Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 061 (The Secret of Deliverance and Salvation of the Children of Jacob)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)
5. யாக்கோபின் பிள்ளைகளுக்கு இருக்கும் நம்பிக்கை (ரோமர் 11:1-36)

ஈ) இறுதி நாட்களில் யாக்கோபின் பிள்ளைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் இரட்சிப்பை அடைதலின் இரகசியம் (ரோமர் 11:25-32)


ரோமர் 11:25-32
25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். 26 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; 27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. 28 சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்பு கூரப் பட்டவர்களாயிருக்கிறார்கள். 29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. 30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

பவுல் தனது கடிதத்தைப் பெறுபவர்களை தனது சொந்த சகோதரர்களாக கருதினான். இதன் மூலம் இறைவன் தன்னுடைய பிதா மட்டுமல்ல, அவர்களுடைய பிதாவுமாக இருக்கிறார் என்று அறிக்கையிட்டான். இறைவன் பெரியவராக இருக்கிறார் என்ற புரிந்துகொள்ளுதலில் முன்குறிக்கப்படுதல் குறித்த எல்லா சிந்தனைகள், ஆராய்ச்சிகள், ஆய்வு கட்டுரைகள் அனைத்தும் முழுமை பெற முடியாது. நம்முடைய பரிசுத்த பிதா அன்பு மற்றும் இரக்கத்தினால் நிறைந்தவராக இருக்கிறார். அவர் நாம் அறிந்திருக்கிற இறைவனாக, உயிருள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாக இருக்கிறார்.

இதற்குப் பின்பு பவுல் ஒரு இரகசியத்தைக் குறித்து பேசுகிறான். பரலோகப் பிதா இதைக் குறித்து தெளிவாக வெளிப்படுத்தும் வரைக்கும், பவுல் இதை புரிந்துகொள்ளவில்லை. எனவே பவுல், எல்லா விளக்கவுரையாளர்கள், பிரசங்கிகள் மற்றும் இறையியலாளர்களை யாக்கோபின் பிள்ளைகளைக் குறித்த தங்கள் சொந்த தத்துவங்களை கொண்டு வரும்படி கேட்கவில்லை. இறைவனுடைய வார்த்தையைக் கவனிக்கும் படி கூறினான். தனது சொந்த சிந்தனைகளை பிரசங்கிப்பவன் ஆபத்தில் இருக்கிறான். அவன் தன்னை ஞானம், விவேகம் உள்ளவனாக கருதினாலும் விரைவில் அழிந்துபோவான். ஆனால் விண்ணப்பத்துடன் இறைவனுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக் கொள்பவன், பரிசுத்த ஆவியின் வார்த்தையைக் கவனிப்பவன் நம்முடைய பரலோகப் பிதாவாகிய இறைவனின் அன்பின் இரகசியங்களை அறிவதில் வளர்கிறான்.

இறுதி நாட்களைக் குறித்து பவுல் பேசுபவைகளின் இரகசியத்தில் அநேக பகுதிகள் அடங்கியுள்ளன:

இஸ்ரவேலின் இருதயம் கூடாரத்துணியைப் போல கெட்டியாய் இருந்தது. அதன் அடியில் அமர்ந்தால் சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும். ஆனால் அவர்களுடைய கண்களை மறைக்கிறது, அவர்களது செவிகளை அடைக்கின்றது (எரேமியா 16:9-10).

எல்லோரும் அல்ல, ஆனால் யாக்கோபின் புத்திரரில் அநேகர் கடினமுள்ளவர்களாய் இருந்தார்கள். திருமுழுக்கு யோவானின் காலத்தில் உண்மையாகவே அநேகர் மனந்திரும்பினார்கள். கிறிஸ்துவின் இரட்சிப்பு வருவதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினான். அவனுடைய இறைமகிமையின் ஒளியை அவர்களும் அனுபவித்தார்கள்.

ஏசாயா புத்தகத்தில் கடினப்படுத்துதல் என்பது கிறிஸ்துவின் வருகைக்கு 700 ஆண்டுகள் முன்பு தோன்றியதாகும். (ஏசாயா 6:5-13) இதை இயேசு உறுதிப்படுத்தினார். (மத்தேயு 13:11-15). பவுல் துக்கத்துடன் இதைக் கூறினான். (அப்போஸ்தலர் 28:26-28). இந்த கடினப்படுத்துதல் என்பது யூதர்கள் மத்தியில் ஒரு பொதுபயமாக மாறியது. யூதர்கள் தங்கள் இராஜாவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள். பரிசுத்த ஆவியானவரைப் புறக்கணித்தார்கள். உலகின் எல்லா பகுதிகளுக்கும், ரோமர்கள் அவர்களை அடிமைகளாக விற்றார்கள்.

யூதர்களின் கடினப்படுத்துதல் என்பது என்றென்றும் தொடரும் என்பதல்ல. விசுவாசிகளின் நிறைவு உண்டாகும் வரை அது தொடர்கிறது. புறவினத்துப் பாவிகள் அழைக்கப்படுகிறார்கள். யூதர்கள் மனந்திரும்ப, மறுபிறப்படைய ஆண்டவர் இறுதி வாய்ப்பைக் கொடுக்கிறார்.

இறுதி நாட்களில் இரட்சிக்கப்படப் போகும் எல்லா இஸ்ரவேலரும் யார்? சபை அவருடைய மக்கள் குறித்த வரலாற்றை பேசும்போது, பவுல் யாரைக் குறித்த பேசுகிறான்? (குறிப்பு: தற்கால ஆராய்ச்சி என்பது அரசியல் சார்ந்த ஒன்றல்ல, அது ஆவிக்குரியதாகும்.

அ) இன்று இஸ்ரவேலில் யூதர்களின் கால் பங்கினர் வாழ்கிறார்கள், மற்ற மூன்று கால் பங்கினர் 52 நாடுகளில் சிதறி உள்ளார்கள்.
ஆ) “எல்லா இஸ்ரவேல்” என்பது மதம் சார்ந்த பக்தியுள்ள யூதர்களா? அல்லது மதத்தைக் குறித்து கவலைப்படாத சுதந்திர யூதர்களா?
இ) துரூஸ் மக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களும் இஸ்ரவேலில் உள்ளார்கள். அவர்கள் இஸ்ரேலில் பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள். “எல்லா இஸ்ரவேல் என்பது இந்த மக்களையும் உள்ளடக்குகிறதா? இல்லை. நிச்சயமாக இல்லை
ஈ) பரிசுத்த மீதமுள்ள ஜனம் தவிர இஸ்ரவேலில் ஒருவரும் இரட்சிக்கப்படுவதில்லை என்று ஆண்டவர் ஏசாயாவிற்கு முன்னறிவித்தார். அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி, கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும் வரைக்குமே. ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார். (ஏசாயா 6:11-13). அதாவது மீதமுள்ள அந்த ஜனம் தான் பூமியில் உள்ள உயிருள்ள இறைவனின் திருச்சபைக்கான பரிசுத்த வித்து ஆகும். கிறிஸ்துவின் மீதுள்ள அவர்களது விசுவாசம், அவர்களுடைய இரட்சிப்பை இது காண்பிக்கிறது.
உ) ஆண்டவர் தனது வெளிப்பாட்டில் தன்னுடைய ஊழியக்காரன் யோவானுக்கு இதை அறிவித்தார். அவருடைய தூதர்கள் இஸ்ரவேலில் 12 கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேரை முத்திரை போட்டார்கள். எல்லோரும் அல்ல, தெரிந்தெடுக்கப்பட்டோர் மட்டும் முத்திரையிடப்பட்டார்கள். 12 கோத்திரங்களின் பட்டியலில் தாண் கோத்திரம் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் மோசேயுடனும் அவருடைய மக்களுடனும் உள்ள இறைவனின் உடன்படிக்கையை விட்டு அவன் தன்னிச்சையாக வெளியே போனான். 1,44,000 பேர் மட்டுமே முத்திரையிடப்பட்ட மக்கள், மற்றவர்கள் மீட்கப்படவில்லை.
ஊ) ரோமர்களுக்கான நிரூபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறான். (ரோமர் 2:28,29) எல்லா யூதர்களும் யூதர் அல்ல. உள்ளான யூதனே யூதன், அவன் இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றவன். மறுபடியும் பிறந்தவன். மனித உரிமையின்படி ஒரு யூதத் தாய்க்கு பிறந்தவன் யூதன். ஆனால் ஆவிக்குரிய உண்மையின்படி யூதன் அல்ல. அவன் கிறிஸ்துவின் இரத்தத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். இயேசு யோவானுக்கு தனது வெளிப்பாட்டில், சில யூதர்கள் யூதர்களே அல்ல என்பதை இரண்டுமுறை அறிவிக்கிறார். (வெளி 2:9; 3:9)
எ) நற்செய்தி மற்றும் யோவானுக்கு வெளிப்படுத்தலில் நாம் வாசிக்கிறோம். “யூதர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள்”. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது இறுதி நேரத்தில் மீதமுள்ளோர் “மனந்திரும்புவார்கள்” என்பதை இந்த தீர்க்கதரிசனம் காண்பிக்கிறது.
ஏ) ஆண்டவர் தாவீதின் விட்டார் மீதும், எருசலேம் மக்கள் மீதும் கிருபையின் ஆவியைப் பொழிவார் என்று சகரியா தீர்க்கதரிசிக்கு சாட்சியிட்டான். அப்போது அவர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள். (சகரியா 12:10-14). யூதர்களின் மனந்திரும்புதல், இறுதிநாளில் அவர்களுக்கு ஏற்படும் மனமாற்றம் ஆகியவற்றை இந்த தீர்க்கதரிசனம் உணர்த்துகிறது. (மத்தேயு 23:37-39)

சுருக்கம்: கிறிஸ்துவின் பார்வையில் யார் உண்மையான இஸ்ரவேலன் என்பதை காண்பிக்க நாம் அவசரப்படக் கூடாது. இந்தப் பெயர் ஒரு அரசியல் அமைப்பு அல்ல குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கவில்லை என்று பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. அடிப்படையில் இது ஒரு ஆவிக்குரிய உண்மை ஆகும். இக்காலங்களில் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தையும், தெரிந்துகொள்ளப்பட்ட மெய்யாக மனந்திரும்பிய யாக்கோபின் புத்திரரையும் நாம் காண்கிறோம். இந்த எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில், அந்தி கிறிஸ்துவின் கைகளால் துன்புறுத்தப்பட்டு இரத்த சாட்சியாய் மடிவார்கள் என்பதை நாம் அறிவோம். எப்படியிருப்பினும் இரத்தசாட்சியான ஆத்துமாக்களை கிறிஸ்து தமது பரிசுத்த சிங்காசனத்திற்கு நேராகக் கொண்டுவருவார் (வெளி 13:7-10; 14:1-5).

ரோமருக்கு பவுல் எழுதிய நிரூபத்தை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் ஒவ்வொருவரும் (ரோமர் 11:26,27) யாக்கோபின் புத்திரருடைய இரட்சிப்பைக் குறித்த தீர்க்கதரிசனங்களில் குறிப்பிட்ட காரியங்களில் அடங்கியிருப்பதைக் காண்பார்கள்.

அ) மீட்பர் யாக்கோபின் புத்திரரில் அவிசுவாசத்தையும், மனக்கடினத்தையும் அகற்றுவார்.
ஆ) எரேமியாவில் வெளிப்படுத்தியதைப் போல புதிய உடன்படிக்கையின்படி அனைவரும் பாவ மன்னிப்பைப் பெறுவார்கள். (எரேமியா 31: 31-34) இயேசு தமது சீஷர்களுடன் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கை இதுதான் (மத்தேயு 26:26-28) இந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது.

இந்த புதிய உடன்படிக்கையின் நிமித்தம் மதரீதியான யூத நாடு நற்செய்திக்கு சத்துருவாக மாறும் என்று பவுல் கூறினான். இருப்பினும் கிறிஸ்துவின் மூலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் இரட்சிப்பை அடைவார்கள். விசுவாசத்தின் மூலம் இறைவனின் கிருபையை பற்றிக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் புறவினத்து அப்போஸ்தலன், ரோமாபுரி சபைக்கு எதிரிகளாய் இருந்து யூதர்களுக்கு, அவர்களது பிதாக்களின் விசுவாசம் மற்றும் உண்மையின் நிமித்தம் இறைவனால் இன்னமும் நேசிக்கப்படுகிறார்கள் என்று உறுதிப்படுத்தினான். இவ்விதமாய் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன், அவன் பாவம் செய்தாலும் அல்லது அவருடைய தெரிந்துகொள்ளுதலை புறக்கணித்தாலும் தொடர்ந்து இறைவனின் தெரிந்துகொள்ளுதலில் நிலைத்திருக்கிறான். அவனுடைய உண்மையின் நிமித்தம் விசுவாசிக்கும் நபர்களுக்கு இறைவனால் ஆவிக்குரிய வரங்களும், விசுவாசத்தின் ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றன. (ரோமர் 11:29) எனவே நம்முடைய தெரிந்துகொள்ளுதலை, நமது பரிசுத்தமாகுதலை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது. ஒரு குழந்தை தன்னுடைய தகப்பனை நம்புவதைப் போல இறைவனுடைய வார்த்தையை நம்ப வேண்டும்.

ரோமர் 11:30-31-ல் யாக்கோபின் புத்திரருடைய மீட்பைக் குறித்து பவுல் தனது நிரூபத்தில் இரண்டாம் கடிதத்தில் மீண்டும் கூறுகிறான். இந்த விளக்கங்களை ரோமாபுரி சபைக்கு எதிரானவர்களின் மனங்களில் அவன் உட்புகுத்தினான்.

அ) புதிய விசுவாசிகளாகிய நீங்கள் கடந்த காலத்தில் அவிசுவாசிகளாகவும், இறைவனுக்கு கீழ்ப்படியாதவர்களாகவும், பாவிகளாகவும் இருந்தீர்கள்.
ஆ) இப்போது இயேசு கிறிஸ்துவின் மூலமாக விசுவாசத்தினால் இறைவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் பெற்றிருக்கிறீர்கள்.
இ) யூதர்களின் கீழ்ப்படியாமை மற்றும் அவர்கள் இறைவனுடைய குமாரனை புறக்கணித்த காரணத்தினால் இந்த இரட்சிப்பு உங்களுக்கு சாத்தியமாகி உள்ளது.
ஈ) கிருபையினால் நீங்கள் இரட்சிக்கும் விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டீர்கள். யூதர்கள் கீழ்ப்படியாமை மற்றும் பாவம் நிறைந்தவர்களாக உள்ளார்கள்.
உ) அவர்களும் அளவற்ற இரக்கத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

பவுலினுடைய இந்த நிரூபத்தின் இரண்டாம் பகுதியை அறிந்து கொள்ள முற்படும் ஒவ்வொருவரும் இந்த கொள்கைகளை ஆழ்ந்து தியானிக்க முடியும். மேலும் அவர்கள் இழந்து போன மக்கள் மீட்கப்படும்படி விண்ணப்பங்கள் மற்றும் வேண்டுதல்களுடன் அவர்களை இறைவனிடம் திரும்பச் செய்வார்கள்.

பவுல் இந்த கொள்கைகளை கவனமாக ஆராய்ந்து இறைவனை ஆராதிக்க, அவரை துதிக்க அவர்களுக்கு ஒரு அஸ்திபாரத்தை போடுகிறான். எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (ரோமர் 11:32).

பவுல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒப்புரவாக்குதல் என்று பிரசங்கிக்கவில்லை. இறுதி நாட்களில் அவருடைய அன்பின் நிமித்தம் எல்லாப் பாவிகளையும் மீட்பார் என்று கூறவில்லை. விரும்புகிறவர்கள் அல்லது இரட்சிக்கப்பட விரும்பாதவர்கள் அனைவரையும் மீட்டு நரகத்தை அவர் வெறுமையாக்கவில்லை. இறைவன் சாத்தானை மீட்க வேண்டும் என்று விரும்புகிறவர்களின் நம்பிக்கை இது. எனவே அவர்கள் சாத்தானை ஆராதித்து, அவனுடன் பரதீசுக்குள் நுழைய முற்படுகிறார்கள். இது ஒரு வஞ்சனை ஆகும். இறைவன் அன்பும் சத்தியமும் உள்ளவர். அவருடைய நீதி ஒழியாதது.

எல்லா யூதர்களும் மனந்திரும்பி, இரட்சகரில் விசுவாசம் வைத்து இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுல் நம்பினான். இயேசு இவ்விதமாய் கேள்வி எழுப்புகிறார். நியாயத்தீர்ப்பு நாளில் அவருடைய வார்த்தையின்படி ஏழைகளை நேசிக்காத மக்களைப் பார்த்து, “அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.” (மத்தேயு 25:41) என்று கூறுவார். இந்த பயம் நிறைந்த உண்மையை வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானும் கூறுகிறான். (வெளி 14:9-14; 20:10; 15; 21:8).

விண்ணப்பம்: பரலோகில் உள்ள எங்கள் பிதாவே, உமது வாக்குத்தத்தங்கள் உண்மையாயும், எப்போதும் நிறைவேறுகிறதாயும் இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு கோத்திரத்திலும் உண்மையாய் மனந்திரும்பு, கிறிஸ்துவின் பரிகாரபலியை ஏற்றுக்கொள்கிற யாக்கோபின் புத்திரராகிய பரிசுத்தமுள்ள மீந்த ஜனத்திற்காக நன்றி செலுத்துகிறோம். அவர்கள் சமாதானத்தை பெறுகிறார்கள். உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நடக்கும்படி எங்கள் மக்களுக்கு உதவும். உம்முடைய வல்லமையினால் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், எங்கள் அன்புள்ள மீட்பரின் வருகையை எதிர்நோக்கி வாழவும் உதவி செய்யும்.

கேள்விகள்:

  1. ஏன் இறைவனின் வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தோற்பதில்லை, என்றென்றும் நிலைத்திருக்கிறது?
  2. ஆவிக்குரிய இஸ்ரவேலர் யார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 10, 2021, at 12:08 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)