Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 050 (The Spiritual Privileges of the Chosen)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)

2. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் ஆவிக்குரிய சிலாக்கியங்கள் (ரோமர் 9:4,5)


ரோமர் 9:4-5
4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; 5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

பவுல், தன்னுடைய மக்களின் ஆவிக்குரிய சிலாக்கியங்கள் மற்றும் உரிமைகள் குறித்து ரோமில் உள்ள சபைக்கு நினைவுபடுத்த விரும்பினான். அதே சமயத்தில் அந்த சிலாக்கியங்கள் அவர்களுக்கு உதவவில்லை என்பதை தெளிவுபடுத்தினான். அவர்கள் உண்மையான மேசியாவை அறியவில்லை, அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவரை வெறுத்தார்கள், மறுதலித்தார்கள், சிலுவையில் அறையும் அளவிற்கு அவரைப் பகைத்தார்கள். அவர்களுடைய இருதயங்களை, பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக கடினப்படுத்தினார்கள். இருளானது கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்வது போல, அவனுடைய மக்களின் இருதயங்கள் கடினப்பட்டது.

பவுலுடைய தேசத்து மக்கள் பெற்றிருந்த ஆசீர்வாதங்கள் எந்தவிதத்தில் அவர்களை மற்ற மக்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பித்தன?

அவர்களது உண்மையான பெயர் எத்தன் என்ற பொருளுடைய யாக்கோபின் புத்திரர் என்பதாகும். இஸ்ரவேலின் புத்திரர் என்பது அல்ல. அவர்களது முற்பிதா ஆண்டவரை போகும்படி விடாமல், அவனை ஆசீர்வதிக்கும்படி தொடர்ந்து வேண்டிக்கொண்டதைப் பார்க்கிறோம். யாக்கோபின் உறுதியான விசுவாசத்தைப் பார்த்து ஆண்டவர் இஸ்ரவேல் என்று அவனுக்கு மறுபெயரிட்டார். “அவன் இறைவனோடு போராடி மேற்கொண்டான். அவனது விசுவாசத்தினால் போரடினான்”. யாக்கோபு சரீரப்பிரகாரமாக பலமுள்ளவன் அல்ல, அவன் நற்செயல்கள் செய்தவனும் அல்ல. ஆனால் அவனுக்குள் உறுதியான விசுவாசம் இருந்தது. அது இறைவனுடைய கோபம் மற்றும் நியாயத்தீர்ப்பில் இருந்து அவனைப் பாதுகாத்தது (ஆதியாகமம் 32:22-32).

இயேசுவின் மூதாதையர்களில் யாக்கோபும் ஒருவன். இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற இறைவனுடைய ஆட்டுக்குட்டியானவர். நம்முடைய பாவங்கள் நிமித்தம் நமக்கு வரவேண்டிய நியாயத்தீர்ப்பில் இருந்து நம்மை விடுவிக்க அவர் இறைவனுடன் போராடினார். அவர் விசுவாசத்துடன் இறைவனை உறுதியாகப் பற்றிக் கொண்டார். இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் வரை, அவரை போகவிடவில்லை. மரியாளின் மகன் நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை விடுவித்தவர், நம்முடைய இரட்சகர். ஆகவே இறைவனுடன் போராடியது யாக்கோபு அல்ல, இயேசுவே ஆவார். இறைவனின் கோபத்தில் இருந்து நம்மை மீட்கின்ற ஒரே மெய்யான இஸ்ரவேல் அவரே.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்காகப் பாடுப்பட்ட இந்த மத்தியஸ்தரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவருடைய ஆசீர்வாதங்களில் பங்கில்லை, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஆவிக்குரிய மக்களையும் அவர்கள் சேரமாட்டார்கள். பவுல் இதை தெளிவாக அறிந்திருந்ததால், அவனுடைய இருதயம் கவலையினால் நிறைந்திருந்தது. ஏனெனில் அவனுடைய மக்களில் பெரும்பான்மையானோர் அவர்களுடைய வாக்குத்தத்த உரிமைகளை அறியாதிருந்தார்கள். தங்களுடைய ஆவிக்குரிய குருட்டாட்டத்தினாலும், அதீத பெருமையினாலும் அவைகளை புறக்கணித்தார்கள்.

எகிப்திய மன்னனிடம் மோசே இவ்விதமாக கூறும்படி ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட்டார். யாக்கோபின் பிள்ளைகள் அனைவரும் அவருக்கு முதற்பேறானவர்கள். (யாத்திராகமம் 4:22; உபாகமம் 14:1; 32:6; ஓசியா 11:1-3) ஆண்டவருடைய பிள்ளைகள் அவரை கனப்படுத்ததினால், அவர்களது இருதயக்கடினத்தினிமித்தம் அவர் வேதனைப்பட்டார். அவர்களுக்கு புத்திரசுவீகார உரிமையைக் கொடுத்தார். அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல. ஆனாலும் ஆண்டவருடைய முதற்பேறானவர்கள் என்ற உரிமையைப் பெற்றிருந்தார்கள்.

ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் வனாந்திரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது, அவருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்தஸ்தலத்தில் காணப்பட்டது. ஆண்டவர் அவர்களை பாதுகாத்தார். ஆபத்துகள் வழியே அவர்கள் நடக்கும் போது, அநேக அற்புதங்களை நிகழ்த்தினார். (யாத் 40:34; உபா 4:7; 2ராஜா 2:11, ஏசாயா 6:1-7; எசேக் 1:4-28; எபிரெயர் 9:5). இருப்பினும் ஆண்டவர் அவர்களை தண்டித்தார். அவர்களுடைய அவிசுவாசத்தினால் மரணத்தைக் கொண்டு வந்தார். ஆனாலும் மோசே, ஆரோனின் விண்ணப்பங்களைக் கேட்டு அவர்களை பாதுகாத்தார். (எண் 14:1-25).

இறைவனின் சிறப்பைக் கூறுகின்ற மற்ற உடன்படிக்கைகளையும் பவுல் யூதர்களுக்கு நினைவுபடுத்தினான். இந்த சிறிய மக்கள் இனத்துடன் எப்போதும் ஆண்டவர், சிருஷ்டிகர், நீதியுள்ள நியாயாதிபதி செயல்பட்டுக் கொண்டேயிருந்தார். பரிசுத்த வேதாகமம் பின்வரும் உடன்படிக்கைகளைப் பற்றிப் பேசுகிறது.

நோவாவுடன் இறைவனின் உடன்படிக்கை (ஆதியாகமம் 6:18; 9:9-14).
ஆபிரகாமுடன் இறைவனின் உடன்படிக்கை (ஆதியாகம் 15:18; 17:4-14).
ஈசாக்கு, யாக்கோபுடன் இறைவனின் உடன்படிக்கை (ஆதியாகம் 26:3; 28:13-19; யாத் 2:24).
மோசேயுடன் இறைவனின் உடன்படிக்கை (யாத் 2:24; 6:4; 24:7-8; 34:10, 28).

பரிசுத்த வேதாகமம் மீண்டும் சாட்சியிடுகிற காரியம் என்னவென்றால், பழைய உடன்படிக்கையின் மக்கள் அந்த வாக்குத்தத்தங்களை விட்டுவிட்டார்கள். எனவே எரேமியா தீர்க்கதரிசி இவ்விதமாகக் கூறினான். ஆண்டவர் அவர்களுடன் ஒரு புது உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். அவருடைய கீழ்ப்படியாத மக்களின் ஆவிக்குரிய பிறப்பையும் அவர் வலியுறுத்தினார் (எரேமியா 31:31-34).

மோசே தீர்க்கதரிசி மூலமாக ஆண்டவர் அவர்களுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அஸ்திபாரம் நியாயப்பிரமாணம் ஆகும். மெய்மோனியர்களின் (மோசஸ் பென் மெய்மோன் என்பவர் ஸ்பெயினில் பிறந்த யூத தத்துவஞானி) கூற்றுப்படி உடன்படிக்கையின் புத்தகம் என்பது மொத்தமுள்ள 613 கட்டளைகளின் தொடக்கமாக இருக்கின்ற பத்துக்கட்டளைகளையும், 365 எதிர்மறைக் கட்டளைகளையும், 248 நேர்மறைக் கட்டளைகளையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த கட்டளைகளின் ஆரம்பத்தில் நாம் ஒரு நேரடி வாக்கியத்தை வாசிக்கிறோம். “நான் உங்கள் இறைவனாகிய கர்த்தர். என்னையன்றி வேறு தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம்” (யாத்திராகமம் 20:1-3).

இந்த கட்டளைகளின் நோக்கத்தை கண்டுபிடிக்கிறவர்கள் இதைக் காண்கிறார்கள். “உங்கள் இறைவனாகிய கர்த்தர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்”. (லேவியராகமம் 19:2 இந்தக் கட்டளைகளின் தொகுப்பு இது தான். “உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக”. (உபாகமம் 6:5) “உன்னை நீ நேசிப்பது போல, உன் அயலானை நேசிப்பாயாக” (லேவியராகமம் 19:18).

இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் இந்தக் கட்டளைகளை முழுமையாக கைக்கொள்ளவில்லை என்பதை நாம் காண்கிறோம் (சங்கீதம் 14:3; ரோமர் 3:10-12).

ஒரு பாவி இறைவனை தூய்மையுடன் ஆராதிக்கவும், அவரை நெருங்கி வரவும், பல்வேறு இரத்த பலிகளை செலுத்த வேண்டியதாக இருந்தது. ஆசாரிப்புக் கூடாரத்தில் ஆராதனை, பின்பு தேவாலயத்தில் ஆராதனை இவைகளில் நாம் இதைக் காண்கிறோம். சங்கீதங்களை பாடுதல், கீதங்கள் மற்றும் வேண்டுதல்கள், பாவ அறிக்கை, சமய சடங்குகளை நிறைவேற்றுதல் மற்றும் ஆராதனை மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. சங்கீதங்களின் புத்தகத்தை ஆழமாய் தியானிக்கிறவன் இந்த வாக்கியங்களையும், ஆவியின் நடத்துதலையும் காணமுடியும். பலிசெலுத்துதல் மட்டுமின்றி, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆராதனையின் அனைத்து செயல்களிலும் முக்கியமானதாக இருந்தது.

பண்டிகைகளின் நேரத்தில் இந்த ஆராதனை செயல்கள் உச்சகட்டத்தை அடையும். குறிப்பாக பஸ்கா, பெந்தெகொஸ்தே (அறுவடையின்) திருநாள், கூடாரப்பண்டிகை மற்றும் யோம்கிப்பூர் (பாவ நிவாரண நாள்) என்ற பண்டிகைகள் ஆகும்.

எருசலேம் தேவாலயத்தில் தங்கியிருந்த இறைவனை நெருங்கிச் சேர்தலே தேசஒற்றுமையை பெலப்படுத்தியது. ஆனால் இந்த ஆவிக்குரிய மைத்திற்குப் பதிலாக அநேக கிராமங்களில் பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டினார்கள். மற்ற தெய்வங்களுக்கு பலிகளையிட்டார்கள். அந்த விக்கிரகங்களும், பலிபீடங்களும் அவர்களுக்கு எதிராக இறைவன் கோபம் அடையும்படி செய்தது.

பழைய ஏற்பாடு முழுவதும் அநேக முக்கியமான வாக்குத்தத்தங்களால் நிறைந்ததுள்ளது. அவைகளில் நாம் மூன்று நோக்கங்களைக் காணலாம்:

அ) அவர்களுடைய இறைவனின் பிரசன்னம், மன்னிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆறுதல் (யாத் 34:9-11).
ஆ) சமாதானப் பிரபு மற்றும் தாழ்மையுள்ள இறைவனின் ஆட்டுக்குட்டியாகிய வரப்போகும் கிறிஸ்துவைக் குறித்த வாக்குத்தத்தங்கள். (உபாகமம் 18:15; 2 சாமுவேல் 7:12-14, ஏசாயா 9:5,6; 49:6; 53:4-12).
இ) தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் மீதும், மாம்சமான யாவர் மீதும் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுதல் (எரேமியா 31:31-34; எசேக்கியேல் 36:26-27; யோவேல் 3:1-5).

என்ன பரிதாபம்? யூதர்களில் அநேகர் இறைவனின் ஆட்டுக்குட்டி மற்றும் அவர்களது அரசரின் வருகையை உணராதிருந்தார்கள். அவர்கள் பொழிந்தருளப்பட்ட பரிசுத்த ஆவியைப் புறக்கணித்தார்கள். அவர்கள் வலிமைமிக்க அரசியல் அதிகாரத்தை எதிர்பார்த்தார்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய பாவங்களை உணரவுமில்லை, புதிய ஆவிக்குரிய பிறப்பை எதிர்பார்க்கவுமில்லை. இயேசுவின் நடத்தை மூலமாகவும் அவரை பின்பற்றியோர் மீது ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதாலும் அநேக வாக்குத்தத்தங்கள் நிறைவேறின. அவர்களுக்கான இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறியதை தெரிந்து கொள்ளப்பட்ட மக்களில் அநேகர் உணரவுமில்லை, ஏற்றுக்கொள்ளவுமில்லை.

தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் முற்பிதாக்கள் தத்துவ ஞானிகள் அல்ல. அவர்கள் மேய்ப்பர்கள். மற்றவர்களுக்கான ஆசாரியர்கள் மெய்யான விசுவாசம் உடைய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களை பிரதிபலிப்பவர்கள். உடன்படிக்கையின் இறைவன் ஆபிரகாம் , ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் இறைவன் என்று அழைக்கப்பட்டார் (ஆதி 35:9-12, யாத் 3:6, மத் 22:32).

மோசே, தாவீது, எலியா, அல்லது பழைய ஏற்பாட்டின் எந்தவொரு நபரும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தை நிறுவவில்லை. ஆனால் மனிதர்கள் சீர்கெட்டுப் போயிருந்த நிலையில், ஆண்டவருடைய சத்தியம் மற்றும் வல்லமையை தொடர்ந்து அனுபவித்தார்கள். அவர்கள் தங்களுடைய விசுவாசத்தின் உறுதியில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய மக்களுக்கு நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடைய சந்ததிக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருந்தார்கள்.

ராஜாதி ராஜா, மெய்யான பிரதான ஆசாரியர், மனுவுருவான இறைவனின் வார்த்தையாகிய எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்து அவர்கள் மத்தியில் வந்தது இஸ்ரவேல் மக்களின் மிகப்பெரிய சிலாக்கியம் ஆகும். அவரில் நாம் மனிதர்கள் மத்தியில் வெளிப்பட்ட அதிகாரம், வல்லமை மற்றும் இறைஅன்பைக் காண்கிறோம். அவர் கூறினார், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (யோவான் 10:30). இந்த உண்மையின் அடிப்படையில் அப்போஸ்தலனாகிய பவுல் அவரை “இறைவன்” (God) என்று அழைத்தான் அவன் “ஒரு தெய்வம்” ( a god ) என்று கூறவில்லை. அவர் மெய்யான இறைவன். கிறிஸ்து இறைவன் என்பதை எல்லாத் திருச்சபைகளும் அறிக்கையிட்டன. ஒளியில் இருந்து வந்த ஒளியானவர், மெய்யான இறைவனில் இருந்து வந்த மெய்யான இறைவன். அவர் படைக்கப்படவில்லை. அவர் பிதாவின் சாராம்சத்துடன் இருந்தார்.

பவுல் ரோமாபுரி சபைக்கு எழுதிய நிரூபத்தில் கூறிய அறிக்கையினிமித்தம் யூதர்கள் இடறல் அடைந்தார்கள், கிறிஸ்தவர்களை சபித்தார்கள். ஏனெனில் பெரும்பான்மையான யூதர்கள் இயேசுவை தவறானதலைவர், இறை தூஷணம் செய்தவர், இறைவனுக்கு எதிரானவர் என்று கருதினார்கள். அவர்கள் இயேசுவை ரோமர்களிடம் ஒப்புவித்து, சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் ஏசாயாவின் காலத்திலிருந்து (கி.மு 700) தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். (ஏசாயா 6:9-13; மத்தேயு 13:11-15; யோ 11:40; அப் 28:26-27).

அவர்களுடைய இருதயக் கடினம் எவ்விதம் அதிகரித்தது என்பதை இந்த வசனங்கள் நமக்குக் காண்பிக்கின்றன. அவர்கள் தங்களுடைய பாவங்களில் இருந்து மனந்திரும்பவில்லை. தங்களை நீதியுள்ளவர்கள் என்று எண்ணினார்கள். மற்ற அனைவரும் தள்ளப்பட்டவர்கள் என்றும், அவர்களே மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் கடைபிடிப்பவர்கள் என்றும் கருதினார்கள்.

அவர்கள் கடினப்பட்டிருந்த காலத்தில், யோவான்ஸநானகன் கிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தம்பண்ண வந்தான். மக்கள் மனந்திரும்பி அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். இயேசுவே இறைவனின் ஆட்டுக்குட்டி என்று அவன் அறிவித்தான். புதிய ஆவிக்குரிய ராஜ்யத்தை நிறுவ இயேசு பரிசுத்த ஆவியினால். ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். இவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருந்தான். சட்ட மேதைகள், பக்திமான்கள் அல்லது நிபுணர்களை இயேசு தன்னைப் பின்பற்றும்படி அழைக்கவில்லை. தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டவர்களை அவர் அழைத்தார். அவர்கள் இயேசுவின் சீடர்களாக மாறினார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். தெரிந்து கொள்ளப்பட்டோரில் இருந்த இரகசியம் என்பது அறிவு, ஐசுவரியம், அரசியல் அனுபவம், சிறப்புத்தன்மை என்பவைகள் அல்ல, அது பாவங்களை அறிக்கையிடுதல் மற்றும் ஆவியின் நொறுங்குண்ட நிலை என்பதாகும். தங்கள் பாவங்களை இருதயத்தின் ஆழத்தில் உணர்ந்து அறிக்கையிட்டவர்கள் கிறிஸ்துவிடமிருந்து இரட்சிப்பையும், நித்திய வாழ்வையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

இஸ்ரவேல் மக்கள் அனுபவித்த நியாயப்பிரமாண ஆசீர்வாதங்கள், அவர்கள் மத்தியில் இருந்த இறைபிரசன்னம் பெரும்பான்மையான யூதர்கள் மீது எதிர்விளைவைக் கொண்டு வந்தது. அவர்கள் பெருமைமிக்கவர்களாகவும், மற்ற தேசங்கள் மீது ஆதிக்கம் கொண்டவர்களாகவும் மாறினார்கள். அவர்கள் தங்களுடைய பாவங்களை உணரவில்லை; இறைவனுக்கும், கிறிஸ்துவுக்கும், தூய ஆவியானவருக்கும் எதிராக எல்லா காலங்களிலும் தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார்கள். அவர்கள் உரிமைகளில் செல்வந்தராயும், ஆவியிலோ தரித்திரராயும் இருந்தார்கள்.

பவுல் தனது கடந்த கால வாழ்வில் இவர்களில் ஒருவனைப்போல மதவெறி மற்றும் பெருமையுடன் இருந்தான். கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களை அவன் துன்புறுத்தினான். அவர்களில் சிலர் பின்வாங்கிப்போகும்படியாக நிர்ப்பந்தித்தான். தங்கள் விசுவாசங்களில் உறுதியாக நின்றவர்களைக் கொன்றான். ஆனால் தமஸ்குவுக்கு அருகில் கிறிஸ்துவை அவருடைய மகிமை பொருந்திய ஒளியுடன் கண்ட போது, அவனது கனவுகள், கற்பனைகள், பெருமை சிதைந்து போயின. அவனது தவறு மற்றும் அக்கிரமத்தை அறிக்கையிடும்படி செய்தது. அவன் கிறிஸ்துவின் கிருபையினால் உடைக்கப்பட்டான். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தான். ஆண்டவராகிய இயேசுவின் அப்போஸ்தலனாக மாறினான்.

ஆபிரகாமின் சந்ததியில் தோன்றுதல் அல்லது விருத்தசேதனம் என்பது மனிதனை இரட்சிக்காது என்பதை பவுல் உணர்ந்திருந்தான். கிறிஸ்துவின் பரிகாரபலி மற்றும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் மூலம் மட்டுமே நீதிமானாக்கப்பட முடியும் என்பதை அறிந்திருந்தான். இவ்விதமாய் ஒரு மனிதன் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அங்கமாகிறான். ஆபிரகாமின் புதிய சந்ததிக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம், இறைவனின் ஆவிக்குரிய ராஜ்யம் என்பது இஸ்ரேலின் அரசியல் நிலைக்கு ஒத்த ராஜ்யம் அல்ல என்பதை பவுல் உணர்ந்திருந்தான். இன்று இஸ்ரவேலில் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரம் கொடிய துன்புறுத்தல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பவுல் ஒரு அரசியல் நிலையைக் குறித்துப் பேசவில்லை. நன்நடத்தை, உண்மை மற்றும் தூய்மையின் மூலம் உலகெங்கிலும் வெளிப்படும் கிறிஸ்துவின் ஆவிக்குரிய ராஜ்யத்தைக் குறித்துப் பேசினான்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே. நீர் தெரிந்து கொண்ட மக்கள் மீதான உமது பொறுமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது எச்சரிப்புகள் மற்றும் தண்டனைகள் மத்தியிலும் பழையஏற்பாட்டில் இந்த வணங்காக் கழுத்துள்ள மக்களுடன் நீர் செய்த வாக்குத்தத்தங்களை மகிமைப்படுத்தியதற்காக நன்றி கூறுகிறோம். எங்களையும், எங்கள் மக்களையும் மன்னியும். உமது அன்பிற்கு எங்கள் விசுவாசத்தையும், உண்மையையும் வெளிப்படுத்த தவறியதற்காக மன்னியும். ஆபிரகாமின் சந்ததியாரை அவர்களது மனங்களை புதுப்பிப்பதன் மூலம் இரட்சியும். உயிருள்ள இயேசு கிறிஸ்துவுக்காக அவர்களது இருதயங்களை தூய்மைப்படுத்தும்.

கேள்விகள்:

  1. பழைய உடன்படிக்கையின் மக்களுக்கு இருந்த எத்தனை சிலாக்கியங்களை பவுல் குறிப்பிடுகிறான்? அவைகளில் எது உங்களுக்கு மிக முக்கியமான ஒன்று?
  2. தெரிந்துகொள்ளப்பட்ட மக்களில் அநேகர் ஏன் இறைவனின் கிருபையால் இரட்சிக்கப்பட முடியாமல் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 04:25 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)