Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 024 (The Revelation of the Righteousness of God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21-4:22)

1. கிறிஸ்துவின் பாவப்பரிகார மரணத்தில் கடவுளுடைய நீதி வெளிப்படுகிறது (ரோமர் 3:21-26)


ரோமர் 3:25-26
25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், 26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.

பாவிகளாகிய இந்த தீய உலகத்தின் மனிதர்கள் தம்முடைய ஒரே மகனைக் கொலை செய்வார்கள் என்பதை அறிந்திருந்தும் அவரை அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு இறைவன் அவர்கள் மீது அன்புகொண்டார். ஆயினும் தம்முடைய பரிசுத்தருடைய மரணத்தை அனைத்துப் பாவிகளுக்காகவும் அவரே ஒரே முறை செலுத்தும் பரிகார பலியாக இருக்கும்படி அவர் ஏற்பாடு செய்திருந்தார். கிறிஸ்துவினுடைய இரத்தம் நம்முடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். குற்றமற்ற இறைமகனுடைய இரத்தத்தினாலே அன்றி நமக்கு மீட்பு இல்லை.

நாம் வியத்தகு தொழில் நுட்ப வளர்ச்சியின் காலத்தில் வாழ்வதால், இவ்வுலக வரலாற்றில் ஆகாய விமானங்களையும், நீர் மூழ்கிக் கப்பல்களையும், கவச வாகனங்களையும், அணுகுண்டுகளையும் விட இறைவனுடைய கோபமும் நியாயத் தீர்ப்புமே முக்கியமானது என்ற அறிவை நாம் இழந்துவிட்டோம். நம்முடைய பாவங்கள் ஒவ்வொன்றும் தண்டிக்கப்பட வேண்டும், அல்லது அவற்றிற்கான பரிகாரம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் நியாயப்படி நாம் மரண தண்டனைக்குள்ளனவர்களாக இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவினுடைய பதிலாள் மரணம் மட்டுமே நம்முடைய மீட்பிற்கான ஒரே வழி. இந்த நோக்கத்திற்காகவே இறைமகன் மனுவுருவாகி சிலுவை என்னும் பலிபீடத்தில் இறைவனுடைய கோபம் என்னும் நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டார். அவரிடம் உண்மையில் வருகிறவர்கள் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் செயல்படும் இறைவனுடைய அனைத்து வல்லமையையும் கோடிக்கணக்கானவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். ஆகவே, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை விட்டு நீங்கள் விலகிச் செல்ல வேண்டாம் என்ற நாங்கள் உங்களை விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு மாறாக உங்களுடைய வீட்டையும், தொழிலையும், உங்கள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும், உங்கள் திருச்சபையையும், உங்கள் முழுமையையும் தெளிக்கப்பட்ட இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திற்குக் கீழாகக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, என்றெக்குமாக இறைவனுடைய சத்தியத்தினால் பாதுகாக்கப்படுவீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலே அன்றி பிசாசினுடைய முறைப்பாடுகளுக்கு எதிராகவும், இறைவனுடைய கோபாக்கினையின் தண்டனைகளுக்கு எதிராகவும் வேறு எந்தவிதப் பாதுகாப்பும் எங்கும் இல்லை.

21-ம் வசனத்திலிருந்து 28-ம் வசனம் வரை நீங்கள் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். நீங்கள் அந்தப் பகுதியை வசனம் வசனமாகக் கவனமாக வாசித்து, அதன் பொருளை உங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அப்போது இந்தப் பாடத்தின் முக்கியமான பகுதி பாவி நீதிமானாக்கப்படுவதல்ல, மாறாக இறைவனுடைய நீதி நிரூபிக்கப்படுவதே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இறைவனுடைய நீதியைப் பற்றி நாம் இந்தப் பகுதியில் மூன்று முறை வாசிக்கின்றோம்.

நியாயப்பிரமாணத்தின்படி நம்முடைய அன்புள்ள இறைவன் பாவிகளை அழித்துவிடவில்லை. இரக்கமுள்ள இறைவனாகிய அவர் அன்போடும் பொறுமையோடும் அனைத்துப் படைப்புகளும் எதிர்பார்த்திருந்த தருணம் வரும்வரை அனைத்து அக்கிரமங்களையும் மன்னித்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். சிலுவையில் கிறிஸ்து கதறி மரணத்தை ருசிபார்த்தபோதுதான் உலகம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து உயிர்தெழுந்ததினால் அனைத்துப் பாவிகளும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வானதூதர்கள் அனைவரும் மகிழ்வடைந்தார்கள்.

இறைவன் தாம் விரும்புகிற யாரையும் தம்முடைய விருப்பத்தின்படி மன்னிக்கிறார் என்று கூறுகிறவர்கள் மனிதர்களுடைய மேலோட்டமான தர்க்கவாதத்திற்கு செவிகொடுக்கும் அறியாமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் இறைவன் முற்றிலும் தன்னில்தான் சுதந்திரமுள்ளவராக இருந்தாலும், அவர் தம்முடைய பரிசுத்தமான வார்த்தைகளுக்கும் அதன் பொருளுக்கும் கட்டுப்பட்டவராக, பாவிகளைத் தண்டிக்க வேண்டியவராக இருக்கிறார். மேலும் அவர் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவின் மரணமின்றி இறைவன் பாவிகளை மன்னிப்பாரானால் அவர் தம்முடைய நீதியின் கோரிக்கைகளைத் தானே நிறைவேற்றத் தவறுகிறார் என்று அவரை யாரும் குற்றப்படுத்த முடியும்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது இரண்டு காரியங்கள் நடைபெற்றது: இறைவன் தம்முடைய நீதியை நிரூபித்துக் காண்பித்தார். அதே வேளையில் நம்மை முழுவதுமாக நீதிமான்களாக மாற்றினார். இயேசு நீதியின் கோரிக்கைகள் அனைத்தையும் நமக்காக நிறைவேற்றிவிட்ட காரணத்தினால் நம்மை மன்னிக்கும் பரிசுத்த இறைவன் நீதியுள்ளவராகவே இருக்கிறார். நசரேயனாகிய இயேசு பாவமில்லாதவராகவும், பரிசுத்தமுள்ளவராகவும், தாழ்மையுள்ளவராகவும் வாழ்ந்தார். அவருடைய வல்லமையுள்ள அன்பின் நிமித்தமாக, படைப்புகளில் ஒருவரைப்போல அவர் உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் சுமக்கக்கூடியவராக இருந்தார். ஆகவே, நாம் கர்த்தராகிய இயேசுவைத் தொழுது அவரை நேசிப்போம். தம்முடைய மகனையே நமக்காக மரிக்கக் கொடுத்த பிதாவாகிய இறைவனுக்கு நாம் மகிமையைச் செலுத்துவோம். இந்த அண்ட சராசரங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவும், சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட தம்முடைய குமாரனுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான் மரிக்காமல் மக்களுக்காக தம்முடைய மகனை அவர் மரிக்கக்கொடுத்தார்.

யோவான் 17-ம் அத்தியாயத்தில் இயேசு தம்முடைய தலைமைக்குரு விண்ணப்பத்தில் இறைவனை நோக்கிப் “ஓ, பரிசுத்த பிதாவே” என்று அழைக்கிறார். இந்த வார்த்தையில் இறைவனுடைய நீதியைக் குறித்த ஆழ்ந்த கருத்தைப் பார்க்கிறோம். இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் அன்பும் சத்தியமும் நிறைந்தவராயிருக்கிறார். அவருடைய அன்பு நீதியற்ற அன்பல்ல, அவருடைய இரக்கமும் நீதியின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவினுடைய மரணத்தில் இறைவனுடைய குணாதிசயங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. சட்டத்தின் மீது கட்டப்பட்ட இந்த அளவற்ற அன்பைத்தான் நாம் “கிருபை” என்று அழைக்கிறோம். ஏனெனில் அதன் மூலமாகத்தான் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம், இறைவனும் நம்மை நேசித்து, நமக்குப் பாவமன்னிப்பை அருளியபோதிலும் தொடர்ந்து நீதியுள்ளவராகவே விளங்குகிறார்.

விண்ணப்பம்: பரிசுத்தமான திரியேக இறைவா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். ஏனெனில் உம்முடைய அன்பு எங்கள் அறிவிற்கு எட்டாதது. உம்முடைய பரிசுத்தம் ஆழியைக் காட்டிலும் ஆழமானது. அனைத்துப் பாவங்களில் இருந்தும், மரணத்திலிருந்தும், பிசாசினுடைய அதிகாரத்திலிருந்தும் நீர் எங்களை விடுவித்திருக்கிறீர். வெள்ளியினாலும் பொன்னினாலும் நீர் இந்த விடுதலையை வாங்கவில்லை. கிறிஸ்துவினுடைய கசப்பான பாடுகள் மூலமாகவும் சாபமான மரணத்தின் மூலமாகவும் அந்த விடுதலையை எங்களுக்கு விலைகொடுத்து வாங்கினீர். அவருடைய விலையில்லா இரத்தம் எங்களுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் எங்களைக் கழுவி சுத்திகரித்தது, உம்முடைய கிருபையினால் நாங்கள் நீதிமான்களாகவும் பரிசுத்தவான்களாகவும் மாறியிருக்கிறோம். எங்களை நீதிமான்களாக்கிய உம்முடைய மீட்பிற்கு நன்றியுள்ளவர்களாக, கிறிஸ்துவின் பலியை நாங்கள் கனப்படுத்தி, எங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

கேள்வி:

  1. இறைவனுடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாக” என்ற சொற்றொடரின் பொருள் யாது?

எல்லாரும் பாவஞ்செய்து,
தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய்
அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள
மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

(ரோமர் 3:23-24)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 08:22 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)