Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 006 (The Baptist prepares the way of Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
அ - இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-18)

2. யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 1:6-13)


யோவான் 1:9-10
9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. 10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.

கிறிஸ்துவே உலகத்திலுள்ள மெய்யான ஒளியாவார். பரிசுத்த ஆவியானவர் தீர்க்தரிசிகள் மூலமாக அவருடைய வருகையைப் பற்றி பலவருடங்களுக்கு முன்பாகவே முன்னுரைத்திருந்தார். பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் அவர் நம்முடைய உலகத்திற்கு வருவதைக் குறித்த விவரங்களால் நிரம்பியுள்ளன. இதோ, இருள் பூமியையும், காரிருள் வானங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும் (ஏசாயா 60:2) என்று இதைப் பற்றி ஏசாயா குறிப்பிடுகிறார்.

நம்முடைய தியானப் பகுதியில் உலகம் என்ற வார்த்தை நான்கு முறை திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளது. நற்செய்தியாளனாகிய யோவானுக்கு உலகம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட இருள் என்ற பொருளைத் தருவதாயிருந்தது. ஏனெனில், உலகம் முழுவதும் பொல்லாங்கானுக்குள் கிடக்கிறது என்று அறிந்திருக்கிறோம் (1 யோவான் 5:19) என்று அவர் எழுதுகிறார்.

இறைவன் உலகத்தை நல்லதாகப் படைத்தபடியால் அது ஆரம்பத்தில் தீமையானதாகக் காணப்படவில்லை. அவர் அண்டத்தை தன்னுடைய அழகினாலும் நன்மையினாலும் நிரப்பியிருந்தார். அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது (ஆதி. 1:31). இறைவன் மனிதனைத் தன்னுடைய சாயலில் படைத்து, கண்ணாடியைப் போல சிருஷ்டிகரைக் பிரதிபலிக்கும் மனுக்குலத்தின் பெற்றோருக்கு தன்னுடைய மகிமையைக் கொடுத்தார்.

ஆனால் பெருமையின் காரணமாக அனைவரும் தீமையானவர்களாகவும் கலகக்காரர்களாகவும் மாறிப்போனார்கள். அவர்கள் தங்களை இருளின் ஆவிக்குத் திறந்துகொடுத்தபடியால், தங்கள் இருதயத்தில் இறைவனுடன் இருந்த ஐக்கியத்தை விட்டுவிட்டார்கள். இறைவனைவிட்டு தங்களை விலக்கிக்கொள்பவர்கள் தங்களைத் தீயவர்களாக்கிக்கொள்கிறார்கள். இதைத்தான் தாவீது, தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை (சங். 14:1) என்று சொல்லுகிறார். ஆனால், எவ்வாறு சூரியன் மெதுவாக எழுந்து வரும்போது, தனக்கு முன்னுள்ள வெளிச்சத்தைத் துரத்துகிறதோ, அதேபோல கிறிஸ்து இந்த தீய உலகத்திற்குள் வருகிறார் என்று நற்செய்தியாளனாகிய யோவான் சாட்சி பகர்கிறார். குருடாக்கும் மின்னலைப் போல கிறிஸ்துவின் ஒளி இந்த உலகத்தில் நுழைவதில்லை. அது மெதுவாக உலகத்திற்குள் வந்து எல்லா மக்களுக்கும் ஒளிகொடுக்கிறது. அதாவது கர்த்தர் இவ்வுலகத்திற்கு நியாயாதிபதியாக அல்லது தண்டனையை நிறைவேற்றுபவராக வரவில்லை. அவர் இரட்சகராகவும் மீட்பராகவும் வந்தார். எல்லா மக்களும் கிறிஸ்துவின் ஒளியைப் பெற வேண்டும். இந்த ஒளியின்றி அவர்கள் இருளில் நிலைத்திருப்பார்கள். கிறிஸ்து மட்டுமே மெய்யாக ஒளிகொடுப்பவர்; இதைச் செய்யத்தக்கவர் வேறு யாருமில்லை. யாரெல்லாம் இந்த ஒளியைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய குணாதிசயம் மாற்றப்பட்டு, நல்லவர்களாகி மற்றவர்களுக்கு ஒளிகொடுப்பார்கள்.

சிருஷ்டிகர் இந்த உலகத்திற்கு வந்தார் என்ற கூற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? சொந்தக்காரர் தனக்குச் சொந்தமானதற்கு வந்தார், அரசன் தன்னுடைய மக்களிடம் நெருங்கி வந்தார். யார் விழித்திருந்து அவருடைய வருகைக்கு ஆயத்தம் செய்வார்கள்? அவருடைய வருகையையும், அவருடைய நோக்கங்களையும், தன்மையையும் ஆய்வு செய்பவர்கள் யார்? யார் வீணானதும் உலகத்திற்குரியதுமான நோக்கங்களை விட்டுவிட்டு, வருகிற இறைவனை அணுகி, அவரை வரவேற்பார்? இறைவன் வரும் இந்த புரட்சிகரமான, சிறப்பான நேரத்தை உணர்பவர்கள் யார்?

இவ்வாறு கர்த்தர் திடீரென பாவிகள் நடுவில் காணப்பட்டார்; அவர் எளிமையாக, அமைதியாக மற்றவர்களால் கவனிக்கப்படாமல் வந்தார். அவர் தன்னுடைய மேன்மை, வல்லமை மற்றும் மகிமையினால் இவ்வுலகத்திற்கு ஒளிகொடுக்க நினைக்காமல், அவர் தம்முடைய தாழ்மையையும், அன்பையும், சத்தியத்தையும் வெளிப்படுத்தினார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனிதனுடைய வீழ்ச்சிக்குப் பெருமைதான் காரணமாயிருந்தது. ஆகவே சர்வ வல்லவர் தன்னை தாழ்மையானவராக முன்வைத்தார். சாத்தான்கூட கடவுளைவிட தன்னை பெலமுள்ளவனாகவும், மகிமையுள்ளவனாகவும், அறிவுள்ளவனாகவும் காட்டிக்கொள்ள விரும்புகிறான். ஆனால் கிறிஸ்து பெலவீனமான குழந்தையாக தாழ்மையான மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். இவ்வாறு மனுக்குலமனைத்துக்கும் விடுதலையைக் கொண்டுவரும்படி அவர் தன்னுடைய தாழ்மை, மென்மை, மற்றும் கீழ்ப்படிதல் மூலமாக எவ்வளவாக தன்னைத் தாழ்த முடியுமோ அவ்வளவாகத் தன்னைத் தாழ்த்தினார்.

அனைத்து மக்களும் கவனியுங்கள்! இந்த நற்செய்திக்குப் பிறகு ஒரு பயங்கரமான செய்தியை வாசிக்கிறோம். உலகம் அந்த ஒளியை அறிந்துகொள்ளவுமில்லை உணரவுமில்லை. இறைமகன் அவர்களுக்கு அருகில் வந்து அவர்கள் நடுவில் காணப்பட்டார் என்பதை உலகம் அறியவில்லை. மக்கள் தத்துவ ஞானங்கள், அறிவியல்கள் மற்றும் உலகத் திறமைகள் ஆகியவற்றைப் பெற்றிருந்தும் குருடர்களாகவே காணப்பட்டார்கள். இறைவனே தங்களுக்கு முன் நிற்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை, அவர்கள் தங்கள் சிருஷ்டிகரை அறியவில்லை, தங்கள் இரட்சகரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வேதனையான உண்மையிலிருந்து, இறைவனுடைய இராஜ்யத்திற்கான ஒரு முக்கியமான கொள்கையை நாம் கண்டுகொள்ளலாம். அதாவது நாம் நம்முடைய மூளையறிவினால் அல்லது மனித திறமைகளினால் மட்டும் இறைவனை புரிந்துகொள்ள முடியாது. கிறிஸ்துவின் அன்பைக் குறித்த எல்லா அறிவும் மெய்யான கிருபையாகவும் இறைவனிடமிருந்து வரும் கொடையாகவுமே காணப்படுகிறது. ஏனெனில் பரிசுத்த ஆவியானவரே நம்மை நற்செய்தியினால் அழைப்பவரும், அவருடைய வரங்களினால் நமக்கு ஒளிகொடுப்பவரும், நம்மை உண்மையான விசுவாசத்தில் காப்பவருமாக இருக்கிறார். ஆகவே, நாம் மனந்திரும்பி நம்முடைய சொந்த அறிவை நம்பாமலும், நம்முடைய ஆத்துமாவின் உணர்வுகளைச் சாராமலும் இருக்க வேண்டும். ஒரு பூ சூரியனுடைய வெளிச்சத்திற்கு தன்னை எப்படித் திறந்துகொடுக்கிறதோ அப்படியே நாமனைவரும் மெய்யான வெளிச்சத்திற்கு நம்மைத் திறந்துகொடுக்க வேண்டும். இந்த வழியில் கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் மெய்யான அறிவை உருவாக்கும். விசுவாசத்தின் தொடக்கம் நம்மிலிருந்து வருவதல்ல, அவருக்குக் கீழ்ப்படிபவர்களில் கர்த்தருடைய ஆவியானவருடைய செயலாகக் காணப்படுகிறது.

விண்ணப்பம்: கர்த்தராகிய கிறிஸ்துவே நீர் இந்த உலகத்திற்கு வந்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் நியாயந்தீர்க்கவும் பழிவாங்கவும் வராமல், மக்களுக்கு ஒளிகொடுக்கவும் அவர்களுடைய விடுதலைக்காகவும் வந்தீர். ஆனால் நாங்கள் குருடர்களும் மூடர்களுமாயிருக்கிறோம். எங்களுடைய பாவங்களை மன்னித்து கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை எங்களுக்குத் தாரும். நாங்கள் உம்மைப் பார்க்கும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும், உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாங்கள் வாழும்படி, உம்முடைய மென்மையான ஒளிக்கதிர்களுக்காக எங்கள் ஆத்துமாக்களைத் திறப்பீர்களாக.

கேள்வி:

  1. வெளிச்சமாகிய கிறிஸ்துவுக்கும் இருளடைந்த உலகத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 08:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)