Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 025 (We are Justified by Faith in Christ)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21-4:22)

2. கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 3:27-31)


ரோமர் 3:27-28
27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. 28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

உலகத்தை நீதிமானாக்குவதும் நம்மை இறைவனோடு ஒப்புரவாக்குவதும் சிலுவையில் நிறைவேற்றி முடிக்கப்பட்டது. ஆயினும் ஒருவர் விசுவாசத்தினால்தான் நீதிமானாக்கப்படுகிறார். 21-ம் வசனத்திலிருந்து 31-ம் வசனம் வரை நாம் “விசுவாசம்” என்னும் வார்த்தையை ஒன்பது முறை வாசிக்கிறோம். இதன் மூலமாக உயிருள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் நீதிமான்களாக்கப்படுகிறீர்கள் என்று பவுல் சாட்சியிடுகிறார்.

இந்தக் கொள்கையின்படி நாம் எல்லாவித மதங்களிலும் தத்துவங்களிலும் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தையும் நாம் முழுவதுமாகக் கைவிட வேண்டும் என்பது காண்பிக்கப்படுகிறது. ஏனெனில் மனிதர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல், இறைவன் அவர்கள் அனைவரையும் மன்னித்திருக்கிறார். ஆகவே, சமயச் சடங்குகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கைக்கொள்ளுதல், நம்முடைய நற்செயல்கள், அதற்குரிய சன்மானங்கள் ஆகிய அனைத்தும் இந்தக் கொள்கைக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் நொறுங்கிப் போகிறது. ஏனெனில் இறைவன் நம்மை இலவசமாக மீட்டு, கிருபையின் காலத்திற்குள் நம்மைக் கொண்டுவந்து, சட்டதிட்டங்களின் சாபத்திலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையும் அவருடைய நீதியையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் எவ்வளவுதான் நோன்பிருந்தாலும், தான தருமங்கள் செய்தாலும் இறைவனுக்கு முன்பாகப் பாவிகளாகவே இருப்பீர்கள். இறைவன் நம்மை நீதிமான்களாக்கும் அந்தப் பரிசுத்த செயலில் நீங்கள் எந்தப் பங்களிப்பும் செலுத்த முடியாது. அது இறைவனிடத்திலிருந்து உங்களுக்கு இலவசமான ஈவாகத்தான் வருகிறது. உங்களுடைய நேர்மையின் நிமித்தமாகவோ, நீதியின் நிமித்தமாகவோ அல்ல, கிறிஸ்து உங்கள் உள் மனதைத் தம்முடைய இரத்தத்தினால் சுத்திகரித்திருப்பதால் இறைவன் உங்களை முழுவதும் நீதியுள்ள நபராக மாற்றியிருக்கிறார். எவ்வளவு பெரிய கிருபை!

இந்தக் கிருபையை நீங்கள் ஏற்றுக்கொள்வதும், அதற்கு நீங்கள் நன்றியுள்ளவராயிருப்பதும், அந்தக் கிருபையை கொடுப்பவரோடு ஐக்கியப்படுவது ஆகியவைதான் விசுவாசம் ஆகும். குற்றவாளிகளாகிய நமக்காக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இறைவனுடைய ஈவாக இருக்கிறார். அவரில் படைப்பாளியாகிய இறைவன் நம்மிடத்தில் வந்து நம்மைப் பரிசுத்தப்படுத்தி, நீதிமானாக்கப்பட்ட பாவியாகிய உங்களுக்கு அவர் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். ஆகவே, அவருடைய வல்லமையுள்ள நீதி உங்களைப் பெலப்படுத்தும்படி, விசுவாசத்தோடும், விண்ணப்பத்தோடும் அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவருடைய அன்பை அங்கீகரிக்கும்படி உங்களை அவருக்கு ஒப்புக்கொடுங்கள்.

விசுவாசம் பாவியை நீதிமானாக்குகிறது. மனிதனுடைய திறமைகளைக் குறித்த சிந்தனையை விசுவாசம் மாற்றியமைக்கிறது. சுய நீதி, சுய மீட்பு மற்றும் பெருமை ஆகியவற்றிற்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது. ஏனெனில் நாம் முட்டாள்கள் என்றும் கேடானவர்கள் என்றும் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் கிறிஸ்துவினால் அறிந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, இரக்கமுள்ள இறைவனுடைய கரத்தினாலேயன்றி நமக்கு இரட்சிப்பு இல்லை. உங்களுடைய பிறப்புரிமைகளினாலோ, கல்வியினாலோ, அல்லது குடியுரிமையினாலோ நீங்கள் பக்திவிருத்தி அடைய முடியாது. ஏனெனில் உங்கள் பிறப்புரிமையினாலோ, நீங்கள் பெற்றுக்கொண்ட பட்டங்களினாலோ, உங்களுடைய திறமைகளினாலோ நீங்கள் இரட்சிக்கப்படாமல், கிறிஸ்துவில் உள்ள உங்கள் விசுவாசத்தினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். ஆகவே, அவருக்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடன் புதிய உடன்படிக்கையில் நுழையுங்கள். ஏனெனில், அவரின்றி உங்கள் வாழ்வு பாவத்தில் மரணமடைந்த நிலையில் இருக்கும். ஆனால், அவருக்குள் நீங்கள் உண்மையாகவே பரிசுத்தமாக்கப்பட்டு, உங்களுடைய நீதி என்றும் நிலையுள்ளதாக மாற்றப்படும். கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு, அதில் நிலைத்திருப்பதைத் தவிர இறைவனைப் பிரியப்படுத்துவதற்கு நிச்சயமாக வேறு வழி எதுவும் இல்லை. இறைவன் தம்முடைய நீதியை உங்கள் மீது வைக்கிறார். ஆகவே அவரை விசுவாசியுங்கள். ஏனெனில் விசுவாசம் மட்டுமே கிறிஸ்துவினுடைய ஆசீர்வாதங்களின் உரிமைகளிலும் வல்லமைகளிலும் உங்களைப் பங்குள்ளவர்களாக்கும்.

ரோமர் 3:29-31
29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். 30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. 31 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

பவுல் இந்த வெளிப்படையான கடிதத்தை ரோமாபுரியில் இருந்த திருச்சபைக்கு எழுதினார். அவர் நீதிமானாக்கப்படுதலைப் பற்றி வல்லமையாகவும் சுருக்கமாகவும் விளக்கிய பிறகு, அந்த உபதேசத்திற்கு எதிராக எழும்பக்கூடிய கருத்துக்களை அவர் தம்முடைய ஆவியில் உணர்ந்தார்.

“கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக வெளிப்பட்ட இறைவனுடைய நீதி, நியாயப்பிரமாணத்தின் மக்களாகிய யூதர்களுடைய கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பாவங்களை மட்டும் மன்னிக்குமேயானால், யூதரல்லாதவர்களுடைய நிலை என்ன? சிலுவை யூதர்களுக்கு மட்டும் உரியதா? நாங்கள் புறம்பாக்கப்பட்டிருக்கிறோமா?” என்று கிரேக்கர்கள் கேட்கிறார்கள்.

அதற்குப் பதிலுரைக்கும் பவுல்: “இறைவன் எல்லா மனிதர்களுடைய பாவங்களையும் மன்னித்திருக்கிறார். இறைவன் ஒருவராக இருக்கிறார். யூதர்களுக்கு ஒரு இறைவன் மற்றவர்களுக்கு இன்னொரு இறைவன் இல்லை. அவர் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக விருத்தசேதனம் உள்ளவர்களையும் விருத்தசேதனமில்லாதவர்களையும் நீதிமானாக்கியிருக்கிறார்.”

“அது நடக்காது! நியாயப்பிரமாணமும் விருத்தசேதனமும் இல்லாமல் நீதிமான்களாக்கப்பட முடியும் என்பது இறைநிந்தனையாகும். பவுலே! நீர் இறைவனுடைய வெளிப்பாட்டைத் தலைகீழாக மாற்றுகிறீர்” என்று சில யூதர்கள் பேசுகிறார்கள்.

இப்படிப்பட்ட யூதமத வெறியர்களுக்கு பவுல் இவ்வாறு பதிலுரைக்கிறார்: “இறைவனுடைய நியாயப்பிரமாணத்தின் வெளிப்பாட்டை மாற்றுவது எனக்குத் தூரமாயிருப்பதாக! மாறாக, நாங்கள் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்த நற்செய்தியின் மூலமாக நியாயப்பிரமாணத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இறைவனுடைய பலிக்கு நியாயப்பிரமாணம் ஒரு அறிமுகமாக இருக்கிறது என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நியாயப்பிரமாணம் நம்மீது வைக்கிற கோரிக்கைகள் அனைத்தையும் சிலுவை நிறைவேற்றுகிறது.

இவ்விதமான இரண்டு தரப்பு மக்களோடு பவுல் போராடுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இறைவனுடைய நீதியையும் அதன் மேன்மையையும் அனைத்து விசுவாசிகளும் புரிந்துகொள்வதில்லை. அனைத்து மனிதர்களும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறார்கள் என்ற நற்செய்தியைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். நியாயப்பிரமாணத்தின் மீதோ, இனவாதத்தின் மீதோ, மனித செயல்களின் மீதோ கட்டப்படாமல், விசுவாசத்தின் மீது மட்டுமே கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ சுதந்திரத்திடம் வருகிறவர்கள் வெகு சிலரே. கிறிஸ்துவுக்கு நாம் நம்மை ஒப்படைத்திருப்பதையும், நித்தியம் முதல் நம்மை நேசித்தவரை நாம் நம்புவதையுமே நம்முடைய விசுவாசம் காண்பிக்கிறது.

விண்ணப்பம்: ஓ, பிதாவே! எங்களுடைய சுய நீதியில் இருந்து எங்களை விடுவித்து, கிறிஸ்துவின் வல்லமையினால் எங்களை நீதிமான்களாக்கியபடியால் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். எங்களை நாங்கள் பார்க்கும்போது நாங்கள் பாவிகளாயிருக்கிறோம். ஆனால் சிலுவையில் அறையப்பட்ட உம்முடைய மகனைப் பார்க்கும்போது, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நீதியைப் பார்க்கிறோம். எங்களை நாங்களே நீதிமான்களாக்குவதற்காக, மனிதச் செயல்களை நாடும் போலியான ஆராதனையில் இருந்து எங்களை விடுவியும். உம்முடைய கிறிஸ்துவினுடைய செயலினால் எங்களைத் திருப்தியாக்கும். உம்முடைய முழுமையான நீதிமானாக்குதலுக்காக உமக்கு நன்றி. அதனிமித்தமாக எங்களை நாங்கள் என்றென்றைக்குமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

கேள்வி:

  1. நம்முடைய செயல்களினால் நாம் நீதிமானாக்கப்படுவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமானாக்கப்படுகிறோம். ஏன்?

ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
(ரோமர் 3:28)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 08:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)