Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 034 (The Believer Considers Himself Dead to Sin)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

1. விசுவாசி தன்னைப் பாவத்திற்கு மரித்தவனாக நினைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:1-14)


ரோமர் 6:5-11
5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. 10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

உங்களுடைய அழுக்கான பாவங்களின் நிமித்தமாகத்தான் கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் மரித்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களுடைய பாவங்களினிமித்தமாகவும் தீய குணத்தின் நிமித்தமாகவும் நீங்கள் மரணத்திற்கும் நரகத்திற்கும் பாத்திரவான்களாயிருக்கிறீர்கள். ஆயினும் உங்களுடைய குற்றத்திற்கான இறைவனுடைய தண்டனையை இயேசு சுமந்து, குற்றஞ்சாட்டப்பட்ட உங்களுடைய இடத்தில் உங்களுக்காக மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

கிறிஸ்துவின் அன்பையும் மீட்பின் செயலையும் நீங்கள் அறிந்துகொள்வீர்களானால் நீங்கள் உங்கள் பாவத்தைக் குறித்து வெட்கப்படுவீர்கள். அந்தப் பாவங்களைக் குறித்துச் சிந்திக்கவும் பயப்படுவீர்கள். அதனால் உங்களை நீங்களே வெறுத்துப் புறக்கணிப்பீர்கள். நீங்கள் உங்களையே ஏற்றுக்கொள்ள முடியாதவராக, வெறுத்து, உங்களை நீங்களே நியாயந்தீர்ப்பீர்கள். உங்களை மரணமடைந்தவராகவும் அழிக்கப்பட்டவராகவும் கருதுவீர்கள். கிறிஸ்து உங்களில் வாழும்படி உங்களுடைய இந்த ஆவிக்குரிய மரணத்தை நடைமுறையில் செயல்படுத்தும்போது மட்டுமே நீங்கள் உங்கள் சுயத்தில் இருந்து மீட்கப்பட முடியும்.

சுயத்தை வெறுக்காமல் நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது. இதைக் குறித்து பவுல் தன்னுடைய ஆரம்ப சாட்சியை நிருபங்களில் எழுதுகிறார். நாம் கிறிஸ்துவோடு இணைந்து வாழும்படி கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, அவரோடு உயிர்த்தெழுந்தோம். சிலுவையில் அறையப்பட்ட ஒருவன் தன்னுடைய விருப்பப்படி நடந்துகொள்ள முடியாதவனாக, மிகுந்த வேதனையோடு மரணத்தை அனுபவிக்கிறான் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

சிலுவையில் அறையப்பட்டவரை நாங்கள் விசுவாசிக்க ஆரம்பித்தபோது இந்த எங்களுடைய மரணம் ஆரம்பமானது என்று பவுல் சாட்சியிடுகிறார். அந்தத் தருணத்தில் நாங்கள் கிறிஸ்துவின் மரணத்தோடு இணைந்தவர்களாக, கிறிஸ்துவினுடைய மரணம் எங்களுடைய மரணம் என்று நாங்கள் அறிக்கையிட்டோம். நாங்கள் சட்டப்படி மரணமடைந்து விட்டோம். இப்போது இந்த வாழ்வில் எங்களுக்கு எந்த உரிமைகளோ, விருப்பங்களோ இல்லை. இறைவனுடைய கோபம் கிறிஸ்துவில் நம்மை முற்றிலுமாக அழித்துவிட்டது.

ஒரு நாட்டின் சட்டம் மரணமடைந்தவருக்கு மேல் எவ்வித அதிகாரத்தையும் செலுத்த முடியாததைப் போலவே, நியாயப்பிரமாணமும் மரணமடைந்தவர்கள் மீது எந்த வல்லமைûயும் அற்றதாகக் காணப்படுகிறது. நம்முடைய உடல்களை நாம் மரணமடைந்ததாகக் கருதுகிறபடியால் பாவச் சோதனைகள் நம்முடைய சரீரத்தில் ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளன.

ஆயினும் சிலர் கிட்டத்தட்ட மரணமடைந்தவர்களாக இருந்தாலும் இன்னும் பாதி உயிருடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் உயிர் மூச்சு இருக்கிறது. அவர்கள் இன்னும் நடக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உங்களுடைய நகரத்தின் தெருக்களில் மரணமடைந்த ஒருவன் சிதைந்த தனது உடலுடன் எழுந்து நடந்து சென்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அவனுடைய நாற்றத்தின் நிமித்தமாக அனைவரும் விலகி ஓடுவார்கள். அவ்வாறே ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய பழைய பாவங்களுக்குத் திரும்பி தனது இழிவான இச்சைகளுக்கு மீண்டும் அடிமையாவதைப் போல பயங்கரமானது வேறு ஒன்றுமில்லை. நாம் சுய வெறுப்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பது விசுவாசத்தின் நிபந்தனையாக இருக்கிறது. நாம் எப்போதும் கிறிஸ்துவுக்குள் மரணமடைந்தவர்களாக நம்மை நினைத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய பழைய மனிதனுடைய சுபாவங்களைக் களைந்து போட்டு, நாம் சிலுவையில் அறையப்பட்டவர்களாகவும் அடிக்கப்பட்டவர்களாகவும் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். ஆயினும் நம்முடைய விசுவாசம் நமது எதிர்மறையான காரியங்களை நியாயப்படுத்திவிடாது. நம்முடைய விசுவாசம் ஒரு நேர்மறையான காரியமாகும். அது வாழ்வளிக்கும் விசுவாசம், ஏனெனில் விசுவாசத்தினால் நாம் கிறிஸ்துவோடு இணையும்போது, அவருடைய உயிர்த்தெழுதலிலும், வெற்றியிலும், வல்லமையிலும் நாம் பங்கடைகிறோம். கிறிஸ்து தன்னுடைய கல்லறையை விட்டு அமைதியாக வெளியேறி, தம்முடைய ஆவிக்குரிய உடலினால் பாறைகளையும் சுவர்களையும் கடந்து சென்றார். அதைப் போல கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுடைய வாழ்விலும் அவருடைய நித்திய வாழ்வு பிரவாகித்து ஓடும்.

கிறிஸ்து ஒருபோதும் மரணமடைவதில்லை. அவர் மரணத்தை மேற்கொண்டார், அதனால் இந்த பழைய எதிரியாகிய மரணத்திற்கு பரிசுத்தரின் மேல் எந்த அதிகாரமும் இல்லை. தேவ ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரணமடைந்து, நித்திய மீட்பை ஏற்படுத்தினார். அவர் இறைவனுடைய சித்தத்தைச் செய்யவும் மனிதர்களுக்குச் சேவை செய்யவும் மரணமடைந்தார். இன்று அவர் எவ்வளவாக தம்முடைய உயிரை இறைவனுக்காகவும் மனிதர்களுக்காகவும் கொடுப்பார். தங்களுடைய பரிசுத்த நடத்தையினால் பரிசுத்த பிதாவின் நித்திய பெயரை மகிமைப்படுத்தும் பல மகன்களையும் மகள்களையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்து அவரை மகிமைப்படுத்துவதற்காகவே அவர் வாழ்கிறார்.

நம்முடைய விசுவாசத்தின் அடையாளத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, சிலுவையோடு இணைக்கப்பட்டபோது நம்மை நாமே முழுவதுமாக வெறுத்தோம். அதனால்தான் இயேசு நாம் ஆவியில் உயிர்த்தெழும்படி தம்முடைய வாழ்வின் வல்லமையை நமக்குள் நாட்டினார். இயேசு உயிரோடு எழுந்து என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்வதைப் போல நாமும் குற்றமற்றவர்களாக நித்திய நீதியில் மகிழ்வோடு இறைவனுக்காக வாழும்படி அப்படிச் செய்தார்.

ஆயினும் கிறிஸ்துவுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவர் நித்திய காலமாகவே பரிசுத்தராக இருக்கிறார், நாம் அவரோடு விசுவாசத்தினால் இணைக்கபடுவதால்தான் உண்மையான பரிசுத்தத்தைப் பெற்றுக்கொண்டோம். நாம் இறைவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று மட்டும் அப்போஸ்தலர் நம்மிடம் கேட்கவில்லை, நாம் கிறிஸ்துவுக்குள் அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கேட்கிறார். பரிசுத்த இறைவனிடத்தில் நாமாகவே வருவதற்கு நமக்குத் தகுதியில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவுக்குள் மூழ்கும்போது அவருடைய அன்பில் நம்முடைய சுய நலம் மரணமடைகிறது. நாம் அவரில் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம். அவருடைய வல்லமையும், இரக்கமும், சந்தோஷமும் நம்மில் செயல்படுகிறது. அதனால் நம்மை நேசிக்கிற அவராலே நம்முடைய எல்லா இயலாமைகளையும் நாம் மேற்கொள்கிறோம். நம்முடைய விசுவாசத்தினாலும் உடைக்கப்பட்ட சித்தத்தினாலுமே இந்த சலாக்கியத்தில் நாம் பங்குகொள்கிறோம். நீங்கள் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம்பண்ணப்பட்டீர்கள் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அவரோடு உண்மையிலேயே உயிர்த்தெழும்பியிருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா?

விண்ணப்பம்: ஓ, பரிசுத்த கர்த்தராகிய கிறிஸ்துவே, நீரே சிலுவையில் எனக்குப் பதிலாளாக மரணமடைந்தீர். நீர் என்னுடைய பாவங்களையும் அவற்றிற்கான தண்டனையையும் சுமந்தீர். இந்த மாபெரும் அன்பின் மீட்புக்காக உமக்கு நன்றி. என்னுடைய சுய வெறுப்பை நீர் முழுமையாக்கும். உம்முடைய மரணத்தில் நானும் மரணமடைந்தேன் என்று நான் நினைக்கும்படி நான் மரணத்திற்குத் தீர்க்கப்பட்டேன் என்ற அறிவை என்னில் நிலைப்படுத்தும். உம்முடைய பாடுகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் உமக்கு நன்றி. நான் உமக்காக வாழவும், உம்முடைய பிதாவை மகிமைப்படுத்தவும், விசுவாசத்தில் உம்முடன் இணைந்திருக்கவும் தக்கதாக உம்முடைய உயிரை நீர் எனக்குள் ஊன்றியதால் நான் உம்மை மகிமைப்படுத்துகிறேன். பரிசுத்தமுள்ள ஆண்டவரே, நீர் குற்றவாளிகளைப் பரிசுத்தவான்களாகவும், தகப்பனற்றவர்களை இறைவனுடைய பிள்ளைகளாகவும் மாற்றுகிறீர். உம்முடைய கிருபை எவ்வளவு பெரியது! எங்களுடைய வாழ்வையும் தொழுகையையும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும்.

கேள்வி:

  1. எவ்வாறு நாம் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கடைந்தோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 11:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)