Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 114 (Burial of Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16b-42)

ஊ) இயேசு அடக்கம் பண்ணப்படுதல் (யோவான் 19:38-42)


யோவான்19:38
38 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.

இயேசுவுக்கு விரோதமாக கொடுக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பிற்கு ஆலோசனைச் சங்கத்தில் உள்ள 70 பேரும் சம்மதித்திருக்கவில்லை. சமீபத்திய புதைபொருள் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பில் இது காணப்படுகிறது. இரண்டு எதிரான வாக்குகள் அந்த தீர்ப்பிற்கு எதிராக இருந்தது. எல்லோரும் அந்த மரணத்தண்டனை தீர்ப்பிற்கு சம்மதித்தார்கள் என்றால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான மனிதர்களின் தப்பெண்ணமே காரணம் ஆகும். நீதியை நிலைநாட்டுவதில் அந்த ஆலோசனைச் சங்கம் தவறியதை இது காண்பிக்கிறது. இந்த அடிப்படையில், மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்கள் மிகவும் கவனமாக விசாரிக்கப்பட வேண்டும். இயேசுவுக்கு அப்போது இந்த விதி முறை பின்பற்றப்பட்டது என்று வைத்துக்கொண்டால், அப்போது இரண்டு உறுப்பினர்கள் அந்த தீர்ப்பிற்கு எதிராக இருந்தார்கள். ஒருவர் இரகசிய சீஷனான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு (மத்தேயு27:57, மாற்கு 15:43). அவன் ஆலோசனைச் சங்கத்தில் தனது நிலையை இழந்துவிடாதபடி, மிகவும் கவனமாக நடந்து கொண்டான். தேசிய நிகழ்வில் அவனது தாக்கம் காணப்பட்டது. அவனது முதிர்ந்த ஞானம் போற்றுதலுக்குரியது. காய்பாவின் அநீதியான செயலைக் கண்டு யோசேப்பு கோபப்பட்டான். காய்பா தனது தந்திர ஆலோசனையால் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தான். யோசேப்பு நடுநிலை வகிப்பதை கைவிட்டான். இயேசுவுடன் தனக்கு இருக்கும் உறவை வெளிப்படையாக அறிக்கை செய்தான். ஆனால் அது மிகவும் தாமதமாய் இருந்தது. ஆலோசனைச் சங்கத்தின் முடிவிற்கு எதிரான தர்க்கமாக அவனது அறிக்கை இருந்தது. ஆனாலும் பிறகு தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் இயேசுவுக்கு சிலுவை மரணத் தண்டனை தீர்ப்பை கொண்டு வந்தது.

இயேசுவின் மரணத்திற்குப் பின்பு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். (அவன் அப்படிச் செய்வதற்கு உரிமை பெற்றிருந்தான்) அவனது வேண்டுகோளுக்கு பிலாத்து சம்மதித்தான். சிலுவையிலிருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி, அடக்கம்பண்ணுவதற்கு அனுமதி கொடுத்தான்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இம்னோம் பள்ளத்தாக்கில் நரிகளுக்கு இரையாகப் போடப்படுவார்கள். அங்கே பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிலாத்து இப்போதும் யூதர்களுக்கு எதிராக வன்மம் தீர்த்துக் கொண்டான். இறைவன் தனது குமாரனை இந்த அவமானத்திலிருந்து காப்பாற்றினார். அவர் சிலுவையில் நிறைவேற்றப்பட்ட தெய்வீக பலியின் பணியை முடித்திருந்தார். பரலோகத்தில் பிதா மதிப்புமிக்க கல்லறையில் இயேசுவின் சரீரத்தை அடக்கம்பண்ணம்படி யோசேப்பை வழிநடத்தினார்.

யோவான் 19:39-42
39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.42 யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

திடீரென்று அங்கே நிக்கொதேமுவும் சிலுவையினருகில் நின்று கொண்டிருந்தார். ஆலோசனைச் சங்கத் தீர்ப்பிற்கு எதிராக வாக்களித்த இரண்டாம் உறுப்பினர் இவர். இவன் ஏற்கெனவே இயேசுவிற்கு எதிராக ஆலோசனைச் சங்கம் கொண்டு வந்த இரகசிய தீர்ப்பை செயலிழக்க செய்தவன் ஆவான். உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தான். (7:51). இயேசுவிடம் வந்த சாட்சியான இவன் 32 கிலோ எடையுள்ள விலையுயர்ந்த எண்ணெய் பொருளை கொண்டுவந்தான். மேலும் அடக்கம் பண்ணுவதற்கு சரீரத்தை சுற்றிக் கட்டக்கூடிய துணிகளைக் கொண்டு வந்தான். மேலும் சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்க யோசேப்பிற்கு துணையாக இருந்தான். சரீரத்திற்கு செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களும் அடக்கம் பண்ணுவதற்கு ஏதுவாக செய்யப்பட்டது. அடக்கம் பண்ணுவதற்கான இச் செயலை விரைந்து செய்ய வேண்டியது அவசியமாய் இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு முன்பாக அது முடிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஓய்வுநாள் ஆரம்பித்துவிட்டால், எல்லா வேலைகளும் தடைசெய்யப்படும். அவர்களுக்கு மிகக் குறுகிய நேரமே இருந்தது.

நமது கர்த்தராகிய இயேசுவின் பிதாவானவர், தனது குமாரனை கனப்படுத்தும்படி இந்த இரண்டு மனிதர்களையும் வழி நடத்தினார். ஏசாயா 53:9-ன்படி வார்த்தைகள் நிறைவேறியது. அவர் ஐசுவரியவானுக்குரிய இடத்தில் அடக்கம் பண்ணப்பட்டார். அந்த கல்லறை இதுவரை ஒருவரும் வைக்கப்படாததாய் இருந்தது. கற்பாறையைக் குடைந்து, கல்லறை செய்வது மிகுந்த செலவுள்ள ஒன்றாக இருந்தது. ஆகவே யோசேப்பு தனது கல்லறையை இயேசுவிற்கு வழங்கிய செயலைவிட, அவரைக் கனப்படுத்தும் சிறப்பான வழி வேறொன்று இல்லாதிருந்தது. அந்தக் கல்லறை நகரத்தின் சுவர்களுக்கு வெளியே சிலுவையிலறையப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்தது. அவர்கள் அந்தக் கல்லறையில் பெட்டி இல்லாமல், ஒரு கல் போன்ற மேடைப் பகுதியில் இயேசுவின் சரீரத்தை வைத்தார்கள். இயேசுவின் சரீரம் எண்ணெய் பூசப்பட்டு, துணிகள் சுற்றப்பட்டிருந்தது. நிக்கொதேமு கொண்டுவந்த நறுமணத் தைலங்கள் பூசப்பட்டிருந்தது.

இயேசு மெய்யாகவே மரித்தார். முப்பத்து மூன்று வயதுள்ள இளைஞனாக இயேசுவின் உலக வாழக்கை முடிந்தது. அவர் மரிப்பதற்காகவே பிறந்தவர் ஆவார். தம்முடையவர்களுக்காக அவர் கொடுத்த ஜீவனில் காணப்பட்ட அன்பை விட பெரிதான அன்பு வேறொன்றுமில்லை.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, எங்கள் நிலையில் நீர் மரித்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இறைவனின் கோபாக்கினையில் இருந்து உமது அன்பு எங்களை இரட்சித்தது. திரியேகக் கடவுளில் எங்களை நிலை நிறுத்தியது. உமது சிலுவையை கனப்படுத்தும்படி எனது வாழ்க்கையை நன்றியுடன் அர்ப்பணிக்கிறேன். கர்த்தாவே ஏற்றுக்கொள்ளும்.

கேள்வி:

  1. இயேசுவின் அடக்கம்பண்ணப்படும் நிகழ்வு நமக்கு எதை கற்றுக்கொடுக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:23 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)