Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 079 (Founding of the Church at Philippi)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)


அப்போஸ்தலர் 16:11-15
11 துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,12 அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

அப்போஸ்தலர்களின் கப்பலை ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உடனடியாக இறைவனின் அன்பு எனும் புயல் கொண்டு சென்றது. இப்படிப்பட்ட கப்பற்பயணம் சாதாரணமாக ஐந்து பகல்கள் மற்றும் ஐந்து இரவுகள் இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்டு அந்தக் கப்பல் இரண்டு நாட்களில் வந்து சேர்ந்தது. பவுல் துறைமுகத்தில் தங்கவில்லை. உடனடியாக அந்த மாகாணத்தின் மையப்பகுதியான பிலிப்பி பட்டணத்திற்கு சென்றான்.

ஜீலியஸ் சீஷரை கொன்றவர்களை அகஸ்து சீஷர் தோற்கடித்தான். அவன் அந்தப் பட்டணத்தை முற்றுகையிட்ட போது, அப்பகுதிகளில் பயங்கரமான சண்டைகள் நடந்து கொண்டிருந்தது. பின்பு அவன் பட்டணத்தை பிடித்து, அதைப் பெரிதாக்கி, அலங்காரப்படுத்தி கட்டினான். வரிச்சுமையிலிருந்து அதை விடுவித்தான். ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களின் தங்குமிடமாக அதை மாற்றினான். இதனுடைய சூழ்நிலை மற்றும் அரசாட்சியை பொறுத்தமட்டில், சீரியா பட்டணம் அந்தியோகியாவிற்கு ஒத்திருந்தது.

பவுல் தனது தரிசனத்தில் கண்ட மக்கெதோனியனை சந்திக்க வாஞ்சையுடன், மனக்கிளர்ச்சியுடன் காணப்பட்டான். கிறிஸ்துவைக்குறித்தும் அவருடைய இரட்சிப்பைக் குறித்தும் கவலைப்படுகிற ஒருவர் கூட அங்கு இல்லாதிருந்தது வினோதமான காரியமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஆடம்பரம் மற்றும் சிற்றின்பத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அங்கு யூத மக்களை காணவில்லை. அது இராணுவப்பட்டணமாக இருந்தது. அங்கு வர்த்தக செயல்கள் எதுவும் பெரிதாக காணப்படவில்லை. அந்த தரிசனம் ஒரு மாயை, அல்லது அவர்களது சொந்த விருப்பத்தின் பிரதிபலிப்பு தான் அந்த அழைப்போ என்று அந்த மனிதர்களுக்கு எண்ணத் தோன்றியது.

யூதர்கள் ஜெபஆலயங்கள் இல்லாத இடங்களில் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பொதுவான வேண்டுதலுக்காக பட்டணத்தின் நதியின் கரையோரங்களில் கூடுவார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தான். அங்கே அவர்கள் தங்களுடைய ஆன்மீகப் பணிகளின் போது சுத்திகரிப்பும் செய்துகொள்ள முடியும். கேங்கைட்ஸின் கரையோரத்திற்கு பட்டணத்தைவிட்டு இரண்டு கிலோ மீட்டர் அப்புறம் உள்ள பகுதிக்கு அப்போஸ்தலன் போனான். அங்கே அவன் யூதப்பெண்ணும், கிரேக்கப் பெண்ணும் இணைந்து விண்ணப்பம் செய்வதைக் கண்டான். அவர்ளைக் கண்ட போது பவுல் ஆச்சரியப்பட்டான். “இந்தப் பெண்களுக்கு நான் என்ன செய்திட முடியும்? நான் தரிசனத்தில் கண்டது ஒரு மனிதன் அல்லவா? பெண் அல்லவே? நான் வேறு நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை பார்க்கவில்லையே !?

புறஜாதிகளின் அப்போஸ்தலனை பரிசுத்த ஆவியானவர் தாழ்த்தினார். பணக்காரன், ஏழை, பெரியவன், சிறியவன், ஆண், பெண், சுதந்திரவாளி, அடிமை, கருப்பு, வெள்ளை என்று அவர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இறைவனுடைய வார்த்தைக்கான தாகத்துடன் இருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவையும் அவர் திருப்திப்படுத்துகிறார். நதியின் கரையோரம் இருந்த பெண்ணுக்கு இரட்சிப்பின் முழுமையை தரும்படியாக பரிசுத்த ஆவியானவர் பவுலின் மூலமாக பேசினார்.

வசனத்தைக் கேட்டவர்களில் ஒரு பெண் இரத்தாம்பரத் துணி விற்பவள். சின்ன ஆசியாவின் தியத்தீரா பட்டணத்தை சேர்ந்தவள். பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய அப்போஸ்தலர்களை பிரசங்கிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் தடைசெய்த நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவள். இப்போது அவர் மக்கெதோனியா பட்டணமாகிய பிலிப்பியில் இரட்சிப்பின் நற்செய்தியை கேட்கிறாள். அவள் பணக்காரியாக இருந்தாள். இரத்தாம்பரம் விற்கிறவளாக இருந்தாள். அந் நாட்களில் கிடைத்த விலைமதிப்பற்ற பொருட்களில் இதுவும் ஒன்று. அவர் மக்களை பகுத்தறியக் கூடியவளாக, விழிப்புடன் காணப்பட்டாள். உடனடியாக அப்போஸ்தலர்களிடம் இருந்து வெளிப்பட்ட இறைவனின் வல்லமையால் அவள் ஆட்கொள்ளப்பட்டாள். அவள் இறைவனின் வார்த்தையை கேட்டாள். அவள் நற்செய்தியை கவனத்துடன் கேட்டாள். ஆண்டவர் அவளுடைய இருதயத்தை திறந்தருளினார். அவளது ஆவியை ஒளியூட்டச் செய்தார். அவள் மறுபடியும் பிறந்தாள். அவருடைய தனிப்பட்ட நற்குணங்களால் அல்ல, அவள் இறைவனுடைய வார்த்தையின் மீது தாகம் கொண்டு கேட்டதினால் இரட்சிக்கப்பட்டாள். இறைவனின் நீதியைத் தேடுகிற இருதயங்களை இன்றும் நற்செய்தியானது புதுப்பிக்கின்றது. அவருக்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்களிடம் சத்திய ஆவியானவர் தங்குகின்றார்.

அன்றைய சூழலில் நவீனமாக, நாகரிகமாக, அலங்காரமாய் உடைகளை அணியக்கூடிய பெண்ணாக லீதியாள் இருந்தாள். அவள் எல்லோரையும் கவரக் கூடியவளாகவும், செல்வம் மிக்கவளாகவும் இருந்தாள். அவள் உடனடியாக தனது இருதயத்தில் இரட்சிப்பை உணர்ந்தாள். ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள். சிலுவையில் அவளுடைய பாவங்களை மன்னித்த இயேசு, இறைவனின் குமாரன் என்பதை அவள் விசுவாசித்தாள். எனவே அவள் தண்ணீர் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க தன்னை ஒப்புவித்தாள். அவள் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்து, அன்பு, சத்தியம் மற்றும் நித்திய ஜீவனை பெற்றவளாக இருந்தாள்.

என்ன ஒரு ஆச்சரியம் ! பவுல் இந்தப் பெண்ணிற்கு மட்டுமல்ல, அவளுடைய கணவன், பிள்ளைகள், வேலைக்காரர்கள் மற்றும் உடன் பணியாட்கள் அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான். இறைவனின் ஆவியானவர் வல்லமை வெளிப்பட்டதை பவுலும் அறிந்திருந்தான். ஒளியைப் பெற்ற அந்தப் பெண் மற்றவர்களையும் ஒளிக்குள் கொண்டுவருவாள் என்பதை பவுல் அறிந்திருந்தான். இறைவனின் அன்பினால் நிறையப்பட்டிருந்த அந்த பெண் சுயநலமுள்ள வேலைக்காரர்களை ஆண்டவரைப் பின்பற்றக் கூடிய சுயநலமற்றவர்களாக மாற்ற முடியும் என பவுல் அறிந்திருந்தான்! பவுலின் இருதயம் எவ்வளவு பரந்திருந்தது? அவன் ஞானஸ்நானத்திற்காக நீண்ட வகுப்பு எதுவும் எடுக்கவில்லை. கிறிஸ்துவிற்கு அந்த குழு மக்கள் அனைவரையும் ஒப்படைக்கும் தைரியம் பெற்றிருந்தான். நற்கிரியையை தொடங்கினவர், அதை முடிக்கவல்லவர் என்பதை நம்பினான். விசுவாசிப்பவர்களை தான் அல்ல, கிறிஸ்து மட்டுமே இரட்சிக்கிறார் என்பதை பவுல் அறிந்திருந்தான்.

பின்பு அந்த ஐசுவரியமான விசுவாசி பவுலிடம், அவனுடைய மூன்று கூட்டாளிகளையும் தனது விருந்தோம்பலை ஏற்கும்படி கேட்டுக்கொண்டாள். அவர்கள் பட்டணத்தில் தங்கும் நாட்கள் வரையும் அங்கு இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அவள் நற்செய்தியின் மையமாக தனது வீட்டை அவர்களுக்கு திறந்து கொடுத்தாள். இருப்பினும் பவுல் இந்த உதவியை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்துடன் இல்லை. அவனும், அவனது உடன் பணியாட்களும் தங்களை பராமரிக்க தங்கள் சொந்த கைகளினால் வேலை செய்வதை விரும்பினார்கள். ஆனாலும் ஞானம்மிக்க அந்த வியாபாரப் பெண் தனது அழைப்பை அவர்கள் ஏற்கும் வரைக்கும் இறைவனின் மனிதர்களை வருந்தி வேண்டிக்கொண்டாள். மனம்மாறியவர்களை திடப்படுத்தும்படி அவர்கள் தொடர்ந்து பட்டணத்தில் இருந்தார்கள். பவுல் அவளது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டான். அவனது முந்தைய மனத்தாக்கங்களை அன்பு மேற்கொண்டது. அன்பு தான் அவனது அதி முக்கியமான கொள்கையாக இருந்தது.

பவுல் தனது தரிசனத்தில் ஒரு மனிதனைக் கண்டாள். ஆனால் மனம்மாறியவளோ ஒரு பெண்ணாக இருந்தாள். ஆணுக்கு அதிகமான அதிகாரம் அளிக்கக் கூடிய ஒரு மதத்தில் இருந்து வந்தவன் தான் இந்த அப்போஸ்தலன். இருப்பினும் ஐரோப்பாவில் கிறிஸ்து தெரிந்துகொண்ட முதல் நபர் ஒரு பெண். இந்த அடையாளங்களில் முன்னேற்றத்தில் நாம் பெண்ணிற்கான விடுதலையைக் காண்கிறோம். அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியின் சத்தத்தை கவனித்துக் கேட்க கூடியவர்களாக இருந்தார்கள். அப்போஸ்தலனின் கீழ்ப்படிதல் மூலமாக நற்செய்தியானது ஐரோப்பாவிற்கு வந்தது. முதற்கனியாக இரத்தாம்பரம் விற்கின்ற ஒரு பெண் இருந்தாள்.

விண்ணப்பம்: ஆண்டவரே! நீர் லீதியாளின் இருதயத்தை திறந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது ஆவியை சம்பூரணமாய் அருளி அவளது வாஞ்சையை நிறைவேற்றினீர். எங்களது குறுகிய எண்ணங்களுக்காக எங்களை மன்னியும். அன்போடு கூடிய தாழ்மையின் வழியில் எங்கள் இருதயங்களை விசாலமாக்கும். அப்போது சிறுமிகளும், பெண்களும் எல்லாத் தூய்மை மற்றும் ஞானத்துடன் சத்தியத்தின் நற்செய்தியைக் கேட்பார்கள்.

கேள்வி:

  1. லீதியாளின் வாழ்க்கையில் ஏற்பட்ட அற்புதம் என்ன? ஏன் பவுல் அவளது வீட்டார் அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:53 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)