Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 032 (Organization of the Church)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

19. திருச்சபை நிறுவனமும், ஏழு உதவிக்காரர்களை தெரிந்தெடுத்தலும் (அப்போஸ்தலர் 6:1-7)


அப்போஸ்தலர் 6:1-7
1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். 2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 6 அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். 7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

சீஷர்களின் எண்ணிக்கை பெருகிய போது, பந்தி விசாரிப்பில் பிரச்சனைகள் ஆரம்பித்தது. திருச்சபையை ஒழுங்குமுறைப்படுத்தி நிர்வாகிப்பது என்பது தேவையாய் இருந்தது. இந்தக் காரியம் இன்று நமது சபைகளில் எழும்பும் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. இந்தக் காரியம் நான்கு பிரச்சனைகளை உள்ளடக்கியிருந்தது. பிரச்சனைகளை தீர்க்கும்படி பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை ஆறு வழிகளில் வழிநடத்தினார்.

அக்காலத்தில் மத்திய கிழக்கு பகுதியில் விதவைகள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேவந்து வேலைசெய்யும்படி அனுமதிக்கப்படவில்லை. உதவி செய்யும் பெண்களாக யூதக்கிறிஸ்தவர்கள் இந்த விதவைகளை நியமித்தார்கள். கணவன் இறந்தபின்பு மறுமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், வியாதியுற்றோர் அல்லது குழந்தைகள் இல்லாதோர் இப்படிப்பட்ட பணிகளைச் செய்தார்கள். விசுவாசிகளான விதவைகளுக்கென்று ஓர் பந்தியை ஆதித் திருச்சபை ஏற்படுத்தியது. அப்போஸ்தலர்கள் பொதுவான நிதியை நிர்வாகித்து வந்தார்கள். மேலும் பந்தி விசாரணையை சிறப்பான வழியில் நிறைவேற்றும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆதித் திருச்சபையில் அரமேயு மொழி பேசும் யூதர்கள் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து முன்வந்தார்கள். அவர்கள் பாலஸ்தீனாவை விட்டுச் செல்லவில்லை. அவர்களது சொந்த நாட்டிலேயே இருந்தார்கள். அரமேயு அல்லது எபிரெயம் தெரியாத கிரேக்க மொழி மட்டும் பேசும் ஹெலனிஸ்டிக் யூதர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தார்கள். அவர்கள் தங்களது சொந்த நாட்டில் அந்நியர்களைப் போல காணப்பட்டார்கள். அரமேயு மொழியை எளிதாக உச்சரிக்கவோ அல்லது பேசவோ முடியாத நிலையில் இருந்தார்கள். ஆகவே அவர்களால் பிரச்சனைகளின்றி காரியங்களை புரிந்துகொள்ளவோ, அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாதிருந்தது. ஹெலனிஸ்டிக் யூதர்களைச் சேர்ந்த விதவைகள் முழுமையான கவனிப்பைப் பெறாததினால் மகிழ்ச்சியிழந்து இருந்தார்கள். தூர தேசங்களில் இருந்து வந்த கிறிஸ்தவர்களாகிய பர்னபா மற்றம் ஒரு சிலர் மிகப்பெரிய தொகையை ஏழைகளின் நலனுக்காக வழங்கியிருந்தும் இப்படிப்பட்ட நிலை காணப்பட்டது.

பிரசங்கங்கள், விண்ணப்பங்கள், உபதேசித்தல், கூட்டங்கள், வீடு சந்திப்புகள், குணமாக்குதல், பொது நிதியை நிர்வகித்தல், விசுவாசிகளை உறுதிப்படுத்துதல் என்று பல்வேறு காரியங்களில் அப்போஸ்தலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கூடுதல் பணியை துல்லியமாகவும், சரியாகவும் செய்யும் திறமையோ அல்லது அதற்கு போதுமான நேரமோ அவர்களுக்கு இல்லை. ஆகவே தங்களுடைய தேவைகளை அரமேயு மொழியில் வெளிப்படுத்த தெரியாதவர்களாக அந்த விதவைகள் இருந்தபடியால், அவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார்கள். இன்றைய நாளிலும் பிஷப்மார்கள் மற்றும் ஊழியர்கள் நிர்வாக மற்றும் ஆவிக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, எந்த ஒரு பணியையும் நன்றாகவும், சரியாகவும் செய்யமுடியாத நிலையில் உள்ளார்கள்.

அப்படிப்பட்ட நேரங்களில் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி பேசினால் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பிரச்சனைகள் தீர்க்கப்படாதபட்சத்தில் மிகப்பெரிய குறைகூறுதல் சபையில் எழும்பும். அன்பும், அனலும் மிக்க அவர்களது அன்பின் ஐக்கியம் உடைக்கப்பட ஏதுவாகும்.

சபையின் எல்லாப் பணிகளையும் அப்போஸ்தலர்கள் நிறைவேற்ற முடியவில்லை என்பதை உணர்ந்தார்கள். ஏனெனில் அப்போது சபையின் அங்கத்தினர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது. ஆகவே எல்லா நற்செயல்களை செய்வதற்கும், பணிகளை நிறைவேற்றவும் உதவியாளர்கள் அவர்களுக்கு தேவைப்பட்டதை அழுத்தமாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் இயேசுவின் குடும்பத்தை சேர்ந்தவர்களை இந்த சபையின் புதிய பணிக்கென்று தெரிவுசெய்யும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தவில்லை. உணவுகளை வாங்குவதற்கு, சமைப்பதற்கு, பரிமாறுவதற்கு என்று உதவியாளர் தேவைப்பட்டபோது, அவர்கள் முழு சபையையும் அழைத்தார்கள். அவர்களிடம் இந்த பணிக்கென்று ஏழு பேரை தெரிவுசெய்யும்படி கேட்டார்கள்.

எப்படி அப்போஸ்தலர்கள் இந்த தெரிவுசெய்தலின் அவசியத்தை நிரூபணம் செய்தார்கள்?

அவர்கள் கூறினார்கள் “எங்களால் போதுமான அளவு பிரசங்கிக்க இயலவில்லை” விண்ணப்பம் மற்றும் இறைவனின் வார்த்தை உணவை விட மேலானது, “மனிதன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, இறைவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ஆகவே அப்போஸ்தலர்கள் இதை முன்னிட்டு உபதேசித்தல் பிரசங்கித்தல் இவைகளை விட விண்ணப்பம் பண்ணுதல் மிகவும் முக்கியம் என்பதை தெளிவுபடுத்தினார்கள். இறுதியாக நாமும் பேசுவதற்கு முன்பாக விண்ணப்பத்தின் அவசியத்தை உணருவோம். இல்லையெனில் நமது உபதேசித்தல் மற்றும் பிரசங்கித்தல் வீணாக இருக்கும். பிரியமான விசுவாசியே, நீ தொடர்ந்து விண்ணப்பம் பண்ணுகிறாயா?

இந்த பந்தி விசாரிப்புப் பணிகளை செய்வதற்கு தகுதியானவர்கள் யார்? பரிசுத்த ஆவியினாலும், ஞானத்தினாலும் நிறைந்திருப்பவர்களே இதற்குத் தகுதியானவர்கள். முதலாவது நிபந்தனை இரண்டாவது பிறப்பு ஆகும். பரிசுத்த ஆவியின் நிறைவோடு அன்பு, பொறுமை, நம்பிக்கை விண்ணப்பத்தின் வல்லமை மற்றும் ஆர்வமுடன் பிரசங்கித்தல் இவைகளை நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது தகுதி என்பது அவர்களது வாழ்வின் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. ஞானம் என்பது மக்களுடன் இடைபடுவதை குறிக்கிறது. பணத்தை திறமையாக நிர்வாகித்தல், வாங்குவதில் தேர்ச்சி , பந்திவிசாரிப்பை சரியாக செய்தல் போன்ற காரியங்களை உள்ளடக்கியதாகும். ஆகவே சபையில் இந்தப் பணிக்கான நிபந்தனை இரண்டு பகுதிகளை உடையதாக இருந்தது. முதலாவது கிறிஸ்துவின் மீது விசுவாசத்துடன், மிகுந்த தாழ்மையோடு, நிறைவான அன்பை வெளிப்படுத்துவது ஆகும். இரண்டாவது நடைமுறை சேவைப் பணிகளில், போதுமான அனுபவம், மற்றும் பந்திவிசாரிப்பு காரியங்களில் ஞானம் மற்றும் அறிவுடன் செயல்படுவது ஆகும்.

அவர்களை தேர்வு செய்வதில் அப்போஸ்தலர்கள் பங்கேற்கவில்லை. சபையாக அனைவரும் முன்வந்து பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், ஞானத்தினாலும் நிறைந்திருந்த ஏழு பேரை தெரிந்து எடுத்தார்கள். விதவைகளுக்கு பந்தி பரிமாறுகிற பணியில் இயேசு சரியான மனிதர்களை தெரிந்தெடுக்கும் படி அப்போஸ்தலர்கள் விண்ணப்பம் செய்தார்கள். தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பார்ப்போமென்றால், அவர்களில் அநேகர் கிரேக்கர்கள் அல்லது ஹெலனிஸ்டிக் யூதர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அந்த பெயர்கள் கிரேக்கப் பெயர்கள். அவைகள் எபிரெய மொழி பெயர்களாக இல்லை. நாம் ஸ்தேவான் மற்றும் பிலிப்புவைக் குறித்து அதிகம் வாசிக்கிறோம். இங்கே நாம் அந்தியோகியா என்ற பெயரை முதல் முறையாக வாசிக்கிறோம். இதுவே பின்பு, அருட்பணிக்கான மையமாகத் திகழ்ந்தது. கிறிஸ்தவராக மாறும் முன்பு, புறமதத்திலிருந்து யூதமதத்திற்கு மாறியிருந்த நிக்கானோர் மற்றும் நற்செய்தியாளர் லூக்கா இந்த சபையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். திருச்சபையில் ஆக்கப்பூர்வ செயல்கள் ஹெலனிஸ்டிக் யூதர்களிடம் இருந்து வெளிப்படுவதை இந்நேரம் முதற்கொண்டு நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கமுடியும். அவர்கள் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து வந்தார்கள். நற்செய்தி பரவுவதற்கு மிகப்பெரிய பங்கை அவர்கள் நிறைவேற்றினார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கூட இப்படிப்பட்ட குழுவில் ஒருவராகத் தான் இருந்தார்.

திருச்சபையானது ஏழுபேரைத் தெரிவு செய்த பிறகு, அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பு நிறுத்தியது. அவர்கள் கரங்களை அவர்களுடைய தலைகளின் மேல் வைக்கும் படியாக அப்படிச் செய்தார்கள். அப்போஸ்தலர்களுக்கு அருளப்பட்ட வல்லமை புதிதாக நியமிக்கப்பட்ட மனிதர்களுக்கு கடந்து சென்றது. அந்த ஏழு பேரும் ஏற்கெனவே பரிசுத்த ஆவியைப் பெற்று, ஆவியானவரால் நிறைந்திருந்தார்கள். இருப்பினும் அப்போஸ்தலர்களில் தங்கியிருந்த விசேஷித்த வல்லமையை விசுவாசிகள் அறிந்திருந்தார்கள். ஆகவே திருச்சபையானது தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்களை, அவர்களுடைய பணிக்கென்று அப்போஸ்தலர்கள் பிரதிஷ்டை செய்யும்படி கேட்டுக்கொண்டது. பொறுப்பு வகித்த அப்போஸ்தலர்கள் மற்றும் முழுசபைக்கும் இடையே காணப்பட்ட ஐக்கியத்தின் மூலம் இந்த காரியம் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் அப்போஸ்தலர்கள் கைகளை வைத்து விண்ணப்பம் செய்த போது ஆண்டவருடைய வல்லமை அவருடைய ஏழு ஊழியர்களை ஆட்கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார்கள்.

இந்த உதவிக்காரர்களின் பணியை விட அப்போஸ்தலர்களின் பணி உயர்வானது என்று கருதப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே ஆண்டவரைப் பெற்றுள்ளார்கள். ஒரே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டுள்ளார்கள். அப்போஸ்தலர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போஸ்தலப் பணிகளை மட்டும் அவர்கள் நிறைவேற்றினார்கள். உதவிக்காரர்களின் பணியோ, வெறுமனே பந்தி விசாரிப்புடன் நின்றுவிடவில்லை. ஏழுபேரில் ஒருவனாகிய ஸ்தேவான் கிறிஸ்துவுக்கு மிகப்பெரும் சாட்சியாக மாறினான். பின்பு கிறிஸ்தவத்தில் முதல் இரத்த சாட்சியாக மரித்தான். பிலிப்பு ஓர் நற்செய்தியாளராகவும் செயல்பட்டார். எத்தியோப்பிய மந்திரிக்கு ஆண்டவருடைய வல்லமையைக் குறித்து பிரசங்கித்தான். அவனுக்கு திருமுழுக்கு கொடுத்தான். அந்த உதவிக்காரர்கள் பந்திவிசாரிப்புப் பணிகளை செய்வதோடு நின்றுவிடாமல், கிறிஸ்துவின் வலிமை மிகுந்த சாட்சிகளாக காணப்பட்டார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

எண் 3 என்பது பரலோகத்தின் குறியீடாக உள்ளது. எண் 4 என்பது பூமியின் குறியீடாக உள்ளது. அப்போஸ்தலர்கள் எண்ணிக்கை 12 ஆக இருந்தது. 12 என்பதை 3 பெருக்கல் 4 எனக் குறிப்பிட முடியும். உதவிக்காரர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. அதாவது 3+4 என்பது இரண்டு காரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்துவால் தெரிந்தெடுக்கப்பட்ட இவர்களில் பரலோகமானது பூமியுடன் இணைக்கப்பட்டது.

விசுவாசிகள் மத்தியில் வார்த்தை மாம்சமாகி வெளிப்பட்டதைப் போல, சபையின் இந்தப் பணி மூலம், அது வளர்ச்சியடைய ஆரம்பித்தது. நற்செய்தியாளர் கூறுகிறார். “வசனம் எங்கும் பரம்பிற்று”. எருசலேமில் விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகியது. ஆலோசனைச் சங்கம் இயேசுவின் நாமத்தைக் குறித்த சாட்சியை தடை செய்திருந்தும், சபை வளர்ந்தது. பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் தங்கள் முதுகுகளில் வலி மற்றும் வேதனையுடன் கூடிய அடையாளங்களை இன்னமும் பெற்றிருந்தார்கள்.

பிரதான ஆசாரியர்கள் திருச்சபையின் மோசமான எதிரிகளாக காணப்பட்ட போதிலும், அநேக ஆசாரியர்கள் தங்களை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வந்தது ஓர் ஆச்சரியமான காரியம். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களில் இவ்விதம் வல்லமையாக செயல்பட்டார். இறைவனுடைய அன்பின் வல்லமையை ஆசாரியர்களும் அனுபவித்தார்கள். அநேகர் மனந்திரும்பினார்கள், நற்செய்திக்கு கீழ்ப்படிந்தார்கள். அவர்களது புதிய விசுவாசத்தின் விளைவாக அவர்களது பணிக்கு ஆபத்து நேரிட்டது. இருப்பினும் கிறிஸ்துவின் அழைப்பு அவர்களைத் தொட்டது. அநேகர் உண்மையாய் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் புதிய விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்து வந்தார்கள்.

அருமையான சகோதரனே, நற்செய்தியின் நல்ல அம்சத்தை நீ புரிந்து கொண்டாயா? நீ இறைவனுடைய அழைப்பைப் பெற்றுள்ளாயா? பரிசுத்த ஆவியானவரின் அழைப்புக்கு நீ கீழ்ப்படிந்தாயா? விண்ணப்பத்துடன் கிறிஸ்துவுக்கு உன்னை ஒப்புக்கொடு. நீ அவரை அறியாதிருந்தும் அவர் உனக்காக தனது உயிரை கொடுத்துள்ளார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீரே உலக ரட்சகர். நீர் பாவிகளை மீட்கிறீர். நீர் உமது சபையை வெற்றியாய் வழிநடத்துகிறீர். நீர் விசுவாசிகளுக்கு புதிய நாவுகளைத் தருகிறீர். அவர்கள் உமது நாமத்தை மகிமைப்படுத்துகிறார்கள். இன்னும் அநேகரை இரட்சியும். அப்போது அவர்கள் உமது அன்பின் திருச்சபையுடன் இணைந்து கொள்வார்கள். உமது நித்திய ஐக்கியத்தை விட்டு விலகிச் செல்லும் அநேகரை நீர் உம் பக்கமாக அழைத்து சேர்த்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. இயேசு எவ்விதம் தமது ஆவியானவரில் ஏழு உதவிக்காரர்களை தெரிந்தெடுத்தார்? இது இன்றைக்கு நமக்கு என்ன பொருள் தருகிறது?

வினாக்கள் – 2

அருமையான வாசகரே,
நீங்கள் இந்த சிறிய புத்தகம் மூலம் அப்போஸ்தலர் நடபடிகளுக்கான எங்களது விளக்கங்களை படித்துள்ளீர்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதுங்கள். நீங்கள் 90 கேள்விகளுக்கு சரியான பதில் எழுதினால், நாங்கள் இதனுடைய தொடர்ச்சியை உங்களுக்கு அனுப்பி வைப்போம். உங்களது பக்திவிருத்திக்கு இது உதவியாக இருக்கும். தயவுசெய்து உங்களது முழுப்பெயர் மற்றும் முகவரியை தெளிவாக பதில் தாளில் எழுதுங்கள்.

  1. “நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்” – இந்த சொற்றொடரின் பொருள் என்ன?
  2. “நாசரேத்தூர் இயேசுவின் நாமத்தின் மீது விசுவாசம்” என்பதின் அர்த்தம் என்ன?
  3. மனுக்குல வரலாற்றின் நோக்கம் என்ன?
  4. ஆலோசனைச் சங்கம் மற்றும் இரண்டு அப்போஸ்தலர்களின் சந்திப்பு நமக்கு எதை சிறப்பித்துக் கூறுகின்றது?
  5. பிரதான ஆசாரியர்கள் முன்பு பேதுரு பேசிய வார்த்தைகளின் முக்கியத்துவம் என்ன?
  6. ஏன் முழு உலகிற்கும் இரட்சிப்பு என்பது இயேசுவின் நாமத்தில் மட்டும் மையப்படுத்தப்பட்டுள்ளது?
  7. பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதற்கு இறைவனின் வார்த்தையை அறிவிப்பது தேவையானதும், அவசியமானதுமாக உள்ளது ஏன்?
  8. ஆதி கிறிஸ்தவ ஐக்கியத்தில் காணப்பட்ட குணாதிசயங்களில் எந்த ஒன்று உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
  9. பரிசுத்த ஆவியானவர் ஏன் உடனடியாக அனனியாவின் மரணத்தை கொண்டு வந்தார்?
  10. திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய ஆவிக்குரிய கடமை என்ன?
  11. ஆதித் திருச்சபையில் காணப்பட்ட தாராளமனதின் இரகசியம் என்ன?
  12. சிறையிலிருந்து அப்போஸ்தலர்களுக்கு தூதன் இட்ட கட்டளையின் முக்கியத்துவம் என்ன?
  13. அப்போஸ்தலர்கள் அவர்களுடைய நியாயாதிபதிகள் முன்பு வைத்த வாதங்களில் உங்களைக் கவர்ந்தது எது?
  14. ஆலோசனைச் சங்கம் அளித்த தீர்ப்பு கிறிஸ்தவ திருச்சபையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் எப்படி முக்கியத்துவம் பெற்றதாய் உள்ளது?
  15. இயேசு எவ்விதம் தமது ஆவியானவரில் ஏழு உதவிக்காரர்களை தெரிந்தெடுத்தார்? இது இன்றைக்கு நமக்கு என்ன பொருள் தருகிறது?

அப்போஸ்தலர் நடபடிகளுக்கான தேர்வை நீங்கள் எழுதிமுடிக்க நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். நீங்கள் நித்திய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம். உங்களது பதில்களுக்காக காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம்.

எங்களது முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)