Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 038 (The Law Prompts the Sinner to Sin)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

4. நியாயப்பிரமாணம் பாவியைப் பாவம் செய்யத் தூண்டுகிறது (ரோமர் 7:7-13)


ரோமர் 7:8
7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. 8 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.

பவுல் தமது எதிரிகளின் வாதத்தைத் தன்னுடைய ஆவியில் உணருகிறார்: “பரிசுத்தமானதும் இறைவனுடைய வெளிப்பாடுகளிலேயே மிகவும் சிறந்ததுமாகிய இறைவன் நம்மை விடுவித்திருக்கிறார் என்று சொன்னால், நியாயப்பிரமாணம் குறைவுள்ளது என்றும் பெலவீனமானது என்றும் தவறானது என்றும் நாம் கொள்ள முடியுமா?”. அப்போஸ்தலன் அவர்களுடைய வாதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, மிகைப்படுத்தி “நியாயப்பிரமாணம் பாவமா?” என்று கேட்கிறார். அதற்கு உடனடியாக பதிலுரைக்கிறார்: “இறைவனுடைய கட்டளைகள் தீமையாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் அவைதான் நமக்கு வாழ்வில் வழியைக் காண்பிக்கின்றன.”

“மற்றபடி அறியவில்லை” என்பதற்கு “நியாயப்பிரமாணம் பாவம் என்ற கூற்றை நான் மறுதலிக்கிறேன். அப்படிப்பட்ட காரியத்தை நான் உபதேசிக்கவில்லை. அப்படி நான் உபதேசிப்பதாக என்னைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டை நான் மறுதலிக்கிறேன். “ஆனால்” நியாயப்பிரமாணம் பாவத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதை நான் கூறுகிறேன்” என்று பொருள்பட பயன்படுத்துகிறார். அதாவது நியாயப்பிரமாணம் இல்லாமல் நான் பாவத்தைக் குறித்து கவலையற்றவனாக வாழ்ந்து வந்தேன். அப்போது பக்கத்துவீட்டு மரத்தின் கனியைப் பறித்து உண்பது தவறு என்பதை அறியாத ஒரு சிறுவனைப் போல நான் பாவம் செய்து வந்தேன். பாவம் ஆரம்பத்தில் அழகாகவும் இன்பமாகவும் தோன்றுகிறது. இது பாவத்தினுடைய வஞ்சனை. நம்முடைய பாவத் தன்மையின்படி தீமையை நன்மையாகவும் நன்மையைத் தீமையாகவும் பார்க்கும்படி நம்மை ஏமாற்றுகிறது.

ரோமர் 7:9-11
9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். 10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். 11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.

நாம் ஒரு மனிதனுக்கு ஒரு கட்டளையை அறிவிக்கும்போது, அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியக்கூடாது என்ற எண்ணத்தை நாம் அவனுடைய உள்ளத்தில் தோற்றுவிக்கிறோம். நியாயப்பிரமாணத்தை மீற வேண்டும் என்ற ஆசை எப்போதும் மனிதனுடைய மனதில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏழாம் வசனத்தில் பவுல் தன்னைப் பற்றிப் பேசுகிறார். நியாயப்பிரமாணத்தை அறியாத நிலையில் அவர் தான் நல்ல நிலையில் இருப்பதாகவும் பாவமற்றவராக, தன்னில் எந்தத் தீமையும் இல்லாதவராக இருப்பதாகவும் கருதிய தன்னுடைய அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், இறைவனுடைய கட்டளை அவருடைய வாழ்வில் வந்தபோது, தான் பாவி என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. பாவத்தை வெறுக்கவும் அதற்கு மரணமடையவும் வேண்டும் என்ற கட்டளை அவருடைய மனதில் தொனித்தது. ஏனெனில், நம்முடைய சுயம் என்பது நமது சொந்த விருப்பங்களாகவும் ஆசைகளாகவும் இருப்பதால், இறைவனுடைய நியாயப்பிரமாணம் மனிதனுடைய சுயத்திற்கு எதிரான தாக்குதலாக வருகிறது. இறைவனுடைய வார்த்தைகளையும் கட்டளைகளையும் நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நாம் சுயத்தின் மரணத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

நமக்கு நாமே மரணமடைவதைத் தவிர நம்முடைய பாழ்பட்ட நிலைக்கான தீர்வு வேறு எதுவும் இல்லை என்று பவுல் மறுபடியும் இங்கு விளக்குகிறார். இதன் மூலம் நியாயப்பிரமாணம் வாழ்வின் வழியைக் காண்பித்தாலும், அது மரணத்திற்கே நம்மை நடத்திச் செல்கிறது என்ற வித்தியாசமான உண்மை இந்த ஆவிக்குரிய மரணத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் அது நம்மை சுய வெறுப்பிற்கும் மரணத்திற்கும் அழிவிற்கும் ஏதுவான இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்கும் நம்மை வழிநடத்திச் செல்கிறது.

ஆரம்பத்தில் சர்க்கரையைப் போல இனிப்பானதாக பாவம் தோன்றியது என்றும் பிறகு அது இறைவனுடைய பரிசுத்தத்திற்கும் அவருடைய இயற்கையான விதிகளுக்கும் எதிராக செயல்படும்படி நம்மை கீழ்படியாமையை நோக்கி நடத்துகிறது என்று பவுல் விளக்குகிறார். அழகிய ஆடையணிந்த நிலையில் பாவம் அவரை நரகத்திற்கு வழிநடத்திச் சென்றது. ஆதிமுதல் மனிதர்களைக் கொலை செய்யும் ஏமாற்றுக்காரனாகிய சாத்தானுடைய பொய் இது. தேனொழுகும் பேச்சினாலும் மாயமான தந்திரங்களினாலும் அவன் நம்மை மரணத்திற்கு அழைக்கிறவனாக இருக்கிறான்.

ரோமர் 7:12-13
12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. 13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

நியாயப்பிரமாணத்தில் தேறினவரும் முன்னாள் பரிசேயனுமாகிய பவுல் நியாயப்பிரமாணத்தைக் குறித்த இந்த சத்தியத்தை பயபக்தியோடு அறிவிக்கிறார்: பழைய உடன்படிக்கையின் இறைவனுடைய பரிசுத்த வெளிப்பாடாகிய நியாயப்பிரமாணம், மனிதனுக்கு நன்மை செய்யாமல், அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவனுடைய இருதயத்தில் உண்டாக்குகிறது. தீமைகளுக்கு எதிராக தடையுத்தரவுகள் மனிதன் எதிர்க்கிறவனாக மாறுவதால், நன்மையான நியாயப்பிரமாணம் அவனுக்கு மரணத்திற்குரியதாக மாறுகிறது. இல்லை, இப்படிப்பட்ட புரிந்துகொள்ளுதல் தவறானது என்று பவுல் கதறுகிறார். நன்மையான நியாயப்பிரமாணம் தீமையை வெளிப்படுத்துகிறது. அதே வேளையில் ஒரு குணமாகுதலைத் தேடவும் இரட்சிப்பைக் கண்டடைய முயற்சிக்கவும் அது மனிதர்களைத் தூண்டுகிறது. ஆகவே, பல தருணங்களில் மனிதர்கள் பாவத்தில் மூழ்க இறைவன் அனுமதித்து விடுகிறார். அவ்விதமாக அவர்கள் தங்களுடைய மனம்போன போக்கில் தங்கள் சுபாவப்படி வாழ்ந்து தங்களுடைய குற்றங்களுக்கான விளைவுகளைக் கண்டு, அவர்களே எச்சரிப்படையும்படி அப்படிச் செய்கிறார்.

விண்ணப்பம்: ஓ, ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தத்திலும் பரிபூரணத்திலும்தான் என்னுடைய அழுக்கும் சீரழிவும் தெரிய வருகின்றன. தெய்வபக்திக்குரிய காரியத்தில் நான் மேம்போக்கானவனாக இருப்பதற்காக என்னை மன்னித்தருளும். உம்முடைய நியாயப்பிரமாணத்தின் துல்லியமான வெளிப்பாட்டினால் எங்களுடைய மாய்மாலத்தின் முகமூடிகளை கிழித்தெறியும். அப்போது நாங்கள் எங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, நீர் எங்களுக்காக சிலுவையில் மரணமடைந்ததை ஏற்றுக்கொண்டு, அந்த மரணத்தில் நிலைத்திருப்பதே நாங்கள் வாழ்வடைவதற்கான ஒரே வழி என்று நாங்கள் அறிந்துகொள்வோம். ஏனெனில் உம்முடைய நியாயப்பிரமாணம் எங்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்து, பிடிவாதமான கீழ்ப்படியாமையை எங்களில் உருவாக்குகிறது. ஓ, ஆண்டவரே, நான் என்னை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். நீர் என்னை சுகமாக்கும், என்னை விடுதலை செய்யும், சுயத்துக்கு மரணமடைந்தவனாகவும், உமக்காக உயிரோடிருக்கிறவனாகவும் என்னைக் காத்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. நன்மையான நியாயப்பிரமாணம் எப்படி தீமைக்கும் மரணத்திற்கும் காரணமாக இருக்கிறது?

தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
(லூக்கா 18:13)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 12:16 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)