Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 047 (The Truth of Christ Guarantees our Fellowship with God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
உ - நம்முடைய விசுவாசம் என்றென்றும் தொடருகிறது (ரோமர் 8:28-39)

2. கிறிஸ்துவினுடைய சத்தியம் துன்பங்களின் நடுவிலும் இறைவனுடன் நமக்கிருக்கும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகிறது (ரோமர் 8:31-39)


ரோமர் 8:31-32
31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

நம்முடைய தெரிந்துகொள்ளுதலை நாம் உறுதிப்படுத்திக்கொள்ளும்படி நம்முடைய இரட்சிப்பையும் முன்குறித்தலையும் பற்றிய இறைவனுடைய சிந்தனைகளை வரிசையாகத் தெளிவுபடுத்திய பவுல், இறைவன் இந்த இரட்சிப்பை வரலாற்றின் நிகழ்வுகளிலே நிலைநிறுத்தியிருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படி வரிசையாக மீட்பின் உண்மைகளை இப்போது நமக்கு முன்வைக்கிறார்.

இறைவன் தன்னுடைய எதிரி அல்ல, என்ன நடந்தாலும் எப்போதும் தன்னுடன் இருக்கும் உற்ற நண்பன் என்பதை இப்போது தன்னுடைய உள்ளத்தில் உணர்ந்து உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய பிதா என்பதையும் அவர் அறிக்கை செய்கிறார். ஆகவே அப்போஸ்தலன் இறைவனுடைய அன்பில் நிலைத்திருந்து, தன்னுடைய வாழ்நாட்கள் எல்லாம் அந்த இறைவனுக்கு தனது கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறார். அனைத்துக் காரியங்களும் பிதாவாகிய இறைவனுடைய அன்பு மற்றும் மீட்பராகிய குமாரனுடைய அன்பின் கரிசையினால் வழிநடத்தப்படுகிறது என்று கருதுகிறார்.

பாவத்தின் மலைகளைத் தகர்க்கக்கூடியதாகவும் பாவத்தில் மரணமடைந்திருக்கும் இலட்சக் கணக்கான மக்களை உயிரோடு எழுப்பத்தக்கதாகவும் உள்ள முழு நிச்சயத்தைப் பவுல் எங்கே பெற்றுக்கொண்டார்? கிறிஸ்துவினுடைய சிலுவையே அவருக்கு இறைவனுடைய அன்பிற்குரிய அடையாளமாகத் திகழ்ந்தது. தம்முடைய ஒரே மகனை விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகாமல் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவரைப் பரிகாரபலியாக ஏற்படுத்தியபடியால் பரிசுத்த இறைவனுடைய அன்பு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவில்தான் மனுக்குலத்தை நோக்கிப் பாய்ந்தோடுகிறது.

இறைவன் இவ்வுலகத்திற்கு வந்த தம்முடைய மகன் மூலமாக இருதயத்தில் கீழ்ப்படியாமையும் மீறுதலும் உள்ளவர்களாகிய நமக்கு தம்முடைய விண்ணக வாழ்வையும் விண்ணக மகிமையையும் கொடுத்தார். கிறிஸ்துவுக்குள் அவர் நமக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுத்திருக்கிற காரணத்தினால் விண்ணகத்தில் கிறிஸ்துவுக்குள் கிடைக்காத வேறு ஒரு புதிய ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. அப்படியானால் இறைவனுக்கு உங்கள் தொழுகை எங்கே? உங்களுடைய அனைத்தையும் நீங்கள் ஏன் அவருக்கு ஒப்புக்கொடுப்பதில்லை?

ரோமர் 8:33-34
33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

இறைவனுடைய ஆசீர்வாதங்களும் வாக்குறுதிகளும் பரிசுத்தவான்களுக்கும் முதிர்வடைந்த விசுவாசிக்களுக்கும்தான் உரியது என்றும் நீங்கள் முதிர்வடையாத, வெற்றியில்லாத, தடுமாறுகிற, தூய்மையற்ற கிறிஸ்தவர் என்று ஒருவேளை நீங்கள் கருதலாம். அமைதியாக இருந்து இறைவன் உங்களைக் குறித்து கூறும் நியாயத்தீர்ப்பைக் கேளுங்கள். உங்களுடைய நன்மையினாலோ, வெற்றியினாலோ அவர் உங்களை நீதிமான்களாக்கவில்லை. நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, சிலுவையில் அறையப்பட்ட அவரையே உங்கள் இரட்சிப்பின் ஆதாரமாக நம்பியதால்தான் நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

உங்களுடைய அமைதி இறைவனுடைய சித்தத்தினால்தான் உருவானது என்று நீங்கள் எண்ணும்படி சாத்தானுடைய போலிப் போதனைக்கு நீங்கள் ஒருவேளை செவிசாய்த்திருக்கக்கூடும். “இல்லை” என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார். இறைவன் தாமே விரும்பி வந்து உங்களை ஆறுதல்படுத்துகிறார்; சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை உங்களுக்கு முன்பாகக் காண்பிக்கிறார்; நீங்கள் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டுவிட்டீர்கள் என்றும் இறைவன் அந்த ஒப்புரவாகுதலை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றும் உறுதிப்படுத்தும்படி அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவுபடுத்துகிறார். மரணத்தை வென்றவர் பரலோகத்திற்கு எழுந்தருளினார். அவர் கிருபாசனத்திற்கு முன்பாக உங்களுக்காக பரிந்துபேசுகிறவராக இருந்து, தம்முடைய இரத்தத்தினால் தம்முடைய நீதியில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறார். இவ்வாறு உங்களுக்காக இறைவனிடம் பரிந்துபேசும் ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு இருக்கிறார். ஆகவே எனதருமை சகோதரனே நீங்கள் தனிமையாக இல்லை. இறைவனுடைய இரக்கம் உங்களோடு இருக்கிறது. அதன் நோக்கம் உங்களை மீட்பதே தவிர அழிப்பதல்ல. கிறிஸ்துவே உங்களுடைய இரட்சிப்பின் உத்தரவாதமாயிருக்கிறார்.

நீங்கள் ஒருவேளை மரணத்தைக் கண்டு பயப்படலாம். ஆனால் கிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்து, மரணத்தை வென்று, இறைவன் அருளும் வாழ்வை உங்களுடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பீர்களானால் இறைவனுடைய நிலைவாழ்வு உங்களில் குடிகொண்டிருக்கிறது. இறைவனுடைய அன்பு எப்போதும் தோற்றுப்போகாததைப் போல அந்த நிலைவாழ்வும் ஒருபோதும் முடிவுறாது. பரிசுத்த திரித்துவத்திலிருந்து மரணம் உங்களை ஒருபோதும் பிரிக்காது.

ரோமர் 8:35-37
35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? 37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களா யிருக்கிறோமே.

பவுல் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த துன்பங்களை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகச் சித்தரிக்கும்போது அவர் கற்பனை செய்யவில்லை. நாம் கிறிஸ்துவுக்காகப் பாடுபட வேண்டும் என்பதை அவர் காண்பித்தார். ஏனெனில் கிறிஸ்துவினுடைய வாழ்வில் நாம் காண்பதைப் போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவியில் நாம் நம்பிக்கை வைப்பதால் நிச்சயமாக இவ்வுலகத்தில் சுகவாழ்வு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் இயேசு பரிசுத்த ஆவியானவரினால் பிறந்தார், ஆனால் இவ்வுலகத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டவர்களால் கொலை செய்யப்பட்டார். பவுல் ஏழ்மையையும் செல்வத்தையும் அனுபவித்தார், வியாதியையும், பெலவீனத்தையும், வியாதிகளையும், உபத்திரவங்களையும், கள்ள சகோதரர்களையும், கடலில் மூழ்கக்கூடிய ஆபத்துக்களையும் சந்தித்தார். இவை எதுவும் அவருக்கு முக்கியமானவையாக இருக்கவில்லை. ஏனெனில் அவர் கிறிஸ்துவின் அன்பையும் பராமரிப்பையும் அறிந்திருந்தார். அவரையே எல்லாப் பாவச்சோதனைகளுக்கும் மேலாக அவர் கருதினார். இவ்வாறு உங்களுடைய விசுவாசம் நீங்கள் மரணத் தருவாயில் இருக்கும்போது மட்டுமல்ல, மோசமான பாடுகள் வழியாக வரும்போதும் வெற்றியுள்ளதாக இருக்கும். ஏனெனில் நீங்கள் மறுரூபமாகும்வரைக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய விசுவாசத்தைப் பெருகப்பண்ணுவார். இறைவனுடைய பள்ளியில் சாந்தத்தையும், பற்றுதலையும், துன்பப்படும் வேளைகளில் துதிசெலுத்துவதையும் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் முறைப்பாடின்றி தாங்கிக்கொண்டு, உங்கள் மேன்மைக்கும் பெருமைக்கும் மரித்துப் போவீர்கள். உங்களைக் காயப்படுத்தும் உங்கள் அயலாகத்தாருடைய வார்த்தைகளைப் பெரிதுபடுத்தாமல், ஆண்டவருடைய வல்லமையினால் பொறுமையுடன் காத்திருந்து, மகிழ்ச்சியடைவீர்கள்.

நமக்கு வருகின்ற துன்பங்கள் இறைவனுடைய வார்த்தைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதால், அந்தச் சோதனைகளும் பிரச்சனைகளும் கிறிஸ்துவை விட்டு நம்மைப் பிரிப்பதில்லை. அப்போது நாம் நம்மைப் பிதாவினிடத்தில் வழிநடத்திச் செல்லும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்காக ஏங்குவோம். அவர் நம்மைப் புரிந்துகொள்கிறார், அவர் நம்மை விட்டு விலகுவதில்லை. அவர் நம்மோடு வந்து, நம்மை பெலப்படுத்தி, இறைவனுடைய மாபெரும் அன்பைக் காணச்செய்கிறார். அதனால் நாம் முழு இருதயத்தோடும், நன்றியோடும் அவரைத் தொழுதுகொள்கிறோம். கிறிஸ்துவின் அன்பு நம்மை மகிமையான வெற்றிக்கு நடத்திச் செல்கிறது. அதனால் நாம் துன்பங்கள் மற்றும் கண்ணீர்களின் நடுவிலும் அவருக்கு மகிழ்ச்சியோடு பணி செய்கிறோம்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவா! நீர் எங்களுடைய பிதாவாக இருக்கிறீர். உம்முடைய குமாரன் இன்றைக்கும் இறுதி நியாயத்தீர்ப்பு நாளிலும் எங்களுக்காகப் பரிந்து பேசுகிறவராயிருக்கிறீர். பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குள் வாழ்ந்து எங்களுக்கு ஆறுதல் தருகிறார். அன்பாயிருக்கும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவா நாங்கள் உம்மைத் தொழுகிறோம். நீர் என்னைச் சூழ இருந்து, என்னைப் பாதுகாத்து, காப்பாற்றி, புதுப்பிப்பதால் நான் மரணமடைவதில்லை. எந்தப் பாவமும் என்னை உம்மைவிட்டுப் பிரித்துவிடாதபடி என்னைச் சோதனைக்குள் நுழைய விடாதிரும். அப்போது உம்மீதான எங்களுடைய அன்பும், அனைத்துப் பரிசுத்தவான்களின் அன்பும் ஒருபோதும் அசைக்கப்படாதிருப்பதாக.

கேள்வி:

  1. கிறிஸ்தவர்கள் எப்படி பிரச்சனைகளை மேற்கொள்கிறார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:28 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)