Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 048 (The Truth of Christ Guarantees our Fellowship with God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
உ - நம்முடைய விசுவாசம் என்றென்றும் தொடருகிறது (ரோமர் 8:28-39)

2. கிறிஸ்துவினுடைய சத்தியம் துன்பங்களின் நடுவிலும் இறைவனுடன் நமக்கிருக்கும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகிறது (ரோமர் 8:31-39)


ரோமர் 8:38-39
38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறைவனுடைய அன்பை விட்டு இந்த உலகத்தின் காரியங்களோ அல்லது மறு உலகத்தின் ஆவிகளோ எதும் தன்னைப் பிரிக்காது என்று பவுல் நிச்சயித்திருந்தார். இந்த உன்னதமான கூற்றை முன்வைத்து, அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதப்பட்ட தன்னுடைய கடிதத்தின் கொள்கைப் பகுதியை முடிவுக்குக் கொண்டுவருகிறார். பவுலுடைய இந்த எழுத்துக்கள் அவரது சொந்தக் கற்பனையோ சிந்தனையோ அல்ல, அவர் தன்னுடைய இருதயத்தில் இருக்கும் பரிசுத்த ஆவியினுடைய சாட்சியின்படி, தாம் அனுபவித்த மாபெரும் உபத்திரவங்கள் மற்றும் துன்பங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசுகிறார். “இறைவனுக்குச் சித்தமாயிருந்தால் அவர் என்னோடு இருப்பார்” என்று பவுல் இங்கு கூறவில்லை. கிறிஸ்துவுக்குள்ளான இறைவனுடைய அன்பு ஒருபோதும் மாறுவதில்லை என்பதையே அவர் அறிக்கை செய்கிறார். இறைவனுடைய உண்மை சந்தேகத்திற்கு இடமற்றது.

பவுல் இந்த இடத்தில் மனிதர்களுடைய அன்பைப் பற்றியோ, பொதுவான இறைவனுடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றியோ பேசவில்லை. மாறாக அவர் குமாரன் மூலமாக அவர் பிதாவைக் காண்கிறார். கிறிஸ்துவின் மூலமாக அன்றி இறைவனிடம் செல்வதற்கு வேறு எந்த வழியையும் அவர் காணவில்லை. இறைவனுடைய மகன் மனுவுருவானதிலிருந்து, நம்முடைய உன்னத இறைவனாகிய பிதா யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தகப்பனுக்குரிய இறைவனுடைய அன்பு வெறும் மனித இரக்கம் அல்ல. தூய்மையற்ற நமக்காக பரிசுத்தமுள்ள இறைவன் தம்முடைய குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்தார். நாம் இறைவனுடைய இரக்கத்தைக் குறித்து சந்தேகம் கொள்ளாமல், இறைவனுடைய குமாரனுடைய இரத்தத்தினால் உறுதிசெய்யப்பட்ட உடன்படிக்கைக்குள்ளும் புத்திர பாக்கியத்திற்குள்ளும் அவர் நம்மை அழைக்கிறார் என்பதை உறுதிசெய்துகொள்ளும்படி அப்படிச் செய்தார். சிலுவையின் காரணமாக இறைவனுடைய அன்பு ஒருபோதும் மாறாதது என்பதை பவுல் உறுதியாக அறிந்திருந்தார்.

ஆயினும் சாத்தான் என்று ஒருவன் இருக்கிறான் என்பது உண்மையே. யார் அவனுடைய இருப்பை மறுதலிக்கிறார்களோ அவர்கள் இந்த அண்டததின் உண்மை நிலையை அறியாதிருக்கிறார்கள். இவ்வுலகத்தையும் இனிவரும் உலகத்தையும் அழிப்பதற்கு சில சக்திகள் ஆயத்தமாயிருப்பதைப் பவுல் காண்கிறார். பலமுறை அவர் மரணத்தின் ஆவியைச் சந்தித்ததும் அல்லாமல், அவர் இருளின் ஆவியோடு போராடியிருக்கிறார். நரகத்தின் தீமைகளுக்கு எதிரான தம்முடைய விண்ணப்பத்தின் போராட்டத்தில் இவ்விதமாகப் பவுல் கூறுகிறார்: “பரலோகமும் நரகமும் என்னை எதிர்த்துத் தாக்கினாலும் கிறிஸ்துவிலுள்ள இறைவனுடைய அன்பு என்னைக் கைவிடாது. கிறிஸ்துவினுடைய நித்திய இரத்தம் என்னைப் பரிசுத்தப்படுத்தியிருப்பதால் என்னை எதிர்த்து வரும் சக்திகள் எதுவும் என்னை மேற்கொள்ள முடியாது”.

பவுலுக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தது. கொலைகாரனும், பொய்யனும், அழிம்பனுமாகிய பிசாசு திருச்சபையை எவ்விதமாகத் தாக்கியது என்றும் அது எவ்வாறு திருச்சபையை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றும் அவர் கண்டிருக்கிறார். திருச்சபை கிறிஸ்துவினுடைய கரத்தில் இருக்கிற காரணத்தினால் பிசாசு அதைப் பறித்துக்கொள்ள முடியாது.

அப்போஸ்தலர்களுடைய விசுவாசத்தை முறைப்பாடுகள் மூலமாக பரிசுத்த நியாயப்பிரமாணம்கூட அசைக்க முடியாது. ஏனெனில் கிறிஸ்து சிலுவையில் அவர்களுக்காக மரணமடைந்து, அவர்களுக்குள் வாழ்ந்து, நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறார். கிறிஸ்து இன்னும் உண்மையுள்ள வெற்றியாளராக இருக்கிற காரணத்தினால் நியாயத்தீர்ப்பு நாளில் விசுவாசிகள் காத்துக்கொள்ளப்படுவார்கள்.

ஆகவே, அன்பான சகோதரனே, நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்: “உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடலை இறைவனுடைய அன்பிற்கு ஒப்புக்கொடுங்கள். உங்களுடைய பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படும்படி திரித்துவ இறைவனை நீங்கள் பற்றிக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் இறைவனுடைய குடும்பத்தில் பிள்ளையாகத் தொடர்ந்து இருப்பீர்கள்”.

இங்கே பவுல் இறைவனைத் துதித்துப் பாடும்போது “நான்” என்று ஒருமையில் குறிப்பிட்டுப் பாடவில்லை என்பதைக் கவனியுங்கள். தம்மை ரோமாபுரித் திருச்சபையோடும் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள திருச்சபைகள் அனைத்தோடும் தன்னை இணைத்து “நாம்” என்று குறிப்பிட்டு, அந்த நிச்சயம் அனைவருக்கும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். இதற்கு முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்ட சத்தியங்களை நாமும் ஏற்றுக்கொண்டால் நமக்கும் இந்த நிச்சயம் இருக்கிறது. ஆகவே இவ்வுலகத்தில் வல்லமையும் பெருமையும் உள்ளதாகத் தோன்றும் காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டாம். கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறைவனுடைய அன்பை மட்டுமே உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

“நம்முடைய கர்த்தர்” என்ற சொற்றொடர் இந்தப் பாடலின் இறுதியில் இடம்பெறுகிறது. இந்த வார்த்தைகள் கொல்கொதாவில் வெற்றி பெற்ற கர்த்தாதி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையே நமக்கு உத்தரவாதமளிக்கிறது என்பதையும் காண்பிக்கிறது. அவர் தம்முடைய அன்பின் கரங்களை நம்மை நோக்கி நீட்டுகிறார். அவர் நம்மை நேசிப்பதால் அவர் நம்மைவிட்டு விலகுவதில்லை.

விண்ணப்பம்: ஓ இயேசுவே, உமக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நீர் என்னை இரட்சித்த காரணத்தினால் நான் உம்முடையவனானேன். உம்முடைய வல்லமையின் செய்தியைச் சொல்லும் வாழ்க்கையாக எனது வாழ்க்கை அமையும்படி நீர் உம்முடைய அன்பினால் என்னை நிரப்பியருளும். அப்போது நான் என்னுடைய விசுவாசத்தின் உறுதியினால் உம்மைத் துதிப்பேன். நீர் உண்மையுள்ளவராயிருக்கிற காரணத்தினால் எதுவும் என்னை உம்மைவிட்டுப் பிரிக்காது என்று நான் நம்புகிறேன். நீர் உம்முடைய பிதாவின் வலது பக்கத்தில் இருக்கும்போது, பிதா உம்மிலும் நீர் அவரிலும் இருப்பதைப் போல, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து எதுவும் என்னைப் பிரிக்காதபடி, குமாரனுடைய நீதியில் என்னை நிலைநிறுத்தும். ஆமென்.

கேள்வி:

  1. பவுல் ஏன் தன்னுடைய கடைசி வாக்கியத்தை “நான்” என்று ஆரம்பித்து, “நாம் என்று ஏன் முடிக்கிறார்?

கேள்விகள் - 2

அன்பார்ந்த வாசகருக்கு,
நீங்கள் ரோமருக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு நாங்கள் எழுதியிருக்கும் இந்த விளக்கங்களை வாசித்ததால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும். உங்கள் பதில்கள் 90 சதவீதம் சரியாக இருந்தால் இந்த வேதவிளக்க வரிசையின் அடுத்த நூலை உங்கள் நன்மைக்காக இலவசமாக அனுப்பித் தருவோம். உங்கள் விடைத்தாளில் உங்கள் பெயரையும் முகவரியையும் முழுமையாகக் குறிப்பிடத் தவற வேண்டாம்.

  1. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலில் இருக்கும் முதன்மையான கருத்துக்கள் யாவை?
  2. “இறைவனுடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாக” என்ற சொற்றொடரின் பொருள் யாது?
  3. நம்முடைய செயல்களினால் நாம் நீதிமானாக்கப்படுவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமானாக்கப்படுகிறோம். ஏன்?
  4. ஆபிரகாமும் தாவீதும் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டார்கள்?
  5. மனிதர்கள் ஏன் விருத்தசேதனத்தினால் அல்ல, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுகிறார்கள்?
  6. நியாயப்பிரமாணத்தை நாம் கைக்கொள்வதன் மூலமாக அல்ல, இறைவனுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பதன் மூலமாக மட்டுமே நாம் இறைவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம். ஏன்?
  7. ஆபிரகாமுடைய விசுவாசப் போராட்டத்தில் இருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?
  8. இறைவனுடைய சமாதானம் நம்முடைய வாழ்வில் எப்படிக் கொண்டுவரப்படுகிறது?
  9. இறைவனுடைய அன்பு எப்படி வெளிப்பட்டது?
  10. ஆதாமையும் கிறிஸ்துவையும் ஒப்பிடுவதன் மூலமாக பவுல் நமக்கு எதைக் காண்பிக்க விரும்புகிறார்?
  11. திருமுழுக்கின் பொருள் யாது?
  12. எவ்வாறு நாம் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கடைந்தோம்?
  13. நம்மையும் நம்முடைய உடலின் அங்கங்களையும் இறைவனுடைய நீதியின் ஆயுதங்களாக எப்படி மாற்றுவது?
  14. பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமையாக இருப்பதற்கும் கிறிஸ்துவின் அன்புக்கு அடிமையாக இருப்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
  15. பழைய உடன்படிக்கையின் கோரிக்கைகளில் இருந்து எவ்வாறு அனைத்து விசுவாசிகளும் விடுவிக்கப்படுகிறார்கள்?
  16. நன்மையான நியாயப்பிரமாணம் எப்படி தீமைக்கும் மரணத்திற்கும் காரணமாக இருக்கிறது?
  17. பவுல் தன்னைக் குறித்து செய்யும் அறிக்கை யாது? அது நமக்கு என்ன பொருளைக் கொடுக்கிறது?
  18. 8-ம் அத்தியாயத்தின் முதல் வாக்கியத்தின் பொருள் என்ன?
  19. இந்தப் பகுதியில் அப்போஸ்தலன் ஒப்பிடும் இரண்டு பிரமாணங்கள் யாவை? அவற்றின் பொருள் என்ன?
  20. ஆவிக்குரிய மனிதனுடைய ஆர்வங்கள் என்ன? மாம்சத்திற்குரியவர்கள் எதைச் சுதந்தரிப்பார்கள்?
  21. கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் எதைக் கொடுக்கிறார்?
  22. பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்பிக்கும் இறைவனுடைய புதிய பெயர் என்ன? அதன் பொருள் என்ன?
  23. கிறிஸ்துவின் வருகைக்காக துன்பப்படுகிறவர்கள் யார்? ஏன்?
  24. இறைவனிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஏன் அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறுகின்றன?
  25. கிறிஸ்தவர்கள் எப்படி பிரச்சனைகளை மேற்கொள்கிறார்கள்?
  26. பவுல் ஏன் தன்னுடைய கடைசி வாக்கியத்தை “நான்” என்று ஆரம்பித்து, “நாம் என்று ஏன் முடிக்கிறார்?

நீங்கள் ரோமருக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கான கேள்விகள் அனைத்துக்கும் பதில் எழுதி இந்த சிறுநூல் வரிசையை முடிப்பீர்களானால் ரோமருக்கு எழுதப்பட்ட கடிதத்தைப் படித்ததற்கான மேற்படிப்புச் சான்றிதழை நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவுக்குப் பணியாற்றும்படி உங்களை உற்சாகப்படுத்த நாங்கள் உங்களுக்கு அனுப்பித் தருவோம்.

நித்திய பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்ளும்படி ரோமருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் பரீட்சையை நீங்கள் எழுதும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். நாங்கள் உங்களுக்காக விண்ணபித்துக்கொண்டு உங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கிறோம். எங்களுடைய விலாசம்:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:35 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)