Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 049 (Paul’s Anxiety for his Lost People)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)

1. தன்னுடைய மக்கள் மீது பவுலின் வாஞ்சை (ரோமர் 9:1-3)


ரோமர் 9:1-3
1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; 2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. 3 மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.

தன்னுடைய மக்களாகிய யூதர்களின் இருதயக் கடினத்தை பவுல் வேறுபட்ட வார்த்தைகளில் விளக்குகிறான். “ நான் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்” என்று அவன் ஆரம்பிக்கிறான். அவன் ஒரு தத்துவத்தை அல்லது தனிப்பட்ட கருத்துகளை கொடுக்கவில்லை. கசப்பான அனுபவம் மற்றும் பாடுகள் வழியாக கடந்து சென்று கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்ததின் மூலம் அவன் பேசுகிறான். இது அவனுடைய சொந்த வார்த்தை அல்ல. தனது சொந்த நம்பிக்கைகளை அவன் நம்மிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. இயேசு அவன் மூலமாக பேசுகிறார். ஆண்டவர் ஆவிக்குரிய தலைவராக இருக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் அவருடைய ஆவிக்குரிய சரீரமாகவும், அவருடைய அசையும் அங்கத்தினர்களாகவும் இருக்கிறார்கள்.

பவுல் இந்த நிரூபத்தின் வாசகர்களுக்கு தனது அறிக்கை உண்மையானது என்று “பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது” என்ற வார்த்தைகள் மூலம் உறுதிப்படுத்துகிறான். எனது கிறிஸ்து இரட்சகர். அவருக்குள் சத்திய ஆவியானவர் கிரியை செய்கிறார். இந்த ஆவியானவர் பொய்சொல்ல, திரித்துப்பேச அல்லது கற்பனையைப் பேச அனுமதிப்பதில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை சத்தியத்திற்கு சாட்சியாய் இருக்கும்படி வழிநடத்துகிறார். அவர்களது வார்த்தைகள் உண்மையுள்ளவைகள்.

அப்போஸ்தலனுடைய மனச்சாட்சி அவனுடைய ஆவிக்குரிய அளவுகோலாயிருந்தது. அவன் தனது உணர்வுகளால் தனித்து வழிநடத்தப்படவில்லை. அவனுடைய இருதயம் புதுப்பிக்கப்பட்டடிருந்தது. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இறை ஆவியானவர் அவனுடைய மனச்சாட்சியில் சமாதானத்தையும், தெளிவான வார்த்தைகளையும் கொடுத்தார். ஆகவே அவனுடைய சாட்சி எல்லாவிதத்திலும் உண்மையாய் இருந்தது.

பவுல் இந்த நீண்ட எண்ணத்திற்குப் பின் என்ன சாட்சியிட்டான்?

அவனுடைய கீழ்படியாத மக்களுக்காக மிகுந்த துக்கப்படுகிறேன் என்று சாட்சியிட்டான். அவனுடைய நேசமிகு உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்காக மிகுந்த வேதனை அடைந்தான். அவனைவிட்டு அந்த வேதனை நீங்கவில்லை.

அவனுடைய நாட்டு மக்கள் தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டேயிருந்ததால், மிகுந்த துக்கம் அவனுடைய இருதயத்தில் காணப்பட்டது. அவனுடைய மக்களில் அநேகர் ஆவிக்குரிய குருடர்களாக இருந்ததினால், அவனது இருதயம் வேதனைப்பட்டது. அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஆவிக்குரிய உண்மைகளை உணர முடியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்கள் இரட்சிக்கப்பட அப்போஸ்தலன் விரும்பினான். ஆனால் அவர்கள் தங்களை நீதியுள்ளவர்கள் என்று எண்ணி, இரட்சிக்கப்பட விரும்பவில்லை. பவுல் சொல்லுகின்ற இரட்சிப்பு அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

தன்னுடைய மக்களுக்காக அவன் தண்டனையை ஏற்கவும், அவர்கள் இரட்சிக்கப்பட அவர்களுக்குப் பதிலாக அவன் புறம்பாக்கப்பட விரும்பும் அளவிற்கு அவனது துக்கம் பெரியதாய் இருந்தது. அவனது மக்கள் மீதான அவனுடைய அன்பு வலிமையானது. அவனுடைய இரட்சகர் இயேசுவினால் புறம்பாக்கப்பட விரும்புகிறேன் என்று கூறினான்.

பவுல் அந்த மக்களை தன்னுடைய குடும்பமாக, கோத்திரமாகப் பார்த்தான். அவர்களை தன்னுடைய இனத்தாராக, உறவினர்களாகக் கருதினான். அவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்கள். இறைவனின் கோபாக்கினையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட, அவன் எதையும் செய்யவும், எல்லாவற்றையும் கொடுக்கவும் ஆயத்தமாய் இருந்தான்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் எருசலேமைப் பார்த்து கண்ணீர்விட்டீர். (லூக்கா 19:41) உமது மக்களின் கீழ்ப்படியாமை மற்றும் இருதயக்கடினத்தினால் நீர் பாடுபட்டீர். ஆனாலும் சிலுவையிலே நீர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே“ என்று (லூக்கா 23:34) விண்ணப்பம் ஏறெடுத்த போது, அவர்களுடைய பாவங்களை மன்னித்தீர். எங்கள் மக்களை நேசிக்க எங்களுக்கு உதவும். அவர்களது அதிகரிக்கும் அவிசுவாசத்திற்கு நாங்கள் பாடுபடவும், அவர்களுக்கு விண்ணப்பம் செய்யவும் எங்களுக்கு உதவும். அவர்கள் யாக்கோபின் புத்திரரைப் போல, உண்மையாய் மனந்திரும்ப, உம்மை அறிய, உம்மை ஏற்றுக்கொள்ள கிருபை செய்யும். ஆமென்.

கேள்விகள்:

  1. பவுலின் மிகுந்த துக்கத்திற்கு என்ன காரணம்?
  2. பவுல், தன்னுடைய மக்களின் இரட்சிப்பிற்காக எதை தியாகம் பண்ண ஆயத்தமாய் இருந்தான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 04:12 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)