Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 103 (Jesus intercedes for his apostles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)

3. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக விண்ணப்பிக்கிறார் (யோவான் 17:6-19)


யோவான் 17:14
14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

பிதாவினுடைய வார்த்தைகளைத் தாம் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்துவிட்டதாகவும், பிதா என்னும் அவருடைய நாமத்தையும் அதன் பொருளையும் அவர்களுக்கு வெளிப்படுத்திவிட்டதாகவும் தம்முடைய விண்ணப்பத்தில் இயேசு சாட்சியிடுகிறார். இந்த வெளிப்பாட்டின் மூலமாக திரித்துவத்தை நமக்கு அவர் அறிவிக்கிறார். இறைவனுடைய தன்மையைக் குறித்த அற்புதமான வெளிப்பாடு சீஷர்களைக் கவர்ந்தது. அது அவர்களை கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தின் அவயவங்களாக மாறும்படி அவரது வல்லமையினால் நிறைத்து அவர்களை மறுரூபப்படுத்தியது.

இந்த நற்குணங்கள் மற்றும் குணாதிசயங்கள் நிமித்தமாக சீஷர்களும் இயேசுவைப் போலவே உலகத்தினால் வெறுக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் தோற்றுவாய் இறைவனாகவும் அவருடைய ஜீவன் நித்தியத்திலேயே இறைவனில் மறைந்திருப்பதாலும் மறுபடியும் பிறந்தவர்கள் அவரில் நித்திய காலமாக வாழ்வார்கள்.

யோவான் 17:15
15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

சீஷர்களைச் சூழ துயரங்களும் பிரச்சனைகளும் காணப்பட்ட போதிலும் இயேசு அவர்களைப் பரலோகத்திற்குத் தூக்கிச் செல்லவுமில்லை, அவர்களைத் தனிமையான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும் இல்லை. ஆனால் பிதா அவர்களைச் சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்தும், கள்ளப்போதகர்களுடைய வஞ்சனைகளிலிருந்தும், தீய ஆவிகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் இயேசு வேண்டிக்கொண்டார். நமது கர்த்தர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். ஒவ்வொரு விசுவாசிகளும் அவருடைய உத்திரவாதத்திலும் முத்திரையிலும் அவரது அரவணைப்பில் வாழ்கிறார்கள். இயேசுவின் இரத்தம் நம்மைப் பாதுகாக்கிறது, அவரது பலியினால் இறைவன் நம்முடன் இருக்கிறார். யாரும் நம்மைக் குற்றப்படுத்தவோ அழிக்கவோ முடியாது. நாம் பரிசுத்தருடைய கிருபையினால் நீதிமான்களாகவும் அழிவற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறோம். நாம் கீழ்ப்படியாதவர்களாகி, நம்முடைய பாவ எண்ணங்களைப் பின்பற்றினால், நாம் பாவச் சோதனையில் விழுந்துபோவோம். ஏனெனில் நமக்குள் இருக்கும் பாவம் வெளியே வந்து நம்மை வெட்கப்படுத்தும். அப்போது நாம் பயத்துடனும் கண்ணீருடனும் மனந்திரும்பி, “பிதாவே, நீர் எங்களைச் சோதனைக்கு உட்படாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சியும்” என்று விண்ணப்பிக்க வேண்டும். தன்னுடைய சுயபெலத்தினாலும் தைரியத்தினாலும் சாத்தானை எதிர்த்துப் போராடுகிறவன் தன்னைத் தானே ஏமாற்றுகிறான். கிறிஸ்துவின் இரத்தத்தையும் அவரது பரிந்துபேசுதலையும் அண்டிக்கொள்ளுங்கள். அவரே இரட்சகர்.

யோவான் 17:16-17
16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. 17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

இந்த விண்ணப்பத்தில் சீஷர்கள் மாம்சத்திற்கு உரியவர்களாகவும் மற்றவர்களைப் போலவே தீமை செய்யக்கூடியவர்களாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இவ்வுலகத்தை மேற்கொள்ளாத நிலையிலும் இயேசு திரும்பத் திரும்ப அவர்களுக்குச் சாட்சிகொடுக்கிறார். இறைவனுடைய கிருபையில்லாவிட்டால் அவர்களும் தீயவர்களாகவே இருப்பார்கள். பொல்லாங்கனுடைய சிறையிலிருந்து கிறிஸ்துவின் இரத்தம் அவர்களை விடுவித்திருக்கிறது. அவர்கள் இவ்வுலகத்தில் அந்நியர்களாகவும் பரலோகத்தின் குடிகளாகவும் மாறிவிட்டார்கள்.

அவர்களுடைய ஆத்துமாவிலும் சரீரத்திலும் உருவாகியுள்ள இந்தப் புதிய தன்மை அவர்களுக்குத் தொடர்ச்சியான போராட்டமாக இருக்கும். நாம் மற்றவர்களைவிட நம்மையும், நமது வேலையையும், நமது குடும்பங்களையும் அதிகமாக நேசித்தால் பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவார். நாம் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் நம்முடைய மனசாட்சியில் நெருப்பாக நம்மை எரித்துக்கொண்டிருக்கும். இறைவனுடைய ஆவியானவர் திருடிய பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்திருக்க விடமாட்டார். நீங்கள் யாரையும் அவமதிப்பினால் அல்லது கொடிய செயலினால் காயப்படுத்தியிருந்தால், நீங்கள் அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்கும்படி சத்திய ஆவியானவர் உங்களைத் தூண்டுவார். பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்துத் தீமைகளையும், வஞ்சகத்தையும், மாறுபாடுகளையும் வெளிப்படுத்தி அதன்படி உங்களை நியாயம் தீர்ப்பார்.

பிதா நம்மைப் பரிசுத்தமாக்க வேண்டும் என்று கிறிஸ்து வேண்டிக்கொண்டார். காரணம் அசுத்தமானவர்கள் மற்றவர்களைப் பரிசுத்தப்படுத்த முடியாது. இந்தப் பரிசுத்தமாகுதலை நம்மில் நிகழ்த்த அவர் நம்மைத் தம்முடைய சத்தியத்தினிடமாகக் கவருகிறார். நாம் எவ்வளவு தூரம் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, குமாரனுடைய கிருபையில் நிலைத்திருந்து, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையில் வாழ்கிறோமோ அவ்வளவு தூரம் நாம் பரிசுத்தமாக முடியும். நம்முடைய வாழ்விலுள்ள இறைவனுடைய பிரசன்னம் நம்மைப் பாதிக்கிறது. “நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்ற தம்முடைய நோக்கத்தை இறைவனே நம்மில் நிறைவேற்றுகிறார். நம்மில் இருக்கும் பரிசுத்த ஆவியானவரில் எந்தக் குறையும் இல்லாததைப் போலவே கிறிஸ்து தமது இரத்தத்தினால் நம்மை ஒரேமுறை பரிசுத்தமாக்குகிறார். திரித்துவ இறைவனுடைய பரிசுத்த தன்மையை விசுவாசிக்கும் உங்கள் விசுவாசம் உங்களை முழுவதுமாகப் பரிசுத்தப்படுத்துகிறது.

இறைவனுடைய வார்த்தையில் நாம் ஆழ்ந்து போகும்போது இறைவனால் இந்தப் பரிசுத்தம் நமக்குக் கிடைக்கிறது. நற்செய்தியே நம்முடைய சுத்திகரிப்பின் ஆதாரமாகவும் நமது கீழ்ப்படிதலின் வேராகவும் இருக்கிறது. நாம் இறைவனைக் கிட்டிச் சேர்வதற்குத் தகுதியடையும்படி கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்மை விசுவாசத்திற்கும், சுய வெறுப்புக்கும், ஆராதனையின் மீதான வாஞ்சைக்கும் வழிநடத்திச் செல்கிறது. உங்கள் பிதாவினுடைய வார்த்தைக்கு உங்கள் இருதயத்தைத் திறவுங்கள், ஏனெனில் இறைவன் அன்பாகவே இருக்கிறார், யார் அன்பில் நிலைத்திருக்கிறானோ அவன் இறைவனில் நிலைத்திருக்கிறான், இறைவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

யோவான் 17:18
18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.

இயேசு தம்முடைய சீஷர்கள் பரிசுத்தமாக வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொண்டபிறகு, புதுப்பிக்கப்பட்டவர்களாகிய அவர்களை தீமை நிறைந்த இந்த உலகத்திற்குள் அனுப்புகிறார். நம்முடைய வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே அவர் நம்மை இரட்சித்தார். நம் மூலமாக இன்னும் பலரை இரட்சிக்கவும் பரிசுத்தப்படுத்தவும் நம்மை அவர் இவ்வுலகத்திற்குள் அனுப்புகிறார். திருச்சபை என்பது பக்திக்குரிய பேச்சுக்களிலும் நியாயப்பிரமாணத்தின்படி மனிதர்களை நியாயந்தீர்ப்பதிலும் ஈடுபடும் ஒரு சொகுசான இடம் அல்ல. அது சாத்தானுடைய கோட்டையை விசுவாசத்தினால் ஊடுருவி, விண்ணப்பத்தினாலும் விடாமுயற்சியினாலும் இழந்து போனவர்களை இரட்சிக்கும் செயல்பாடுகளின் ஐக்கியமாகும். திருச்சபை பிதாவினுடைய இராஜ்யத்தை இவ்வுலகத்திற்கு அறிவித்து, அவருடைய சித்தப்படி உலகம் முழுவதையும் அவருடைய நற்செய்தியினால் நிரப்ப நாட வேண்டும். நற்செய்தி அறிவிப்பிற்காக இயேசு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிதா இயேசுவை அனுப்பியதுபோல அவரும் இழந்து போனவர்களிடத்தில் உங்களை அனுப்புகிறார். குமாரன் அனுப்பப்படும் நோக்கமும் நாம் அனுப்பப்படும் நோக்கமும் ஒன்றுதான். அதேபோல நற்செய்தியின் பணியில் பயன்படுத்தப்பட வேண்டிய கருவியும் ஒன்றுதான். கிறிஸ்துவில் இறைவனுடைய சத்தியத்தை அறிவிப்பதே அக்கருவியாகும். சோம்பேறித்தனத்திற்கோ மாய வாழ்க்கைக்கோ அல்ல, கிறிஸ்து உங்களை சுறுசுறுப்பான சேவைக்கு அழைக்கிறார். பரிசுத்த ஆவியானவரே உங்கள் வல்லமையாயிருக்கிறார்.

யோவான் 17:19
19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

சீஷர்களுக்கு இறைவன் தமது பரிசுத்தத்தையும் வல்லமையையும் கொடுக்காவிட்டால், தங்கள் இருதயங்களிலும் மனசாட்சியிலும் காயப்பட்டு விழுந்து போவார்களே தவிர, அவர்களால் நற்செய்திப் பணியைச் செய்யவோ, ஆவிக்குரிய போராட்டத்தைத் தொடரவோ முடியாது என்பதை இயேசு நன்கறிந்திருந்தார். இதனிமித்தமாக குமாரன் எல்லா நேரத்திலும் பரிசுத்தராயிருந்தபோதிலும் பலிகடாவாகி தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்தினார். கிறிஸ்துவின் இரத்தத்தின் மீது நாம் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்படும்படி, அவருடைய மரணம் பரிசுத்தத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியது. அவருடைய பரிகார மரணத்தின் ஆதாரத்தில் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் தகுதியைப் பெற்றார்கள். ஜீவ தண்ணீரைச் சுமந்து செல்லும் பாத்திரங்களாக மாற்றப்பட்டார்கள். இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் சாட்சிகளானார்கள்.

இவ்வாறு அவர்கள் வஞ்சகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுடைய உதடுகளிலிருந்து ஏமாற்றுத்தனத்தின் விஷம் நீக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் பாவத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தைரியத்தையும் பெற்றார்கள். இது மற்றவர்களுடைய மனசாட்சியை வேதனைப்படுத்தினாலும் பின்பு அவர்களை இரட்சிப்புக்கு நடத்தும். பொய்யோடும், விபச்சாரத்தோடும், பெருமையோடும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் பாதுகாப்பும், அவருடைய பரிந்துபேசுதலின் வல்லமையுமே நமக்கு வெற்றியைத் தரும்.

விண்ணப்பம்: எங்கள் இருதயத்தில் இருக்கும் வெறுப்பு, பொய்கள் மற்றும் பெருமை ஆகியவற்றை எங்களுக்கு மன்னித்தருளும். சுபாவப்படி நாங்கள் தீயவர்கள், நீரோ பரிசுத்தர். சாத்தானுடைய கண்ணிகளிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும். உம்முடைய வார்த்தைகள் உண்மையாக எங்களைப் பரிசுத்தப்படுத்தும்படி உமது நற்செய்தியை எங்களுக்குப் பிரசங்கியும். நாங்கள் பிரசங்கிக்கிறபடி வாழ எங்களுக்குத் துணை செய்யும்.

கேள்வி:

  1. நம்மைத் தீமையிலிருந்து எவ்வாறு காக்கும்படி இயேசு பிதாவிடம் வேண்டுகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)