Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 031 (The Resurrected Christ Fulfills his Righteousness)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
இ - நீதிமானாக்கப்பட்டவர்களுக்கு இறைவனோடும் மனிதர்களோடும் புதிய உறவு ஏற்படுகிறது (ரோமர் 5:1-21)

2. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய நீதியை நம்மில் நிறைவேற்றுகிறார் (ரோமர் 5:6-11)


ரோமர் 5:6-8
6 அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

இறைவனுடைய கோபத்தையும் நீதியுள்ள நியாயத்தீர்ப்பையும் பற்றி வெளிப்படுத்திய பிறகு, உண்மையான மனந்திரும்புதலுக்கு நம்மை வழிநடத்திச் செல்கிறார். விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலை நாம் ஏற்றுக்கொண்டு, மாபெரும் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளவும், இறைவனுடைய உண்மையுள்ள அன்பில் நிலைத்திருக்கவும் நம்முடைய சுயத்தை உடைக்கிறார். நாம் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டிருந்தாலும் பெருமை நம்மை ஆட்கொண்டு விடாதபடி நம்முடைய பழைய நிலையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆவிக்குரிய ஈவுகளாகிய சமாதானம், கிருபை, அன்பு, தூய்மை, விசுவாசம், நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகிய எதுவும் நம்மிலிருந்தோ அல்லது எந்த மனித சக்தியினாலோ தோன்றுவதல்ல. இவையனைத்தும் கிறிஸ்துவினுடைய சிலுவை மரணத்தின் மூலமாகவே நமக்குக் கிடைத்தது. அவர் பிரியமான சகோதரர்களுக்காக தம்முடைய உயிரைக் கொடுக்கவில்லை, கொடிய பாவிகளாகிய நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார். மனிதன் தீமைகள் நிறைந்த வெடிகுண்டைப் போல இருக்கிறான். அவன் தன்னை மட்டுமல்ல மற்றவர்களையும் கெடுக்கிறான். ஆனால் கிறிஸ்து நம்மை நேசித்து நமக்காக மரணத்தை அனுபவித்தபடியால் இந்த நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

கிறிஸ்துவின் இந்தத் தாழ்மையில் நாம் இறைவனுடைய மாபெரும் அன்பைப் பார்க்கிறோம். தன்னுடைய சுகவீனமான சகோதரனுடைய நன்மைக்காக தன்னுடைய நல்வாழ்வையும், நேரத்தையும், செல்வத்தையும், சுகத்தையும் அல்லது உயிரையும் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பவர்களைப் பார்ப்பது அரிது. ஒருவேளை ஒருவன் தன்னுடைய நாட்டிற்காக தன் உயிரைக் கொடுக்க முன்வரலாம். ஒருவன் தன்னுடைய பிள்ளைகளுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க நினைக்கலாம். ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளுக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய நினைக்கலாம். ஆனால் இறைவனைத் தவிர வேறு யாரும் குற்றவாளிகளுக்காக, புறக்கணிக்கப்பட்ட எதிரிகளுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

இந்தக் கொள்கை நம்முடைய விசுவாசத்தின் உச்சகட்டத்தைக் காண்பிக்கிறது. நாம் இறைவனுக்குக் கீழ்ப்படியாத அவருடைய எதிரிகளாக இருக்கும்போது, பரிசுத்தர் நம்மை நேசித்தார். அவர் பாவிகளோடு தன்னை அடையாளப்படுத்தினார். கொலைகாரர்களுக்காக அவர் தம்முடைய குமாரன் மூலமாக பிராயச்சித்தத்தை உண்டுபண்ணினார். தன்னுடைய சிநேகிதருக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை. கிறிஸ்துவின் இந்த வார்த்தையில் இருந்து, அவர் நம்மை தம்முடைய மரணம்வரை நேசித்தபடியால், அவருடைய எதிரிகளாக இருந்த நம்மை “நண்பர்கள்” என்று அழைத்தார் என்பதை அறிந்துகொள்கிறோம்.

இறைவனுடைய அன்பு மிகப் பெரியதாக இருந்த காரணத்தினால் நாம் பாவம் செய்வதற்கு முன்பாகவே, நாம் பிறப்பதற்கு முன்பாகவே அவர் நம்மை நேசித்தார். ஆகவே, நம்மை நாம் நீதிமான்களாக்குவதற்கு நாம் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. அவருடைய தெய்வீகக் கிருபையை ஏற்றுக்கொண்டு, நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை விசுவாசித்தால் போதுமானது. இயேசு அருளும் இரட்சிப்பின் வல்லமை நம்மில் செயல்பட்டும் நாம் நீதிமான்களாக்கப்படுவோம்.

ரோமர் 5:9-11
9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

இப்போது சந்தோஷப்பட்டு துள்ளிக் குதியுங்கள்! நாம் கிறிஸ்துவில் வைத்த விசுவாசத்தினால் இறைவனுக்கு முன்பாக நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்! பிசாசு நமக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் கொண்டுவர முடியாது. கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய உடலையும் ஆத்துமாவையும் சுத்தம் செய்கிறது. இந்தப் புதிய நிலை எப்போதும் நிலைத்திருக்கும். ஏனெனில் கிறிஸ்துவின் பரிந்துபேசும் பணி இறைவனுடைய கோபத்தின் நாளில் நம்மை நியாயத் தீர்ப்பிலிருந்து காப்பாற்றும்.

பவுல் இரட்சிப்பின் சத்தியத்தைக் குறித்த பின்வரும் நிச்சயமான காரியங்களை ஆழமாக எடுத்துரைக்கிறார்:

முதலாவது, நாம் இறைவனுக்கு எதிரிகளாக கலகம் செய்து வாழ்ந்த காலத்திலேயே நாம் அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம். இந்த ஒப்புரவாகுதலுக்கு நம்முடைய ஒப்புதல் பெறப்படவில்லை. அதற்காக நாம் எந்தக் கிரயமும் கொடுக்கவில்லை. உண்மையில் இந்த ஒப்புரவாக்குதலை ஆரம்பிக்கவோ பெற்றுக்கொள்ளவோ நாம் தகுதியற்றவர்களாக இருப்பதால் அது இலவசமாக நமக்குக் கொடுக்கப்படுகிறது. குமாரனாகிய இறைவன் மனிதனாக வந்து சிலுவையில் மரணமடைந்த காரணத்தினால்தான் இந்த ஒப்புரவாகுதல் சாத்தியமானது.

இரண்டாவது, கிறிஸ்துவின் மரணம் இப்படிப்பட்ட அற்புத மாற்றத்தை உருவாக்கியிருக்குமானால், கிறிஸ்துவின் வாழ்வு எப்படிப்பட்ட இரட்சிப்பைப் பெற்றுத்தரும்! இப்போது நாம் மனப்பூர்வமாக, தீர்மானத்தோடு இறைவனுடன் ஒப்புரவாகியிருக்கிறோம். இறைவனுடைய வல்லமை நம்மில் செயல்படும்படி அவருடைய சித்தத்தை நம்முடைய வாழ்வில் செய்வதற்கு நாம் ஆயத்தமாயிருக்கிறோம். இவ்வாறு இறைவனுடைய ஆட்டுக் குட்டியானவரிடத்தில் நாம் வைத்த விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவின் வாழ்வாகிய நித்திய வாழ்வை நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அவரே பரிசுத்த ஆவியானவராகவும் இறைவனுடைய அன்பின் அடிப்படையாகவும் இருக்கிறார். இந்த தெய்வீக வசனங்கள் நம்முடைய வாழ்வில் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், நிதானத்தையும், துதியையும் உண்டுபண்ணுகிறது. ஆண்டவரின் ஆவியானவர் நம்முடைய எதிர்கால மகிமைக்கு அச்சாரமாயிருக்கிறார். ஏனெனில், அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான், இறைவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

மூன்றாவது, பவுல் மகிமையின் உச்சிக்கே சென்று “நாங்களும் மகிழ்ந்திருக்கின்றோம்” என்று துள்ளுகிறார். பரிசுத்த இறைவன் நம்மில் வாழ்கிறார், நாம் அவரில் நிலைத்திருக்கிறோம். நாம் அவரோடு ஒப்புரவாக்கப்பட்டதோடு மட்டுமன்றி, பரிசுத்த ஆவியாகிய இறைவனே தம்முடைய ஊணுடலை தம்முடைய ஆலயமாக்கி அதில் வாழ்கிறார். இந்த உண்மைகள்தான் பவுலை துள்ளிக் குதிக்க வைத்த உண்மைகள். இறைவன் உங்களில் வாழ்கிறார் என்ற உண்மையை அறிந்து நீங்கள் மகிழ்வடைகிறீர்களா? அப்படியானால் உங்களில் நீங்கள் உடைக்கப்படுங்கள். உங்களை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். உங்கள் ஆண்டவரைத் தொழுதுகொள்ளுங்கள். கிறிஸ்துவின் மரணம் உங்களை எவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

விண்ணப்பம்: சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவில் வெளிப்படும் இறையன்பின் வல்லமைக்கு முன்பாக நாங்கள் மண்டியிடுகின்றோம். ஈனப்புத்தியுள்ளவர்களாகிய எங்களையும் கருத்தில்கொண்ட தெய்வீக அன்பின் வழிகாட்டுதல்களுக்கு எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் எங்களைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை, தெய்வீக அன்பின் ஆழியில் மூழ்க விரும்புகிறோம்.

கேள்வி:

  1. இறைவனுடைய அன்பு எப்படி வெளிப்பட்டது?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 11:11 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)