Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 036 (Christ raises the dead and judges the world)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

3. கிறிஸ்து மரித்தோரை உயிர்ப்பித்து உலகத்தை நியாயம்தீர்க்கிறார் (யோவான் 5:20-30)


யோவான் 5:20-23
20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். 21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். 22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.

இந்த வேலைகள் மனிதர்களால் செய்ய முடியாதவைகள், ஆனால் இயேசு அவற்றைச் செய்கிறார். அவற்றைச் செய்து முடிக்கும்படி பிதா குமாரனிடத்தில் ஒப்படைக்கிறார். கிறிஸ்துவின் இரண்டு குணாதிசயங்கள் தீர்க்கதரிசனமாக உரைக் கப்பட்டிருப்பதை நாம் இங்கே பார்க்கிறோம். இந்த இரண்டு காரியங்களையும் செய்யும் மனிதனையே யூதர்கள் எதிர் பார்த்தார்கள். மரித்தோரை உயிரோடு எழுப்புதல், உண்மையாக நியாயம்தீர்த்தல் ஆகியவையே அப்பணிகள். அவையிரண்டும் தன்னால் செய்யப்படும் என்று இயேசு இங்கே வலியுறுத்துகிறார். இயேசு தன்னுடைய எதிரிகளின் முன்னிலையில், அவர்கள் அவரை பைத்தியக்காரன் என்றும் தேவதூஷணக்காரன் என்றும் கருதிய போதிலும், தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப் போகிற ஜீவனின் அதிபதி என்று முன்னுரைத்தார். அவர்கள் அவரைக் கொலைசெய்ய முடிவு செய்தார்கள். இந்தக் கூற்றின் மூலமாக இயேசு அவர்களை மாற்றி, சரியாகச் சிந்திக்க வைத்து, உண்மையில் மனந்திரும்பச் செய்ய விரும்பினார்.

நம்முடைய இறைவன் அழிப்பவர் அல்ல, ஜீவனைக் கொடுப்பவர். அவர் பாவியின் மரணத்தை விரும்பாமல் அவன் தன்னுடைய பாவ வழிகளைவிட்டு விலகி ஜீவனுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். இறைவனைப் புறக்கணிப்பவர் களின் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய அனைத்தும் மெது மெதுவாக அழிந்து போகும். யாரெல்லாம் கிறிஸ்துவினிடத்தில் வருகிறார்களோ அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள். நீங்கள் எழுப்பப்பட வேண்டும் உயிர்மீட்சி யடைய வேண்டும் என்றே இரட்சகர் விரும்புகிறார். நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களா? அல்லது பாவமும் குற்றமுமுள்ள வாழ்வில் தொடர்ந்து நிலைத்திருக்கப் போகிறீர்களா?

நித்தியத்திலிருந்தே இந்த அண்டம் சத்தியத்தின்மீது கட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் ஆண்டவரைப் பற்றி கவலையின்றி, ஒருவரையொருவர் வஞ்சித்து, கொன்று வாழ்ந்து வந்தாலும், சத்தியம் மாறுவதில்லை. நியாயத்தீர்ப்பு நாள் கணக்குக் கொடுக்கும் ஒரு மாபெரும் நாள். இறைவனுடைய பழி மிகக்கொடுஞ்செயல் புரியும் அனைவரின்மேலும் விழும், சிறப்பாக விதவைகளையும் பெலவீனரையும் முறைகேடாக நடத்துகிறவர்கள் கடுமையாக பழி தீர்க்கப்படுவார்கள். அனைத்து நியாயத்தீர்ப்பையும் இறைவன் கிறிஸ்துவிடம் கொடுத்திருக்கிறார். அவர் அனைத்து மக்களையும் மதங்களையும் நியாயம் தீர்ப்பார். இயேசு பாவமில்லாத மனிதராகக் காணப் பட்டார். அதனால் அவர் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவராகவும் நம்முடைய பெலவீனங்களை உணரக் கூடியவராகவும் இருக்கிறார். அவருடைய நியாயத்தீர்ப்பு நீதியான நியாயத்தீர்ப்பு. அவர் மகிமையில் தோன்றும் போது பூமியில் உள்ள கோத்திரங்கள் எல்லாம் நியாயாதிபதியை புறக்கணித்து, வெறுத்து, ஒதுக்கிவிட்டோமே என்று புலம்புவார்கள். இதை நீங்கள் உணருகிறீர்களா?

அப்பொழுது அனைவரும் அவருக்கு முன்பாக தங்களுடைய முழங்கால்களை முடக்குவார்கள். இவ்வுலகில் கிறிஸ்துவின் ஆராதனையைப் புறக்கணித்தவர்கள் அந்நாளில் பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரைக் கனப்படுத்துவார்கள். கிறிஸ்துவே எல்லா வல்லமைக்கும், ஐசுவரியத்திற்கும், ஞானத்திற்கும், கனத்திற்கும், மகிமைக்கும் பாத்திரர் (வெளி. 5:12). அவர் நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருக்கிறபடியால் அவர் உலகத்தைப் பிதாவோடு ஒப்புரவாக்கியிருக்கிறார். பிதாவும் குமாரனும் அன்பிலும், வல்லமையிலும், செயல்களிலும் மட்டுமல்ல, அவர்களுக்குச் செலுத்தப்படும் ஆராதனையிலும் கனத்திலும்கூட ஒன்றாயிருக்கிறார்கள். அதனால்தான் இயேசு இவ்வுலகில் இருந்தபோது தன்னைத் தொழுதுகொண்ட யாரை யும் தடைசெய்யவில்லை. நாம் பிதாவைக் கனப்படுத்துவதைப் போலவே குமாரனையும் கனப்படுத்த வேண்டும். நம்முடைய விண்ணப்பங்களில் நாம் பிதாவை நேரடியாக அணுகுவதைப் போல குமாரனையும் அணுக வேண்டும்.

கிறிஸ்துவைப் புறக்கணித்து அவரைக் குறைத்து மதிப்பிடுகிற எவரும் பிதாவைப் புறக்கணிக்கிறார்கள். மக்கள் கிறிஸ்துவின் குமாரத்துவத்தையும் ஆராதனையையும் புறக்கணிப்பதற்கான முக்கிய காரணம் அவர்களுடைய தீமையான மனநிலையே ஆகும். அவர்கள் அவரை அறிய விரும்பவில்லை, ஆகவே அவர் களால் உண்மையில் இறைவனை அறிய முடியாது.

யோவான் 5:24
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறிஸ்துவின் நற்செய்தியை மகிழ்ச்சியோடு கேட்டு, அவருடைய குமாரத்துவத்தை விசுவாசிக்கிறவன் நித்திய வாழ்வைப் பெற்றுக் கொள்கிறான். நித்திய வாழ்க்கை என்பது மரணத்தின் பிறகு ஆரம்பிக்கிற ஒரு வாழ்க்கை அல்ல, அது பரிசுத்த ஆவியானவர் மூலமாக இவ்வுலகிலேயே கொடுக்கப்படும் வாழ்க்கையாகும். நீங்கள் பிதாவிலும் குமாரனிலும் விசுவாசம் வைத்தபடியால் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது இறங்குகிறார். கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை ஆயிரம் முறை கேட்டு, அதை வாசித்து, அதன் பொருளை ஆராய்ச்சி செய்தாலும் எல்லாராலும் அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. குமாரனுடைய கிருபை யைப் பற்றியும் ஆவியில் நடப்பதைப் பற்றியும் அவர்கள் பேச மாட்டார்கள். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவருடன் இணைந்திருப்பதே மெய்விசுவாசம் ஆகும். கிறிஸ்துவுடன் இப்படிப்பட்ட உடன்படிக்கைக்குள் நீங்கள் நுழையும்போது, நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பிலிருந்து விடு விக்கப்படுகிறீர்கள். ஏனெனில் விசுவாசமே உங்களை இரட்சிக் கிறது, உங்களுடைய செயல்கள் அல்ல. சிலுவையில் தஞ்சமடை பவர்களை கிறிஸ்துவின் அன்பு மூடிப்பாதுகாத்து, அவர் களுடைய பாவங்களை அகற்றி, அவர்களுடைய மனசாட்சியைச் சுத்திகரிக்கிறது. நம்முடைய புதிய பிறப்பினால் நித்தியமான இறைவன் நம்முடைய பிதாவாகிவிட்டபடியால் அவரிடம் தைரியமாகச் செல்லும்படி அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் நீதிமானாக்கப்படுவதின் விளைவாகவே மறுபிறப்படை கிறோம்.

கிறிஸ்துவின் மாபெரும் வாக்குறுதியை நீங்கள் உணர்ந் திருக்கிறீர்களா? நீங்கள் மரணத்திலும் அதன் பயங்கரங்களிலி ருந்தும் விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் கிருபையினால் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்கள். இறைவனுடைய கோபம் உங்கள் மேல் விழாது.

கிறிஸ்துவின் மீது உங்களுக்கிருக்கும் விசுவாசம் உங்களை மாற்றியிருக்கிறது. பரிசுத்த நித்திய வாழ்வு இப்பொழுது உங்களுக்குரியது. கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் தொடர்பு அறிவு பூர்வமானது மட்டுமல்ல, அது நடைமுறைக்குரிய, உண்மை யானது. நாம் கிறிஸ்துவில் நிலைத்திருப்பதைக் காட்டிலும் பெரிய இரட்சிப்பு வேறு எதுவும் கிடையாது. 24ம் வசனத்தை மனப்பாடம் செய்யுங்கள், அவருடைய வாழ்வை உங்களுக்குள் பதிய வையுங்கள், நாம் நித்தியத்தில் முகமுகமாய்ச் சந்திப்போம்.

விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய கடவுளே, நீர் எங்களுடைய பாவத்தை மன்னித்து, நீதிமான்களாக்கியபடியால் நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்முடைய கோபம் எங்களைவிட்டு கடந்துபோன காரணத்தினால் நாங்கள் நியாயத்தீர்ப்பைச் சந்திப்பதில்லை. உம்முடைய வாழ்வு எங்கள் மீது ஊற்றப்பட்டிருப்பதால் எங்களுடைய மரணம் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் நித்தியமாக உமக்கென்று வாழ்வோம். நாங்கள் உம்முடைய நாமத்தை கனப்படுத்தும்படி எங்களை உம்மில் உறுதிப்படுத்தும்.

கேள்வி:

  1. கிறிஸ்து நிறைவேற்றும்படி பிதா குமாரனிடம் கொடுத்துள்ள இரண்டு முக்கியமான பணிகள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:03 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)