Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 039 (Man without Christ always Fails before Sin)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

5. கிறிஸ்தற்ற மனிதன் எப்போதும் பாவத்திற்கு முன்பாகத் தோற்றுப் போகிறான் (ரோமர் 7:14-25)


ரோமர் 7:14-25
14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். 15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. 17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. 19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். 20 அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். 22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். 23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

விடுதலையின் வாழ்வைப் பெறாத ஒரு மனிதன் எப்படி நியாயப்பிரமாணத்தின் தண்டனையைக் குறித்த பயத்தில் வாழ்கிறான் என்பதைப் பவுல் அழகாகச் சித்தரிக்கிறார். தன்னைப் பற்றிய சுய புரிதலின் உச்சகட்டமாகிய இந்த உண்மையைப் பவுல் விளக்கும்போது தத்துவ ஞான கற்பனை வாதத்தின் அடிப்படையிலோ, மனுஷீக கருத்தாக்கங்களின் அடிப்படையிலோ எடுத்துரைக்காமல் உணர்வுபூர்வமான தனிப்பட்ட அறிக்கையின் மூலமாக இயற்கையில் மனிதனுடைய நிலை எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவருடைய மனசாட்சியை மென்மையாக்கியிருந்த காரணத்தினால் இறைவனுடைய சித்தத்தைவிட்டு சற்று தூரம் விலகியிருப்பதுகூட அவருக்கு மரண வேதனை அளிப்பதாக அவர் உணர்ந்தார்.

பவுலுடைய அறிக்கை வருமாறு: “என்னுடைய திறனைப் பார்க்கும்போது நான் மாம்சத்திற்குரியவனாக இருக்கிறேன்.” ஒவ்வொரு மனிதனும் தனக்குக் கொடுக்கப்பட்ட இறைவனுடைய மகிமையை இழந்துவிட்ட காரணத்தினால் மாம்சத்திற்குரியவனாகவே இருக்கிறான். எல்லாரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள். அவர்கள் அனைவருமே கெட்டவர்களாக மாறிவிட்ட காரணத்தினால் நியாயப்பிரமாணத்தின் ஆவி அவர்களுடைய பெருமையுள்ள சுயத்தை அவர்களுடைய மனசாட்சியில் கண்டிக்கிறது. “நான் பரிசுத்தராயிருப்பதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்ற கட்டளையை பரிசுத்தவான்கள் அறிந்திருக்கிற காரணத்தினால் அவர்கள் இறைவனுடைய வார்த்தையின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். “பரலோகத்தில் இருக்கிற பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பூரண சற்குணராயிருங்கள்” என்ற இயேசுவின் போதனையும் அவர்களை உடைத்துப் போடுகிறது. இயற்கையான மனிதன் தன்னுடைய சுய வல்லமையினால் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்ற முடியாதவனாக இருக்கிறான் என்பதால் பவுல் தனக்குள் படுகிற உளவியல் ரீதியான வேதனையை அறிக்கையிடுகிறார். மனிதனுடைய சக்தியின் இயலாமையை அறிக்கையிடுவது எவ்வளவு பயங்கரமானது!

இது இப்படியிருந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நன்மை செய்ய வேண்டும், தூய்மையும், பரிசுத்தமுமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற மாபெரும் ஏக்கம் இருக்கிறது. மனிதர்களில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்குக்கூட இந்த ஏக்கம் இருக்கிறது. ஆகவே, நாம் பாவத்தையும் அதன் வல்லமையையும் பற்றி மட்டும் பேசக்கூடாது. மற்றவர்களைவிட நாம் சிறந்தவர்கள் என்ற பெருமையும் நமக்கு ஆகாது. மேலும் நியாயப்பிரமாணம் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் பேசுகிற காரணத்தினால் தீமையை வெறுக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒவ்வொருவனுடைய உள்ளத்திலும் இருக்கிறது என்ற உண்மையையும் நாம் மறந்துபோகக் கூடாது. நன்மை செய்ய வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றும்படி மனிதன் தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவனுடைய நல்லெண்ணத்திற்கு மாறாக அவன் தோல்வியடைந்து, தீமையைத் தொடர்ந்து செய்வது மிகவும் வருத்தப்பட வேண்டிய காரியமாக இருக்கிறது. அவன் தனக்கே எதிரியாக இருக்கிறான். அவன் தன்னுடைய நல்மனசாட்சியை மறுதலித்து, மனசாட்சியின் சத்தத்தை அமுக்கிவிடுகிறான். பாவம் நம்முடைய மனதைவிட வித்தியாசமானதாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற நல்லெண்ணத்தையும் தாண்டி நியாயப்பிரமாணம் மனிதனை தீர்ப்பிடுகிறது.

ஏன் நம்மால் தூய்மையாக வாழ முடியவில்லை, இறைவனுடைய அன்பில் நிலைத்திருக்க முடியவில்லை? ஏனெனில் இறைவனில்லாத மனிதன் பாவத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான். விசுவாசிகளும் கிறிஸ்துவினால் பாதுகாக்கப்படவில்லை என்றால் தீமை செய்யக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கும் இருக்கிறது. இறைவனுடைய சித்தத்தை செயல்படுத்தும் வல்லமை நம்முடைய உடலில் இல்லை. அப்படி நாம் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும்படி தீர்மானிக்க வேண்டுமானால் முதலில் நாம் நம்முடைய இயலாமையை அறிக்கை செய்வது இன்றியமையாததாகிறது. அதனால்தான் பவுல், “என்னுடைய மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லை என்பதை அறிந்திருக்கிறேன்… ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையைச் செய்கிறேன்” என்றும் அறிக்கையிடுகிறார். பவுலோடு சேர்ந்து நீங்களும் அறிக்கை செய்து, நீங்கள் ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? நித்திய நீதிபதியிடம் அழுக்கடைந்த உங்கள் சுயத்தை ஒப்புக்கொடுப்பீர்களா?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் பாவத்தின் வல்லமை ஒரு நியாயப்பிரமாணமாக உருவாகியிருப்பதால் அதை பவுல் பாவம் பிரமாணம் என்று அழைப்பதோடு ஒவ்வொரு மனிதனும் அந்தப் பாவப் பிரமாணத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்பதையும் எடுத்துரைக்கிறார். தீமைக்கு நாம் இவ்விதமாக அடிமைப்பட்டிருப்பது ஒரு விதியாக மாறிவிட்டது. ஏனெனில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும், ஆனால் அதை நம்மால் செய்ய முடியாது. இது வேதனையை உண்டாக்குகிறது. ஏனெனில் சுயம் சிறைச்சாலையின் கதவுகளை அசைக்கிறது, ஆனால் அதனால் சிறையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. நாம் அனைவருமே நம்முடைய சுயத்திற்கு அடிமைகளாக இருக்கிறோம். ஆயினும், அதே வேளையில் கிறிஸ்து நாம் ஒரு பரிபூரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று அழைக்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிற இந்த கோளாறு உங்களுக்குப் புரிகிறதா? அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் அவனாக அந்த நன்மையைச் செய்யும் வல்லமை அவனிடத்தில் இல்லை.

இதற்கு வேறு வழியே கிடையாதா? நம்முடைய அழுக்கடைந்த சுயத்தை குறித்த ஆழமான அறிவிற்குள் நம்மை நடத்திச் செல்கிறார். நம்முடைய சுய நீதியிலோ, ஒழுக்கமான வாழ்விலோ, நம்முடைய திறமைகளிலோ ஏன் நியாயப்பிரமாணத்திலோ நமக்கு விடுதலை இல்லை. உங்களுடைய மேம்போக்கான விசுவாசத்திலிருந்து பவுலுடைய சாட்சி உங்களை விடுவித்திருக்கிறதா? மனிதர்களைப் பற்றிய அனைத்து மேலான எண்ணங்களையும் உங்களைவிட்டு நீக்கியிருக்கிறதா? பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்றி தத்துவ ஞானிகளும் கல்வியாளர்களும் மூடர்களாகவும் பொய்யர்களாகவுமே இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவின் குறைபாடு எது என்பது அவர்களுக்குத் தெரியாது. பரிசுத்தமுள்ள இறைவனுக்கு முன்பாக தான் உண்மையில்லாதவன் என்றும் பாவம் உள்ளவன் என்றும் அழிந்துகொண்டிருப்பவன் என்றும் அறிந்திருக்கிற விசுவாசி ஆசீர்வதிக்கப்பட்டவன். தான் சுயத்திற்கு அடிமைப்பட்டு அந்த சுயத்தின் பிரமாணத்திற்கு உட்பட்டிருப்பதை அறிந்து, மனித நீதி அனைத்திலும் இருந்து விடுவிக்கப்பட்டு, மனிதன் மீது நம்பிக்கை வைக்காமல், கிறிஸ்துவை மட்டும் நம்புகிறவன் பாக்கியவான்.

இறைவனுக்கு நன்றி! கிறிஸ்து வெற்றி வீரராக இருக்கிறார். அவர் இன்றி நாம் மற்ற மனிதர்களைப் போலவே தொலைந்து போனவர்களாக, நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம். பரிசுத்த ஆவியானவர் நமக்கு வாழ்வு கொடுத்து, நம்மை ஆறுதல்படுத்துகிறார். ஒரே இரட்சகராம் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை நம்மில் ஏற்படுத்துகிறார்.

விண்ணப்பம்: பரிசுத்த பிதாவே! எங்கள் முழு இருதயத்தோடும் நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், மகிமைப்படுத்துகிறோம். நீர் எங்களைத் திக்கற்றவர்களாக விட்டுவிடாமல், உம்முடைய மகனை எங்களுக்காக அனுப்பினீர். அவரே அனைவருக்கும் இரட்சகராகவும் மீட்பராகவும் தம்முடைய நீதியினால் பரிசுத்த ஆவியின் மூலமாக எங்களிடத்தில் வந்திருக்கிறார். நாங்கள் எங்கள் இருதயங்களை அவருக்குத் திறந்துகொடுக்கிறோம். அவரே அனைத்து விசுவாசிகளையும் பரிசுத்த வாழ்க்கை வாழும்படி அவர்களுடைய பாவம் என்னும் சிறையிலிருந்து திறந்துவிடுவார்.

கேள்வி:

  1. பவுல் தன்னைக் குறித்து செய்யும் அறிக்கை யாது? அது நமக்கு என்ன பொருளைக் கொடுக்கிறது?

Iஅதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை
வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை
செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை

செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற
நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

(ரோமர் 7:18-19)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 12:25 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)