Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 018 (The Law, or the Conscience Condemns Man)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)
2. யூதர்களுக்கு விரோதமாக இறைவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது (ரோமர் 2:1 – 3:20)

ஆ) நியாயப்பிரமாணம் அல்லது மனச்சாட்சி மனிதனை நியாயம்தீர்க்கிறது (ரோமர் 2:12-16)


ரோமர் 2:12-16
12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

ரோமாபுரி சபையில் இரு குழுக்கள் இணைந்து காணப்பட்டது. அவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் கிரேக்க விசுவாசிகள் ஆவார்கள். முதல் குழுவினர் நியாயப்பிரமாணம் மற்றும் வாக்குத்தத்தங்களை பெற்றிருந்தார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டின் படி தங்கள் பாரம்பரியங்களை கைக்கொண்டு வந்தார்கள். ஆனால் புறவினத்து கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்விற்கான இறை ஒழுங்கு எதையும் அறியாதிருந்தார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் ஆவியின் வல்லமையில் நடந்து வந்தார்கள்.

இறைவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தும் பழைய நியாயப்பிரமாணத்தின்படி யூதர்கள் நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்று பவுல் உறுதிப்படுத்தினான். இறைவனின் வார்த்தையை கேட்பது மட்டும், அவனை இரட்சிக்காது. ஆவிக்குரிய எண்ணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் மட்டும் போதுமானவை அல்ல. இறைவன் இருதயத்தில் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். அவருடைய வார்த்தை நம்மிலும், நமது வாழ்விலும் பூரணமாய் வெளிப்பட அவர் விரும்புகிறார். யூதன் செய்கின்ற நியாயப்பிரமாணத்திற்கு எதிரான ஒவ்வொரு பாவமும் நியாயம்தீர்க்கப்படும். ஏனெனில் எல்லா பாவங்களும் இறைவனுக்கு விரோதமான பகையாக கருதப்படுகிறது.

பவுல் இந்த உண்மைகளை எழுதியபோது, புறவினத்து கிறிஸ்தவர்களின் வாதத்தை அவர் தமது ஆவியில் அறிந்தார். அவர்கள் கூறினார்கள், “எங்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை, நாங்கள் பத்து கட்டளைகளை அறிந்திருக்கவில்லை. பிறகு எவ்விதம் நியாயத்தீர்ப்பு நாளில் இறைவன் எங்களை நியாயம் தீர்ப்பார்? நாங்கள் நியாயப்பிரமாணத்திற்கு நீங்கலானவர்கள்”.

எல்லா நிலைகளிலும் இறை நீதி என்பது மாறாதது என்பதை பவுல் தெளிவாக அறிவித்தான். நியாயப்பிரமாணத்தை புறக்கணிப்போர் நியாயம் தீர்க்கப்படுவார்கள். அவர்கள் இறைவனுடைய கட்டளைகள், வாக்குத்தத்தங்கள் மற்றும் அன்பு, பரிசுத்தத்தை அறிந்திருக்கவில்லை. இருப்பினும் படைத்தவர் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் அதை வைத்திருக்கிறார். அது உணர்வுள்ளதாய், எச்சரிப்பதாய், கண்டிப்பதாய் இருக்கின்ற மனச்சாட்சி ஆகும. அது நிச்சயமாக உன்னுடைய தவறுகளை உனக்கு காண்பிக்கும். உனக்குள் ஒரு போராட்டம் உள்ளுக்குள் இருக்கும். உனக்குள் இருக்கும் இறைவனுடைய மகிமையின் ஒரு பகுதி எல்லா நேரங்களிலும் அமைதியாய் இருக்காது. உனது மனச்சாட்சி உன்னை நியாயம்தீர்க்கும். இறைவனின் கிருபையைத் தவிர வேறெதிலும் நீ இளைப்பாறுதலை காண முடியாது. எனவே தான் இன்று அநேக மக்கள் வருத்தத்துடன், துக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனச்சாட்சிகளில் பகைமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய தவறுகளை அவர்கள் அறிக்கையிடுவதில்லை. அவர்களுடைய மனச்சாட்சி அவர்களுடைய கிரியைகளைக் கண்டு, அவர்களை கண்டிக்கிறது. உனது மனச்சாட்சி, உனக்குள் உருவாக்கப்பட்டுள்ள நீதிச்சட்டம் இவற்றிற்காக நீ இறைவனுக்கு நன்றி செலுத்துகிறாயா? நற்செய்தியில் உனது மனச்சாட்சியை பழக்கப்படுத்து. இறைவனுடைய அன்பின் சிந்தனைகளால் அவற்றை அலங்காரம்பண்ணு. அது உன்னை எச்சரிக்கும். இறைவனுடைய வழிகளின் படி அது உன்னை நடத்தும். ஒவ்வொரு நற்செயலை செய்வதற்கும் நீ தகுதிப்படுத்தப்பட்டு, ஆயத்தமாக இருப்பாய். உனக்கு இறுதி நியாயத்தீர்ப்பு இருக்காது. ஏனெனில் நீ உனது இருதயத்தில் உள்ள இறைவனுடைய சத்தத்துடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறாய்.

கிறிஸ்துவின் வார்த்தையை நீ ஆழமாக சிந்திக்காமல், உனது மனச்சாட்சி உனக்குள் உருவாக்கும் குற்ற உணர்வுக்கு நீ விடுதலையாகாமல் தொடர்ந்து உன்னுடைய இருதயக் கடினத்தில் வாழ்ந்து, உன்னை நீயே நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், இறுதிநாளில் உனக்கு எதிராக உன் மனச்சாட்சி எழும்பும். அது இறைவனை நியாயப்படுத்தி, உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும். இறைவன் ஒருவரே உன்னுடைய நியாயதிபதி, உனது இரட்சகர். நற்செய்திக்கு செவி கொடுப்பதைத் தவிர வேறுஎதுவும் தீர்வு இல்லை. ஆகவே உடனடியாக கிறிஸ்துவிடம் வா. உனது ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

இயேசு கிறிஸ்துவின் கரங்களில் இறைவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது உனக்குத் தெரியுமா? இந்த நியாயதிபதியின் பெயர் “கிறிஸ்து” என்பது மட்டுமல்ல. அதனுடன் “இயேசு” என்ற பெயரும் இணைந்துள்ளது. “இயேசு” என்பது அவருடைய தனிப்பட்ட பெயர் “கிறிஸ்து” என்பது அவருடைய பணியைக் குறிக்கும் பெயர். இறைவனுடைய வரங்கள் மற்றும் குணங்களினால் நிறைந்திருந்த, அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர் தான் இயேசு. அவர் மேலான மற்றும் முழுமையான அதிகாரம் உடையவர். அவரே மனிதனை நியாயம் தீர்க்கிறவர். அவரே இரட்சகர்.

பவுல் இயேசுவைக் குறித்து கூறிய நற்செய்தியின்படி இறைவன் உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்பதை அப்போஸ்தலன் குறிப்பிடுகிறான். பவுலின் சுவிசேஷத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதை அறிந்த கொள்வது அவசியமான ஒன்று. நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து ரோமருக்கு எழுதின நிரூபத்தில் கூறப்பட்டதும் அதில் உள்ளடக்கம்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே. நான் என்னை அறிந்திருப்பதை விட, நீர் என்னை அதிகமாய் அறிந்திருக்கிறீர். உமக்கு முன்பாக என்னுடைய எல்லா செயல்களும் வெளியரங்கமாயிருக்கிறது. என்னுடைய பாவத்தை நான் அறிக்கையிடுகிறேன். பயங்கரமான நாளுக்கு முன்பு என்னுடைய எல்லா மறைவான பாவங்களையும், உமது குமாரனுடைய ஒளியினிடத்திற்கு கொண்டுவரும்படி, அவைகளை வெளிப்படுத்தும்படி உம்மைக் கேட்கிறேன். எனது மனச்சாட்சியின் சத்தத்திற்கு நான் கீழ்ப்படியாமல் இருந்ததற்காகவும், உமது சத்தத்தை புறக்கணித்ததற்காகவும் என்னை மன்னியும். உமது அன்பின் கட்டளைகளை நிறைவேற்ற உறுதியான எண்ணத்தையும், பெலத்தையும் எனக்குத் தாரும்.

கேள்வி:

  1. நியாயத்தீர்ப்பு நாளில் எவ்விதம் இறைவன் புறவினத்தாருடன் இடைபடுவார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 05:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)