Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 045 (The Three Unique Groanings)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

8. மூன்று புலம்பல்கள் (ரோமர் 8:18-27)


ரோமர் 8:18-22
18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

பவுல் இறைவன் மீதான தன்னுடைய அன்பிலும் விசுவாசத்திலும் திருப்தியடையாமல், இறைவனுடைய நம்பிக்கையின் ஐசுவரியத்தைக் குறித்துப் பேசுகிறார். இறைவனுடைய மகிமையின் வெளிப்பாட்டை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? இறைவனுடைய மகிமையைக் காண வேண்டும் என்பதுதான் உங்கள் வாழ்வின் நோக்கமாக இருக்கிறதா? இறைவன் முழு உலகத்தையும் இரட்சிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிற காரணத்தினால் உங்களுடைய பிரச்சனைகள் மட்டும் தீர்க்கப்பட்டால் போதும் என்று நீங்கள் திருப்தியடைந்துவிடாதீர்கள். முழு படைப்பும் மறுபிறப்படைதல் என்னும் இறைவனுடைய மாபெரும் பரிசை எதிர்பாருங்கள்.

மிருகங்கள் துன்புறுகின்றன, புற்கள் அழிந்துபோகின்றன. மிருகங்களைத் துன்புறுத்துகிறவனுக்கு ஐயோ. மிருகங்களுடைய கண்கள் மூடப்பட்டு, துன்பத்தினால் நிறைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அவை அழிந்து போகக்கூடியவையாக இருக்கிற காரணத்தினால்தான் அவை அப்படியிருக்கின்றன. சந்தோஷம் அவைகளைவிட்டு அகன்றுவிட்டது. தனிமையும் பிரச்சனைகளும் அவைகளை வாட்டுகின்றன. ஆகவே, அனைத்து மிருகங்களும் இறைமகனுடைய மகிமை வெளிப்படுவதை எதிர்நோக்கியிருக்கின்றன. ஏனெனில் ஆண்டவருடைய வருகையில் அவருடைய ஆவியினால் பிறந்த அவருடைய பிள்ளைகள் அனைவரும், பாடுள்ள தங்கள் உடலிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களில் அவருடைய மகிமை வெளிப்படும். அப்போது அனைத்து படைப்பும் மீட்கப்படும். அப்போது எந்தக் கழுதையையும் யாரும் கோபப்பட்டு அடிக்கமாட்டார்கள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிற யாரையும் கொசுக்கள் கடிக்காது. கர்த்தராகிய இயேசு தம்முடைய பரிசுத்தவான்களோடும், தூதர்களோடும் இரண்டாம் முறை இவ்வுலகத்திற்கு வரும்போது, முழுமையான அமைதி இந்தப் பூமிக்குக் கிடைக்கும் என்று இறைவன் வாக்களித்திருக்கிறார். அவருடைய வருகைக்காக நீங்கள் ஏங்குகிறீர்களா?

மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக இயற்கை துன்பத்தை அனுபவிக்கிறது. ஏனெனில் மனிதனுடைய தீமையினிமித்தமாக, அவனுடைய பணியும், அவனுடைய அதிகாரத்திற்குக் கீழ் இருக்கும் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. படைப்புகள் படும் பாடுகளை பவுல் பிள்ளைப் பேற்றில் ஒரு தாய் படும் வேதனைக்கு ஒப்பிடுகிறார். கிறிஸ்து நம்மோடும், பாடுபடும் ஒவ்வொரு மிருகத்தோடும் தன்னுடைய பாடுகள் மூலமாகத் தம்மை அடையாளப்படுத்தியிருக்கிறார். அனைத்தையும் மீட்கும்படி அவர் நமக்கு எவ்வளவு அருகில்வர முடியுமோ, அவ்வளவு அருகில் வருகிறார்.

ரோமர் 8:23-25
23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். 24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? 25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.

இறைவனுடைய பிள்ளைகள் இவ்வுலகத்தில் வாழும் காலத்தில் ஆண்டவருடைய ஆவியின் வல்லமையில், தங்களுடைய உள்மனதில் வேதனைப்பட்டு, தங்களுடைய புத்திர சுவிகாரம் முழுமையடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். நாம் விசுவாசத்தினால் மீட்கப்பட்டிருந்தாலும் நம்முடைய முழுமையான மீட்பிற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இன்று நம்முடைய ஆத்துமாவுக்குக் கிடைத்திருக்கிறது பகுதியளவு முழுமைதான்; பரிபூரண முழுமைக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.

வரப்போகிற நம்பிக்கையைக் குறித்துள்ள குறிப்பிட்ட நம்பிக்கையும் நன்றியுணர்வும் நமக்குள் இருக்கும் ஆன்மீக வாழ்வின் அடிப்படையான வெளிப்பாடாக இருக்கிறது. நாம் தங்கத்திற்காகவோ அல்லது நம்முடைய உடல் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகவோ காத்திருப்பதில்லை; நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைக் காண வேண்டும் என்று விரும்புகிறோம்.

உங்கள் தகப்பனாகிய இறைவனைக் காண வேண்டும் என்று நீங்கள் ஏங்குகிறீர்களா? உங்கள் மீட்பரோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறீர்களா? இறைவனுக்கு முன்பாக நீங்கள் சென்றால் உங்களுடைய உடல் எரிந்துபோகும் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அவருடைய சமூகத்திற்குச் செல்லும்போது நாமும் நித்திய வெளிச்சமாக மாறிப்போவோம். இறைவனுக்குள் மறைந்திருக்கும் தங்களுடைய நிலைவாழ்வு சீக்கிரமாக வெளிப்பட வேண்டும் என்பதுதான் பரிசுத்தவான்களுடைய ஏக்கமாயிருக்கிறது. அந்த நிலைவாழ்வு நிறைவாக வெளிப்படும்போது அது அவர்களுடைய இதயங்களை மட்டுமல்ல, உபத்திரவங்களையும், வியாதிகளையும் அனுபவித்த அவர்களுடைய அழிவுக்குரிய உடலும் மகிமைப்படுத்தப்படும். நாம் வாழும் இன்றைய உலகத்தில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மாயமான பரதீûஸ மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதால், நிலையான மகிமையைக் காண நாம் காத்திருப்பதில் நமக்கு மிகுந்த பொறுமை வேண்டும். வரவிருக்கும் மகிமைக்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாயிருக்கிறார்.

ரோமர் 8:26-27
26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். 27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

பரிசுத்த ஆவியானவர் நம்முடைய பெலவீனமான உடலில் வேதனைகளை அனுபவிக்கிறார். நம்முடைய பெலவீனத்தைக் குறித்தும், குறைவான, களைப்பு நிறைந்த விண்ணப்பத்தைக் குறித்தும் அவர் துக்கப்படுவதோடு, நம்முடைய குறைவான அறிவைப் பார்த்தும், நம்முடைய பெலவீனமான அன்பையும் பெலத்தையும் கண்டும் துக்கித்துப் பெருமூச்சு விடுகிறார். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்காக விண்ணப்பித்து பரிந்துபேசுகிறார். அவர்கள் விண்ணப்பிக்காவிட்டாலும் பெருமூச்சு அவர்களுக்குள் காணப்படுகிறது. அந்தப் பெருமூச்சு பரிசுத்த ஆவியானவரின் விண்ணப்பமாகிய ஆண்டவருடைய விண்ணப்பத்தின்படியானதாகும். முழு உலகமும் மீட்கப்பட வேண்டும் என்று இரவும் பகலும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் விண்ணப்பித்துக்கொண்டிருக்கிற காரணத்தினால், நீங்கள் உங்களுடைய சுய நலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, நன்றி உணர்வோடும் அன்போடும் ஞானத்தோடும் வல்லமையோடும் மகிழ்ச்சியோடும் விண்ணப்பிக்கும்படி உங்களை ஒப்புக்கொடுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நன்றியுள்ளவர்களாக, உங்கள் பரலோக தகப்பனை நோக்கி எப்போது விண்ணப்பிக்கப் போகிறீர்கள்?

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள தந்தையே, எங்களுடைய தாமதமும் சுயநலமுமான விண்ணப்பங்களுக்காக எங்களை மன்னித்தருளும். உம்முடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தப்படுத்தவும், எங்கள் வாழ்வின் மூலமாக கிறிஸ்வின் மீட்பை மகிமைப்படுத்தவும், பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பணிசெய்யவும் எங்களை வழிநடத்தியருளும். கர்த்தாவே, பரிசுத்த ஆவியின் நம்பிக்கையை நாங்கள் உணர்ந்துகொள்ளவும், அவர் விரும்புகிறபடி நாங்கள் விண்ணப்பிக்கவும் இந்த முழுப் படைப்பையும் மீட்கும்படி உம்முடைய குமாரன் மாபெரும் மகிமையில் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கவும் எங்களுக்குப் போதித்தருளும்.

கேள்வி:

  1. கிறிஸ்துவின் வருகைக்காக துன்பப்படுகிறவர்கள் யார்? ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:20 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)