Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 046 (God’s Plan of Salvation)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
உ - நம்முடைய விசுவாசம் என்றென்றும் தொடருகிறது (ரோமர் 8:28-39)

1. இறைவனுடைய மீட்பின் திட்டம் வரப்போகிற மகிமையையே எதிர்பார்த்திருக்கிறது (ரோமர் 8:28-30)


ரோமர் 8:28-29
28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;

இறைவனை அறிந்திருக்கிறவர்கள் அவர் எல்லாம் வல்ல இறைவன் என்பதையும் உணர்ந்திருப்பார்கள். அவருக்குத் தெரியாமலும் அவருடைய சித்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் இவ்வுலகத்தில் எதுவும் நடைபெறுவதில்லை. அவர் எல்லாம் வல்லவர். ஆயினும் சில மதங்களில் இருக்கும் நம்பிக்கையைப் போல நாம் எல்லாம் தலைவிதி என்ற கொள்கையை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் நம்முடைய மாபெரும் இறைவன் இரக்கமுள்ள தகப்பனாக, எப்போதும் நம்மீது கரிசனையுள்ளவராகவும், ஒரு போதும் நமக்குத் தீங்குவிளைவிக்காதவராகவும் நம்மைப் புறக்கணிக்காதவராகவும் கைவிடாதவராகவும் இருக்கிறார். ஆகவே நம்முடைய வாழ்வில் பல துயரங்களும் உபத்திரவங்களும் ஏற்படும்போது, நம்முடைய விசுவாசம் நம்மைவிட்டு எடுபட்டுப் போய்விடாதபடிக்கு, அவரது அன்பின் மீதிருக்கும் நம்முடைய பற்றுதலை உறுதிப்படுத்தும்படி நாம் அவரிடம் வேண்டிக்கொள்கிறோம். நம்முடைய தனிப்பட்ட இரட்சிப்பைக் குறித்து, ஒருவேளை நமக்குச் சந்தேகம் வந்து, நம்முடைய விசுவாசம் அசைக்கப்படும் தருணங்கள் வரும்போது இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை உறுதிசெய்யும்படி தொடர்ச்சியான சில உண்மைகளைப் பவுல் எடுத்துரைக்கிறார்.

நீங்கள் இறைவனுடைய சிந்தையில் எப்போதும் இருந்த காரணத்தினால் உங்கள் பிறப்பிற்கு முன்பாகவே அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அவர் உங்களை அறிந்திருக்கிறார். அவர் உங்களுடைய உள்ளான மனிதனையும், உங்களுடைய குணாதிசயத்தையும், உங்கள் நோக்கங்களையும் அறிந்திருக்கிறார். இறைவனுக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவு நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் ஆழமானது. நீங்கள் இறைவனுக்கு அந்நியமானவர் அல்ல, அவருக்கு அருகில் அவரால் அறியப்பட்டவராகவே இருக்கிறீர்கள். தொலைந்துபோன தன்னுடைய மகனுடைய வருகைக்காக காத்திருப்பதுபோல இறைவன் உங்களுக்காகக் காத்திருக்கிறார். நீங்கள் இறைவனுக்காக ஏங்குவதைக் காட்டிலும் அவர் உங்களுக்காக ஏங்குகிறார்.

நித்திய இறைவன் காலங்களுக்கு முன்பாகவே உங்களை நேசித்திருக்கிறார். உங்கள் எதிர்காலத்தைக் குறித்த மகிமையான திட்டத்தை அவர் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் உங்களைத் தம்முடைய பிள்ளையாக மாற்றும்படி தம்முடைய தெய்வீக சித்தத்தினால் முன் குறித்திருக்கிறார். அவர் தம்முடைய சிலுவை மரணத்தினால் உங்களுடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்து தீர்த்தார். கிறிஸ்துவில் மட்டும் உங்களுடைய தெரிந்துகொள்ளுதல் உறுதிசெய்யப்படுகிறது. பரிசுத்தமுள்ள இறைவன் உண்மையுள்ளவராக இருப்பதால், குமாரனுடைய ஒப்புரவாகுதலை உறுதியாக பற்றிக்கொள்கிற எவரும் அசைக்கப்படுவதில்லை. ஆகவே, இறைவன் உங்களுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அவர் தம்முடைய வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிற கிறிஸ்துவினுடைய சாயலுக்கு ஒப்பாக உங்களை மகிமைப்படுத்தும்படி உங்களை அவர் முன்குறித்திருக்கிறார். இறைவன் பல தரப்பட்ட மகன்களைப் பெற்றிருக்க விரும்பவில்லை, நாம் அனைவரும் கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது தாழ்மையிலும் சாந்தத்திலும் வாழ்ந்ததைப் போன்ற பரிபூரண குணாதிசயத்தையே பெற்றிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ரோமர் 8:30
30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

இறைவன் தம்முடைய அன்பின் சிந்தனைகளை தனிப்பட்ட முறையில் உங்களை நோக்கி எடுத்துரைக்கிறார்.

அவருடைய சத்தத்தை உங்கள் இதயத்தின் ஆழத்தில் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவருடைய அழைப்பு உங்களுடைய கடினமான உள்மனதை ஊடுருவிச் சென்றிருக்கிறதா? நீங்கள் பாவியாக இருந்தபோது இறைவன் உங்களைத் தெரிந்துகொண்டு, தம்முடைய பிள்ளையாகும்படி உங்களை முன்குறித்திருக்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். பெருமையிலும் இச்சையிலும் மரணமடைந்திருந்த உங்களைப் புதுப்பித்து, தூய்மையையும், பரிசுத்தத்தையும், உண்மையையும், நீதியையும் உங்கள் வாழ்வில் ஒளிரச்செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார். உங்களுக்குள் செயல்படும் இறைவனுடைய வார்த்தையினால் அன்றி பரிசுத்தமாக வாழ்வதற்கு உங்களுக்குச் சக்தியில்லை. ஆகவே வேதாகமத்தைத் தொடர்ச்சியாக வாசியுங்கள், ஏனெனில் அந்த வார்த்தைகள்தான் நேரடியாக உங்களுடன் பேசும்.

இறைவன் தம்முடைய ஆலோசனையின்படி, உங்களுடைய இரட்சிப்பின் அடிப்படையான உண்மைகளைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிற காரணத்தினால், பிசாசினுடைய குற்றச்சாட்டுகள் அவற்றை அசைக்க முடியாது. நீதியுள்ள இறைவன் தம்முடைய குமாரனுடைய பரிகார மரணத்தின் மூலமாக உங்களுடைய பாவங்களை ஒரேயடியாக துடைத்துவிட்டார். இப்போது கிறிஸ்துவினுடைய நீதியின் காரணமாக நீங்கள் நீதிமானாக்கப்பட்டிருக்கிறீர்கள். அவருடைய மீட்பினால் நீங்கள் தூய்மையுள்ளவராயிருக்கிறீர்கள். அவர் உங்கள் மீது பொழிந்தருளிய அன்புக்காக நீங்கள் எப்போது அவருக்கு நன்றி செலுத்தப் போகிறீர்கள்? எப்போது அவருடைய வழிகாட்டுதலுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய உண்மையுள்ள கிருபையை புகழப்போகிறீர்கள்?

இதைவிட அதிகமானதை இறைவன் தம்முடைய வல்லமையினால் உங்களுக்காகத் தீர்மானித்திருக்கிறார். உங்களில் இறைவன் கொடுத்திருக்கிற நிலைவாழ்வுக்கு உத்தரவாதமாக பரிசுத்த ஆவியானவரை அவர் உங்களில் வைத்திருக்கிறார். ஆகவே இறைவனுடைய மகிமை உங்களில் இன்று மறைந்திருக்கிறது. விசுவாசிகளுடைய கண்களுக்கு மட்டுமே கிறிஸ்து காட்சியளிப்பதைப் போல அவருடைய அன்பும், சத்தியமும், பொறுமையும் உங்களில் செயல்படுகிறது. உங்களுடைய இரட்சகரில் நீங்கள் நிலைத்திருந்தால், இறைவனுடைய ஆவியானவர் அவருடைய கனிகளை உங்களுடைய வாழ்வில் வெளிப்படுத்துவார். இறைவன் உங்களை எதிர்காலத்தில் மகிமைப்படுத்துவார் என்று பவுல் சொல்லவில்லை. அவர் உங்களை இறந்த காலத்தில் மகிமைப்படுத்தியிருக்கிறார் என்று சொல்கிறார். ஏனெனில் விசுவாசத்தைத் தொடக்குகிறவரும் முடிக்கிறவரும் கிறிஸ்துவே என்பதைப் பவுல் அறிந்திருக்கிறார். ஆகவே உங்களுடைய வாழ்வில் மீட்பை ஆரம்பித்தவர் உண்மையுள்ளவர். அவர் தம்முடைய சொந்தத் தகுதியின் காரணமாகவே உங்களுக்குப் போதித்து, உங்களை பெலப்படுத்தி, உங்களைப் பூரணப்படுத்துகிறார்.

உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் இருக்கின்றனவா? நீங்கள் பசியாகவோ அல்லது சுகவீனமாகவோ இருக்கிறீர்களா? ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? பள்ளிப் படிப்பில் தோல்வியடைந்துவிட்டீர்களா? இறைவன் உங்களோடு இருக்கிற காரணத்தினால் இந்தக் காரியங்கள் எதுவுமே முக்கியமில்லாதவைகள். அவர் உங்களை நேசிக்கிறார், பராமரிக்கிறார், கண்ணின் மணியைப் போல உங்களைக் காக்கிறார். அவர் உங்களை மறந்துவிடாமல் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றி முடிக்கிறார். உங்களைத் தம்முடைய பிள்ளையாகத் தத்தெடுக்கும்படி தெரிவுசெய்திருக்கிறார். இறைவனை நேசிக்கிறவர்களுக்கு அனைத்தும் நன்மைக்கேதுவாக நடைபெறுவதால், உங்களை நீங்களே வெறுத்து, உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, இறைமகனை சிலுவைக்கும், கல்லறைக்கும், அதன் பிறகு மகிமைக்கும் பின்பற்றிச் செல்லுங்கள். முதலில் உங்களை நேசித்த அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா?

விண்ணப்பம்: பரிசுத்த திரித்துவ இறைவா! நீர் எங்களை ஆதிமுதல் அறிந்திருக்கிற காரணத்தினாலும், உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே எங்களைத் தெரிந்துகொண்டு, உம்முடைய திருக்குமாரனுடைய அன்பின் மகிமையைத் தரித்துக்கொள்ள முன்குறித்தபடியால் உம்மைத் தொழுகிறோம். நீர் எங்களைத் தெரிந்துகொள்ள நாங்கள் எம்மாத்திரம்? எங்கள் பாவங்களை மன்னித்து, உம்முடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து உம்முடைய அழைப்பைக் கேட்கும்படி எங்கள் காதுகளைத் திறந்து, உம்முடைய இரத்தத்தினால் நாங்கள் நீதிமானாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும். உம்முடைய உண்மையான அன்பிற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் உம்முடைய வழிநடத்துதலை நம்புகிறோம். தீமையின் நாட்களில் நாங்கள் அசைக்கப்படாமல் வரப்போகிற மகிமைக்கு உத்தரவாதமாக விளங்கும் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குள் வாழ்வதை நாங்கள் உணரும்படி செய்தருளும்.

கேள்வி:

  1. இறைவனிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஏன் அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறுகின்றன?

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறுகின்றன.
(ரோமர் 8:28)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:24 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)