Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 102 (Jesus intercedes for his apostles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)

3. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக விண்ணப்பிக்கிறார் (யோவான் 17:6-19)


யோவான் 17:9-10
9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. 10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.

நித்திய காலமாக குமாரனோடு இணைக்கப்பட்டு பிதாவாகிய இறைவனை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்காவும் இயேசு இந்த விண்ணப்பத்தை ஏறெடுக்கிறார். மனுக்குலம் கர்த்தருடைய ஆவியைப் புறக்கணித்து, தங்களுக்கு நியாயத்தீர்ப்பைத் தெரிந்துகொண்டபடியால் இயேசு தம்முடைய பிரியாவிடை விண்ணப்பத்தில் முழு உலகத்திற்கும் வேண்டிக்கொள்ளவில்லை. இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட தம்முடைய திருச்சபையின் மீதுதான் இயேசு தம்முடைய அன்பையும் கரிசனையையும் பொழிகிறார். அனைத்து மக்களிலுமிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகளின் கூட்டமாக திருச்சபை இருப்பதால் முழு மக்களும் அடங்கிய திருச்சபையை கிறிஸ்தவம் அங்கீகரிப்பதில்லை. திருச்சபை கிறிஸ்துவின் மரணத்தினுடைய முதற்கனியாக இருப்பதால் அது தனித்துவமானதாகவும் பிரித்தெடுக்கப்பட்டதாகவும் தூய்மைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது.

பிதா அவர்களை குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருந்தபோதிலும் இயேசு அவர்களைத் தம்முடைய சிறப்புடைமையாகக் கருதாமல் திரும்பத்திரும்ப பிதாவின் உடைமைகள் என்று சாட்சியிட்டார். இந்த விண்ணப்பத்தின் குமாரன் தம்மைப் பிதாவிற்கு ஒப்புக்கொடுத்து தாழ்மையுள்ளவராகக் காணப்படுகிறார்.

இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களால் தாம் மகிமைப்படுவதாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் நாமோ திருச்சபைகள் பெலவீனமுள்ளவைகள் என்றும் கிறிஸ்துவுக்கு இகழ்ச்சியைக் கொண்டு வருபவை என்று விமர்சிக்கிறோம். அவர் நம்மைவிட ஆழமாக காரியங்களைக் கண்ணோக்குகிறார். பிதா சிலுவையின் வெளிச்சத்தில்தான் நம்மைப் பார்க்கிறார். அவர் தமது குமாரன் மூலமாக பரிசுத்த ஆவியானவரை விசுவாசிகள் மீது பொழிந்தருளுகிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் பிரவாகித்து வருவது சிலுவையின் வல்லமையைக் காண்பிக்கிறது. கிறிஸ்து வீணாக மரிக்கவில்லை. விசுவாசிகள் அதிக கனிகளைக் கொடுக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசமாயிருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு மறுபிறப்பும் கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டு வருகிறது.

யோவான் 17:11
11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

காட்டிக்கொடுப்பவன் அவரைப் பிடிக்கும்படி போர்வீரர்களோடு வந்துகொண்டிருந்தபோதிலும், இயேசு தம்முடைய பிதாவினிடத்தில் திரும்பப் போவார் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் தமது மரணத்தையும் தாண்டி என்ன நடைபெறும் என்பதைப் பார்த்து, அவர் இவ்வுலகத்தில் இருந்தபோதிலும் “நான் இவ்வுலகத்திலிரேன்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

அதிவேகமாக ஓடும் காட்டாற்றைப் போல இவ்வுலகத்தை இயேசு கருதினார். அது சில இடங்களில் உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சியைப்போல பாய்ந்து கொட்டுகிறது. கிறிஸ்து நீரோட்டத்திற்கு எதிர்நீச்சல்போட்டு மனித அலையைத் திருப்பிப் போட்டார். தீமையை எதிர்ப்பதற்கு சீஷர்களுக்கு வல்லமையிருக்காது என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் தமக்குப் பிரியமானவர்களை பிதா காத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

இந்த வேண்டுதலில் “ஓ பரிசுத்த பிதாவே” என்ற சிறப்பான சொற்றொடரை இயேசு பயன்படுத்தினார். இந்த உலகத்தில் காணப்படும் பெரும் தீமைகளுக்கு முன்பாக குற்றங்குறை எதுவுமில்லாத தமது பிதாவின் பரிசுத்தத்திற்கு குமாரன் சாட்சிகொடுத்தார். பிதாவாகிய இறைவன் தூய்மையும் பரிசுத்தமும் உள்ளவர். அவருடைய பரிசுத்தம் அவரது அன்பின் ஆடையாகவும் மகிமையின் பிரகாசமாகவும் இருக்கிறது.

சீஷர்கள் சோதனைக்காரனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளும்படி இறைவனுடைய பரிசுத்த நாமம் மிகுந்த அடைக்கலமாயிருக்கிறது. குமாரனில் நிலைத்திருக்கிறவன் பிதாவில் நிலைத்திருக்கிறான். அவர் பிதாவாக இருப்பதால் தம்முடைய பிள்ளைகளைப் பராமரித்துப் பாதுகாப்பார். சாத்தான் அவர்களை பிதாவினுடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.

அவர்கள் சண்டையிலும் வெறுப்பிலும் வாழாமல் எப்போதும் மன்னிக்கிறவர்களாக அன்பில் வாழ்வதே அவர்களுடைய பாதுகாப்பிற்கு அச்சாரமாயிருக்கிறது. எந்த மனிதனிடமிருந்தும் அன்பு தானாகப் புறப்பட்டு வருவதில்லை. பரிசுத்த திரித்துவ இறைவனில் நிலைத்திருக்கிறவர்களே வல்லமையையும் பொறுமையையும் அன்பையும் பெற்றுக்கொள்கிறார்கள். பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறதுபோல நம்மையும் அவர்களுடைய ஐக்கியத்தில் காத்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு தம்முடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்கிறார். இது இறைவனோடு நமக்குள்ள உறவைக் குறித்த கொள்கை ஆய்வோ கருத்தியல் விளக்கமோ அல்ல, இயேசுவின் பிரியாவிடை விருப்பம் பதிலளிக்கப்படுதலாகும். நம்முடைய விசுவாசம் முட்டாள்தனமானதோ மாயமானதோ அல்ல, இயேசு நமக்காக ஏறெடுத்த விண்ணப்பத்திற்கும் நமக்காகப் பட்ட பாடுகளுக்கும் கிடைத்த பலன்.

யோவான் 17:12-13
12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 13 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.

சீஷர்கள் அனைவரும் வேறுபட்ட குணாதிசயம் உடையவர்களாய் இருந்தபோதிலும், இயேசு தம்முடைய பொறுமையினாலும் ஞானத்தினாலும் சாத்தானுடைய சோதனைகளிலிருந்து அவர்களைக் காத்தார். “சாத்தான் உன்னைப் பிடிக்க ஆசையாயிருந்தான். நான் உனக்காக வேண்டிக்கொண்டேன். உன்னுடைய விசுவாசத்தை நீ இழந்துபோக மாட்டாய்” என்று அவர் பேதுருவிடம் சொன்னார். அவருடைய பரிந்துபேசுதலினாலேயே நமது விசுவாசம் பிழைத்திருக்கிறது. அவருடைய கிருபையினால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

யூதாஸ் அழிவின் ஆவிக்கு தன்னை ஒப்புக்கொடுத்து சத்தியத்தின் ஆவிக்கு எதிர்த்து நின்றபடியால் இயேசு அவனைப் பாதுகாக்கவில்லை. அவன் கேட்டின் மகனாக மாறினான். நம்முடைய பரலோக பிதா தமது புத்திர சுவிகாரத்தை ஏற்றுக்கொள்ளும்படி யாரையும் வற்புறுத்துவதில்லை. மனிதர்களுடைய இருதயங்களில் என்ன இருக்கிறது என்றும் என்ன சம்பவங்கள் நடைபெறப்போகிறது என்றும் அவர் அறிந்திருக்கிறபடியால் யூதாஸ் காட்டிக் கொடுப்பதைப் பற்றி ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பழைய ஏற்பாட்டில் எழுதி வைத்தார். இருந்தபோதிலும் யூதாஸ் மீது கிறிஸ்து கொண்டிருந்த கரிசனையைப் புறக்கணித்த காரணத்தினால் அவன் தன்னுடைய செயல்களுக்குப் பொறுப்பாளியாயிருக்கிறான். நமது வல்லமையுள்ள இறைவன் சர்வாதிகாரி அல்ல, அன்புள்ள பிதா. இவ்வுலகத்திலுள்ள தகப்பன்மார் முதிர்வுள்ள தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதைப்போல, நமது பிதாவின் அன்பும் விடுதலையின் ஈவாக இருக்கிறது.

இயேசு தாம் பிதாவினிடத்திற்குச் செல்லும் பாதையை இருளின் நடுவில் ஒளிரும் பாதையாகப் பார்த்தார். பாவமோ, சாத்தானோ, மரணமோ எதுவும் அவர் பிதாவினிடத்தில் செல்வதைத் தடுக்க முடியாது. குமாரன் எப்போதும் பரிசுத்தராயிருக்கிறார், அதனால் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறார். அவருடைய மனதில் எந்தப் பாவத்திற்கும் இடமில்லை. அவருடைய விண்ணப்பத்தில் எந்தப் பயமும் இல்லை. குமாரன் சுதந்திரமானவரும் பிதாவினால் பாதுகாக்கப்பட்டவராகவும் இருக்கிறார். அவர் எப்போதும் கீழ்ப்படிகிறவர். நமது இறைவன் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியின் ஆண்டவராயிருக்கிறார். தம்முடைய சீஷர்களுடைய இருதயத்தையும் மகிழ்ச்சியினால் நிரப்ப வேண்டும் என்று அவர் தமது பிதாவிடம் விண்ணப்பம் செய்கிறார். தம்மைப் பின்பற்றுபவர்கள் உலகத்தின் துன்பத்திலும் இருளிலும் வாழ்ந்தாலும், அவர்கள் பரலோகத்தின் மகிழ்ச்சியினாலும் ஆசீர்வாதத்தினாலும் நிறைந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் துயரமுடையவர்களாயிருக்கக் கூடாது என்றும் விரும்புகிறார். கிறிஸ்து நமக்காக விண்ணப்பம் செய்வதன் பலனாக மன்னிப்பும் மகிழ்ச்சியும் அவருடைய குடும்பத்தில் நமக்கு இடமும் கிடைத்திருக்கிறது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே எங்களுக்காக நீர் பிதாவிடம் பரிந்து பேசுவதற்காக உமக்கு நன்றி. உம்முடைய வேண்டுதல்களினால் நீர் எங்களை விசுவாசத்தில் காத்துக்கொள்வதற்காக உமக்கு நன்றி. நீர் எங்களில் மகிழ்ச்சியடைவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய பிரசன்னத்தினாலும் பிதாவினுடைய ஆவியினாலும் எங்களுக்கு வாழ்வையும் ஆவிக்குரிய ஐசுவரியங்களையும் பரலோக ஆசீர்வாதங்களையும் கொடுத்திருக்கிறீர். எங்களுக்காக நீர் விண்ணப்பம் செய்வதற்காக உமக்கு நன்றி. அந்த பரிந்துபேசுதலின் விண்ணப்பதினாலேயே நாங்கள் வாழ்கிறோம்.

கேள்வி:

  1. பிதாவின் நாமத்தினாலே நாம் பாதுகாக்கப்படுவது எதைக் குறிக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)