Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 101 (Jesus intercedes for his apostles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)

3. இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக விண்ணப்பிக்கிறார் (யோவான் 17:6-19)


யோவான் 17:6
6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

இயேசு மீட்பை நிறைவேற்றும்படி பிதா தம்மை பெலப்படுத்துவார் என்ற உறுதியைப் பெற்று, அநேக பிள்ளைகளுடைய பிறப்பினால் பிதாவின் நாமம் மகிமைப்படும் என்று அறிந்துகொண்டார். அதன் பிறகு தாம் உலகத்திலிருந்து தெரிந்துகொண்டு, தெய்வீக பிணைப்பினால் இணைத்த தம்முடைய சீஷர்களை நோக்கி அவருடைய சிந்தை திரும்பியது.

“பிதா” என்ற இறைவனுடைய புதிய பெயரை இயேசு தமது சீஷர்களுக்கு அறிவித்தார். இந்த அறிவித்தல் மூலம் அவர்கள் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அவருடைய பிள்ளைகளானார்கள். இந்தப் புதிய படைப்பே திருச்சபையின் இரகசியமாயிருக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் இனி ஒருபோதும் அழிவதில்லை. அவர்கள் இறைவனுடைய ஜீவனைத் தங்களில் கொண்டிருப்பார்கள். இறைவனால் பிறந்தவர்கள் தங்களுக்குரியவர்களாயிராமல் தங்களைப் பிறக்கச் செய்தவருக்கு உரியவர்களாயிருக்கிறார்கள். அவர்களைத் தமது இரத்தத்தினால் சம்பாதித்த தம்முடைய குமாரனிடம் பிதா அவர்களைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசித்தால் அவருடைய சொத்தாவீர்கள்.

சீஷர்கள் நற்செய்தியை விசுவாசிக்கும்போதும் இறைவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து கைக்கொள்ளும்போதும் இறைவன் தகப்பனாகவும் விசுவாசிகள் அவரது பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள் என்பது நிறைவேறுகிறது. இந்த உலகத்தின் அச்சகங்களில் அச்சிடப்படும் கறுப்பு எழுத்துக்களைப் போல இவை வெறும் வார்த்தைகளோ அழியக்கூடியவைகளோ அல்ல. அவை படைப்பாற்றல் நிறைந்த இறைவனுடைய வார்த்தைகள். யார் பிதாவினுடைய வார்த்தைகளைத் தங்கள் இருதயத்தில் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அவரது வல்லமையில் வாழ்கிறார்கள்.

யோவான் 17:7-8
7 நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

இயேசுவின் உதடுகளில் தவழும் இறைவார்த்தைகள் தீய வாழ்வை மாற்றக்கூடிய இரட்சிப்பின் அறிவைப் படைக்கிறது. இயேசு தாம் அறிவித்த சொந்த செய்தியை வாழ்ந்து காட்டி, அந்த வார்த்தையின் வல்லமையினால் தமது செயல்களை நடப்பித்தார். பிதாவினுடைய வார்த்தைகளிலேயே அவருடைய அனைத்து வல்லமைகளும் ஆசீர்வாதங்களும் நம்மிடத்தில் வந்தது. குமாரன் தம்முடைய அதிகாரம், வல்லமை, ஞானம், அன்பு ஆகிய அனைத்தும் தமது பிதாவினால் கொடுக்கப்பட்டது என்று அறிக்கை செய்தார்.

கிறிஸ்து தமது வார்த்தைகளாகிய விலையேறப்பெற்ற சொத்தை நமக்குக் கொடுத்தார். குமாரன் இறைவனுடைய வார்த்தையின் மனுவுருவாதலாகும்படி இது பிதாவினிடத்திலிருந்து வந்தது. அந்த வார்த்தைதான் நமது வல்லமை. இவ்விதமாக நாம் அந்த வார்த்தையின் வல்லமையை அனுபவித்து, அதனால் அறிவூட்டப்படுகிறோம். இந்த அடையாளங்களையும் வார்த்தைகளையும் நாம் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் மெய்ம்மையை அறிந்துகொள்ள நற்செய்தியின் பகுதிகள் நமக்குத் துணைசெய்கிறது.

விசுவாசத்தின் விதைகளை இயேசு தமது சீஷர்களின் இருதயத்தில் விதைத்திருக்கிற காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அறிவையும் அவரது வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொண்டதையும் இந்த விண்ணப்பத்தில் கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். அவர் உடனடியாக இல்லாவிட்டாலும், அவருடைய வார்த்தைகளில் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டார்கள். அவர் தம்முடைய ஆவியை அவர்கள் மேல் ஊற்றினார்; அந்த வார்த்தைகள் வளர்ந்து இறைவன் நியமித்த காலத்தில் கனியைக் கொடுத்தது. இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று கிறிஸ்து ஏற்கனவே முன்னுரைத்திருந்தார்.

கிறிஸ்துவின் வார்த்தை சீஷர்களுக்கு விசுவாசத்தையும் அறிவையும் கொடுத்தது. விசுவாசம் என்பது என்ன? பிதாவிலிருந்து குமாரன் புறப்பட்டு வருதல், நித்தியமானவர் காலத்தில் பிரசன்னராகுதல், அவரது தெய்வீக மகிமை மனித உருவில் காணப்படுதல், வெறுப்பின் மத்தியிலும் அவருடைய அன்பு, பெலவீனத்திலும் அவருடைய வல்லமை, சிலுவையில் இறைவனால் அவர் கைவிடப்பட்டபோதும் காணப்பட்ட அவரது தெய்வத்துவம், மரணத்திற்குப் பின்பாகவும் தொடரும் அவரது வாழ்க்கை. பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை அவர்களுடைய மீட்பரில் உறுதிப்படுத்தினார். அவர்கள் அவருடைய சரீரத்தின் அவயவங்களானார்கள். அவர் ஆவிக்குரிய நிலையில் அவர்களில் வாசமாயிருக்கும்போது அவர்கள் சிந்தனையில் மட்டும் அவரில் நிலைத்திராமல் தங்கள் முழு மனதுடன் அவரைப் பற்றிக்கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்த பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை அறிந்துகொண்டார்கள்.

“ஆவியில் பிறந்தவன் ஆவியாயிருக்கிறான்” என்பதன் பொருளை கிறிஸ்துவின் வாழ்வில் சீஷர்கள் அறிந்துகொண்டார்கள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவரே சீஷர்களுடைய வாழ்வின் தெய்வீக வல்லமையாயிருக்கிறார். அவர் இயேசுவின் வார்த்தைகள் மூலம் வருகிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பிதாவின் வார்த்தைகளை நீர் எங்களுக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி. அந்த வார்த்தைகள் வாழ்வும் வல்லமையும் நிறைந்தவைகள். நீர் விசுவாசத்தையும் அறிவையும் எங்களில் உண்டுபண்ணியிருக்கிறீர். நீரே எங்கள் வல்லமையாயிருக்கிறீர். உம்மையும் உம்மை எங்களுக்குத் தந்த பிதாவையும் நாங்கள் நேசித்துக் கனப்படுத்துகிறோம்.

கேள்வி:

  1. இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவின் நாமம் வெளிப்படுத்தப்படுதலின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:53 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)