Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 058 (Establishment of a Gentile Church)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

10. அந்தியோகியாவில் புறவினத்துத் திருச்சபை நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 11:19-30)


அப்போஸ்தலர் 11:19-24
19 ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள். 21 கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 22 எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். 24 அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். 24 அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

பேதுருவுக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் வெளிப்பாட்டுக்குப் பிறகு, திருச்சபையின் வரலாறும் பிரசங்கத்தின் போக்கும் எவ்வாறு மாற்றமடைந்தது? செசரியாவில் இருந்த அந்த விசுவாசிகள் ஒரு திருச்சபையாக மாறினார்களா? அங்கிருந்து நற்செய்தியை உலகெங்கிலும் பிரசங்கிக்கும் மையமாக அந்தத் திருச்சபை மாறியதா? அவர்கள் மூலமாக புறவினத்து மக்களுக்கு நற்செய்தியின் வல்லமை பிரகாசித்தா? அவர்களைக் குறித்து நாம் வேறு எதையும் வாசிப்பதில்லை.

பாலஸ்தினாவிற்கு அருகில் இருந்த சிரியா நகரமாகிய அந்தியோகியா என்ற இடத்தில் சிதறிச் சென்ற விசுவாசிகள் சிலர் வாழ்ந்து வந்தார்கள். பின்நாட்களில் அது ஒழுக்கக் கேட்டிற்கு பேர்பெற்ற பேரரசுகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. ஸ்தேவானுடைய மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட உபத்திரவத்தின்போது சிதறடிக்கப்பட்டவர்கள் லெபனான் சைப்ரஸ் மற்றும் சின்ன ஆசியாவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் முடிவற்ற வாழ்வின் ஊற்றாகிய கிறிஸ்துவைக் குறித்து ஒவ்வொரு கிராமங்களிலும் சாட்சிபகர்ந்தார்கள். ஆனால் அவர்கள் கிரேக்க யூதர்களோடு மட்டுமே கிறிஸ்துவைக் குறித்துப் பேசினார்கள்.

ஆனால் அந்தியோகியாவில் இதற்கு எதிரான காரியம் நடைபெற்றது. சிதறித் திரிந்தவர்கள் நேரடியாக கிரேக்கர்களிடத்திலும் மற்றப் புறவினத்து மக்கள் நடுவிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். இறையியல் கல்வியை அவர்கள் பெற்றுக்கொள்ளாதவர்களாகவும், உயர்ந்த பட்டங்களைப் பெறாதவர்களாக இருந்தபோதிலும், மிஷனரிகளிடத்திலிருந்து பொருளாதார உதவிகளைப் பெறாதவர்களாக இருந்தபோதிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்துவைப் பற்றி தங்களோடு உடன் பணிசெய்தவர்களுக்கு பிரசங்கித்தார்கள். செசரியாவின் புறவினத்து மக்களைப் போலவே அவர்களும் விசுவாசித்தபோது யூத மார்க்கத்தைச் சேராதபோதே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த மாபெரும் மறுபிறப்பின் அனுபவங்கள் அந்தியோகியாவின் ஜெப ஆலயத்து யூதர்கள் நடுவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் தலைநகரமாயிருந்த இந்த நகரத்தின் யூதர்கள் முன்பு புறவினத்தினராயிருந்து பின்பு யூத மார்க்கத்திற்கும் அதன் பிறகு கிறிஸ்தவத்திற்கும் மனமாற்றம் அடைந்திருந்த நிக்கொலாஸ் என்பவருடைய பிரசங்கத்தை அவர்கள் ஏற்கனவே கேட்டிருந்தார்கள். அதன் பிறகு எருசலேம் திருச்சபை அவரை ஏழு உதவிக்காரர்களுள் ஒருவராக இவரைத் தெரிவுசெய்திருந்தது. ஆகவே எருசலேமைக் காட்டிலும் அந்தியோகியாவில் கிறிஸ்தவர்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது என்பது இதனால் தெளிவாகிறது. அதன் காரணமாக அங்கு நற்செய்திப் பணி உடனடியாக ஆரம்பமானது.

சிதறி அகதிகளாக வந்திருந்தவர்கள் எதைக் குறித்து சாட்சியிட்டார்கள்? அதன் முக்கியத்துவம் என்ன? அவர்கள் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளிலிருந்து நற்செய்தியை அறிவிக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தைப் பற்றியும் தீர்க்கதரிசனத்தைப் பற்றியும் தெரியாது. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றவரும் அனைத்தையும் உருவாக்கியவரும் நம்முடைய வாழ்வுக்குக் காரணமானவருமாகிய இயேசுவை அவர்கள் கர்த்தர் என்று அழைத்தார்கள் (1 கொரிந்தியர் 8:6). இந்த கர்த்தர் நம்முடைய முழுமையான கீழ்ப்படிதலையும் ஒப்புக்கொடுத்தலையும் கோருகிறார். நாம் உன்னதமான இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக இயேசு நமக்காக மரணத்தை அனுபவித்து பாவப்பரிகாரத்தை உண்டுபண்ணியிருப்பதால் நாம் எந்தப் பயமும் இல்லாமல் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிடலாம். நம்முடைய கர்த்தர் சர்வாதிகாரியல்ல, அவர் அன்பினாலும் வல்லமையினாலும் சூழப்பட்டவர். அழிவும் மரணமும் இல்லாத நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நம்மை நீதிமானாக்கியிருக்கிறார்.

இறைவனுடைய இரக்கத்தையும் வல்லமையையும் பற்றிய இந்த செய்தி மனிதர்களுடைய இருதயத்தை மேற்கொண்டது, அவர்களுடைய சிந்தைக்கு ஒளியூட்டியது. அதனால் அவர்கள் கர்த்தராகிய இயேசுவோடு தனிப்பட்ட முறையில் உறவுகொண்டு, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தியோகியாவில் ஏற்பட்ட இந்த எழுப்புதல் எவ்வாறு மற்றவர்களிடத்தில் பரவியது என்பது முக்கியமானது. அவர்கள் எழுப்புதல் கூட்டங்கள் நடத்தவில்லை. நற்செய்தியை மக்கள் தனிப்பட்ட முறையில் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் வானொலியையோ கைப்பிரதிகளையோ பயன்படுத்தவில்லை. இன்றும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இது ஒரு வல்லமையான வழிமுறையாகக் காணப்படுகிறது. இரட்சகரைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பர்களிடம் அறிவிக்கிறீர்களா? கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்த உங்கள் சாட்சியின் மூலம் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை சுமந்து செல்கிறீர்களா? உங்கள் உதடுகள் கிறிஸ்துவைக் குறித்துப் பேசும்படி உங்கள் இருதயத்தை அவருடைய வார்த்தைகளினால் நிரப்புங்கள். அப்பொழுது கர்த்தருடைய கரம் உங்களை உடனடியாகப் பயன்படுத்துவதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

தூரத்திலிருந்த தீமைநிறைந்த நகரமாகிய அந்தியோகியாவில் உள்ள அநேகர் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தார்கள் என்பதை எருசலேமிலிருந்த திருச்சபை கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தார்கள். கொர்நேலியுவும் அவருடைய வீட்டாரும் செசரியாவில் மறுபிறப்படைந்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது குழப்பமடைந்ததைப் போல இம்முறை நடைபெறவில்லை. எந்த மனிதரும் இறைவனை நம்பி அவரில் நிலைத்திருந்தார் இறைவன் அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்புவார் என்பதை பேதுருவின் மூலம் அவர்கள் கேட்டு அறிந்திருந்தார்கள். ஆயினும் அங்குள்ள திருச்சபை சரியான நம்பிக்கையில்தான் பயணிக்கிறதா அல்லது ஏதேனும் திரிபுப் போதனைகளைப் பின்பற்றுகிறதா என்பதைக் கவனிக்கும்படி ரோம-கிரேக்க சமயங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த நீதிமானாகிய பர்னபாவை அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

பர்னபாவைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ள நற்சாட்சியிலிருந்தும் (4:19), ஒரு தகப்பனுடைய அன்புடன் செயல்பட்டு, சவுலை அப்போஸ்தலர்களுடன் இணைத்து வைத்ததிலிருந்தும் (9:27) அவருடைய குணாதிசயம் நன்கு விளங்குகிறது. இந்தப் பகுதியில் லூக்கா (ஒருவேளை பர்னபாவை நேரில் சந்தித்திருக்கலாம்) அவரை நீதிமான் என்றும் பரிசுத்த ஆவியின் நிறைவுடன் நற்செய்தியை மக்களுக்குப் பிரசங்கித்தவர் என்றும் சொல்கிறார். அவருடைய பிரசங்கத்தை முதலில் புரிந்துகொள்ளாதவர்களை அவர் புறக்கணிக்காமல் அவர்களைப் பொறுமையுடன் கையாண்டார். புதிய விசுவாசிகளைப் பூரணப்படுத்தவும் அன்பில் அவர்களை முதிர்வுள்ளவர்களாக மாற்றவும் அவர் இறைவனையே சார்ந்திருந்தார்.

அந்தியோகியா திருச்சபையில் புதிய வாழ்வைக் கண்டபோது பர்னபா மகிழ்வடைந்தார். அங்கிருந்த குறைபாடுகளை அவர் குறைகூறத் தொடங்காமலும் சகோதரர்கள் நடுவிலிருந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகளில் தலையிடாமலும் இருந்தார். மறுபிறப்படைந்தவர்களோடு அவர் மகிழ்ந்திருந்து, அவர்கள் கிறிஸ்துவின் நிறைவில் தொடர்ந்து நிலைத்திருக்கும்படி அனைவரது விசுவாசத்தையும் பெலப்படுத்தும்படி அவர் கடினமாக உழைத்தார். இந்த ஆவிக்குரிய எழுப்புதலின் சூழ்நிலையில் அந்தியோகியா திருச்சபை வளர்ச்சியடைந்தது. முதிர்ச்சியடைந்தவர்கள் திருச்சபையில் புதிய நம்பிக்கை உதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள். அவர்களைச் சுற்றிலும் இருந்த பல்வேறு சமயங்களில் காணப்படாத இறைவல்லமை உண்மையாகவே அவர்கள் நடுவில் தோன்றியிருந்தது.

விண்ணப்பம்: ஓ, கர்த்தாவே, நீர் அனைத்துக் காலத்திலும் எண்ணற்ற மக்களை உம்முடைய அரசிற்குள் அழைத்துக் கொண்டிருக்கிறீர். இன்றும் நாங்கள் மற்றவர்களுக்கு உம்மைக் குறித்துச் சாட்சியிடும் வாய்ப்பை நீர் எங்களுக்கு அருளியிருப்பதற்காக உமக்கு நன்றி. இன்றும் பலர் உம்மில் விசுவாசம் வைத்து இரட்சிக்கப்படவும் உம்முடைய அரசு வரவும் தக்கதாக நாங்கள் வல்லமையோடும் சந்தோஷத்தோடும் எளிமையான முறையில் உம்முடைய இரட்சிப்பின் செய்தியை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் ஞானத்தை நாங்கள் உம்மிடத்தில் தேடுகிறோம்.

கேள்வி:

  1. அந்தியோகியாவிலிருந்த அந்த புகழ்பெற்ற திருச்சபை எவ்வாறு தோன்றியது?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)