Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 050 (Disparate views on Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)


யோவான் 7:21-24
21 இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். 22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். 23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? 24 தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.

இயேசு தீய ஆவிபிடித்தவர் என்று யூதர்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு நேரடியாக அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் தனக்கு அவர்கள் அறிவித்த மரண தண்டனை அற்பமானது, நியாயமற்றது என்பதை அவர் மக்கள்கூட்டத்திற்குக் காண்பித்தார். பெத்சாயிதாவிலிருந்த வாத நோயாளியை ஓய்வுநாளில் குணமாக்கியதன் காரணத்தினாலேயே யூதத் தலைவர்கள் அவருக்கு எதிராக நியாயந்தீர்க்கிறார்கள் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். அந்த நாளில் இயேசு வாத நோயாளியைப் பார்த்து, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னார். அவன் அற்புதமாகச் சுகமடைந்தான், அதற்காகவே அவர் மீது சொல்லப்பட்ட தண்டனையை நீக்க வேண்டும்.

அதன்பிறகு இயேசு சட்ட வல்லுநர்களே சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று உறுதிபடக் கூறினார். அவர்களுடைய சட்டம் முரண்பட்டதாக காணப்பட்டது: விருத்தசேதனம் என்பது இறைவனுடனான உடன்படிக்கையின் அடையாளம். ஓய்வுநாள் என்பது பரிசுத்த இறைவனோடு ஓய்வில் ஐக்கியம் கொள்வது. மக்கள் தங்கள் குழந்தைகள் பிறந்து எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அது ஓய்வுநாளாகக் கூட இருக்கலாம். அவ்வாறு விருத்தசேதனம் செய்வது வேலையாகாதா?

நோய் பாவத்தின் ஒரு விளைவாக இருக்கிற காரணத்தினால், சுகம் கிடைப்பது இரட்சிப்பாகும். ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றில் இறைவன் இரட்சிப்பைக் கொடுக்கிறார். ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்வதற்கும் ஒரு இரக்கத்தின் செயலைச் செய்வதற்கும் இடையில் எது சிறந்தது என்று மக்கள் சிந்திக்கத் தூணடினார் இயேசு. அவருடைய அன்பு, வல்லமை மற்றும் இரட்சிப்பு ஆகியவற்றின் அளவை அவர்கள் புரிந்துகொள்ளும்படி தர்க்கமுறையை இயேசு பயன்படுத்தினார். அந்த முயற்சியினால் பலன் கிடைக்கவில்லை. அவர்களுடைய காதுகள் செவிடானவைகளாகவும், அவர்களுடைய ஆவிகள் கடினப்பட்டும் இருந்தபடியால் ஒரு தீர்மானத்தை அல்லது சரியான முடிவை எடுப்பது அவர்களால் கூடாத காரியமாயிருந்தது.

யோவான் 7:25-27
25 அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலை செய்யத் தேடுகிறார்கள்? 26 இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? 27 இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.

எருசலேமைச் சேர்ந்தவர்கள் தேவாலயத்தில் வந்து பார்த்தபோது அங்கு மக்கள் கூட்டத்தைக் கண்டார்கள். மக்கள் கூட்டத்தின் கவனம் அவரைச் சூழ்ந்திருந்ததைப் பார்த்து அவர்கள் மிகவும் கோபம் கொண்டார்கள். ஏனெனில் அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று அவர்கள் அறிவித்திருந்தபோதிலும் அவர் தடையின்றி நடமாடிக்கொண்டிருந்தார். அந்தச் செய்தி பொதுவான அறிவாகக் காணப்பட்டது.

எருசலேமின் குடிகள் இந்தக் காரியத்தில் ஆலோசனைச் சங்கம் பெலவீனமாக நடந்துகொண்டதால் ஏளனம் செய்தார்கள். மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை யூத ஆளுனர்களிடமிருந்து ரோமர்கள் நீக்கியிருந்தார்கள். “கைது செய்யப்பட வேண்டிய நபர் நகரத்தில் தடையின்றிச் சுற்றித் திரிகிறார், பயமின்றி தேவாலயப் பிரகாரங்களில் பிரசங்கிக்கிறார். அவரைத் தடைசெய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு வல்லமையில்லை. ஆசாரியர்களும் அவருடன் வாதிட்டு அவரை மேற்கொள்ள முடியவில்லை” என்று இகழ்ந்து பேசினார்கள்.

வேறு சிலர், “உங்களுக்கு விஷயம் புரியவில்லை. ஆட்சியாளர்களில் சிலரும் அவரை விசுவாசிக்கிறார்கள்” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவை கைதுசெய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அவர்கள் சொன்ன காரணம் இதுதான். பொதுக்கருத்து பல்வேறு குழுவுக்குக் குழு மாறுபட்டதாயிருந்தது.

மூன்றாவது கருத்து: மேசியா வருவதாயிருந்தால் அவர் மகிமையான உருவத்தில் வருவார், ஒரு சாதாரண மனிதனாக வரமாட்டார். ஆனால் இந்த வாலிபன் ஒரு மலைக் கிராமத்திலிருந்து வரும் தச்சனாக இருக்கிறார். உண்மையான மேசியா நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருவார். மக்கள் நடுவில் நடமாடிக்கொண்டிருக்க மாட்டார்.

யோவான் 7:28-30
28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். 29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். 30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

இயேசு தான் இவ்வுலகில் எங்கிருந்து வந்தார் என்ற அவர்களுடைய வாதங்களை கேட்டார். அவர்களைப் பார்த்து, “நான் யார் என்று உங்களுக்கு உண்மையில் தெரியுமா? நான் எங்கிருந்து வருகிறேன் என்று அறிவீர்களா? உங்களுடைய நியாயத்தீர்ப்புகள் மேலோட்டமானவைகள். நான் யார் என்பது அடிப்படையில் உங்களுக்குத் தெரியாது. எனக்குச் செவிகொடுங்கள் என் ஆவிக்குள் ஆழமாகச் சென்று ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது நான் யார் என்றும் எங்கிருந்து வருகிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்.

இயேசு தன்னைத்தான் அனுப்பவில்லை, அவர் இறைவனிடமிருந்து புறப்பட்டு வந்தார்; அவருடைய பிதாதான் அவரை அனுப்பியவர். மேலும் அவர், “நீங்கள் பிதா இந்த ஆலயத்தில் இருக்கிறார் என்று கருதினாலும் உங்களில் யாருக்கும் பிதாவைத் தெரியாது. உங்கள் ஆசாரியர்கள் இறைவனைக் காண முடியாத குருடர்களாகவும் உண்மையில் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியாத செவிடராகவும் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் உங்களையே வஞ்சித்துக்கொள்கிறீர்கள்.”

நான் அவரை அறிவேன்” என்று பிறகு அவர் சொன்னார். இயேசு இறைவனை அறிந்திருக்கிறார், அவர் பிதாவினுடைய நாமத்தையும் அன்பையும் நமக்கு அறிவிக்கிறார் என்பதே நற்செய்தியின் சாரமாகும். நசரேயனாகிய இயேசு பாவமற்றவரும் பிதாவுடன் தொடர்ச்சியான ஐக்கியத்தில் வாழ்ந்தவராகவும் காணப்பட்டார். ஆனால் மற்ற அனைவரும் தங்கள் பாவத்தினிமித்தமாக தங்களை இறைவனிடமிருந்து பிரித்துக்கொள்கிறார்கள்.

இயேசு தங்களை நியாயம் தீர்க்கிறார் என்று அவருடைய வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட சிலர், “அவர் தேவாலயத்திற்கு எதிராக தூஷணம் பேசி நம்மை அவிசுவாசிகள் என்று கூறுகிறார்” என்று கதறினார்கள். அவர்கள் கடுங்கோபமடைந்து இரைச்சலிட்டுக் கொண்டு அவரைப் பிடிக்கப் பாய்ந்தார்கள். ஆனால் தேவதூதர்கள் அவரைக் காத்துக்கொண்டிருந்த காரணத்தினால் யாருக்கும் அவரை நெருங்க முடியவில்லை. இவ்வுலகத்தில் அவருடைய இறுதி சாட்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை. கிறிஸ்து மனுக்குலத்தை மீட்கும் சரியான நேரத்தை பிதா ஏற்கனவே முன்குறித்திருந்தார். அதை எந்த மனிதனும் மாற்ற முடியாது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் இறைவனை அறிந்தவராக, பிதாவை எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக நாங்கள் உம்மைத் தொழுதுகொள்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியோடு உமக்குச் சேவைசெய்து உம்மை நேசிக்கிறோம். உம்முடைய வெளிப்பாடு எங்களை இறைவனுடைய பிள்ளைகளாக்கியது. நாங்கள் உம்மில் களிகூர்ந்து மறுபடியும் பிறந்த அனைவருடனும் சேர்ந்து உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறோம்?

கேள்வி:

  1. இறைவனை அறிந்த ஒரே நபர் இயேசு மட்டுமே. ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 07:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)