Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 079 (The Continuation of Paul’s List of the Saints)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

5. ரோமில் உள்ள சபையில் பவுலுக்கு தெரிந்திருந்த பரிசுத்தவான்களின் பெயர் பட்டியலின் தொடர்ச்சி (ரோமர் 16:10-16)


ரோமர் 16:10-16
10 கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள். 11 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள். 12 கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். 13 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். 14 அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள். 15 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள். 16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

பவுல் தன்னுடைய போதனை மற்றும் அனுபவங்களை அறிந்திருந்தவர்களின் பெயர் பட்டியலை ரோமில் உள்ள சபைக்கு தெரிவித்தான். ரோமில், பவுல் ஒரு அந்நியன் அல்ல என்பதை இதன் மூலம் சபைத் தலைவர்களுக்கு உறுதிப்படுத்தினான். எனவே ரோம சபைக்கான தூதுவர்கள் அறியப்பட்டவர்களாக, ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

அப்பெல்லே என்பவன் புகழ்மிக்க கிரேக்க வர்ணம்தீட்டுபவன். ரோமில் உள்ள சபையில் அனுபவமிக்க அங்கத்தனனாக இவன் இருந்தான். பாடுகள், போராட்டங்கள் மத்தியில் கிறிஸ்துவுக்காக உண்மையுடன் இருந்தான். அரிஸ்தொபூலுவின் வீட்டார் விடுவிக்கப்பட்ட அடிமைகளாக இருந்தார்கள். கிறிஸ்துவின் மீது அவர்கள் வைத்த விசுவாசத்தினால், பவுல் அவர்களை சகோதரர்கள் என்று அழைத்தான். இறைவனின் குமாரன், சர்வ வல்லமையுள்ளவர் அவர்களை தத்து எடுத்து, புதுப்பித்திருந்தார்.

ஏரோதியான் மோசேயின் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க முயன்ற யூத மார்க்கத்து கிறிஸ்தவன் ஆவான். இவன் பவுலுக்கு இனத்தானாக காணப்பட்டான்.

நர்கீசுவின் வீட்டாரில் உள்ள உண்மையுள்ள கிறிஸ்தவர்களை பவுல் குறிப்பிடுகிறான். அவர்கள் பெயரை அவன் அறிந்திருக்கவில்லை. கர்த்தருக்குள் வைராக்கியமாய் இருந்த திரிபேனாள், திரிபோசாள் ஆகியோர் இரண்டு சகோதரிகள் ஆவார்கள். பெர்சியாளை ஆவிக்குரிய வழக்கத்தின்படி ஆண்டவரால் நேசிக்கப்பட்ட வைராக்கியமானவள் என்று கூறுகிறான். ஏனெனில் அவள் வெறுமனே விசுவாசிக்காமல், அதன்படி வாழ்ந்து. இயேசுவிற்காக பிரயாசப்பட்டாள்.

ரூப் என்பவனுக்கு “கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட” என்ற தனித்துவமான ஒரு அடைமொழியை பவுல் குறிப்பிடுகிறான். இவன் இயேசுவிற்கு சிலுவையைச் சுமந்த, சிரனே ஊரானாகிய சீமோனின் மகன் (மாற்கு 15:21). சீமோனின் மனைவி, அதாவது ரூபனின் தாய் மத்திய கிழக்கு பகுதியில் பவுலுக்கு பணிவிடை செய்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தப் பெண் தனக்கும் தாய் என்று குறிப்பிடுகிறான். இவள் அவனை பராமரித்து, அவனுக்கு ஆறுதலாக இருந்தவள் ஆவாள்.

விசுவாசிகளின் இரு குழுவினருக்கும் பவுல் வாழ்த்து தெரிவித்தான். அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டான். அவர்கள் மீது அவனுக்கிருந்த அக்கறையை சபையார் அறிந்துகொள்ள விரும்பினான். அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மோ, பத்திரொபா, எர்மே மற்றும் அவர்களுடன் இருந்த சகோதரர்கள் முதல் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆண்டவராகிய இயேசுவிற்குள் இவர்களை சகோதரர்கள் என்று பவுல் அழைக்கிறான். பிலொலோகு, யூலியாள், நேரே, அவளது சகோதரி, ஒலிம்பா மற்றும் அவர்களுடன் இருந்த பரிசுத்தவான்கள் இன்னொரு குழுவினர் ஆவார்கள். இவர்களும் அந்த வீட்டு சபையின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு, கனிகள் தருகின்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள். எனவே பவுல் இவர்களை பரிசுத்தவான்கள் என்று குறிப்பிடுகிறான். இவர்கள் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தவரை தங்களுடைய ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள். பரிசுத்த ஆவியினால் வரம்பெற்று, அவருடைய நித்திய வல்லமையை இவர்கள் அனுபவித்திருந்தார்கள்.

கிறிஸ்துவுக்குள்ளான அவர்களுடைய பரிசுத்த, ஆவிக்குரிய, சகோதர உறவிற்கு அடையாளமாக, ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள் என்று கூறி பவுல் பெயர்பட்டியலை நிறைவு செய்கிறான். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து சபைகளின் பிரதிநிதியாக பவுல், ரோமில் உள்ள எல்லா சபைகளுக்கும், விசுவாசிகளுக்கும் வாழ்த்துக்களை கூறுகிறான்.

பவுல் மிகவும் குறிப்பாக 25 பெயர்களைக் குறிப்பிடுகிறான். அக்காலத்தில் கற்களினால் கட்டப்பட்ட பெரிய சபைகள் கிடையாது. தங்கள் சொந்த வீடுகளில் கூடி வந்த குறுகிய எண்ணிக்கை உள்ள விசுவாசிகளின் கூடுகை தான் அப்போது இருந்தது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. ரோமில் உள்ள பரிசுத்த ஆவியின் ஆலயமாக இவர்களை பவுல் கருதுகிறான். இவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் இருந்து, தலைநகருக்கு வந்தவர்கள். இவர்கள் வேறுபட்ட மொழி மற்றும் கலாச்சாரம் உடைய ஒரு சர்வதேச சபையை உருவாக்கினார்கள். இவர்கள் கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிட்டு, அவருடைய இரத்தத்தினால் நீதிமான்காளாக்கப்பட்டவர்கள். இந்தப் பெயர் பட்டியலில் உள்ள சிலர் நீரோ மன்னனின் காலத்தில் ஏற்பட்ட பெரிய உபத்திரவத்தின் போது, இரத்தச் சாட்சிகளாக மரித்தார்கள். நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை சிறை பிடித்தான், அவர்களை தூக்கிலிட்டான், உயிருடன் கொளுத்தினான், இரும்புப் பலகைகளின் கீழ் தீயிட்டு அவர்களுடைய சரீரங்களை வறுத்தெடுத்தான்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நீர் புதிய படைப்பின் அடையாளமாக, பல்வேறு மொழிகள் பேசிய மக்களை இயேசு கிறிஸ்துவின் சபையாக, பரிசுத்த ஆவியின் நடத்துதலின்படி ரோமில் உருவாக்கியதற்காக உம்மை ஆராதிக்கிறோம். அவர்களுக்கு நித்திய வாழ்வை தந்தீர். நாங்கள் சோம்பலுடன் இராதபடி, பணி செய்ய எங்களை பெலப்படுத்தும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே இறைவனை தேடுகிற அனைவரையும் ஏற்றுக்கொள்ள உதவும்.

கேள்வி:

  1. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் பெயர்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:04 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)