Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 028 (We are Justified by Grace)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21-4:22)
3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்து ஆபிரகாம் மற்றும் தாவீதின் உதாரணங்கள் (ரோமர் 4:1-24)

இ) நாம் நியாயப்பிரமாணத்தினால் அல்ல கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 4:13-18)


ரோமர் 4:13-18
13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. 14 நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும். 15 மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. 16 ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. 17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். 18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

யூதர்கள் விருத்தசேதனத்தின் மீது வைத்திருந்த போலியான நம்பிக்கையைப் பவுல் தகர்த்த பிறகு, அவர்களுடைய கற்பனையான நீதியின் இரண்டாவது ஆதாரமாகிய நியாயப்பிரமாணத்தைத் தாக்குகிறார்.

உடன்படிக்கையின் பலகையின் மீது இறைவன் அமர்ந்துகொண்டு, தம்மை வெளிப்படுத்தி, உலகம் முழுவதையும் அவர் ஆளுகை செய்கிறார் என்று வனாந்தரத்தின் மக்கள் நினைத்தார்கள். நியாயப்பிரமாணத்தையும் அதிலுள்ள அனைத்துக் கற்பனைகளையும் கைக்கொள்ளும்வரை இறைவன் அவர்களோடு இருப்பார் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் தங்களுடைய பயங்கரமான பாவத்தையும் உணரவில்லை, அனைத்து மனிதர்கள் மீதான இறைவனுடைய அன்பையும் அவர்கள் உணரவில்லை. அவர்கள் நியாயப்பிரமாணத்தின் அடிமைகளாக மாறியிருந்தார்கள். அவர்கள் இருதயம் கல்லைப்போல மாறியது, அவர்கள் குருட்டுத்தனமாக தங்களைப் பற்றி பெருமைகொண்டார்கள். தங்கள் மீதுள்ள இறைவனுடைய கோபத்தையோ, தங்கள் நடுவில் வாழ்ந்த கிறிஸ்துவையோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

ஒரு திருச்சபையோ, ஒரு மக்கள் கூட்டமோ, உயிருள்ள கிறிஸ்துவின் மீது எளிய விசுவாசம் வைப்பதற்குப் பதிலாக, பலவித சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் தீவிரமாகக் கைக்கொள்ளுமானால் அது பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. அன்பில்லாத நிலையில் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறவனைப் பார்க்கிலும் பெலவீனமான விசுவாசியே மேலானவன். நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டுபண்ணி, மீறுதலைப் பெருகப்பண்ணி, தண்டனையைக் கொண்டு வருகிறது என்பது மிகப்பெரிய இரகசியமாக இருக்கிறது. இதனால்தான் ஞானமுள்ள கல்வியாளர்கள் தங்கள் பள்ளிகளில் அல்லது வீடுகளில் சில கட்டளைகளையும் விதிமுறைகளையுமே முன்வைக்கிறார்கள். ஏனெனில் கிறிஸ்து நம்மை அன்புக்கும், நம்பிக்கைக்கும், பொறுமைக்கும், பாவ மன்னிப்பிற்கும்தான் அழைத்திருக்கிறார். நியாயப்பிரமாணத்திற்கும், அதன் கடுமையான விளக்கத்திற்கும், தண்டனைக்கும் நம்மை அழைக்கவில்லை.

மோசே நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டார் என்பதை பவுல் யூதர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு நியாயப்பிரமாணம் கொடுப்பதற்கு முன்பாக ஆபிரகாம் இறைவனை நம்பினார். விசுவாசிகளை வழிநடத்துவதற்காகவும், அவர்களுடைய பெருமையை அடித்து நொறுக்குவதற்காகவும் நியாயப்பிரமாணம் பிறகு கொடுக்கப்பட்டது. ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதும், இறைவனுக்குச் சேவை செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துவதும், நற்செயல்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டுவதும் இறைவனுடைய இரக்கத்தின் மீது நாம் வைக்கும் விசுவாசமே. அதுதான் உண்மையான வல்லமை. ஆனால் நியாயப்பிரமாணமோ நம்மைக் கட்டுப்படுத்துகிறது, நியாயம் தீர்க்கிறது, தண்டிக்கிறது, கொல்கிறது.

ஆபிரகாம் அப்போது தன்னுடைய நடத்தையையும், தான் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதையும் பற்றிச் சிந்திக்கவில்லை. இறைவனுடைய வாக்குறுதியை மட்டுமே நோக்கிப் பார்த்து, தன்னுடைய ஆண்டவரை நம்பினார். அவர் அனைத்து விசுவாசிகளின் ஆவிக்குரிய தகப்பனாகவும் அனைவருக்கும் உதாரணமாகவும் மாறினார். தனக்குக் குழந்தை இல்லாதிருந்தும், தனக்குள் அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்ற வாக்குறுதியை அவர் நம்பியதால், தன்னுடைய விசுவாசத்தின் மூலமாக அவர் பல இனங்களையும் மக்களையும் பெற்றுக்கொண்டார். அதனால் பவுல் அவரை, “உலகத்தின் சுதந்திரவாளி” என்று அழைக்கிறார்.

இவ்விதமாக எளிய பதோ(து)வியனாகிய ஆபிரகாமில் பரிசுத்த ஆவியானவர் அனைத்து இனங்களையும் ஆசீர்வதிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்தார். கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறவர்களை அவர் கிறிஸ்துவினிடத்தில் இழுத்துக்கொள்கிறார்.

ஆபிரகாமுடைய பெரிய விசுவாசத்தின் காரணத்தினால் பழைய ஏற்பாட்டில் உள்ள விசுவாசிகள் பலரைவிட சிறப்பானவராக அவர் திகழ்கிறார். அவருடைய வித்திற்குள் உலக மக்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று இறைவன் அவருக்கு வாக்களித்தார். அந்த வித்து கிறிஸ்துவே. இங்கு “வித்து” என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தை ஒரு தனி நபரைக் குறிக்கும் வார்த்தையாகும். இங்கு ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி கிறிஸ்துவைச் சிறப்பாகக் குறிக்கிறது என்பதை பவுல் குறிப்பிடுகிறார். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பரலோகத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரிப்பார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் மீது அவர்கள் வைக்கும் பற்றுதல் இறைவனுடைய உயிரோடும், வல்லமையோடும், ஆசீர்வாதத்தோடும் அவர்களை இணைக்கிறது.

உங்கள் மரணத்தில் இருந்து உயிரடையும்படி நீங்கள் கிறிஸ்துவிடம் வாருங்கள். நீங்கள் அவருடைய வார்த்தையில் நிலைத்திருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களிலும் உங்களுடைய சுற்றத்திலும் புதிய வாழ்வைப் படைப்பார். உங்களுடைய திருச்சபையில் அல்லது உங்களுடைய சமுதாயத்தில் இறைவனுடைய வாக்குறுதியின் மேல் விசுவாசம் வைப்பீர்களானால், அந்த விசுவாசம் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு, புது வாழ்வைப் படைக்கும். ஏனெனில் இறைவன் உங்களுடைய விசுவாசத்தின் மூலமாக படைக்கிறார், செயல்படுகிறார், உங்களுடைய நம்பிக்கையின் அழுகுரலை அவர் கேட்கிறார். அவருடைய வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்வது உங்களையும் உலகத்தையும் மாற்றுகிறது.

விண்ணப்பம்: ஓ, பரலோக பிதாவே, எங்கள் மனங்கள் குறுகியவையும், நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவையும், மற்றவர்களை நியாயந் தீர்க்கும் தன்மையும் உள்ளவைகள். முழுமையான விசுவாசத்தை எங்கள் உள்ளத்தில் கொடுத்து, உம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு உம்முடைய அன்பிற்கும், தைரியத்திற்கும், எழுப்புதலுக்கும் எங்களை ஒப்புக்கொடுத்தருளும். அப்போது பாவத்தில் மரணமடைந்திருப்பவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள். எங்களுடைய தேசத்தில் உம்முடைய துதி விளங்கும். நீர் எங்கள் மூலமாக உம்முடைய மீட்பின் செயலைச் செய்யும்படி, எங்களுடைய உள்ளத்தில் விசுவாசத்தைப் படைத்தருளும்.

கேள்வி:

  1. நியாயப்பிரமாணத்தை நாம் கைக்கொள்வதன் மூலமாக அல்ல, இறைவனுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பதன் மூலமாக மட்டுமே நாம் இறைவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம். ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 09:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)