Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 001 (Introduction)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்

அப்போஸ்தலர் நடபடிகள் நூல் அறிமுகம்


கிறிஸ்துவின் வெற்றி பவனி எப்படி ஆரம்பித்தது:
அப்போஸ்தலர் நடபடிகள் நூல் அறிமுகம்

கர்த்தராகிய இயேசுவின் சரீரம் அவருடைய கல்லறையில் அழுகி, அழிந்துபோகவில்லை. அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார். அவர் உண்மையிலேயே இறந்தவர்களிலிருந்து உயிருடன் எழுந்து, நாற்பது நாட்கள் வரை தம்முடைய சீடர்களுக்குக் காட்சி கொடுத்தார். அதன் பிறகு அவர் பரலோகத்திற்கு எழுந்தருளி தம்முடைய பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருந்து பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாக பிதாவுடன் சேர்ந்து நித்திய நித்தியமாக ஆளுகை செய்கிறார்.

கிறிஸ்து தாம் பரலோகத்திற்கு எழுந்தருளிச் சென்றதிலிருந்து, அமைதியோடும், அதிக கவனத்தோடும், தம்முடைய திருச்சபையைக் கட்டுகிறவராகவும், இறைவனுக்கெதிரான அனைத்து தீய சக்திகளின் செயல்களுக்கு நடுவிலும் தம்முடைய திருச்சபையைக் தாங்குகிறவராகவும் இருக்கிறார். அவருடைய திருச்சபை சிலுவையில் அவர் பெற்றுக்கொண்ட வெற்றியின் கனியாகவும் அதற்குக் கிடைத்த பலனாகவும் இருக்கிறது. மனிதன் இறைவனோடு முழுமையாக ஒப்புரவாகிறான் என்ற உண்மையின் மீதுதான் அப்போஸ்தலர் நடபடிகள் முழுமையுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவில் அவயவமாயிருக்கும் அனைவருமே அவருடைய வெற்றி பவனியில் பங்கடைகிறார்கள். கிறிஸ்துவின் முழுத்திருச்சபையும் அவருடைய சிலுவையாகிய அடித்தளத்தின்மீது கட்டப்பட்டிருப்பதைப் போலவே அப்போஸ்தலருடைய நடபடிகளுக்கும் அவருடைய சிலுவையே அடித்தளமாக இருக்கிறது.

சீஷர்கள் பிதாவினுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும்வரை எருசலேமில் காத்திருக்க வேண்டும் என்று கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறிச்செல்வதற்கு முன்பாக அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரம்ப வேண்டும் என்றும் எருசலேம் முதல் கலாச்சார தலைநகரமாகிய ரோமாபுரிவரை நற்செய்தியை பரப்புவதற்கு அதன் மூலமாக அவர்கள் பெலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்று கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு கட்டளையிட்டது, அவர் அவர்களை அனுப்புவதையும் அவர்களுக்கு அந்தப் பணியை ஒப்படைப்படைப்பதையும் குறித்துக்காட்டுகிறது. அவர்களுடைய பிரசங்கத்திலும் அவர்கள் திருச்சபையில் செய்யும் பணியிலும் பரிசுத்த ஆவியின் செயலைத் தவிர வேறு எதுவும் அவர்களுடைய உந்து சக்தியாக இருக்கக்கூடாது என்பதற்காக பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணினார்.

அப்போஸ்தலர் நடபடிகளுடைய பாடப்பொருள்

அப்போஸ்தலர்களுடைய செயல்களைப் பதிவு செய்வதல்ல அப்போஸ்தலர் நடபடிகள் என்னும் தனிச்சிறப்பு வாய்ந்த நூலின் நோக்கம் என்பதை அதை வாசிக்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்வார்கள். உண்மையில் கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறிச் சென்ற பிறகுகூட அவருடைய ஆவியானவர் மூலமாக அவருடைய செயல்கள் அவருடைய அப்போஸ்தலர்களில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போஸ்தலர்கள் அனைவரும் செய்த பலத்த செயல்களைப் பற்றி இந்நூல் பேசுவதில்லை. அப்போஸ்தலர்களாகிய பேதுருவையும் பவுலையும் பற்றி மட்டுமே பெரும்பாலும் இந்த நூல் பேசுகிறது. 13-ம் அதிகாரத்திலிருந்து நாம் அப்போஸ்தலனாகிய பேதுருவைப் பற்றி வாசிப்பதில்லை. அவருடைய மரணத்தைப் பற்றிகூட இந்நூல் எந்த செய்தியையும் நமக்கு அறியத் தருவதில்லை. சற்று விரிவாக விவரிக்கப்பட்டுள்ள அப்போஸ்தலனாகிய பவுலுடைய ஊழியத்தைப் பற்றிய விவரங்கள் கூட அவர் ரோமாபுரிச் சிறையில் இருப்பதுடன் முடிவடைகிறது. அப்போஸ்தலர்களுடைய செயல்பாடுகளை துல்லியமாகவும் கால வரிசைப்படியும் எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய நோக்கமில்லை. இதற்கு மாறாக நற்செய்தியின் பரவுதலையும் திருச்சபை எருசலேமில் நிறுவப்பட்டு ரோமாபுரி வரை எவ்விதமாக விரிவடைந்து சென்றது என்பதையும் பற்றிய தகவல்களைக் கொடுப்பதே ஆசிரியருடைய நோக்கமாயிருக்கிறது.

இரட்சிப்பின் செய்தி ரோமாபுரியை அடையும் வரை கர்த்தருடைய ஊழியர்கள் அஞ்சல் ஓட்டக்காரர்களைப் போல நற்செய்தி என்னும் தீபத்தை ஒருவர் மற்றொருவரிடம் தொடர்ந்து கொடுப்பதை நாம் இங்கு காண்கிறோம். இவ்வாறு உயிருள்ள கிறிஸ்துவின் வழிகாட்டுதலின்படி இரட்சிப்பின் நற்செய்தி எவ்வாறு எருசலேம் முதல் ரோமாபுரிவரை தன்னுடைய வெற்றி பவனியை மேற்கொண்டது என்பதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் பாடப்பொருளாயிருக்கிறது.

நூலின் தொகுப்பு

இறைவனுடைய அரசைப் பரப்புவதில் உள்ள ஆவிக்குரிய போராட்டத்தைக் குறித்த விரிவான போர்திட்டத்தை அப்போஸ்தலர்கள் எழுதவில்லை. உயிருள்ள கர்த்தராகிய கிறிஸ்துவே ஆதித்திருச்சபையினுடைய வாழ்வில் அவ்வப்போது இடைப்பட்டு, திருச்சபையை பெலப்படுத்தி, முதலில் சமாரியாவிற்கும், அடுத்து அந்தியோகியாவிற்கும், அதைத் தொடர்ந்து ரோமாபுரிக்கும் பரவும்படி அதைப் பெலப்படுத்தினார். நற்செய்தி வெற்றி பவனியாக ரோமாபுரியை வந்தடைவதை உறுதி செய்வதற்காக கர்த்தர் கிரேக்க மொழியைப் பேசக்கூடிய ஒரு யூதனாகிய பவுலைத் தெரிவு செய்தார். பவுல் தெரிவு செய்யப்படுதவற்கு சற்று முன்பாக, உதவிக்காரனாகிய ஸ்தேவானும் கிரேக்க மொழிபேசிய யூதர்களாகிய அவரது உடன் உதவிக்காரர்களும் பாலஸ்தீனாவில் குடியிருந்த யூத கிறிஸ்தவர்கள் நடுவில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணினார்கள். இதன் காரணமாக இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் வெளிப்படையான போராட்டம் தோன்றியது. இதனால் கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்களை அன்பின் ஆவியுடன் முதலாவது எருசலேம் மாநாட்டில் கூட்டிச் சேர்த்தார் (அதிகாரம் 15). அவர்கள் கிருபையினால் மட்டுமே இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்களாக மனிதர்களுடைய நற்செயல்களினால் நீதிமானாக்கப்படுவதைக் குறித்த எந்த சிந்தனையையும் அவர்கள் புறக்கணித்தார்கள். இதன் விளைவாக புறவினத்து திருச்சபைகள் யூத மதத்தின் தாக்கத்திலிருந்தும் நியாயப்பிரமாணத்தின் கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. கிறிஸ்துவின் அன்பைக் குறித்த அறிவே புதிய உலக மதமாக உருவெடுத்து, புதிய நிலப்பரப்புகளுக்கும் முன்னேறிச் செல்ல ஆயத்தமாயிருந்தது.

எருசலேமில் முதல் நிறுவப்பட்ட கிறிஸ்தவத்தின் மையமாகிய திருச்சபை மட்டுமல்லாது, உயிருள்ள கர்த்தர்தாமே அந்தியோகியாவில் கிறிஸ்தவத்திற்கான இரண்டாவது மையத்தை உருவாக்கியிருந்தார். நற்செய்தி அந்தியோகியாவிலிருந்து பரவ ஆரம்பித்து, அது சின்ன ஆசியா முழுவதையும் உள்ளடக்கும் வரை முன்னேறியது.

இந்த நூலை நாம் கீழ்க்கண்டவாறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

எருசலேமின் ஆதி திருச்சபை (அதிகாரங்கள் 1
முதல் 7)
சமாரியா முதல் அந்தியோகியா வரை நற்செய்தியின் பரவுதல்
(அதிகாரங்கள் 8 முதல் 12)
சின்ன ஆசியாவிலும் கிரேக்கத்திலும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதும் பவுல் ரோமாபுரிக்கு வந்தடைவதும்
(அதிகாரங்கள் 13 முதல் 28)

ஆசிரியர் யார்?

இந்த நூலின் ஆசிரியர் தன்னை முக்கியமானவராகக் கருதாத காரணத்தினால் தன்னுடைய பெயரை எழுதவோ, தன்னைக் குறித்த எந்த அடையாளத்தையும் முன்வைக்கவோ இல்லை. ஆனாலும் அந்தியோகியாவைச் சேர்ந்த கிரேக்க மருத்துவராகிய லூக்காதான் இந்த தனிச்சிறப்பான நூலின் ஆசிரியர் என்பதை அனைத்து தரப்பினரும் எப்போதும் ஏற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்தவத்தின் மையமாக விளங்கிய அந்தியோகியாவைப் பற்றி துல்லியமான அறிவை அவர் பெற்றிருந்தார். மேலும் லூக்கா கிரேக்க மொழியில் வல்லுனராகத் திகழ்ந்தார். அன்போடும் கனிவோடும் அவர் தன்னுடைய எழுத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளையும் பிரசங்கங்களையும் தெளிவாகவும் சரளமாகவும் எடுத்தாண்டுள்ளார். அவர் தன்னுடைய புத்தகத்தில் புறவினத்து மக்கள் நடுவிலிருந்த தேவபக்தியுள்ளவர்களைப் பற்றி எழுதுகிறார். உண்மையில் அவர் நற்செய்தியினால் மறுபிறப்பைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாகவே அப்படிப்பட்ட தேவபக்தியுள்ளவராக அவரே வாழ்ந்திருக்கிறார். பவுலுடைய இரண்டாவது மிஷனரிப் பயணத்தின்போது லூக்கா அவரைச் சந்தித்து, துரோவா பட்டணத்திலிருந்து பிலிப்பு பட்டணத்திற்கு பவுல் பிரயாணம் செய்தபோது அவருடன் பிரயாணம் செய்திருக்கிறார். ரோமானியர்களுடைய காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த அந்த நகரத்தில் பவுலுடைய பிரசங்கப்பணியில் தானும் பங்குகொண்டு, பவுல் அவ்வூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு அங்கு தோன்றிய புதிய திருச்சபையை அவர் கட்டியெழுப்பவும் பராமரிக்கவும் அங்கு தங்கியிருந்தார். பவுல் திரும்ப மீண்டும் எருசலேமிற்குச் செல்லும்போது லூக்காவை திரும்ப தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார். எருசலேமில் லூக்கா தான் எழுதப்போகும் நற்செய்திக்காகவும் அப்போஸ்தலருடைய நடபடிகளுக்காகவும் தகவல்களைச் சேகரிக்க தன்னுடைய ஆசிரியராகிய பவுலை விட்டுப் பிரிந்து செல்கிறார். பவுல் செசரியாவில் சிறைப்பட்டிருந்தபோதும் அதற்குப் பிறகும் பலமுறை லூக்கா அடிக்கடி அவரைச் சென்று சந்திப்பதைக் காண்கிறோம். அவர் பவுலோடு நிலைத்திருந்து, அவரோடு பணியாற்றினார். பவுலுடைய ஆன்மீகத்தினால் லூக்கா பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகு ரோம அதிகாரிகளுக்கு முன்பாக பவுல் விசாரிக்கப்பட்டதையும் பவுலுடைய தற்காப்பு வாதங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். பவுல் ரோமாபுரியை அடையும்வரை மேற்கொண்ட நீண்ட, ஆபத்து நிறைந்த பிரயாணத்தில் லூக்கா அவரைவிட்டுப் பிரியவில்லை. அப்போஸ்தலர் நடபடிகளில் “நாம்” என்று வாசிக்கும் பல பகுதிகள் லூக்கா ஒரு உடன் பயணியாகவும் கண்கண்ட சாட்சியாகவும் அந்த தருணங்களில் பவுலுடன் இருந்தார் என்பதையே காண்பிக்கிறது.

யாருக்கு இந்த நூல் எழுதப்பட்டது

லூக்கா தன்னுடைய முதலாவது தூய நற்செய்தி நூலை தியோப்பிலு என்ற மனிதருக்கு அர்ப்பணிக்கிறார். அதைப் போலவே அப்போஸ்தலருடைய நடபடிகளையும் அதே நபருக்குத்தான் அவர் எழுதுகிறார். லூக்கா தன்னுடைய இரண்டு தொகுப்பான எழுத்துக்களையும் ஒரே நபருக்கே அர்ப்பணிக்கிறார். லூக்கா நற்செய்தி 1:1-3-ல் தியோப்பிலுவைப் பற்றிய சில காரியங்களை நாம் காண்கிறோம். “இறைவனை நேசிப்பவர்” என்று பொருளுடைய பெயர் பெற்ற தியோப்பிலு என்பவர் ரோமப் பேரரசில் பெரும் பதவி வகித்த ஒரு உயரதிகாரியாவார். அவர் அந்தியோகிவில் பணியாற்றியபோது அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கத் தொடங்கினார். கிறிஸ்தவத்தின் தோற்றத்தைக் குறித்த அதிக துல்லியமான ஆன்மீக மற்றும் வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளவும் ரோம அதிகாரிகள் கிறிஸ்தவர்களை நடத்தும் விதம் சரியா தவறா என்பதை அறிந்துகொள்ளவும் விரும்பினார். புதிதாக உருவாகிவரும் உலக அமைப்பிற்கு நற்செய்தியின் கொள்கைகள் எந்த அளவிற்கு அடிப்படையாக அமைய முடியும். அப்போஸ்தலனாகிய பவுலோடு இருந்த காலத்தில் பரிசுத்த ஆவியின் துணையுடன் பெத்தலகேமில் கிறிஸ்து பிறந்ததிலிருந்து பவுல் ரோமாபுரியை வந்தடையும் வரையிலான தகவல்களை லூக்கா சேகரித்தார். திருச்சபையில் செயல்படும் இறைவனுடைய வல்லமையை காண்பிப்பதற்காக கிரமமாக எழுதப்பட்ட இந்த வரலாற்றுக் கட்டுரையை லூக்கா தியோப்பிலுவிற்கு முன்வைத்தார். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று பிலிப்புச் சிறையதிகாரிக்கு பவுல் கூறியதைப் போல தியோப்பிலுவின் விசுவாசத்தில் அவரை உறுதிப்படுத்துவதற்காக லூக்கா இந்நூலை அவருக்கு எழுதுகிறார்.

எழுதப்பட்ட காலம்

பவுல் தோராயமாக கி. பி. 61-ல்தான் ரோமுக்கு வந்திருக்க வேண்டும். லூக்கா தன்னுடைய நற்செய்தியை எழுதியபோது ஏற்கனவே பல போலி நற்செய்தி நூல்கள் புழக்கத்தில் இருந்த காரணத்தினால் அக்கால சூழ்நிலை சற்று சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆகையால் மருத்துவனாகிய லூக்கா கி. பி. 62 முதல் 70 ஆகிய காலப்பகுதியில் தன்னுடைய நற்செய்தியில் தான் ஏற்கனவே எழுதிய கிறிஸ்தவத்தின் தோற்றத்தைப் பற்றிய தொடர்ச்சியான இரண்டாவது நூலாக அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதியிருக்கலாம். அவர் துல்லியமான ஆராய்ச்சியோடும் புலமையோடும் விண்ணப்பத்தோடும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அவர் கிறிஸ்துவை நேரில் கண்ட சாட்சிகளையும், அவருடைய தாயாகிய மரியாளையும், உதவிக்காரனாகிய பிலிப்பு ஆகியோரையும் நேரில் கண்டு அவர்களோடு பேசி தகவல்களைத் திரட்டியிருக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய செயல்களைப் பற்றியும் பேசுகிற எழுதப்பட்ட முக்கியமான ஆதாரங்களையும் தன்னுடைய ஆராய்ச்சியில் பயன்படுத்தியிருக்கிறார். அவர் அப்போஸ்தலருடைய நடபடிகளுக்கான விவரங்களையும் சேகரித்திருக்கிறார். அதன் பிறகு இரண்டு நூற்களையும் ஆளுனராகிய தியோப்பிலுவிற்கு எழுதியிருக்கிறார்.

இந்த கிரேக்க மருத்துவரை அழைத்து, அவருடைய முதலாவது நற்செய்தி நூலோடு அவருடைய எழுத்துப் பணியை நிறுத்த விடாமல், அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுத வைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துகிறோம். உயிருள்ள கர்த்தர் உடனடியாகத் திரும்ப வந்து விடமாட்டார் என்றும் அவருடைய வார்த்தை அவருடைய வருகைக்கு முன்பாக அனைத்து இனங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தெளிவையும் லூக்காவிற்கு அவர் கொடுத்திருந்தார். பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் அவர்களுடனிருந்த ஆதி திருச்சபையும் கிறிஸ்துவின் வருகைக்காக எருசலேமில் காத்திருந்தார்கள். அவ்வாறே அந்தியோகியாவிலிருந்த திருச்சபையும் இரட்சிப்பின் நற்செய்தியை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்ற தூண்டுதலைப் பரிசுத்த ஆவியினால் பெற்றிருந்தார்கள். நற்செய்தியின் பவனியை அவர்கள் ரோமாபுரியை நோக்கி நகர்த்த வேண்டியவர்களாயிருந்தார்கள். அதிக கவனத்தோடு துல்லியமாக லூக்கா இந்நூலை எழுதியிராவிட்டால் கிறிஸ்து தம்முடைய அரசை கிரேக்க உலகம் முழுவதும் எவ்வாறு பரப்பினார் என்பதை நாம் சரியாக அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். இந்நூல் எழுதப்பட்ட காலத்திலிருந்து பிரசங்கத்திற்கும் திருச்சபைகளைத் நிறுவுவதற்கும் நமக்கு அது மாதிரியாக இருந்து வருகிறது. இதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு விசுவாசிகளைப் புதுப்பிக்கிறார், பணிசெய்யும்படி அவர்களைத் தூண்டுகிறார், பெலவீனங்களில் வெற்றிகொள்ளச் செய்கிறார் ஆகியவற்றை அறிந்துகொள்கிறோம். அப்போஸ்தலருடைய நடபடிகளைப் படிப்பதைக் காட்டிலும் கர்த்தருடைய ஊழியர்களுக்கு சிறந்த வேறு பயிற்சிப் பட்டறை இரக்க முடியாது. அவருடைய அழைப்பிற்கு கீழ்ப்படிகிறவர்களோடு கிறிஸ்துவின் கரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் இந்நூலில் காண்கிறோம்.

கேள்வி:

  1. அப்போஸ்தலர் நடபடிகளை எழுதியபோது லூக்காவில் நோக்கங்கள் என்ன? தியோப்பிலுவைப் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 08:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)