Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 099 (Christ's peace in us defeats the world's afflictions)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

6. நம்மிலிருக்கிற சமாதானம் உலகத்திலுள்ள பாடுகளைத் தோற்கடிக்கிறது (யோவான் 16:25-33)


யோவான் 16:25-26
25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். 26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

இயேசு பரலோக சத்தியங்களை உதாரணங்கள் மூலமாகவும் உவமைகள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். இவ்வுலகத்திற்குரியவர்களால் அதன் இரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் அவற்றைப் புரிந்துகொண்டார்கள். தம்முடைய சீஷர்கள் தம்மைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார். அதற்காக தாம் உயிர்த்தெழும் மாபெரும் நாளுக்காகவும் பரலோகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளுவதற்காகவும் காத்துக்கொண்டிருந்தார். இந்த இரட்சிப்பின் நிகழ்வுகள் அனைத்தையும் அவர் ஒரே நாளாகத்தான் கருதினார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுடைய இருதயத்திற்குள் வரும்போது, இந்த உதாரணங்களுக்கும் உவமைகளுக்கும் தேவையிருக்காது. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவியே விசுவாசிகளுடைய இருதயத்திற்கு ஒளியேற்றுவார். இறைவன் பிதாவாக இருக்கிறார், கிறிஸ்து அவருடைய குமாரனாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒருவனும் இறைவனைக் கண்டுகொள்ள முடியாது. குமாரனுடைய ஆவியானவர் நம்மை இறைவனுடைய குடும்பத்தில் இணைக்கிறார். இவ்வுலகத்தில் உங்களுக்கு ஒரு அப்பா இருக்கிறாரா? நீங்கள் அவரோடு பேசுகிறீர்களா? அவர் உங்களைப் பற்றி கரிசனை கொள்கிறாரா? இவையெல்லாம் ஆரம்ப கேள்விகள். இதற்கும் மேலான நிலையில், இயேசுவின் வார்த்தைகளும் பரிசுத்த ஆவியானவரின் ஆறுதல்களும் பரிசுத்தராகிய இறைவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை உறுதிசெய்கிறது. நமது தனிப்பட்ட நெருக்கமான இறைவன் அன்புள்ளவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. நாம் பாவிகளாயிருந்தாலும் அவருடைய பிரியமான பிள்ளைகளாயிருக்கிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவருக்கு முன்பாகப் பரிசுத்தமாகிறோம். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் ஆவியாக இருப்பதால், அவர் மெய்யாக விண்ணப்பிக்கும்படி நம்முடைய வாய்களைத் திறக்கிறார். ஆவிக்குரிய விண்ணப்பத்தில் கிறிஸ்து நம்மூலமாகப் பேசுகிறார். ஆவியானவர் பிதாவிலுள்ள நம்பிக்கையிலும் குமாரனிலுள்ள ஐக்கியத்திலும் ஜெபிக்கிறபடி நீங்களும் ஜெபியுங்கள். உங்கள் விண்ணப்பம் உங்களில் வாசம்செய்யும் பரிசுத்த ஆவியானவருக்கும் குமாரனோடு ஒன்றாயிருக்கிற பிதாவோடும் நடைபெறும் உரையாடல் ஆகும்.

யோவான் 16:26-28
26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. 27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். 28 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

தன்னுடைய பிள்ளைகளை நேசிக்காத தகப்பன் தகப்பனே அல்ல. இறைவனுடைய நாமத்தை நமக்கு வெளிப்படுத்தியதன் மூலமாக அவருடைய வல்லமையான அன்பை உணர்ந்துகொள்ள வகைசெய்தார். பிதாவினுடைய நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே கிறிஸ்துவினுடைய நோக்கத்தில் முக்கியமானது. பிதாவை அறிந்தவன் இறைவனை அறிந்திருக்கிறான். அவன் இறைவனுடைய பிள்ளையாக மாற்றப்பட்டு அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறான். அவருடைய நாமத்தில் முழு நற்செய்தியையும் நித்தியத்திற்கான நம்பிக்கையையும் காண்கிறோம். பிதாவே உங்களை நேசிப்பவராயிருப்பதாலும், அவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவராயிருப்பதாலும் இனிமேல் மத்தியஸ்தம் செய்வதற்கு யாரும் தேவையில்லை என்று கிறிஸ்து அறிவிக்கிறார். அவர் சிலுவையில் மரித்ததிலிருந்து பிதாவிற்கும் நமக்கும் இடையில் இப்போது எந்தத் தடையும் இல்லை. இறைவனுடைய ஆட்டுக்குட்டியாகிய குமாரனில் வைக்கும் விசுவாசத்தினால் கிறிஸ்துவை நேசிப்பவர்கள் மீது பிதா தம்முடைய அன்பை ஊற்றுவதற்கு வழியுண்டாகிறது. கிறிஸ்துவின் தெய்வீகத்துவத்தையும், அவர் பிதாவினிடத்திலிருந்து வருகிறார் என்பதையும், அவருடன் வாழ்கிறார் என்பதையும் அறிந்த ஒருவர், பரிசுத்த திரித்துவ இறைவனை அணுகியிருக்கிறார். அவன் இறைவனுடைய ஜீவனில் நிலைத்திருந்து, பிதாவின் கிருபையினால் நிறைந்து, பரிசுத்த ஆவியில் மகிழ்ந்திருக்கிறான்.

ஒரு வாக்கியத்தில் மீட்பின் அற்புதத்தை தமது சீடர்களுக்கு விளக்குகிறார். அவர் உன்னத தெய்வத்துவத்திலிருந்து கீழிறங்கி, எதிர்ப்பும் சீரழிவும் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து, சிலுவையில் மனுக்குலத்திற்கான நீதியைச் சம்பாதித்து, அதன்பிறகு இவ்வுலகத்தை விட்டு அனைத்து ஜீவனுக்கும் ஆதாரமான தம்முடைய பிதாவினிடத்திற்கு ஏறிச்சென்றார்.

யோவான் 16:29-30
29 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். 30 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

சீஷர்கள் இறைவனுடைய அன்பின் மேன்மையையும் இயேசுவின் நித்திய தன்மையையும் அறிய ஆரம்பித்தார்கள். சர்வ ஞானமும், பரிசுத்தமும், நித்தியருமான உண்மையான இறைவன் இயேசுவே. கிறிஸ்து அன்பின் மனுவுருவாதல் என்பதை அறியவோ நினைவுகூரவோ தவறினார்கள். இயேசு இறைவனுடைய புதிய நாமத்தையும் அவருடைய முடிவற்ற அன்பையும் விளக்கமாக சீஷர்களுக்கு அறிவித்திருந்தபோதிலும், இயேசுவில் அவர்கள் இறைவனுடைய தன்மையைப் பார்க்கவுமில்லை, அவரைப் பிதா என்று அழைக்கவும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சீஷர்களை இன்னும் ஒளிர்விக்கவில்லை. ஆகவே, அவர் இவற்றைக் கருத்தளவில் ஏற்றுக்கொண்டாலும் அவருடைய தன்மையின் சாரத்தைப் புரிந்துகொள்ளத் தயங்கினார்கள்.

யோவான் 16:31-32
31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

இயேசு புன்முறுவலுடன் அவர்களைப் பார்த்து, “என்னை உங்கள் அறிவினால் மட்டும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படிப்பட்ட அறிவும் மெய்யான விசுவாசமும் ஒன்றாகுமா? உங்களுக்குப் பரிசோதனை வருகிறது, நீங்கள் உங்கள் அன்பை நிரூபிப்பீர்களா? இறைவனுடைய தகப்பன் தன்மையை நீங்கள் நம்பாத காரணத்தினால் இறைவனை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போவீர்கள். உங்கள் விசுவாசம் உறுதியற்றது என்பது காண்பிக்கப்படும்.”

“மரணத்தில் நான் தனிமையாக இருப்பதில்லை. என் பிதா என்னுடன் இருப்பார்.” இது அவர் சிலுவையில் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறியதோடு முரண்படுகிறதா? இல்லை. பரிசுத்தராகிய இறைவன் தம்முடைய குமாரனைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், தம்முடைய பிதாவின் பிரசன்னத்தைத் அவர் தொடர்ந்து நம்பினார். கிறிஸ்துவின் கதறல் இறைவன் மாறாதவர் என்பதையே காண்பிக்கிறது. “நான் உம்மைப் பார்க்காவிட்டாலும் உம்மை விட்டு விலகுவதில்லை. உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு சொல்லுகிறார். இறைவனுடைய தகப்பன் தன்மையின் மீது கிறிஸ்து வைத்திருந்த விசுவாசத்தினாலேயே அவர் நமக்காக ஏற்றுக்கொண்ட நியாயத்தீர்ப்பை மேற்கொள்ள முடிந்தது. நம்முடைய பாவத்தினால் உண்டான இறைகோபத்தின் நெருப்பை பிதாவின் மீதான குமாரனுடைய அன்பு அணைத்துப்போட்டது. அவருடைய மாறாத நம்பிக்கை நாம் பிதாவைப் பார்க்கும் வாசலை நமக்குத் திறந்தது. பிதாவினுடைய சித்தத்தின்படி குமாரன் மரணத்தைச் சந்தித்தபடியால், “நான் தனிமையில் இல்லை, என் பிதா என்னோடு இருக்கின்றார்” என்று சொன்னார்.

யோவான் 16:33
33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

அனைத்து விசுவாசிகளுக்கும் ஆறுதல் தரும் வகையில் இயேசு தமது பிரியாவிடை உரையை முடிக்கிறார். “நான் சில காலம் உங்களுடன் இருந்து, உங்கள் இருதயத்தைச் சமாதானத்தினால் நிரப்பும்படி உங்களுக்குப் போதித்தேன். அவிசுவாசிகளுக்குச் சமாதானம் இல்லை. குமாரனாகிய நான் உங்கள் பாவங்களை மன்னித்து, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்தேன். என் சமாதானத்தின் ஆவியை உங்களுக்குக் கொடுக்கிறேன். என் வார்த்தைகளில் நிலைத்திருங்கள். நான் உங்களைப் பாதுகாக்கிறேன். என்னையன்றி உங்களுக்குப் பாதுகாப்பில்லை. நீங்கள் இறைவனோடு ஒப்புரவாகுவதே உங்கள் சமாதானத்தின் ஆதாரம். என்னுடைய இரத்தத்தினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் உங்களுக்கு சுத்த மனசாட்சி இருக்காது. நான் உங்களை இரட்சித்திருக்கிறேன், என்னுடைய ஆவி உங்களில் இருக்கிறார். என்னுடைய சமாதானம் மாயையானதல்ல, மெய்யானது. நான் உங்களுக்குச் சமாதானத்தைத் தருவதற்காகவே நான் வந்திருக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு, என்னை விசுவாசியுங்கள்.”

“இந்த உலகத்தில் உங்களுக்குச் சமாதானம் இருக்கிறது என்று கருதாதீர்கள். இல்லை. இவ்வுலகில் உங்களுக்கு ஆபத்துகள்தான் இருக்கிறது. உபத்திரவமும், சுகவீனங்களும், ஏமாற்றங்களும், மரணமும், பயமுமே உங்களுக்குக் காத்திருக்கிறது. சட்டவாதிகள் உங்களைப் புறக்கணிப்பார்கள். எதையும் ஆழமாகச் சிந்திக்காதவர்கள் உங்களைப் பரிகசிப்பார்கள். ஆயிரக்கணக்கான பொய்களும் தத்துவங்களும் உங்கள் விசுவாசத்தைப் பரிசோதிக்கும். பெருமை எப்போதும் உங்களை நெருங்கி வரும். பணத்தை ஒருபோதும் நேசிக்காதீர்கள். அது உங்களைப் பாதுகாக்காது.”

“உலகத்தைவிட்டு உங்கள் கண்களைத் திருப்பி என்னை நோக்கிப் பாருங்கள். எனது வாழ்வைத் தியானியுங்கள், எனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுங்கள். என் அன்பை அறிந்து எனது தாழ்மையைப் பின்பற்றுங்கள். எனது சுய தியாகத்திலும் சுயவெறுப்பிலும் நிலைத்திருங்கள். நான் இந்த உலகத்தை வென்றேன். நான் எனக்காக எதையும் கேட்கவில்லை. நான் இறைவனுடைய பரிசுத்தராயிருக்கிறேன். “நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்ற கட்டளை என்னில்தான் நிறைவேறுகிறது. நானே அன்பின் முழுமையாயிருக்கிறேன், என்னில் பிதாவைக் காண்பீர்கள்.”

இயேசுவின் பிரியாவிடை பிரசங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் மனதில் கிறிஸ்துவின் சமாதானத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, அவர் பிதாவின் ஐக்கியத்தில் உங்களை இணைத்திருக்கிறார். இந்த சமாதானம் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இவ்வுலகம் தீமையுள்ளதாக இருந்து, உங்களுக்குப் பிரச்சனைகளைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் சாத்தானையும் மரணத்தையும் வெற்றிகொண்டவர் மீது நீங்கள் விசுவாசம் வைத்தால், இறைவனுடைய கோபத்திலிருந்தும் புறம்பான உபத்திரவத்திலிருந்தும் நீங்கள் காக்கப்படுவீர்கள். இயேசுவின் இந்தச் செய்தி உங்களை நிரப்பியிருக்கிறதா? “பிதா என்னுடையவர், குமாரன் எனது இரட்சகர், ஆவியானவர் என்னில் வாழ்கிறார். ஒரே இறைவன் என்னில் வாழ்கிறார். அவருடைய கிருபையில் நான் நிலைத்திருக்கிறேன்” என்று சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறாரா?

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் எனது இருதயத்தை வென்று என்னை விலைகொடுத்து வாங்கியிருக்கிறீர். பிசாசின் கண்ணிகளிலிருந்து நீர் என்னைப் பாதுகாத்து, அவனுடைய பொய்களின் சிறையிலிருந்து நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் நித்திய வாழ்வை எனக்குக் கொடுத்திருக்கிறீர். நான் உமக்குக் காத்திருக்கும்போது மரணத்திற்குப் பயப்படுவதில்லை. நான் அனைத்துப் பரிசுத்தவான்களுடனும் சேர்ந்து உம்மை ஆராதிக்கும்போது, நான் உம்மை மகிமைப்படுத்தும்படியாக என்னை உம்முடைய சித்தத்தில் வைத்து உமது வல்லமையினால் நிரப்பும். நான் சகோதரர்களை நேசித்து, உம்மால் வழிநடத்தப்படுகிறபடி சமாதானத்தை உண்டுபண்ணுபவனாக விளங்க உதவி செய்யும். நீரே வெற்றியாளராக இருப்பதால் உம்மையே சார்ந்திருக்கிறேன்.

கேள்வி:

  1. பிதா ஏன் நம்மை நேசிக்கிறார்? அவர் நம்மை எவ்வாறு நேசிக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)