Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 059 (Establishment of a Gentile Church)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Ewe French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Ukrainian -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

10. அந்தியோகியாவில் புறவினத்துத் திருச்சபை நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 11:19-30)


அப்போஸ்தலர் 11:25-30
25 பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். 26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. 27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. 29 அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். 30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.

எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்கு வந்தவுடன் பர்னபா முதலில் தன்னுடைய நண்பனும் வைராக்கியமுள்ள சகோதரனுமாகிய தர்சுப்பட்டணத்துச் சவுலைப் பற்றித்தான் சிந்தித்தார். சின்ன ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியாகிய சிலிசியாவின் முக்கிய நகரமாயிருந்த தர்சு அந்தியோகியாவிலிருந்து இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது. தகப்பனைப் போன்ற குணாதிசயமுள்ள பர்னபா தன்னுடைய வைராக்கிமுள்ள நண்பனைச் சந்திக்கும் இந்த வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தார். வேகமாக வளர்ந்துவரும் அந்தியோகியாவிலுள்ள அந்த புதிய திருச்சபைக்கு இறையியல் அறிஞர் ஒருவர் தேவை என்பதையும் அப்போதுதான் அத்திருச்சபை நியாயப்பிரமாணத்திலும் சங்கீதப் புத்தகத்திலும் தீர்க்கதரிசனங்களிலும் உறுதியாகக் கட்டப்பட முடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். சவுல் எருசலேம் திருச்சபையை உபத்திரவப்படுத்திய நாட்களிலிருந்தே பர்னபா சவுலை அறிந்திருந்தார். மகிமையின் கர்த்தர் சவுலுக்கு தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் தரிசனம் கொடுத்திருந்த காரணத்தினால் அவர் மெய்யாகவே மனந்திரும்பியவர் என்பதை பர்னபா நன்கு அறிந்திருந்தார்.

சைப்பீரியனாகிய பர்னபா பவுலைத் தேடிக் கண்டுபிடித்தார். அவரைக் கண்டபோது அவர் விசுவாசத்தை விட்டு விலகாமல் அதில் நிலைத்திருந்தபடியால் பர்னபா மகிழ்வடைந்தார். இறையியலாளராகிய பவுலைத் தம்முடன் வரும்படி பர்னபா அழைக்கவே இருவருமாக அந்தியோகியாவைச் சென்றடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒரு வருடம் முழுவதும் பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலும், திருச்சபையைக் கட்டி எழுப்புவதிலும், மக்களை ஆறுதல்படுத்துவதிலும் விண்ணப்பத்தோடும், உண்மையோடும், வெற்றியோடும் ஈடுபட்டிருந்தார்கள்.

இரண்டாவது முறையாக பவுலைத் திருச்சபையோடு இணைக்கும் செயலை இங்கு பர்னபா நிறைவேற்றுவதைப் பார்க்கிறோம். சவுலைத் திருச்சபைக்குள் கொண்டுவந்த செயல் பர்னபாவுடையது என்று நாங்கள் நன்றியோடு நினைவுகூருகிறோம். அங்கு அவர் புறவினத்தாரின் அப்போஸ்தலர் என்று உறுதிப்படுத்தப்படுகிறார். இந்த செயல் திருச்சபை வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. அந்தியோகியா திருச்சபையின் பலத்தையும் வல்லமையையும் பயன்படுத்தி இறைவன் முழு உலகத்திற்கும் கிருபையின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தார்.

பழைய ஏற்பாட்டின் சட்ட வல்லுநர்களும் தீர்க்கதரிசிகளும் பெரும்பாலும் தங்கள் மக்களைவிட்டுப் பிரிந்து தனியாகவே வாழ்வார்கள். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் அவர்கள் நடுவர்களாக நிற்பதால் அவர்கள் சாதாரண மக்களைவிட உயர்வானவர்களாகக் கருதப்பட்டார்கள். அந்தியோகியாவில் இதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை பர்னபாவின் ஊழியத்தில் சவுல் கவனித்தார். பொதுவான ஊழியம் திருச்சபையில் காணப்பட்டது. அன்பில் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருந்தார்கள். பொறுமையுடனும் தாழ்மையுடனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆவிக்குரிய ஐக்கியத்தைக் குறித்த அனைத்துக் காரியத்திலும் பர்னபா சவுலுக்கு ஒரு தகப்பனைப் போல போதித்தார். பொறுமையும், நம்பிக்கையும், பற்றுறுதியும் அவர்களுடைய அன்பிற்கு அடித்தளமாயிருந்தது (1 கொரிந்தியர் 13:1-8). அவர்கள் அன்புடன் ஒத்துழைத்து அங்கு தங்கள் திருப்பணியை நிறைவேற்றியதால் அவர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல ஆவிக்குரிய தரத்திலும் வளர்ச்சியடைந்தார்கள்.

அந்தியோகியாவில் இயேசுவை விசுவாசித்தவர்கள்தான் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளையும் வார்த்தைகளையும் கிறிஸ்து நிரப்பியதாலும், கிறிஸ்துவின் அன்பிற்கு அடையாளமாக அவர்கள் மாறியதாலும் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரை யாரெல்லாம் விசுவாசித்தார்களோ அவர்களைத் தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி இறைவன் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். “கிறிஸ்து” என்ற வார்ததைக்கு அபிஷேகம் பண்ணப்பட்டபவர் என்றும் அபிஷேகம் பண்ணுகிறவர் என்று இரண்டு பொருள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பழைய ஏற்பாட்டில் தலைமைக் குருக்களும், அரசர்களும், தீர்க்கதரிசிகளும் பரிசுத்த ஆவியானவரினால் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் என்பதற்கு அடையாளமாக அவர்களுடைய தலையின் மீது பரிசுத்தமான எண்ணெய்யை ஊற்றினார்கள். கிறிஸ்துவே இராஜாதி இராஜனும் மாபெரும் தலைமைக் குருவும் மாம்சத்தில் வந்த வார்த்தையுமாக இருக்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரோடும் சேர்ந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். நாம் நம்மை அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமாக ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகவும், இராஜரீக ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த இனமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறோம் (1 பேதுரு 2:9). பரிசுத்த ஆவியானவரினால் அபிஷேகம் பண்ணப்பட்ட அனைவரும் அவருடைய பிள்ளைகளாயிருப்பதால், பிதாவாகிய இறைவனுடைய அனைத்து செல்வங்களும் “கிறிஸ்தவர்கள்” என்ற வார்த்தையில் அடங்கியிருக்கிறது. அதேவேளையில் அவர்கள் கிறிஸ்துவினுடைய ஆவிக்குரிய சரீரத்தில் அவயவங்களாகவும், ஒன்றாக இணைக்கபட்டு, பரிசுத்த ஆவியானவர் வாழும் ஆலயமாகவும் இருக்கிறார்கள். நம்மை அவருடைய பங்காளிகளாகவும் அவருடைய சிலுவையில் பங்குள்ளவர்களாகவும் மாற்றிய நம்மடைய உயிருள்ள இரட்சகருக்கு நாம் சாட்சியிடும்படி அவர் நம்மை அழைக்கிறார். அவருடைய கிருபையின் பெருக்கத்தினால் உங்களைக் கிறிஸ்தவராக்கிய இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா?

ஆயினும் கிறிஸ்தவர்கள இப்போது பரலோகத்தில் அல்ல பூமியில்தான் வாழ்கிறார்கள். அவர்களுடைய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னதாவது: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு, இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33). பரிசுத்த ஆவியானவர் அகபு என்ற தீர்க்கதரிசியின் மூலமாக அனைத்து மக்கள் மீதும் ஒரு பெரிய பஞ்சம் வரப்போகிறது என்ற எச்சரிப்பைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தார். மக்களுடைய பாவத்தின் காரணமாக இறைவனுடைய கோபம் இவ்விதமாக வெளிப்படுத்தப்படுகிறது. கிலவுதி இராயனுடைய காலத்தில் (கி. பி. 41-54) இந்தப் பஞ்சம் ஏற்பட்டது. உலகத்தில் இருக்கிற மக்கள் படும் பாடுகள் அனைத்தையும் கிறிஸ்தவர்களும் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய இருதயத்தில் இறைவனுடைய அன்பு பரிசுத்த ஆவியின் மூலம் ஊற்றப்பட்டிருக்கிற காரணத்தினால், இந்த உபத்திரவங்கள் நடுவில் அவர்கள் கைவிடப்படுவதில்லை.

இந்த தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு ஒரு அற்புதம் அந்தியோகியாவில் நடைபெற்றது. கிறிஸ்தவர்களைப் பசிக்கொடுமையிலிருந்து காப்பதற்காக இறைவன் அங்கு மழையைப் பெய்யப்பண்ணவில்லை. அவர்கள் தங்களுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்ற நாடுவதற்குப் பதிலாக எருசலேமிலுள்ள ஏழைத் திருச்சபைக்கு எவ்வாறு உதவிட முடியும் என்று சிந்திக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். தங்கள் திருச்சபை அங்கத்துவர்களுக்கு பஞ்ச காலத்தில் உதவிசெய்வதற்காக அந்தியோகியாவில் அவர்கள் ஒரு பொருளாதார சேகரிப்பை மேற்கொள்ளவில்லை. அதற்கு மாறாக எருசலேமிலிருந்த தங்கள் ஏழைச் சகோதரர்களுக்கு உதவிசெய்யும்படி ஒப்புக்கொண்டார்கள். இது ஒரு அறிவற்ற செயலாகத் தோன்றவில்லையா? பரிசுத்த ஆவியானவர் வரப்போகிற பஞ்சத்தைப் பற்றி முன்னறிவிக்கிறார். அவர்கள் பணத்தைச் சேகரித்து எருசலேமிற்கு அனுப்புகிறார்கள். எந்தவித சுயநலத்தைக் காட்டிலும் இறைவனுடைய அன்பு வலிமையானது. நீங்கள் ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவனா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவும்படி எப்போதாவது உங்களைத் தியாகம் செய்கிறீர்களா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.

சேகரிக்கப்பட்ட பணத்தை இரண்டு பிரசங்கிகளுடைய கரத்தில் கொடுத்து அனுப்புகிறார்கள். ஏனெனில் இந்தப் பிரசங்கிகள் அதிலிருந்து ஒரு கடுகளவுகூட தங்கள் சொந்த செலவுக்கென்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சொத்துக்களையும் இறைவனுக்காகக் கொடுப்பதற்கு ஆயத்தமானவர்கள் என்பதையும் திருச்சபை அறிந்திருந்தது. பவுல் தன்னுடைய தேவைக்காக மற்றவர்களுடைய உதவியை நாடாமல் தானாகவே உழைத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தியோகியா திருச்சபையின் நிலையை விசாரித்து வரும்படி தன்னை அனுப்பிய எருசலேம் திருச்சபைக்கு பதிலளிக்கும் முகமாக, பர்னபா எருசலேமில் வறுமையில் வாடும் திருச்சபை மக்களுக்காக ஒரு கணிசமான தொகையை அந்தியோகியா திருச்சபையிலிருந்து கொண்டு வந்தார். அவர்களுக்கு முன்பாக அவர் வைத்த அந்த தொகை அந்தியோகியாவிலுள்ள புதிய திருச்சபை மக்களுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் செய்யும் செயலுக்கு அத்தாட்சியாக இருந்தது.

பவுலும் பர்னபாவும் அந்தத் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலரிடத்தில் கொடுக்காமல் யூத திருச்சபையின் மூப்பர்களிடத்தில் கொடுத்தார்கள். இந்த மூப்பர்கள் எப்போது தெரிவு செய்யப்பட்டார்கள் என்றோ, எருசலேமிற்கு வெளியில் அவர்களுடைய பணி எவ்விதமாக ஒழுங்கு செய்யப்பட்டது என்றோ லூக்கா எந்த விவரத்தையும் எழுதவில்லை. திருச்சபைகள் வளர்ச்சியடைந்தது, நற்செய்தி எங்கும் பரவியது, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை வெளிப்பட்டது.

விண்ணப்பம்: ஓ, கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக திருச்சபையை அமைதியாகக் கட்டுகிறீர். உம்மைப் பின்பற்றுகிறவர்களை உம்முடைய அன்பினால் நிரப்புகிறீர். நாங்களும் உண்மையான கிறிஸ்தவர்களாக பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்து, எங்கு தேவையிருக்கிறதோ அங்கு உண்மையுடன் பணிசெய்ய எங்களுக்கு உதவிசெய்தருளும். உலகத்தின் மீது கடுமையான பஞ்சம் வரும்போது நாங்கள் உம்முடைய நாமத்தை நாங்கள் மறுதலிக்காமல், எல்லா நேரத்திலும் உம்மில் தியாகத்தோடு நிலைத்திருக்க எங்களுக்கு அருள்புரியும்.

கேள்வி:

  1. உண்மையான கிறிஸ்தவனுடைய அடையாளங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)