Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 106 (Jesus arrested in the garden)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)

1. இயேசு தோட்டத்தில் கைது செய்யப்படுதல் (யோவான் 18:1-14)


யோவான் 18:1-3
1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். 2 இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். 3 யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.

இயேசு தம்முடைய வாழ்வையும், தமது அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்களுடைய வாழ்க்கையையும் இறைவனுடைய கரத்தில் கொடுத்து விண்ணப்பித்தார். இந்த பிரியாவிடை ஜெபத்தின் மூலமாக அவர் தம்முடைய வார்த்தைகளையும் ஊழியங்களையும் விண்ணப்பங்களையும் முடித்தார். அதன் பிறகு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவஆட்டுக்குட்டியாக பாடுகளையும் துக்கங்களையும் அனுபவிக்கும் நிலைக்குள்ளானார்.

திராட்சைத் தோட்டமிருக்கும் கிதரோன் ஆற்றுக்கு அப்புறம் உள்ள ஒலிவ மலையிலுள்ள மதில் கட்டப்பட்ட தோட்டத்திற்குள் அவர் நுழைந்தார். இந்தத் தோட்டத்தில்தான் அவரும் அவருடைய சீஷர்களும் அடிக்கடி அடைக்கலம் புகுந்தார்கள், உறங்கினார்கள்.

யூதாஸ் இந்த இரகசிய இடத்தை அறிந்தவனாக யூத அதிகாரிகளுக்கு அவர் எங்கிருப்பார் என்பதை அறிவித்திருந்தான். இதைக் கேட்ட அவர்கள் மகிழ்ச்சியுற்று தேவாலயக் காவலர்களையும் பரிசேயர்களுடைய பிரதிநிதிகளையும் சேர்த்துக்கொண்டார்கள். ரோம ஆட்சியாளர்களின் அனுமதியின்றி யாரையும் கைது செய்யவோ ஆயுதங்களைக் கொண்டு செல்லவோ அவர்களுக்கு அதிகாரமில்லை. தேசாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. யூதாஸ் தகவல் கொடுத்தால் மட்டும் போதாது அவர்களுடன் அவரைக் கைது செய்ய வழிகாட்டியாக வர வேண்டும் என்றும் யூதர்கள் அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆகவே யூதாஸ் காட்டிக்கொடுப்பவனாக மட்டுமல்ல இயேசுவை அவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தவனாகவும் இருந்தான். இறைவன் தம்முடைய குமாரனை காட்டிக்கொடுப்பவனுடைய சாயலை எடுக்கவோ, அவன் இறைமகனுடைய சாயலைப் பெறவோ இறைவன் அனுமதியாராக. அப்படிப்பட்ட இழிசெயல்களை இறைவன் செய்யுமளவுக்குத் தாழ்ந்தவர் அல்ல.

யோவான் 18:4-6
4 இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். 5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். 6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.

இயேசுவைக் கைதுசெய்ய வந்தவர்கள் எவ்வாறு தோட்டத்திற்குள் வந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அவர் தப்பிக்க முயலக்கூடும் என்று அவர்கள் கருதியமையால் பல் விளக்குகளை அவர்கள் கொண்டுவந்தார்கள். இயேசு ஆழமாக ஜெபித்துக்கொண்டிருந்தார்; சீஷர்களோ ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவரைப் பிடிப்பதற்கான கூட்டம் காட்டிக்கொடுப்பவனோடு வருகிறது என்பதை இயேசு தமது ஜெபத்தில் கண்டார். தமக்கு கடுமையான நியாயத்தீர்ப்பும் சித்திரவதையும் காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்தபோதிலும் அவர் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அவர் எல்லாவற்றையும் அறிந்தும் தம்முடைய பிதாவிற்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவர் எழுந்து கைதுசெய்ய வந்தவர்களிடம் தம்மை ஒப்புக்கொடுத்தார். அவருடைய மகத்துவமும் மேன்மையும் மாறாதிருந்தது. உண்மையில் யூதாஸ் அல்ல இயேசுவை அவர்களிடம் ஒப்புக்கொடுத்தது, இயேசுவே தம்மைத்தாம் அவர்களிடம் ஒப்புக்கொடுத்தார்.

“நீங்கள் யாரைத் தேடுகறீர்கள்?” என்று அவர் அவர்களிடம் கேட்டார். அவர்கள் அவருடைய பெயரைச் சொன்னபோது அவர் “நான்தான் அவர்” என்ற தெய்வீக நாமத்தை உச்சரித்தார். ஆவிக்குரிய அறிவுள்ள எந்த மனிதனும் இயேசுவில் இறைவனே நின்று மோசேயிடம் சொன்னதைப் போல “நானே” என்று சொல்லுகிறார் என்பதை அறிவார்கள். “நீங்கள் உண்மையிலேயே உங்கள் இரட்சகரைக் கொல்லப் போகிறீர்களா? நான்தான் அவர் உங்களுக்கு இஷ்டமானபடி எனக்குச் செய்யுங்கள். உங்களுக்கு முன்பாக நிற்கும் நானே சிருஷ்டிகரும் மீட்பருமாயிருக்கிறேன்.”

இவற்றை அவர் சொன்னபோது யூதாஸ் அங்குதான் நின்றுகொண்டிருந்தான். இந்த வார்த்தைகள் அவனது இருதயத்தைத் தைத்தது. இதுதான் யோவான் நற்செய்தி நூலில் இறுதியாக அவனைப்பற்றி குறிப்பிடப்படும் இடம். யூதாஸ் முத்தமிட்டதைப் பற்றியும் தற்கொலை செய்துகொண்டு செத்ததைக் குறித்தும் யோவான் எழுதவில்லை. எதிரிகளை தைரியமாக எதிர்கொண்ட இயேசுவைச் சித்தரித்துக் காட்டுவதே யோவானுடைய நோக்கமாயிருந்தது. இயேசு மரணத்தைச் சந்திக்க அயத்தமாக இவ்வாறு சாந்தமாக முன்வந்து தம்மை ஒப்புக்கொடுத்தது யூதாஸின் இருதயத்தைக் குத்தியது. இதைக் கண்டு யூதாஸýம் அவனுடன் வந்த கூட்டமும் அவருடைய மகத்துவமான பிரசன்னத்தில் அதிர்ச்சியடைந்தார்கள். குற்றவாளியைக் கைதுசெய்யும்போது அவர் தப்பிக்க முனைந்தால் அவரோடு போராடுவதற்கு அவர்கள் ஆயத்தமாக வந்திருந்தார்கள். ஆனால் இயேசுவோ பாவப்பரிகார நாளில் பிரதான ஆசாரியன் நடந்துகொள்வதைப் போல மரியாதையுடன் “நீங்கள் தேடுகிறவர் நான்தான்” என்று ஒப்புக்கொடுத்தார். அவர்கள் மயங்கித் தரையில் விழுந்தார்கள். இயேசு நினைத்திருந்தால் அப்போது தப்பித்திருக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்தும் அவர்களுக்கு முன்பாக நின்றுகொணடுதானிருந்தார்.

யோவான் 18:7-9
7 அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8 இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.

இயேசு தம்மைக் கைதுசெய்ய வந்தவர்களுடைய கவனத்தைத் தம்மை நோக்கியிழுத்தார். அவர்களில் சிலர் அவருடைய சீஷர்களைக் கைதுசெய்ய விரைந்தார்கள். இயேசு அதை அனுமதிக்காமல் அவர்களைக் காத்து, எதிரிகளை எதிர்கொண்டார். நல்ல மேய்யப்பனாக அவர் தம்முடைய மந்தைக்காக தமது உயிரைக்கொடுக்க ஆயத்தமாக அவர்களை விட்டுவிடும்படி போர்வீரர்களிடம் கேட்டுக்கொண்டார். அவருடைய மகத்துவம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்த காரணத்தினால் அவருடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். மீண்டும் அவர் “நானே அவர்” என்று மறுபடியும் சொன்னார். அதன்மூலம் “நானே ஜீவ அப்பம், நானே உலகின் ஒளி, நானே வாசல், நானே நல்ல மேய்ப்பன், நானே வழி, சத்தியம், ஜீவன். நானே இரட்சகர். மனித உருவில் என்னில்தான் இறைவன் நிற்கிறார்” என்று சொல்கிறார். “இயேசு” என்ற வார்த்தைக்கு இறைவன் ஆதரிக்கிறார் அல்லது இரட்சிக்கிறார் என்று பொருள். இந்த தெய்வீக ஆதரவு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டது. தாழ்மையுள்ள நசரேயனை அவர்கள் தங்கள் மேசியாவா ஏற்றுக்கொள்ளவில்லை.

யோவான் 18:10-11
10 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர். 11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.

பேதுரு தனது ஆண்டவரையோ அவரது வார்த்தைகளையோ புரிந்துகொள்ளவில்லை. அவர் தூங்கி எழுந்து இன்னும் தூக்க கலக்கத்தில் இருந்தார். போர்வீரர்களை அவர் பார்த்தபோது கோபம்கொண்டு, இயேசுவின் அனுமதியோடு அவர் வைத்திருந்த வாளை எடுத்தார். அதை உயர்த்தி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை தனது ஆண்டவருடைய அனுமதியின்றி வெட்டிப்போட்டான். அந்த வேலைக்காரனுடைய காது துண்டிக்கப்பட்டது. பேதுரு மரித்து வெகுகாலத்திற்குப் பிறகு யோவான்தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இயேசு பேதுருவின் வாளை உறையில்போடும்படி கட்டளையிட்டு மற்ற சீஷர்களும் கைதாவதைத் தடைசெய்தார் என்பதை யோவான் கோடிட்டுக் காட்டுகிறார்.

அதன் பிறகு இயேசு தாம் விண்ணப்பித்தபடி இறைவனுடைய கோபத்தின் பாத்திரத்தை தாம் குடிக்க வேண்டும் என்பதை தமது சீஷர்களுக்கு எடுத்துரைத்தார். இதன் மூலம் அவர் கைதாவதற்கு முன்பாக அவரில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆவிக்குரிய போராட்டம் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் நமக்கான அனைத்துத் தண்டனைகளையும் சுமக்கும்படி துயரப்படுவதற்கு ஆயத்தமாயிருந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். அந்தப் பாத்திரம் நேரடியாக பிதாவின் கரத்திலிருந்து வருகிறது. இவ்வாறு அவர் தமக்கு மிகவும் பிரியமானவரிடமிருந்து மிகவும் கசப்பானதைப் பெற்றுக்கொண்டார். பிதாவும் குமாரனும் மனுக்குலத்தின் மீட்பில் ஒன்றாயிருப்பதால் அன்பினாலேயே அவர் அதைச் சுமந்தார். இறைவன் தம்முடைய ஒரே பேறான மகனைக் கொடுத்து இவ்வளவாக உலகத்தில் அன்புகூர்ந்தார்.

விண்ணப்பம்: ஓ பிதாவே, உம்முடைய அறிவுக்கெட்டாத அன்புக்காக நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உம்முடைய மகனை எங்களுக்காகக் கொடுத்தீர். ஓ குமாரனே, உம்முடைய இரக்கத்திற்காகவும் மேன்மைக்காகவும் எங்களுக்காக நீர் மரிக்க ஆயத்தமாயிருந்ததற்காகவும் உம்மை ஆராதிக்கிறோம். நீர் அந்தத் தோட்டத்திலிருந்து தப்பித்துப் போகாமல் உம்முடைய சீஷர்களைக் காப்பாற்றி, உம்மை ஒப்புக்கொடுத்தீர். நீர் உம்மை வெறுத்து, எங்கள் மீது இரக்கம்பாராட்டும் உமது உண்மைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கேள்வி:

  1. தோட்டத்தில் இயேசு தமது எதிரிகளிடம் தம்மை வெளிப்படுத்தியதன் பொருள் என்ன?

கேள்வித்தாள் – 6

அன்பின் வாசகரே, இந்த 17 கேள்விகளில் 15-க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  1. இயேசு எவ்வாறு மெய்யான திராட்சைச் செடியானார்?
  2. கிறிஸ்துவில் நாமும் நம்மில் கிறிஸ்துவும் இருப்பது ஏன்?
  3. பாவத்திற்கு அடிமையாயிருப்பவர்களை இயேசு தமக்குப் பிரியமானவர்களாக எவ்வாறு மாற்றுகிறார்?
  4. கிறிஸ்துவையும் அவருடைய அன்புக்குரியவர்களையும் உலகம் ஏன் வெறுக்கிறது?
  5. கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த உலகத்தை இறைவன் எவ்வாறு சந்திக்கிறார்?
  6. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை உலகம் ஏன் வெறுக்கிறது?
  7. இவ்வுலகில் பரிசுத்த ஆவியானவரின் பணி என்ன?
  8. உலகத்தின் மாற்றத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார்?
  9. இயேசுவின் நாமத்தில் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு பிதாவாகிய இறைவன் எவ்வாறு பதிலளிக்கிறார்?
  10. பிதா ஏன் நம்மை நேசிக்கிறார்? அவர் நம்மை எவ்வாறு நேசிக்கிறார்?
  11. இயேசுவின் இந்த விண்ணப்பத்தின் முதல் பகுதியிலுள்ள முக்கியமான சிந்தனை என்ன?
  12. இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவின் நாமம் வெளிப்படுத்தப்படுதலின் முக்கியத்துவம் என்ன?
  13. பிதாவின் நாமத்தினாலே நாம் பாதுகாக்கப்படுவது எதைக் குறிக்கிறது?
  14. நம்மைத் தீமையிலிருந்து எவ்வாறு காக்கும்படி இயேசு பிதாவிடம் வேண்டுகிறார்?
  15. நம்முடைய நன்மைக்காக இயேசு பிதாவிடம் எதைக் கேட்கிறார்?
  16. இயேசுவின் பிரதான ஆசாரிய விண்ணப்பத்தின் சுருக்கம் என்ன?
  17. தோட்டத்தில் இயேசு தமது எதிரிகளிடம் தம்மை வெளிப்படுத்தியதன் பொருள் என்ன?

உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:04 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)