Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 060 (King Agrippa´s Persecution of the Churches)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

11. எருசலேமிலிருந்த திருச்சபைகளை அகிரிப்பா அரசன் துன்புறுத்துதல் (அப்போஸ்தலர் 12:1-6)


அப்போஸ்தலர் 12:1-6
1 அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. 4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். 5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். 6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

கி. பி. 41-ல் கிலவுதியஸ் ரோமாபுரியில் இராயனாகியபோது எருசலேமிலும் பாலஸ்தீனாவிலும் சூழ்நிலைகள் பெரிய மாற்றத்தைக் கண்டது. மாபெரும் ஏரோதின் பேரனாகிய அகிரிப்பா என்பவன் இராணுவத் தளபதியாகிய கிலவுதியஸின் ஆட்சிக்கு வழியேற்படுத்தித் தரும்படி அவனுக்கும் ரோம ஆலோசனைச் சங்கத்திற்கும் இடையில் நடுவராகப் பணியாற்றினான். இதற்குப் பதிலாக அகிரிப்பாவை கிலவுதியஸ் தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டு, பாலஸ்தீனா முழுவதையும் ஆட்சிசெய்யும் பொறுப்பை அவனிடத்தில் ஒப்படைத்தான். இதனால் யூதர்கள் மீதான ரோம ஆளுனரின் ஆட்சி முடிவுக்கு வந்து, கிழக்கத்திய சர்வாதிகாரியின் ஆட்சி ஆரம்பமானது. அதனால் ரோமர்களுடைய ஆட்சிக்காலத்திலிருந்த ஒழுங்கு முறைகளுக்கும் உரிமைகளுக்கும் பதிலாக கொடுமைக்காரனாகிய அகிரிப்பாவின் காட்டாட்சியும், ஒழங்கின்மையும், தீவிரவாதமும் நடைமுறைக்கு வந்தது.

முதலில் இந்தப் புதிய அரசன் எழுபதுபேர் கொண்ட யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தின் ஆதரவைப் பெற முயற்சி செய்தான். அவர்களில் சிலருடைய ஆலோசனைக்கு செவிகொடுத்து கிறிஸ்தவ மூப்பர்களையும் அப்போஸ்தலர்களையும் அவன் சிறைப்பிடித்தான். அவனுடைய மாய்மாலத்தினாலும் முகத்துதியினாலும் அவர்களைச் சிறையில் அடைத்ததன் மூலமாக யூத மக்களுடைய ஆதரவைப் பெற முயற்சி செய்தான். யூதர்கள் அவனுடைய செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதையும் சிலர் அதைப் புகழ்ந்தார்கள் என்பதையும் கண்டபோது, செபுதேயுவின் மகனாகிய யாக்கோபை அவன் கொலைசெய்தான். அவரைச் சிரச்சேதம் செய்து கொலை செய்ததன் மூலமாக ரோமர்களின் தண்டனை முறையை அவன் பின்பற்றினான். அவன் யாக்கோபை பொதுமக்கள் நடுவில் விசாரனை செய்யாமல் தன்னுடைய மனவிருப்பத்தின்படி செயல்பட்டான்.

யாக்கோபு திருமுழுக்கு யோவானைப் பின்பற்றியவராயிருந்தார். ஒட்டக மயிரைத் தரித்து, மக்களை மனந்திரும்புதலுக்கு அழைத்தவராகிய திருமுழுக்கு யோவானை விட்டு கானாவூர் கல்யாண விருந்தில் இயேசுவைப் பின்பற்றி அவர் சென்றார். அவர் இயேசுவின் அற்புதத்தைக் கண்டபோது வரப்போகிற இறையரசில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகு யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இருவருக்கும் தாயானவள் இயேசுவிடம் சென்று தனது பிள்ளைகளுக்கு அவருடைய அரசில் அரசனாகிய அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். இயேசு தான் பருகப் போகும் இறைவனுடைய கோபத்தின் பாத்திரத்தை அவர்கள் இருவராலும் பருக முடியுமா என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் அறியாமையில் தாங்கள் பருகுவோம் என்று பதிலுரைத்தார்கள். அவர்கள் நிச்சயமாக அதில் பருகுவார்கள் என்று இயேசுவும் அவர்களுக்குப் பதிலுரைத்தார். ஆயினும் அவருடைய வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் அமருபவர்களை முடிவு செய்வது தம்முடைய வேலை இல்லை என்றும், அது பிதாவினுடைய வேலை என்றும் அவர்களுக்கு அறிவித்தார்.

யாக்கோபு ஒடுக்கப்பட்டவராக கிறிஸ்துவுக்கு இரத்தசாட்சியாக மரணத்தைத் தழுவினார். அவர் அப்போஸ்தலனாயிருந்த காரணத்தினாலும் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைச் செய்ததினாலும் யூதர்களுக்கு ஏற்பட்ட கோபத்தினால் அவர் மரணத்தைச் சந்தித்தார். குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தியதன் மூலமாக இந்த இரண்டாம் உபத்திரவத்தின் அலை ஆரம்பமாகியது. சவுலைப் போல நியாயப்பிரமாணத்தின் மீது வைராக்கியமுள்ளவர்களால் இந்த உபத்திரவம் ஆரம்பிக்கப்படாமல் மக்களுடைய முகத்துதியை விரும்பிய அறிவற்ற அரசனால் ஆரம்பமானது.

கர்த்தர் தம்முடைய அரசை எவ்விதமாக வழிநடத்துகிறார் என்பது சில வேளைகளில் வேறுபடுகிறது. ஆரம்பத்தில் ஆவிக்குரிய எழுப்புதல் காணப்பட்டது. மக்கள் திருச்சபையை நேசித்தார்கள். ஆலோசனைச் சங்கத்தால் கூட அவர்களை ஒன்றும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. காலப்போக்கில், கிறிஸ்தவர்கள் யூத சிந்தனையை விட்டு விலகி, பழைய ஏற்பாட்டைக் கைவிடுகிறார்கள் என்று மக்கள் கருதியபோது ஸ்தேவானைக் கொலைசெய்யும் அளவுக்கு வெறுப்பு மக்கள் நடுவில் காணப்பட்டது. விருத்தசேதனம் இல்லாமல் இறைவனுடைய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கு புறவினத்து மக்களை கிறிஸ்தவர்கள் அனுமதிக்கிறார்கள் என்ற வதந்தி அங்கு பரவியிருக்கலாம். இது அருவருக்கத்தக்க இறைநிந்தனை என்று யூதர்கள் கருதினார்கள்.

இந்தக் கொடிய அரசனுடைய கரத்தில் சிந்தப்பட்ட இந்த இரத்தத்தைக் குறித்து இந்த மக்கள் மகிழ்வடைந்தார்கள். அதன் விளைவாக அந்த அரக்கன் கிறிஸ்தவ இயக்கத்தின் தலையை வெட்டியெறிய துணிகரம் கொண்டான். அப்போஸ்தலர்களின் தலைவனாகிய பேதுருவை அவன் சிறையிலடைத்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின்போது பேதுருவை விசாரித்து, அனைத்து மக்களுக்கும் முன்பாக அவரைக் குற்றஞ்சாட்டி, அவரைக் கொலைசெய்ய அவன் வகைதேடினான். அனைத்துக் கிறிஸ்தவர்களையும் கொலைசெய்யும் உரிமையும் உத்வேகமும் அவனிடத்தில் இருந்தது. நான்கு படைப்பிரிவுகளைக் கொண்டு பேதுருவைக் கடுமையாகக் காவல் காக்கும்படி அவன் கட்டளையிட்டிருந்தான். அதன்படி நான்கு போர்ச்சேவகர்கள் மூன்று மணிநேரக் கணக்குப்படி விழித்திருந்து காவல் காப்பார்கள். ஏற்கனவே எவ்வாறு பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒரு தேவதூதனால் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை ஆலோசனைச் சங்கம் அவனுக்கு அறிவித்திருந்தது. தன்னுடைய தந்திரத்தினாலும் கொடுமையினாலும் அனைத்து தூதர்களையும் ஆவிகளையும் மேற்கொள்ள இந்த கொடூரன் முயற்சி செய்தான். ஆகவே பேதுருவை இரண்டு போர்ச் சேவர்களுடன் அவர்கள் கட்டியிருந்தார்கள். பேதுருவின் இடது கை ஒரு போர்ச்சேவகனுடைய வலது கையோடும், அவருடைய வலது கை இன்னொரு போர்ச் சேவகனுடைய இடது கையோடும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. அவ்வாறு ஒரு நொடியும்கூட பேதுரு தனித்திருப்பதற்குரிய வாய்ப்பிருக்கவில்லை.

பேதுருவைக் கைது செய்ததன் மூலமாக பாலஸ்தீனாவிலுள்ள திருச்சபைக்கு பேராபத்து வரப்போகிறது என்பதை திருச்சபை அறிந்துகொண்டது. அதனால் அவர்கள் ஒன்று கூடி இரவும் பகலும் இறைவனை நோக்கி மன்றாடினார்கள். கிறிஸ்தவர்களுடைய போராயுதம் போர்வாளோ, இலஞ்சமோ, தந்திரமோ அல்ல, விண்ணப்பம் செய்வதே ஆகும். விசுவாசிகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு பெலன்கொடுக்கவும், வெற்றியளிக்கவும் கர்த்தருடைய கரம் அவர்களோடிருக்கிறது. தொடர்ந்து விடாப்பிடியாக விண்ணப்பம் செய்வது கலகம் செய்யும் விசுவாசம் என்று நாம் கருதக்கூடாது. அவ்விதமான விண்ணப்பம் நம்முடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் இறைவனுடைய பதிலைப் பெறுவதற்கான ஒரு வழி. கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி விண்ணப்பிப்பதைக் காட்டிலும் மேலான வல்லமை இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை.

தனக்கு மரணம் நேரிடப் போகிறது என்பதை பேதுரு அறிந்திருந்த போதிலும் அவர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். அவர் கிறிஸ்துவில் வாழ்ந்த காரணத்தினால் தம்முடைய உயிர் கிறிஸ்துவோடு இறைவனுக்குள் மறைந்திருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவில் நிலைத்திருந்து, உண்மையுடன் வாழ்ந்தார். அவருடைய கர்த்தரின் அன்பு மரணத்தின் வேளையிலும் அவருக்கு அமைதியைக் கொடுத்திருந்தது.

விண்ணப்பம்: எங்கள் மரண நேரத்திலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எங்களுக்கு முடிவற்ற வாழ்வைக் கொடுத்து எங்கள் இருதயத்தைச் சுத்திகரித்திருக்கிற காரணத்திற்காக உமக்கு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை அனைத்துத் தீமைகளிலிருந்தும் விலக்கிக் காத்து உம்முடைய சித்தத்தின்படி எங்களை வழிநடத்தியருளும். எங்கள் எதிரிகளும் மறுபிறப்படைந்து மனந்திரும்பி முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்ள நீர் அவர்களையும் ஆசீர்வதித்தருளும்.

கேள்வி:

  1. அகிரிப்பா அரசன் கிறிஸ்தவர்களை ஏன் துன்பப்படுத்தினான்? இந்த துன்புறுத்தலின் விளைவாக மக்கள் அவனைக் குறித்து என்ன நினைத்தார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)