Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 100 (Introduction to the intercessory prayer; Prayer for the Father's glory)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)

1. பரிந்துபேசும் விண்ணப்பத்திற்கான முகவுரை


இயேசு தம்முடைய நற்செய்தியினாலும் செயல்களினாலும் இவ்வுலகத்திற்கு ஊழியம் செய்தார். முடவர்களைக் குணமாக்கி, பசியுள்ளவர்களுக்கு உணவளித்து, குருடரின் கண்களைத் திறந்து இறந்தவர்களை உயிருடன் எழுப்பினார். வெறுப்பும் மரணமும் காணப்பட்ட இடத்தில் அவருடைய அன்பு இறைமகிமையின் வெளிப்பாடாயிருந்தது.

அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் திரளான மக்கள் அவரிடத்தில் வந்தார்கள். மதவாதிகளாலும் மாய்மாலக்காரர்களாலும் நிறைந்த யூத ஆலோசனைச் சங்கம் அவர்களுடைய மதமும் சட்டவாதமும் ஆட்டம் கண்டதை அறிந்தபோது, இயேசுவையும் அவரைப் பின்பற்றியவர்களையும் கொலைமிரட்டலுக்கும் ஊரைவிட்டு விலக்குவோம் என்ற மிரட்டலுக்கும் உட்படுத்தியது. மக்களுடைய ஆர்வம் குன்றி அவர்கள் இயேசுவை விட்டு விலகினார்கள். இயேசுவும் அவரை உண்மையாகப் பின்பற்றியவர்களும் உபத்திரவப்படுத்தப்பட்டபோதிலும், அவர் அனைவரையும் தொடர்ந்து அன்பு செய்தார்.

இறுதியில் ஆலோசனைச் சங்கம் பன்னிருவரில் ஒருவனைக் கைப்பற்றியது. அவன் தன்னுடைய போதகரைக் காட்டிக்கொடுக்க ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தான். ஆனால் இயேசுவோ உடன்படிக்கைப் பந்தியின்போது தம்முடைய சீஷர்கள் அப்போஸ்தலர்களாக தங்கள் பணியை செய்யும்படி அவர்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் தம்முடைய பிரிவுபசார உரையில் தானும் பிதாவும் ஒன்று என்பதையும், உபத்திரவங்கள் வரும்போதும் பரிசுத்த ஆவியானவர் எவ்விதமாக அவர்களைத் தேற்றி, தெய்வீக அன்பின் ஐக்கியத்தில் அவர்களை நிலைநிறுத்துவார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்.

ஆனால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் அவர்களுடைய ஆத்துமாக்களின் மேல் பொழிந்தருளப்படாத காரணத்தினால் கர்த்தருடைய நோக்கத்தைச் சீஷர்கள் புரிந்துகொள்ளத் தவறினார்கள். ஆகவே இயேசு தம்முடைய பிரதான ஆசாரிய விண்ணப்பத்தின் மூலமாக நேரடியாகத் தம்முடைய பிதாவினிடத்தில் சென்று, தம்மையும் தம்மைப் பின்பற்றுகிறவர்களையும் அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தார். அந்த அப்போஸ்தலர்களுடைய சாட்சியினால் அவரை விசுவாசிக்கப்போகும் மக்களையும் அவர் தம்முடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்டார்.

யோவான் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம், பிதாவோடு குமாரன் எவ்விதமாக உரையாடுகிறார் என்பதையும் பரிசுத்த திரித்துவத்திலுள்ள நபர்களுக்கிடையிலான அன்பு எப்படிப்பட்டது என்பதையும் குறித்த ஒரு தனிச்சிறப்பான அறிவை நமக்குக் கொடுக்கிறது. விண்ணப்பத்தின் ஆவி இங்கு முக்கியமானதாகக் காணப்படுகிறது. இந்த அதிகாரத்தை ஆழமாகத் தியானிக்கிற எவரும் ஆராதனையும் பரிந்துபேசுதலின் விண்ணப்பமும் நிறைந்துள்ள தேவாலயத்திற்குள் நுழைகிறார்கள்.


2. பிதாவின் மகிமைக்கான விண்ணப்பம் (யோவான் 17:1-5)


யோவான் 17:1-2
1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

தானும் பிதாவும் ஒன்று என்பதை கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு அறிவித்திருந்தார். அவர் பிதாவிலும் பிதா அவரிலும் இருக்கிறார்கள். அவரைக் காண்கிற எவரும் பிதாவைக் காண்கிறார்கள். ஆனால், இந்த உன்னதமான வெளிப்பாட்டை சீஷர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தெய்வீகம் எவ்விதமாக மாம்சத்தில் வெளிப்பட முடியும் என்று அவர்கள் சிந்திக்க முயன்றபோது அவர்களுடைய சிந்தை குழப்பமடைந்தது. அறியாமையுள்ள தமது சீஷர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, தெய்வீக மற்றும் பரிசுத்த அன்பின் ஐக்கியத்தில் அவர்களைக் காத்துக்கொள்ளும் பொறுப்பை அவர் தமது பிதாவிடம் ஒப்படைக்கிறார்.

இயேசு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்தபோது சீஷர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். தான் பிதாவிலும் பிதா தம்மிலும் இருப்பதாகச் சொல்லும் இவர் அதே வேளையில் பரலோகத்தில் இருக்கும் பிதாவை நோக்கி அவர் எப்படி விண்ணப்பிக்கலாம்? இந்த அறிவுக்கொவ்வாத இயேசுவின் செயல் அவர்களுக்குக் குழப்பத்தை உண்டுபண்ணியது. இரண்டு கருத்துக்களுமே உண்மையானது என்பதை நாம் அறிவோம். பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில் பரிபூரண ஐக்கியம் இருப்பினும் அவர்கள் இருவரும் தனித்தனி நபர்களாயிருக்கிறார்கள். இறைவன் நம்முடைய அறிவாற்றலைக் காட்டிலும் பெரியவர். இந்த இரண்டு காரியங்களும் உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துணைசெய்கிறார். இதைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடினமாக இருந்தால் இறைவன் உங்களுக்குத் தெளிவைத் தரும்படி விண்ணப்பியுங்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி யாரும் பிதாவையும் குமாரனையும் அறிந்துகொள்ள முடியாது.

இந்த விண்ணப்பத்தில் இயேசு இறைவனைப் பிதாவே என்று அழைக்கிறார். ஏனெனில் இறைவன் பரிசுத்தமான ஆண்டவரும் கடுமையான நீதிபதியும் மட்டுமல்ல. அவரது இரக்கமுள்ள அன்பு அவருடைய மற்ற குணாதிசயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அவர் அன்பில் பரிசுத்தமுள்ளவரும் சத்தியத்தில் இரக்கமுள்ளவருமாயிருக்கிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் இறைவனுடைய மகனாகப் பிறந்தபோதுதான் இறைவன் அன்புள்ள பிதா என்ற இந்தப் புதிய கருத்து உருவானது. அவர் நித்திய காலமாக இறைவனுடன் வாழ்ந்து வந்தார். நம்மை விடுவித்து பரிசுத்தருடைய பிள்ளைகளாக்கும்படி அவர் மாம்சமானார். இறைவனைப் பிதா என்று வெளிப்படுத்தியதே இயேசு இவ்வுலகத்திற்குக் கொடுத்த செய்தியின் சாரமாகும். இந்த சத்தியத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக இயேசு நம்மை நியாயத்தீர்ப்பைக் குறித்த பயத்திலிருந்து விடுவிக்கிறார். ஏனெனில் நீதிபதி நம்முடைய பிதாவாக இருக்கிறார், நம்முடைய இரட்சிப்பை உறுதிசெய்யும் பிணையாளி, நம்முடைய பாவங்களுக்காக கடனைச் செலுத்தித்தீர்த்த கிறிஸ்துவாயிருக்கிறார். இயேசுவின் பல பேச்சுக்களில் உள்ள பிதாவின் நாமத்தை நீங்கள் புரிந்துகொண்டு, அந்த அறிவின்படி நீங்கள் வாழ்வீர்களானால் நற்செய்தியை நீங்கள் புரிந்துகொண்டு விட்டீர்கள்.

இயேசு தம்முடைய பிதாவுக்கு முன்பாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் ஒப்புரவாகுதல் ஏற்படுகிற முக்கிய நேரம் உலகத்தில் வந்திருக்கிறது என்பதை அங்கீகரித்தார். மனுக்குலமும், தேவதூதர்களும், மதங்களும், தத்துவங்களும் தங்களை அறியாமலே இந்த நேரத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தன. அது வந்துவிட்டது. இயேசு இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தார். இறைவனுடைய கோபத்தின் நெருப்பில் அவர் தனியாளாக மரிக்க ஆயத்தமாயிருந்தார். இந்த நேரத்தில் காட்டிக்கொடுப்பவன் தேவாலயக் காவலர்களுடன் அவரை நெருங்கிக் கொண்டிருந்தான். இறைமகனோ சாந்தமும் தாழ்மையுமுள்ள மனிதனாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் மரிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார்.

யோவான் 17:1-2
1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

“மகிமை” என்றால் ஒளி என்றும் பிரகாசம் என்றும் பலர் கருதுகிறார்கள். தம்முடைய தியாக அன்புதான் தம்முடைய மகிமையின் சாரம் என்றும் தம்முடைய தெய்வீக இருப்பின் அடிப்படை என்றும் அறிக்கையிட்டார். தம்முடைய சிலுவையின் மரண வேளையில், வலியும் பயமும் சுழல் காற்றென வீசும்போது, பிதா தம்மை அந்த அன்பில் காத்துக்கொள்ள வேண்டும் என்ற இயேசு கேட்டுக்கொண்டார். அப்போதுதான் சிலுவையில் மரிப்பவரில் தெய்வீக அன்பின் ஒளி பரிபூரணமாகப் பிரகாசிக்கும். கலகக்காரர்களும் குற்றவாளிகளும் தம்முடைய மரணத்தினாலே நிதிமான்களாக்கப்படும்படி அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்க விருப்பமாயிருந்தார். இதுதான் குமாரனுடைய மகிமையின் மையமாகும்.

மேலும் அவர் தம்முடைய மகிமைக்காக அல்ல பிதாவினுடைய மகிமைக்காக மரிக்கிறார் என்பதைச் சொல்லவும் அவர் தயங்கவில்லை. இதன் மூலம் யாரும் செய்யமுடியாத பணியை அவர் செய்தார். அவர் மனுக்குலத்தை இறைவனோடு ஒப்புரவாக்கியதன் மூலமாக பிதாவைச் சிலுவையில் மகிமைப்படுத்தினார். பாவம் மன்னிக்கப்படும்போது, இறைவனுடைய அன்பு காண்பிக்கப்படுகிறது, அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளாகும்படி அழைக்கப்படுகிறார்கள். இறைவனுடைய பிள்ளைகள் தூய வாழ்க்கை வாழ்வதன் மூலமாக பிதாவை மகிமைப்படுத்தும்படி, பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளான அவர்கள் மீது ஊற்றப்படுகிறார். இறைவன் அநேக பிள்ளைகளுக்குப் பிதாவாகும்போது அவருடைய நாமம் அதிகமாக மகிமைப்படுகிறது. ஆகவே பிதாவினுடைய நாமத்தின் மகிமைக்காக பரிசுத்த ஆவியானவர் அநேக பிள்ளைகளை மறுபடியும் பிறக்கச் செய்ய வேண்டும் என்று இயேசு வேண்டிக்கொள்கிறார்.

குமாரன் பிதா தனக்குக் கொடுத்த அதிகாரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். அனைத்து மனிதர்கள் மீதும் பிதா அவருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். கிறிஸ்துவே உண்மையான இறைவனாகவும், சிருஷ்டிகராகவும், இரட்சகராகவும் இருக்கிறார். அவரே நம்முடைய ஆண்டவரும் அரசரும் நீதிபதியுமாக இருக்கிறார். நாம் அவருடையவராக இருக்கிறோம், அவரே நம்முடைய நம்பிக்கையாயிருக்கிறார். அவர் நம்மை நியாயம்தீர்க்கவும் அழிக்கவும் அல்ல, இரட்சிக்கவும் வழிநடத்தவுமே இந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசிகள் நித்திய வாழ்வைப் பெறவேண்டும் என்பதே அவருடைய வருகையின் நோக்கமாகும். மரணம் இனி அவர்களை ஆண்டுகொள்ளாது. அதுவரை வெகு சிலரே அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், சிலுவையில் இயேசு மனுக்குலத்தின் பாவங்களை மன்னித்தார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை விசுவாசித்து, கிறிஸ்துவின் மகிமையில் நிலைத்திருக்கும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விசுவாசிகளாவர். தெய்வீக ஆவியானவர் அவர்களில் வாசமாயிருக்கிறார். அவர்களுடைய புதிய வாழ்வு பிதாவினுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் இக்காலத்தின் அற்புதமாயிருக்கிறது.

யோவான் 17:3
3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இயேசு இறைவனைப் பற்றிச் சொன்ன காரியங்களைப் பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துகிறார். இறைவன் கிறிஸ்துவின் பிதாவும் நம்முடைய பிதாவுமாயிருக்கிறார். இந்த தெய்வீக இரகசியத்தைப் புரிந்துகொண்டு, அவரில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறான். இயேசு கிறிஸ்துவின் மூலமாக அன்றி இறைவனை அறிவதற்கு வேறு வழி எதுவும் இல்லை. குமாரனில் பிதாவைப் பார்த்து, அவரில் விசுவாசமாயிருப்பவன் பரிசுத்த குமாரத்துவத்தைப் பெற்றுக்கொள்கிறான். கிறிஸ்துவின் கூற்றுக்களை சரியாக அறிந்துகொள்வது,வெறும் அறிவைப் பெருக்கும் காரியமல்ல, அதுவே ஆவிக்குரிய வாழ்வாகவும் வளர்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு விசுவாசியிலும் இறைவன தம்முடைய சாயலைத் திரும்ப உருவாக்குகிறார். இந்த தெய்வீக சாயலின் முக்கியத்துவம் என்ன? இது இறைவனுடைய பிள்ளைகளில் பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்தும் அன்பு, சத்தியம் மற்றும் நேர்மை போன்றவையாகும். மேலும் அது பிதாவினுடைய குணங்கள் வெளிப்படுத்தப்படுவதன் மூலமாக அவரை மகிமைப்படுத்துவதுமாகும்.

பரிசுத்த ஆவியினால் பிறந்து, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிருடன் எழுந்து வந்த கிறிஸ்துவின் மூலமாகவே அன்றி உலகம் இறைவனை அறிய முடியாது என்பதை அது உணர்ந்துகொள்ள வேண்டும். குமாரன் தம்முடைய அன்பினாலும் பரிசுத்தத்தினாலும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டுள்ள தெய்வீக அப்போஸ்தலனாக இருக்கிறார். நீங்கள் உண்மையான இறைவனை அறிய விரும்பினால் மனித உருவில் வெளிப்பட்ட இறைவனாகிய இயேசுவின் வாழ்வைப் படியுங்கள். மேசியாவாகிய அவர் இராஜாதி இராஜாவும் பிரதான ஆசாரியனாகவும் இருப்பதுடன், பூரணமான தீர்க்கதரிசியாகவும், மனுவுருவான இறைவார்த்தையாகவும் இருக்கிறார்.

யோவான் 17:4-5
4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். 5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது இடைவிடாமல் தம்முடைய பிதாவைத் தியானித்து, அவருக்குச் சாட்சி கொடுத்து, அவருடைய செயல்களைச் செய்தார். தம்முடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி தம்மை அவர் வெறுத்தார். அவர் பிதாவினிடத்தில் கேட்டதையே நமக்கு அறிவித்தார். தம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கும் என்பதை அறிந்திருந்த அவருடைய முழுவாழ்வும் பிதாவை மகிமைப்படுத்தியது. அவர் தம்முடைய பிதா கொடுத்த வேலையாகிய சிலுவையின் மூலமான மீட்பை நிறைவேற்றி முடித்தார். பிதா அனைத்தையும் நிறைவேற்றி முடித்திருக்கிறார் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இயேசு தம்மை வெறுமையாக்கி, தமக்கு எந்தப் பெருமையையும் நாடாதபடியால், நித்திய மகிமைக்கு அவர் பாத்திரராயிருக்கிறார். இவ்விதமாக அவர் நித்தியமுதலே மகிமையுள்ளவர் என்றும், இறைவனில் இறைவன் என்றும், ஒளியிலிருந்து வரும் ஒளி என்றும், படைக்கப்பட்டவரால்ல, பேறானவர் என்றும் சாட்சியிட்டார். அவர் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனபோது தேவ தூதர்களும் மற்ற சிருஷ்டிகளும், “வல்லமையையும், ஐசுவரியத்தையும், ஞானத்தையும், கனத்தையும், மகிமையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரராயிருக்கிறார்” என்று சொல்வார்கள்.

விண்ணப்பம்: பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய குமாரன் தம்முடைய நடத்தையினாலும், விண்ணப்பங்களினாலும், பலியினாலும் உம்மை மகிமைப்படுத்தியிருக்கிறார். எங்கள் கண்களை ஏறெடுத்து உம்மைப் பார்க்கவும் எங்களுக்கு அருகதையில்லை. கிறிஸ்து எங்களுக்காக மரித்தபடியால் நீர் எங்கள் பாவங்களை மன்னித்தீர். எங்களை உமது பிள்ளைகளாக்கினீர். பரிசுத்த ஆவியானவரை எங்கள் இருதயத்தின் மீது ஊற்றியதால் உங்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுத்தபடியால் உமக்கு நன்றி. மற்றவர்கள் எங்கள் நற்கிரியைகள் மூலமாக நீர் பிதா என்பதை அறிந்துகொண்டு, உமக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலமாக உம்மை மகிமைப்படுத்தும்படி, நாங்கள் ஒருபோதும் எங்கள் சுய மகிமையை நாடாமல், உம்முடைய குமாரனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஒருவரையொருவர் நேசித்து, உம்மை மகிமைப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும்.

கேள்வி:

  1. இயேசுவின் இந்த விண்ணப்பத்தின் முதல் பகுதியிலுள்ள முக்கியமான சிந்தனை என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:52 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)