Previous Lesson -- Next Lesson
4. இயேசு திருச்சபையின் ஐக்கியத்திற்காக வேண்டுகிறார் (யோவான் 17:20-26)
யோவான் 17:24
24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.
இந்தப் பிரதான ஆசாரிய விண்ணப்பத்தில் இறைவனை இயேசு “பிதாவே” என்று ஆறுதரமும் “ஒன்றான மெய்த்தேவன்” என்று ஒருதரமும் அழைக்கிறார். இந்தச் சிறப்பான சொற்றொடர் மூலமாக இறைவனுக்கான தம்முடைய ஏக்கத்தையும் அவர் மீதான தம்முடைய பற்றுதலையும் வெளிப்படுத்தினார். ஏனெனில் அடிப்படையில் அவர் பிதாவுடன் ஒன்றாயிருந்தார். நம்முடைய இரட்சிப்புக்காக அவர் தம்மையே தாழ்த்தி வெறுமையாக்கினார். அவர் சொத்துக்களைப் பெற்றிருக்கவோ புகழ்பெற்றிருக்கவோ விரும்பவில்லை. “நீர் எனக்குக் கொடுத்த” என்ற சொற்றொடரை பதின்மூன்று முறை அவர் பயன்படுத்துகிறார். குமாரன் இந்த மனுக்குலம், அவருடைய சீஷர்கள், அவருடைய செயல்கள் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை தம்முடையவைகள் அல்லாததுபோல இறைவனுடைய கொடைகளாகவே கருதினார். எல்லா நேரத்திலும் அவர் தம்முடைய பிதாவின் கனத்திற்கும் மகிமைக்குமே தம்மை ஒப்புக்கொடுத்திருந்தார். இந்தத் தாழ்மை குமாரன் முழுமையாக பிதாவினுடைய சிந்தைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றும்படி, தொடர்ச்சியான ஒருமைப்பாட்டை உறுதிசெய்தது.
இயேசுவின் இந்த முழுவதுமான ஒப்புக்கொடுத்தலின் காரணமாக அவர் பிடிவாதமின்றி தம்முடைய விண்ணப்பத்தில் “நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார். இறைவனுடைய குமாரனின் விருப்பம் என்ன? அனைத்துக் காலத்திலும் அவரைப் பின்பற்றிய அனைவரும் அவருடன் இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். அவ்விதமாகவே பவுலும் தான் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, அவரோடு அடக்கம் பண்ணப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குபெறுவர் என்றும் பரலோகத்தில் அவருடன் அமருவார் என்றும் கிறிஸ்து இயேசுவினுடைய பெருந்தன்மையினால் உண்டான கிருபையின் பெருக்கத்திலுள்ள இறைவனுடைய ஐசுவரியங்களை காண்பார் என்றும் சாட்சியிடுகிறார் (ரோமர் 6:1-11; எபேசியர் 2:4-7).
கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் ஐக்கியத்தின் காரணமாக நாம் அவருடைய அன்பிலும் உபத்திரவத்திலும் மாத்திரமல்ல, அவருடைய மகிமையிலும் நமக்குப் பங்கு கிடைக்கும். நாம் தம்முடைய மகிமையைப் பார்த்து, தம்முடனான ஐக்கியத்தில் நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்று கிறிஸ்து விரும்புகிறார். நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற இந்த நோக்கத்தை அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தார்கள். நாம் அவரைக் காணும்போது சொல்லி முடியாத சந்தோஷத்தினால் நிறைந்திருப்போம். இறைவனுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்ட காரணத்தினால் நாம் அவரைக் காணும்போது அவருடைய சாயலாக மாற்றப்பட்டு அவருடைய மகிமையைப் பிரதிபலிப்போம் (ரோமர் 5:5; 8:29). இயேசு தம்முடைய தாழ்வான மனித நிலையில்கூட மகிமையுள்ளவராக இருந்தபடியால் அவர் தம்முடைய மகிமையைக் கொடுத்தார். உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில் அசைக்கமுடியாத அன்பிலிருந்துதான் அவருடைய மகிமை புறப்பட்டு வருகிறது என்பதை அவருடைய சீஷர்கள் அவருடைய பிரசன்னத்தில் உணர்ந்துகொண்டார்கள். பரிசுத்த திரித்துவமே நம்முடைய மீட்பின் ஆதாரமாக இருக்கிறது.
யோவான் 17:25
25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
உலகம் அறியாவிட்டாலும் இறைவன் நீதியும் நேர்மையுமுள்ளவராகவே நிலைத்திருக்கிறார். அடிப்படையில் அவர் பரிசுத்தமுள்ளவராயிருக்கிறார். அவரில் கொஞ்சம்கூட இருள் இல்லை. கிறிஸ்துவின் அன்பை அனுபவிப்பவர்கள் அனைவரும் மக்கள் குமாரனை விசுவாசிக்காமல் இருப்பதற்கும் இரட்சிப்பைக் கண்டடையாமல் இருப்பதற்கும் அவர் காரணமல்ல என்பதை உணர்ந்துகொள்வார்கள்.
ஆனால் குமாரன் பிதாவை முகமுகமாக காண்கிறபடியால் கிறிஸ்து நித்திமுதலே பிதாவை அறிந்திருக்கிறார். அவருடைய குணாதிசயங்களையும் நாமங்களையும் குமாரன் அறிந்திருக்கிறார். தெய்வத்துவத்தின் ஆழமான காரியங்கள்கூட அவருக்கு மறைவாயிருப்பதில்லை.
குமாரனை ஏற்றுக்கொள்பவர்களுக்க தம்முடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தை இறைவன் கொடுக்கிறார். அவர்களுக்கு இறைவனுடைய தகப்பன் தன்மையைப் பற்றிய இரகசியத்தை இயேசு அறிவிக்கிறார். மறுபடியும் பிறந்தவர்கள் இயேசு கிறிஸ்து இறைவனிடமிருந்து வருகிறார் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அவர் வெறும் அப்போஸ்தலரோ, தீர்க்கதரிசியோ அல்ல, இறைவனுடைய மகன். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. இயேசுவின் தெய்வத்துவத்தைக் காணவும் அவரோடும் பிதாவோடும் ஒன்றாகவும் ஆவியானவர் நமக்கு ஒளியேற்றுகிறார். இவ்வாறு அவரே மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான ஒரே பாலமாயிருக்கிறார்.
யோவான் 17:26
26 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
மொத்தத்தில் கிறிஸ்து பிதாவினுடைய நாமத்தை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கான தெளிவான விளக்கம் சிலுவையில் காணப்படுகிறது. அங்கு பிதா தம்முடைய சொந்தக் குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்து, அவருடைய குமாரத்துவத்தில் நமக்குப் பங்களித்தார். பரிசுத்த ஆவியானவர் நம்மீது வரும்போது நாம் நமது இருதயத்தின் ஆழத்திலிருந்து, “அப்பா, பிதாவே” என்று அழைக்கிறோம். கர்த்தருடைய ஜெபம் பிதாவையும், அவருடைய இராஜ்யத்தையும், அவருடைய சித்தத்தையும் மகிமைப்படுத்துவதால் அனைத்து ஜெபங்களுக்கும் மணிமகுடமாயிருக்கிறது.
பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலிருக்கும் அன்பு நம்மீது எவ்வளவாக ஊற்றப்படுகிறதோ அவ்வளவாகவே நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிதாவாகிய இறைவனை அறிந்துகொள்வோம். அன்பை நம்மில் பூரணமாக உருவாக்கும்படி அவர் பிதாவிடம் வேண்டிக்கொண்டார். பிதா மட்டும் நம்மிடத்தில் வருவதில்லை. குமாரனும் நம்மிடத்தில் வந்து வாசம்செய்ய விரும்புகிறார். தெய்வத்துவத்தின் முழுமையும் நம்மீது வந்து அமர வேண்டும் என்று இந்த விண்ணப்பத்தில் இயேசு வேண்டுகிறார். இதைத்தான் யோவான் தம்முடைய முதலாம் கடிதத்தில் “இறைவன் அன்பாகவே இருக்கிறார், யார் அன்பில் நிலைத்திருக்கிறானோ அவன் இறைவனில் நிலைத்திருக்கிறான், இறைவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” என்று எழுதுகிறார்.
கேள்வி:
- இயேசுவின் பிரதான ஆசாரிய விண்ணப்பத்தின் சுருக்கம் என்ன?