Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 028 (Jesus leads the adulteress to repentance)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?
4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)

அ) இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26)


யோவான் 4:1-6
1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, 2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். 3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 4 அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், 5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.

நற்செய்தியாளனாகிய யோவான் இயேசுவைக் கர்த்தர் என்று அழைக்கிறார். அதாவது அவர் நித்திய காலமாக வரலாற்றை ஆளுகை செய்பவர். அவர் தண்டிக்கிறவரும் இரக்கம் காட்டுகிற வருமாயிருக்கிறார். அவர் மக்களை வழிநடத்துகிறவரும் நியாயம் தீர்க்கிறவருமாக இருக்கிறார். இயேசுவின் மகிமையைப் பார்த்த யோவான் இந்த மகத்துவமான பட்டத்தைக் கொடுத்து அவரைக் கனப்படுத்துகிறார்.

பரிசேயர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமாக செயல்பட ஆரம் பித்தார்கள். யூதேயாவில் கிறிஸ்துவின் பிரசங்கம் பிரகாசமான வெற்றியாக இருந்தது. அவர் ஸ்நானகனைப் போலவே, மனந்திரும்பி தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும் என்று மக்களை அழைத்தார். அது ஸ்நானகனுடைய பணியை அவர் தொடருவதைப் போல காணப்பட்டது (அவர் ஞானஸ் நானம் கொடுக்காமல், அப்பணியைத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்திருந்தார்). தண்ணீர் ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கு வெறும் அடையாளம் மட்டுமே என்று இயேசு போதித்தார். ஆனால் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை, அதனால் அவர் அந்த ஞானஸ்நானத்தைக் கொடுக்க வில்லை.

பரிசேயர்களுடைய எதிர்ப்பு அதிகரித்தபோது இயேசு வடக்கு நோக்கிச் சென்றார். அவர் தன்னுடைய பிதாவின் சித்தப்படியே வாழ்ந்துகொண்டிருந்தார். இந்த நியாயப்பிரமாண வாதிகளுடன் நேரடியாகப் போராடும் நேரம் அவருக்கு இன்னும் வரவில்லை. அவர் மலைநாட்டுப் பாதையின் வழியாக நடந்து, சமாரியா வுக்குள் நுழைந்து, குறுக்கு வழியாக கலிலேயாவிற்குச் செல்ல விரும்பினார்.

பழைய ஏற்பாட்டில் இந்த சமாரியர்கள் அங்கீகரிக்கப்படாத கூட்டமாயிருந்தார்கள். காரணம் அவர்கள் சில இஸ்ரவேலருடன் பல கலப்பினங்கள் சேர்ந்து உருவான ஒரு கூட்டம். கி.மு 722ல் அசீரியர்கள் சமாரியாவை ஊடுருவிய போது, ஆபிரகாமுடைய சந்ததியில் பெரும்பான்மையானவர்களை மெசபத்தோமியா விற்குக் கொண்டுபோய்விட்டார்கள். சிலர் மட்டும் சமாரியாவில் அசீரியர்களுடன் தங்கி இவ்விதமாக கலப்பினமும் அவர்களு டைய சமய நம்பிக்கைகளில் கலப்பும் உருவானது.

சீகேமுக்கு அருகிலுள்ள சீகார் என்ற இடத்திற்கு இயேசு வந்தார். அது முற்பிதாக்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடமாயிருந்தது. மக்க ளுக்கும் இறைவனுக்கும் இடையில் யோசுவாவின் காலத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையும் இவ்விடத்தில்தான் செய்யப்பட்டது (ஆதி. 12:6 மற்றும் யோசுவா 8:30 - 35). அங்கே ஒரு பழமையான கிணறு இருந்தது, அது யாக்கோபுடையது என்று கருதப்பட்டது (ஆதி. 33:19). யோசேப்பின் எலும்புகள் நாப்லஸ் என்ற இடத்திற்கு அருகில் புதைக்கப்பட்டது (யோசுவா 24:32). இது பழைய ஏற்பாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்தது.

இயேசு நீண்ட தூரம் மலைப்பாதையில் நடந்து வந்த காரணத்தி னாலும் மதிய வெய்யிலினாலும் களைப்படைந்து கிணற்றி னருகில் உட்கார்ந்தார். அவர் ஒரு மெய்யான மனிதனாக வாழ்ந்தார். அவர் மாயாவியோ அல்லது மனித உருவில் காணப் பட்ட தெய்வமோ அல்ல. ஒரு மனிதனுக்குரிய அனைத்து பெல வீனங்களுடனும் அவர் வாழ்ந்தார்.

யோவான் 4:7-15
7 அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8 அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். 9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரைநோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருக ஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். 13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். 14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். 15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.

இயேசு கிணற்றுக்கருகில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக அங்கு வருகிறாள். மற்ற பெண்களைப் போல அவள் காலையிலோ அல்லது மாலையிலோ வராமல் மதியத்திலே தண்ணீர் எடுக்க வருகிறாள். அவள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை; அவளுக்கிருந்த கெட்ட பெயரினால் அவள் எங்கு சென்றாலும் எல்லாரும் அவளைப் பரிகசித்தார்கள். அவளுடைய கலங்கிய இருதயத்தை இயேசு தூரத்திலிருந்தே அறிந்தவராய், சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற அவளுடைய தாகத்தை உணர்ந்து கொண்டார். அவளுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். அவர் பத்துக் கட்டளைகளை அவளிடம் எடுத்துக்கூறவில்லை, அவளுடைய நடத்தைக்காக அவளை அவர் திட்டவும் இல்லை; மாறாக அவர் தண்ணீர் தரும்படி அவளிடம் கேட்டார். அவள் தனக்குத் தண்ணீர் தரத் தகுதியானவள் என்று அவளுக்கு உணர்த்தினார். ஆனால் அவர் ஒரு யூதர் என்பதை அப்பெண் அறிந்துகொண்ட போது தயக்கம் காட்டினாள். அவளுடைய மக்களுக்கும் அவரு டைய மக்களுக்கும் இடையில் பெரிய பிரிவினை காணப்பட்டது. இரண்டு சாராரும் மற்றவர்களுடைய பாத்திரங்களைத் தொடுவ தில்லை. அவ்வாறு தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்று அவர் கள் கருதினார்கள். இயேசு அவ்விதமாக அவர்களுக்கு நடுவில் எந்த சடங்கு ரீதியான பிரிவினையும் இல்லாததுபோல, தண்ணீர் கேட்டதின் மூலமாக அவளைக் கனப்படுத்தினார்.

அந்தப் பாவியான பெண்ணுடைய இருதயத்தில் இறைவனைக் குறித்த பசியை உண்டுபண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கமாகும். அவர் கிணற்றுக்கு அருகில் இருந்த காரணத்தினால் தண்ணீரைப் பற்றி பேசுவது பொருத்தமாயிருக்கும். அது இறைவன் கொடுக் கும் கொடையைப் பற்றிய விருப்பத்தை அவளில் உண்டு பண்ணியது. இறைவனுடைய அன்பை ஒரு நோக்கமாக அவ ளுக்கு முன்பாக அவர் வைத்தார். அவளுடைய பாவத்திற்கான தண்டனையைக் குறித்து அவர் பேசாமல், கிருபையினால் ஆயத்தமாக்கப்பட்ட இறைவனுடைய அருட்கொடையைப் பற்றி பேசினார். எத்தனை பெரிய அற்புதம் இது.

கிருபை காற்றிலே தானாக வருவதில்லை, அது இயேசு என்னும் நபரில் மட்டுமே வருகிறது. அவரே தாலந்துகளையும் தெய்வீக கிருபைகளையும் கொடுப்பவர். ஆனால் அந்தப் பெண் இயேசுவை இன்னும் சாதாரண மனிதனாகவே பார்த்தாள். கிறிஸ்துவின் மகிமை அவளுடைய கண்களிலிருந்து மறைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய தூய அன்பு அவளுக்கு முன்பாக பிரகாசித்தது. ஜீவ தண்ணீர் (வாழ்வளிக்கும் தண்ணீர்) தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். அவர் அருளும் பரலோக தண்ணீர் ஆத்துமாவின் தாகத்தைத் தணிக்கிறது. மக்கள் அன்புக்காகவும் சத்தியத்திற்காகவும் ஏங்கி இறைவனிடம் திரும்ப விரும்பு கிறார்கள். இயேசுவிடம் வருகிறவர்கள் தங்கள் தாகத்தைத் தீர்த் துக்கொள்கிறார்கள்.

யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கிறிஸ்து இறை வனுடைய அருட்கொடைகளைக் கொடுக்கிறார். இயேசு எவ்வாறு தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டாரோ அவ்வாறு நாம் நம்முடைய தேவையை அறிக்கை செய்ய வேண்டும். யாரெல்லாம் தங்கள் தலைகளைத் தாழ்த்தி கேட்காவிட்டால், இலவசமாக அருளப்படும் பரலோக தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாது.

அந்தப் பெண் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை. அவள் நடைமுறை உண்மையைப் பற்றி பேசினாள்: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவதண்ணீர் உண்டாகும் என்று கேட்டாள். அதேவேளையில் அவள் இயேசுவின் இரக்கத்தையும் அன்பையும் அனுபவித்தபடியால் ஆச்சரியமடைந்தவளாகக் காணப்பட்டாள். அவளுடைய அயல கத்தாரைப் போல அவர் அவளை வெறுக்கவில்லை. அவருடைய மகத்துவத்தில் அவளைவிட்டு விலகினவராகக் காணப்பட்ட போதிலும், அவருடைய பரிசுத்தத்தில் அவர் அவளை நேசித்தார். அவரைப் போன்ற தூய்மையான ஒரு மனிதனை அவள் தன்னுடைய வாழ்வில் சந்தித்திருக்க மாட்டாள். அதனால் அவள், எங்களுடைய முற்பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரா? நீர் ஒரு அற்புதத்தைச் செய்து ஒரு புதிய கிணற்றை உருவாக்கித்தரப் போகிறீரா? என்று கேட்டாள்.

சரீரத்தில் ஏற்படும் தாகத்தை இவ்வுலகத்திலுள்ள தண்ணீரைக் கொண்டு தணிக்கும் எவருக்கும் மீண்டும் தாகமெடுக்கும் என்பதால் தான் இயற்கைத் தண்ணீரைப் பற்றி பேசவில்லை என்று இயேசு அவளுக்கு விளக்கமளித்தாள். உடல் சாதாரணமாக தண்ணீரைக் கிரகித்து வெளியேற்றிவிடும்.

ஆனால் இயேசு கொடுப்பதோ ஜீவ தண்ணீர். அது மனிதனுடைய அனைத்து ஆன்மீக தாகத்தையும் தணிக்கக்கூடியது. கிறிஸ்தவர்கள் இறைவனைத் தேடி கண்டடைகிறார்கள். அவர்கள் தத்துவ ஞானிகளைப்போல தாங்கள் அடைய முடியாத சத்தியத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதில்லை. இறைவன் அவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்; அவருடைய அடிப்படைத் தன்மையை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவருடைய அன்பு எப்போதுமே நமக்குப் போதுமானது. அவருடைய வெளிப்பாடுகள் ஒருபோதும் கடினமானதாகவோ காலத்துக்கு உதவாததாகவோ இருக்காது. எப்போதும் பிரவாகித்து வரும், அனுதினமும் புதுப்பிக்கப்பட்ட, தெளிவுள்ள, இறைவனைப் பற்றிய புத்துயிரூட்டும் வெளிப் பாடுகளாகிய அவை வெறும் சிந்தனைகள் அல்ல. அவை வல்லமை யாகவும் வாழ்வாகவும், ஒளியாகவும், அமைதியாகவும் காணப் படுகிறது. பரிசுத்த ஆவியானவரே இறைவனுடைய ஈவாகிய பரலோக தண்ணீர்.

தான் மட்டுமே ஜீவதண்ணீரைக் கொடுப்பவர் என்று இயேசு மூன்று முறை வலியுறுத்திக் கூறுகிறார். எந்தவொரு மதமோ, மக்கள் கூட்டமோ, உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ யாரும் உங்களுடைய தாகத்தைத் தீர்க்க முடியாது. உங்கள் இரட்சகராகிய இயேசுவே உங்கள் ஆத்தும தாகத்தைத் தீர்க்க முடியும்.

இறைவனுடைய வரத்தைப் பெற்றுக்கொள்ளும் எவரும் மறுரூபமடைகிறார்கள். அப்போது தாகமுள்ள மனிதனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீர் பிரவாகித்து வந்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தையும், கிருபையையும், சந்தோஷத்தையும், அன்பையும் மற்ற ஆவியின் கனிகளையும் கொடுக்கும். அவரில் நிலைத்திருப்பவர்கள் கிருபையின் மேல் கிருபை பெற்று மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறார்கள்.

இயேசு ஒரு மாயவித்தைக்காரன் அல்ல என்றும் தன்னுடன் மெய்யாகவே அவர் உரையாடுகிறார் என்றும் அந்தப் பெண் அறிந்து கொண்டாள். அந்த ஜீவதண்ணீரைத் தனக்கும் தரும்படி அவள் இயேசுவிடம் கேட்டாள். அவள் தன்னுடைய தேவையை அறிக்கை செய்தாள், ஆனால் இன்னும் இயேசு உலகத்திற்குரிய தண்ணீரைப் பற்றி பேசுவதாகவே நினைத்துக்கொண்டிருந்தாள். அந்தத் தண் ணீரைப் பெற்றுக்கொண்டால் அவள் மறுபடியும் தண்ணீர்க் குடத்தைத் தலையில் சுமந்துகொண்டு, தன்னை வெறுப்பவர்களுடன் தண்ணீர் எடுக்கும் செயலில் ஈடுபடத் தேவையில்லை என்று கற்பனை செய்தாள்.

விண்ணப்பம்: ஜீவதண்ணீரைக் கொடுக்கும் கர்த்தராகிய இயேசுவே, அன்பிற்காகவும் அறிவிற்காகவும் தவிக்கும் எங்கள் தாகத்தைத் தீரும். எங்கள் கேட்டை எங்களுக்கு மன்னித்து, எல்லாக் கறைகளையும் சுத்திகரித்து எங்களைத் தூய்மைப்படுத்தும். அப்போது பரிசுத்த ஆவியானவர் எங்களில் வந்து இறங்கி எப்போதும் எங்களில் வாசம்பண்ணுவார். எங்களுடைய உள்ளத்தில் ஊற்றப் பட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் நிறைவினால் மற்றவர்களும் ஆசீர்வாதம் பெறும் நீரூற்றுகளாக எங்களை மாற்றும். சாந்தத்தையும், விண்ணப்பத்தையும், அன்பையும், விசுவாசத்தையும் எங்களுக்குப் போதித்தருளும்.

கேள்வி:

  1. இயேசு நமக்குக் கொடுக்கும் கொடை எது? அதன் தன்மைகள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:24 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)