Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 006 (Paul’s Desire to Visit Rome)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

ஆ) ரோமை சந்திக்க வேண்டும் என்ற பவுலின் நீண்டகால ஆசை (ரோமர் 1:8-15)


ரோமர் 1:8-12
8 உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 9 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். 10 நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், 11 உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிற படியினாலே, 12 எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

பவுல் ரோமாபுரி சபையைக் குறித்து அதிகமாக கேள்விப்பட்டிருந்தான். தனது அருட்பணி பயணங்களின் போது, அதனுடைய அங்கத்தினர்கள் சிலரை சந்தித்திருந்தான். அவர்களது விசுவாசம் உண்மையானது, ஜீவனுள்ளது, முதிர்ந்தது என்று அறிந்திருந்தான். இதற்காக அவன் மனப்பூர்வமாக இறைவனுக்கு நன்றி செலுத்தினான். ஒவ்வொரு உயிருள்ள கிறிஸ்தவனும் கிறிஸ்துவில் ஒப்புரவாக்குதலின் ஓர் அற்புதமாக இருக்கிறான். நாம் இதற்காக அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். எங்கெல்லாம் பரிசுத்த ஆவியில் இறைவனை, குமாரனை மக்கள் ஆராதிக்கிறார்களோ, அங்கே நாமும் பிதாவை ஆராதிக்க வேண்டும். அவரை துதிக்க வேண்டும். இரவும் பகலும் அவருக்குள் மகிழ்ந்திருக்க வேண்டும்.

பவுல் இறைவனை “எனது இறைவன்” என்று அழைக்கிறான். அவன் அவருக்குச் சொந்தமானவன். புதிய உடன்படிக்கையின் மூலம், அவனுடைய ஆத்துமா அவருக்கு கட்டுப்பட்டுள்ளது என்பதை அவன் அறிந்திருந்தான். அவரை உண்மையாக நேசித்தான். இந்த உன்னத உறவை அடிப்படையாக வைத்து, அவன் தன்னுடைய பெயரில் உன்னதமான இறைவனிடம் வேண்டுதல் செய்யவில்லை. நம்முடைய அனைத்துக் காரியங்களையும் அறிந்திருக்கிற கிறிஸ்துவின் நாமத்தில் அவன் வேண்டுதல் செய்தான். அவன் இறைவனை மகிமைப்படுத்தினான். நம்முடைய ஊற்றப்படும் இருதயங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை தான் தேவை. இந்த பரிசுத்தமாக்குதலின் மூலம் மட்டுமே நாம் இறைவனிடம் வேண்டுதல் செய்கிறோம். நாம் பிதாவின் நாமத்தை பரிசுத்தப்படுத்தும்படி அவருடைய ஆவியைத் தருகிறார். மகிழ்ச்சியுடன் அவரை ஆராதிக்கச் செய்கிறார். அவருடைய எல்லா ஊழியக்காரர்களும் அவருக்குப் பரிசுத்தமானவர்கள். அவருடைய அன்பின் ஊழியக்காரர்களாக, அவருக்கு என்றென்றும் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுடைய பணியின் உள்ளடக்கம் என்பது நற்செய்தி ஆகும். இந்த நிரூபத்தின் முதல் வசனத்தில் பவுல் நற்செய்தியை “இறைவனின் நற்செய்தி” என்று குறிப்பிடுவதை நாம் கவனித்தோம். வசனம் 9-ல் நாம் “அவருடைய குமாரனின் நற்செய்தி” என்று வாசிக்கிறோம். இந்த பதத்தின் மூலம் இறைவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி என்பது குமாரனாகிய இறைவனின் சாராம்சத்தை சார்ந்தது என பவுல் குறிப்பிடுகிறான். கிறிஸ்துவின் குமாரன் என்ற தன்மை மற்றும் இறைவனின் பிதா என்ற தன்மையை எழுதுவதே பவுலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த நற்செய்தியை மறுதலிக்கிறவர்கள், உள்நோக்கத்துடன் இதை புறக்கணிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய இறைவனுடன் பவுல் நெருங்கிய உறவில் வாழ்ந்தான். அவன் எப்போதும் ரோமாபுரி சபையைக் குறித்து சிந்தை கொண்டவன் என்றும், அந்த சபைக்காக வேண்டுதல் செய்தவன் என்றும் சாட்சியிடுவதற்கு பரிசுத்த திரியேகத்தின் ஒற்றுமையுள்ள இறைவனை அவன் அழைக்கிறான். தன்னுடைய பல்வேறு பணிகள் மத்தியில் தேசங்களின் அப்போஸ்தலன் திருச்சபைகளை மறந்துவிடவில்லை. அவன் தனிநபர்களுக்காக உண்மையுடன் விண்ணப்பம் ஏறெடுத்தான். பரிந்து பேசுகிற விண்ணப்பமின்றி உண்மையுள்ள மேய்ப்பன் அல்லது பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஆட்கொள்ளப்பட்ட ஆசாரியன் இருக்க முடியாது. ஒரு மனிதனிடம் இருந்து வல்லமை வெளிப்படுகிறதென்றால், அதற்குக் காரணம் அன்பு, விண்ணப்பம் ஏறெடுத்தல், இறைவன் மற்றும் மனிதர்கள் மீதான வாஞ்சை ஆகும்.

பவுல் அநேக ஆண்டுகளாக ரோமை சந்திக்க, குறிப்பாக “இப்பொழுது” என்று அவன் அழைக்கிற இந்தக் காலத்தில் ஆசையுடன் இருந்தான். இந்தக் காலத்தில் அவன் அனடோலியா, மக்கெதோனியா மற்றும் கிரேக்கு பகுதிகளில் பணிசெய்து கொண்டிருந்தான். இத்தாலிய உடையை அணிந்து கொள்ள வேண்டிய காலம் இது என்று அவன் கண்டான்.

தன்னுடைய சொந்த விருப்பங்கள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் அவன் தன்னுடைய பயணத்தை தீர்மானிக்கவில்லை. இறைவனுடைய சித்தத்தை உறுதிப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளை அவன் எடுத்தான். ஏனெனில் ஒருவனுடைய சொந்த திட்டங்கள் தோல்வி, குழப்பம் மற்றும் பிரச்சினையைக் கொண்டு வரும் என்ற உண்மையை அவன் அறிந்திருந்தான். அவனுடைய ஆசைகள் மற்றும் விருப்பங்களுக்கு சிறைப்பட்டவன் அல்ல பவுல். அவனுடைய பரலோகப் பிதாவின் வழிநடத்துதலின்படி அவன் அனைத்தையும் முழுமையாக திட்டம்பண்ணினான்.

அவனுடைய இந்த ஒப்புக்கொடுத்தல், அவன் ஒரு போதும் சென்றிராத ரோமாபுரி சபையை சந்திக்க வேண்டும் என்ற அவனுடைய அதீத ஆசையை தடுத்து நிறுத்தவில்லை. அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பதை குறித்து அறிந்திருந்தான். எல்லாத் திசைகளிலும் இறைவனுடைய வல்லமையை வெடித்து சிதறப்பண்ணும் எரிமலையைப் போல அவன் இருந்தான். கிறிஸ்து அவனுக்கு கொடுத்திருந்த அதிகாரத்தின்படி ரோமாபுரி சபையை உடன்பங்காளியாக்க விரும்பினான். அந்த திருச்சபை எழுப்புதல் அடையவும், பணிபுரிய ஆயத்தப்படவும், அன்பு, விசுவாசம் மற்றும் மெய் நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் விரும்பினான். அப்போஸ்தலர் நடபடிகளின் முதன்மையான நோக்கம் மற்றும் ஊழியத்தின் ஒரு திட்டம் இது தான் : விசுவாசிகள் நிலைநிறுத்தப்படுதல் மற்றும் பலப்படுத்தப்படுதல்.

பவுல் மிகப்பெரிய கொடையாளியைப் போல ரோமாபுரிக்கு போக விரும்பவில்லை. அவன் தன்னை மிகவும் தாழ்த்தினான். அவன் கொடுக்க மட்டும் வரவில்லை என்று எழுதினான். அவர்களை விசாரித்து கேட்கவும், பார்க்கவும் விரும்பினான். அவனில்லாமல் அந்த தலைநகரத்தில் இறைவன் எவ்விதம் விசுவாசிகளை வழிநடத்தினார் என்பதை பார்க்க எண்ணினான். ரோமாபுரி பரிசுத்தவான்களில் தங்கியிருந்த இறை தேற்றரவாளனின் சாட்சியின் மூலமாக மற்ற அப்போஸ்தலர்களுடன் இணைந்து ஆறுதல் அடைந்தான்.

பவுல் ஒரு புதிய விசுவாசத்துடன் வரவில்லை என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தான். அதே நம்பிக்கை, ஞானம், எல்லா மெய்க் கிறிஸ்தவர்களிலும் செயல்படும் வல்லமையை கூறினான். அவர்கள் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தின் அங்கத்தினர்கள் ஆவார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட சபை என்று ஒருவன் கூறினால் அவன் பொய்யன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே, கிறிஸ்து ஒருவரே, பிதா ஒருவரே. எங்கெல்லாம் உண்மையுள்ள விசுவாசிகள் சந்திக்கிறார்களோ, இதற்கு முன்பு அவர்கள் ஒருவரையொருவர் அறியாதிருந்தும், அங்கே ஒரே பிதாவின் பிள்ளைகளாக ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஒரே மனதுடன் இணைகிறார்கள். ஒரே ஆவியினால் பிறந்த அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே கொள்கைகள் மற்றும் ஆர்வங்களுக்காக இணைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பம்: பிதாவே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். முழு உலகிலும் இருந்து நீர் சபையை ஒன்று சேர்க்கிறீர். அதை நிலைநிறுத்துகிறீர். உமது குணாதிசயங்களால் அதை நிரப்புகிறீர். எங்குமுள்ள எங்கள் சகோதரர்களுக்காக விண்ணப்பம் பண்ண எங்களுக்கு கற்றுத் தாரும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் ஒரு அற்புதம். உம்முடைய உண்மையுள்ள பிள்ளைகளுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒருவரையொருவர் நேசிக்க, புரிந்துகொள்ள எங்கள் கண்களைத் திறந்தருளும். உம்முடைய பிரசன்னத்தில் மகிழந்திருக்க செய்யும். உம்முடைய சத்தியத்தில் எங்கள் ஐக்கியம் பெருகவும், காக்கப்படவும் எங்களுக்கு ஞானம் மற்றும் மன்னிப்பைத் தாரும். உம்மோடும், குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியோடும் எங்களுக்குள்ள ஐக்கியத்தை விட்டு நாங்கள் விலகாதபடி காத்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. பவுல் ஏன் எல்லா நேரங்களிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தினான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)