Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 034 (Description of the Days of the Patriarchs)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)

அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)


அப்போஸ்தலர் 7:1-8
1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். 4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.6 அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.7 அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.

ஆலோசனைச் சங்கத்தின் விசாரணை குழு முன்பாக ஸ்தேவான் நின்றான். அவர் தனது முற்பிதாக்களின் நம்பிக்கையில் இருந்த தனது விசுவாசத்தை அறிக்கை செய்தான். அந்த விசாரணைக் குழுவினர் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டார்கள். அவன் வலியுறுத்தி சொன்ன காரியங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தினார்கள். அவன் பழைய ஏற்பாட்டின் மீது தனது கருத்துகளை வலியுறுத்தி சொல்கிறானா? அல்லது இறைவனுக்கு எதிராக நிந்தனை புரிகிறானா? என்பதை மிகவும் ஆர்வத்துடன் கவனித்தார்கள். ஏனெனில் இறை நிந்தனை செய்பவன் உடனடியாக கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். (லேவியராகமம் 24:16)

ஸ்தேவானின் மீது பிரதான ஆசாரியன் எந்தவொரு தனிப்பட்ட குற்றச்சாட்டையும் பதிவு செய்யவில்லை. ஆனால் அவனோடு உரையாடியவர்கள், இறை நிந்தனை குற்றச்சாட்டை முன்வைத்து அப்படிச் செய்தார்கள். முதன்மை நீதிபதி ஸ்தேவானிடம் கேட்டார். “குற்றம் சாட்டுபவர்கள் கூறுவது உண்மை தானா?”

ஸ்தேவான் மிகுந்த மரியாதையுடன் பதிலளித்தான். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிருக்கவில்லை. இருப்பினும் சகோதரரே, பிதாக்களே என்று அவர்களை அழைத்தார். நாட்டின் மிக உயர்ந்த மத அமைப்பிற்குரிய கனத்தை கொடுப்பவராக அவர் தன்னை காண்பித்து கொண்டான். அவர்களின் கவனத்தை அவன் ஈர்த்தான். தனது விசுவாசத்தின் சாட்சியை மிகுந்த பொறுமையுடன் கவனித்து கேட்கும்படி அவர்களை வேண்டிக்கொண்டான். செப்துவஜிந்த் என்பது பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். ஸ்தேவான் அதையோ அல்லது அரமேயு வசனங்களையோ பயன்படுத்தவில்லை. அவன் தனது விசுவாசத்தை அனைவராலும் நன்கு அறியப்பட்ட மொழிபெயர்ப்பின் வசனங்களை மேற்கோள் காட்டி நிரூபித்தான். அங்கு அமர்ந்திருந்த நீதிபதிகள் அனைவரும் தங்கள் இருதயத்தில் அறிந்து வைத்திருந்த வசனங்களையே அவன் பயன்படுதினான்.

ஈராக் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த ஆபிரகாமுக்கு மகிமையின் இறைவன் தோன்றியதை ஸ்தேவான் சாட்சி பகர்ந்தான். அவர் அவனை தெரிந்து கொண்டார். அவன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதாக வாக்குப்பண்ணினார். விசுவாசிகளின் தகப்பன் இறைவனை சந்திக்கும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. அவன் மற்ற மனிதர்களை விட அதிக நீதிமானாகவும் இல்லை. அது முற்றிலும் இறைவனின் சுதந்திரமான தெரிந்தெடுத்தல் ஆகும். ஒரு இடத்தில் நிலையாய் வசித்தவனை பயணம் செய்யும் நாடோடியாக மாற்றினார். அவர் அவனுடைய இடம், சொத்து, சுகவாழ்வு மத்தியிலிருந்து அவனை பிரித்து எடுத்தார். அவனை அறியாத ஓர் இடத்திற்கு அனுப்பினார். எல்லா நேரத்திலும் அவனை வழிநடத்துவதாக உறுதியளித்தார்.

நமது வசனப்பகுதியில் உள்ள ஒன்பது வினைச்சொற்களை கவனித்துப் பாருங்கள். அவைகள் இறைவனின் செயல்களை தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம், இந்த நிகழ்வுகள் அனைத்தும் மனித செயல்கள் அல்ல என்பதை நீங்கள் உணரமுடியும். மாறாக அவைகள் வரலாற்றில் இறைவன் நிறைவேற்றிய செயல்கள் என்பதை அறியமுடியும். உயிருள்ள ஆண்டவர் நமது பூமியில் இருந்து தூரமாக இருக்கவில்லை அல்லது அடைய முடியாதவராக இல்லை. மனிதனின் நடைகளில் அவர் ஆளுகைச் செய்கிறார். தலையிட்டு குறுக்கீடு செய்கிறார். மனிதனின் நடைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அவர், ஒரு மனிதனை தெரிந்துகொண்டார். தனது மீட்பின் திட்டத்தின் தொடக்கமாக அவன் இருக்கும்படி அவனை திருநியமனம் செய்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள வரலாற்றின் நோக்கம் ஆபிரகாமின் இறைபக்தி அல்லது அவனது வேண்டுதல்கள் அல்ல. மாறாக இறைவனின் மீட்பின் சித்தம் மற்றும் ஆசீர்வாதங்கள் ஆகும்.

ஆபிரகாம் இறைவனுக்கு ஓரளவு கீழ்ப்படிந்தார். அவர் தனது நாட்டை விட்டார். ஆனால் அவரது அப்பா மற்றும் அவரது தம்பி மகன் லோத்து ஆகியோரை விட ஆயத்தமாக இல்லை. ஆகவே இறைவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்பு கடின மலைப்பகுதிகளும், செழுமையான பள்ளதாக்குகளும், நிறைந்த கானான் பகுதியை அவன் அடைந்தான். அங்கு குளிர்காலத்தில் அதிகமான குளிரும், கோடை காலத்தில் அதிகமான வெப்பமும் காணப்படும். ஆபிரகாம் பரந்த நிலப்பகுதிகள் கொண்ட பரதீசை அந்த ஈராக் பகுதியில் காணவில்லை. கற்பாறைகளும், பாலைவனங்களும் அங்கு இருந்தது. இந்த மலைப்பகுதிகளில் மன உளைச்சலுடன் அலைந்தவனாக அவன் காணப்பட்டான். எந்த ஒரு பகுதியையும் அவனால் சொந்தமாக்கி கொள்ள முடியவில்லை. அவனுக்கு காண்பிக்கப்பட்ட எல்லா பகுதிகளும் அவனுக்கும், அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்படும் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். இருப்பினும் அவனுக்கு பிள்ளை இல்லாதிருந்தது. அவனுக்கு நிலப்பகுதி இல்லாதிருந்தும், பிள்ளை இல்லாதிருந்தும் இந்தக் காரியத்தில் ஆபிரகாம் தொடர்ச்சியான எதிர்பார்ப்புடன் வாழும்படி கற்றுக்கொண்டார்.இந்த விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மிக நீண்ட வருடங்களாக அவனது விசுவாசம் மறைந்திருந்த இறைவன் மீது இருந்தபடியால், அவன் எதையும் காணாதிருந்தும், தெளிவாக தெரியக்கூடிய விளைவுகள் இல்லாதிருந்தும் அவனை விசுவாசிகள் அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாக வைத்தது.

விசுவாசம் என்பது இறைவனின் அழைப்பு மற்றும் தெரிந்தெடுத்தலுக்கு மனிதனின் ஒப்பற்ற பதிலளித்தல் ஆகும் என்று இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்துவில் வெளிப்பட்ட இறைவனின் சத்தத்தை நீ கேட்கின்றாயா? உனது ஆவிக்குரிய சுதந்திரத்தை நீ விசுவாசிக்கின்றாயா? எந்தவொரு ஆசீர்வாதத்தையும் நீ உணராதிருந்தும் அல்லது தெளிவாக தெரியக்கூடிய விளைவுகள் ஏதும் காணாதிருந்தும் நீ அவரை நம்புகிறாயா? இறைவன் உண்மையுள்ளவர். அவர் உன்னை அழைக்கிறார். உன்னை பாதுகாக்கிறார். உனது தொடர்ச்சியான விசுவாசத்தின் மூலம் நீ அவரை கனப்படுத்த முடியும்.

இறுதியில் ஆபிரகாம், தனது விசுவாசம் இறைவனின் வாக்குத்தத்தத்தில் உள்ளது என்பதற்கான வெளிப்பாட்டை பெற்றான். அவனுக்கு ஒரு தேசம் கொடுக்கப்படும் என்ற காரியம் அவனது வாழ்நாள் காலத்தில் நிறைவேறவில்லை. அவனது குமாரனின் வாழ்நாள் காலத்திலும் ஏற்படவில்லை. அவனது சந்ததி நானூறு ஆண்டுகளாக எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தார்கள். இந்த மிக நீண்ட காலத்தை சிந்தித்துப் பாருங்கள். இறைவன் அடிமைத்தனத்தின் நுகத்திற்குள் ஆபிரகாமின் சந்ததியினர் போகும்படி அனுமதித்தார். அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லாதிருந்தது. இருப்பினும் இறைவன் அவர்களுக்கு தனது வாக்குத்தத்தத்தை செயலற்றுப் போகப்பண்ணவில்லை.

பரிசுத்தமான இறைவன் ஆபிரகாமுடனும் அவனது சந்ததியினருடனும் விருத்தசேதன உடன்படிக்கை செய்துகொண்டார். இதன் மூலம் ஆபிரகாமின் அனைத்து சந்ததியினரும் அளவற்ற ஆசீர்வாதங்களுக்குள் பிரவேசிக்கிறார்கள். இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு உடன்படிக்கையின் ஆசீர்வாதத்திற்குள் நிலைத்திருக்கும்படி ஆபிரகாம் இருவருக்கும் விருத்தசேதனம் பண்ணினான். இறைவனின் உடன்படிக்கை என்பது நியாயப்பிரமாண கட்டளைகளை கைக்கொள்வதை அடிப்படையாக கொண்டது அல்ல. அது அவருடைய தெரிந்தெடுப்பின் கிருபை மட்டுமே ஆகும்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே! கிறிஸ்துவுக்குள் நீர் எங்களை தெரிந்து கொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது ஒரே பேறான குமாரனின் இரத்தத்தினால் உருவாகிய புதிய உடன்படிக்கையில் பரிசுத்த ஆவியானவர் மூலமாக எங்களை நிலை நிறுத்தும். எங்களுக்கு விசுவாசம், மனஉறுதியை கற்றுத்தாரும். உமது ராஜ்யத்தின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கும்படி, உம்மில் நம்பிக்கை வைக்க கற்றுத்தாரும்.

கேள்வி:

  1. ஆபிரகாமின் வாழ்வில் காணப்பட்ட இரகசியம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)