப்படுத்தும்படியாகவும் மனிதர்களுடைய கீழ்ப்படிதலைத் தூண்டும்படியாகவும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் உலகத்தின் இரட்சிப்புக்கு அது உதவிகரமானதாக இருக்கவில்லை. நியாயப்பிரமாணம் மனிதர்களுடைய இருதயக் கடினத்தையும் பாவங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துவிட்டது. ஆகிலும் கிறிஸ்து நம்மை அனைத்துக் கிருபைக்கும் ஆதாரமான ஊற்றுக்கு அருகில் கொண்டுவந்தார். உலகத்தின் வனாந்தரம் அனைத்திற்கும் ஆறாக ஊற்றெடுக்கும் கிருபையானது நீதியைத் தொடர்ந்து பொழிந்தருளும்படி தம்முடைய வல்லமையின் முழுமையை அவர் நமக்குத் தருகிறார். பவுல் மகிழ்ச்சியினால் கொண்டாடுகிறார். “கடந்த காலத்தில் பாவம் மரணத்தின் மூலமாக அனைத்து மனிதர்கள் மீதும் ஆளுகை செய்தது. இப்போது தீமையின் ஆளுகை முடிவுக்கு வந்துவிட்டது. இக்காலத்தில் கிருபை முடிசூடியுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையினால் உறுதியாக்கப்பட்ட இறைவனுடைய நீதியின் மீது கட்டப்பட்டுள்ள ஆட்சி அது”.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்தெழுதலும் ஒரு புதிய யுகத்தை நமக்காகத் திறந்திருக்கிறபடியால், அந்த யுகத்தில் பாவமும் மரணமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிற காரணத்தினால், ஒவ்வொரு மனிதனும் நன்றியுள்ளவனாயிருப்பதற்கும், ஆறுதலடைவதற்கும், துதிசெய்வதற்கும் இப்போது காரணங்களிலிருக்கின்றன. கிருபையின் வளர்ச்சியை நாம் அதன் கனிகளிலும் நித்திய வாழ்விலும் நாம் காண்கிறோம். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களில் நற்செய்தியின் மூலமாக இறைவனுடைய வல்லமையின் முழுமை செயல்படுகிறது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் பாவம், மரணம், சாத்தான் ஆகிவற்றை மேற்கொண்ட காரணத்தினால் உம்மைத் தொழுதுகொள்கிறோம். நீர் எங்களை கிருபையின் காலத்திற்குள் கொண்டு வந்து வாழ்வின் நன்மைகளுக்கு எங்களைப் பங்காளிகளாக்கினீர். வெற்றிகொள்ளப்பட்ட சக்திகளிடத்தில் நாங்கள் திரும்பாதபடிக்கு எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, எங்கள் புரிந்துகொள்ளுதலை விலாசப்படுத்தும். உம்முடைய கிருபையில் எங்களை நிலைப்படுத்தி, உம்முடைய ஆவியின் கனிகளை எங்களுக்குத் தாரும், அப்போது மரணத்தைவிட உம்முடைய கிருபை பெரியது என்பது வெளிப்படும். உம்முடைய நிறைவினால் எங்களை நிறைத்தமைக்காகவும் உம்முடைய உண்மையினால் எங்களைக் காப்பதற்காகவும் உமக்கு நன்றி.

கேள்வி:

  1. ஆதாமையும் கிறிஸ்துவையும் ஒப்பிடுவதன் மூலமாக பவுல் நமக்கு எதைக் காண்பிக்க விரும்புகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 11:19 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)