Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 042 (In Christ, Man is Delivered)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

6. கிறிஸ்துவுக்குள்ளாக மனிதன் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து விடுவிக்கப்படுகிறான் (ரோமர் 8:1-11)


ரோமர் 8:3-8
3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

பழைய உடன்படிக்கை நம்முடைய உடலில் உள்ள இச்சைகளையும் பாவங்களையும் மேற்கொள்ள முடியாததாக இருப்பதால், புதிய உடன்படிக்கையை கிறிஸ்து ஏற்படுத்தினார். இறைமகனுடைய மனுவுருவாதலே புதிய உடன்படிக்கையின் ஆரம்பமாகும். அவர் இவ்வுலகத்தில் மனிதனுடைய உடலில் தோன்றிய போது பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் வாழ்ந்த காரணத்தினால் அவர் தம்முடைய மனித உடலில் இருந்த பெலவீனத்தை மேற்கொண்டார். அதனால் தீமை அவருக்கு எதிராக முறையிட முடியவில்லை. கிறிஸ்துவினுடைய தூய வாழ்க்கை பாவத்தை நியாயந்தீர்த்து, கட்டுப்படுத்தி, அழிக்கிறதாக இருக்கிறது.

அவர் பெற்றிருந்த மனித உடலில் இருந்த பாவ சுபாவத்தை அவரில் குடிகொண்டிருந்த பரிசுத்த ஆவியானவர் அழித்துவிட்டிருந்த காரணத்தினால் அவர் எல்லாத் தருணங்களிலும் பரிசுத்தமுள்ளவராக வாழ்ந்தார். ஆகவே, அவர் குற்றமில்லாதவராக வாழ்ந்தார். அவருடைய அன்பிலும் இரக்கத்திலும் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றினார். அவருடைய வாழ்வின் உச்சகட்டத்தில் தம்முடைய உடலில் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்து, தம்முடைய மரணத்தினால் இறைவனுடைய நீதியைக்கொண்டு நம்மை மூடினார். நீதிமானாக்கும் இந்த தெய்வீகச் செயலை நாம் கொள்கை ரீதியாக, நம்முடைய பாரம்பரிய நம்பிக்கையின்படி உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில், இறைவனுடைய நீதி சத்தியத்தின் மீது கட்டப்பட்ட நியாயமான அன்பாகக் காணப்படுகிற காரணத்தினால், அது நம்முடைய நடைமுறை வாழ்வில் வெளிப்படுகிறது. இறைவனுடைய இந்த மாபெரும் அன்பு விசுவாசிகளுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பதால் அவர்கள், “கிறிஸ்து எங்களில் வாழ்கிறார். அவர்கள் எங்களை வழிநடத்தி, நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி எங்களைத் தூண்டுகிறார்” என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய சீரழிந்த இச்சைகளின்படி நடக்க முடியாது. அதற்கு மாறாக, பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி நன்றியோடும், மகிழ்ச்சியோடும், ஆறுதலோடும் அவன் நடந்துகொள்வான்.

சில முக்கியமான கேள்விகள் உங்களிடத்தில் கேட்கப்படுகிறது: நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் மனிதனாக இருக்கிறீர்களா? கிறிஸ்து உங்களில் குடிகொண்டிருக்கிறாரா? இவ்வுலகத்தின் மீட்பர் உங்கள் இருதயத்தில் மையம் கொண்டிருக்கிறாரா? அவர் தரும் புதிய வாழ்விற்குரியவர்களாக நடக்கும்படி அவருடைய சிலுவை மரணம் உங்களை நீதிமானாக மாற்றியிருக்கிறதா? விசுவாசம் என்பது மாயத் தோற்றமோ கற்பனையோ அல்ல. அது நீதிமான்களாக்கப்பட்ட மனித உடல்களில் வாழும் ஆவிக்குரிய வல்லமையாகவும் இறைவனுடைய இருப்பாகவும் இருக்கிறது.

ஒரு ஆவிக்குரிய மனிதன் தன்னுடைய ஆர்வங்களினால் அறியப்படுகிறான். அவன் பாவ மன்னிப்பிலும் சமாதானத்திலும் ஆர்வமுள்ளவனாக இருக்கிறான். நீங்கள் சமாதானம் செய்கிறவராக இருக்கிறீர்களா? பல மனிதர்கள் புதுப்பிக்கப்பட்டு, இறைவனுடைய மனிதர்களாக மாறும்படி, இறைவனோடு மனிதர்கள் அனைவரும் ஒப்புரவாக வேண்டும் என்ற செய்தியை நீங்கள் அனைவருக்கும் அறிவிக்கிறீர்களா? இதன் மூலமாகவே மாம்சத்திற்குரிய மனிதர்களுடைய வாழ்வில் தெய்வீக அன்பு உணரப்படும். அவர்களுடைய வாழ்விலும் ஆவிக்குரிய காரியங்களில் ஆர்வமுள்ளவர்களாக மாறுவார்கள்.

ஆயினும், இறைவனுடைய ஆவியில்லாமல் வாழ்கிறவர்கள், மாம்சத்திற்குரியவர்களாகவும், பெலவீனமானவர்களாகவும் இருந்து, தங்கள் எண்ணத்திலும் நடத்தையிலும் பரிசுத்த திரித்துவத்திற்கு எதிரான காரியத்தைச் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உலக விருப்பங்களையும் இச்சைகளையுமே இறைவனாகத் தொழுதுகொள்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதன் மரணத்தையும், இறைவனுடைய கோபத்தையும், இறுதி நியாயத்தீர்ப்பையுமே விரும்புகிறான். மாம்சத்திற்குரிய மனிதன் ஆண்டவருடைய நியாயப்பிரமாணத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பமாட்டான். ஆனால் தன்னுடைய கொடிய விருப்பங்களினால் இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்வான். அவன் இறைவனை நேசிப்பதும் இல்லை, அவரைப் பிரியப்படுத்த நாடுவதும் இல்லை. அவன் தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய மனிதனாகக் காணப்படுகிறான். எந்தவொரு மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் குடிகொண்டிருக்கவில்லையோ, அந்த மனிதன் தொலைந்துபோன நிலையில் வாழ்கிறான். அவன் தொடர்ந்து அழிவை நோக்கிச் செல்கிறான். வேறு வார்த்தைகளின் சொன்னால், அன்பின் ஆவியானவரைப் பெற்றிராத எவனும் கிறிஸ்துவினுடையவன் அல்ல, அவன் சாத்தானுடைய அடிமை.

ஆனால், ஆவிக்குரிய மனிதனோ உணர்வுள்ளவனாக இருக்கிறான். அவன் இறைவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட சமாதானத்தைக் காத்துக்கொள்கிறான், தன்னுடைய எதிரிகளை நேசிக்கிறான், அனுதினமும் தனக்கு இறைவனுடைய பாதுகாப்பும் சக்தியும் தேவை என்று அவரிடம் மன்றாடுகிறான். எந்தவொரு மனிதனும் அழிந்து போகாமல் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, வாழ்வுக்கும் அமைதிக்கும் ஊற்றுக்கண்ணாகிய கிறிஸ்துவினிடத்தில் அனைவரும் வரவேண்டும் என்று அவன் விரும்புகிறான். நீங்கள் இறைவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, அவரால் வழிநடத்தப்பட்டு, பெருமையின்றி, அவருடைய அன்பை உணர்ந்து வாழ்கிறீர்களா?

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, அன்புள்ள இறைவா, உம்முடைய ஆவியையும் உம்முடைய அன்பையும் எங்களுடைய சிந்தைகளினால் புரிந்துகொள்ள முடியாது. உம்முடைய கிருபையின் பெருக்கினால், உமது பொறுமையினாலும் நற்குணங்களினாலும் நீர் எங்களை நிரப்பியிருக்கிறீர். அதனால் நாங்கள் பிதாவையும், பரிசுத்த ஆவியானவரையும் உம்மோடு மகிமைப்படுத்தி, உம்முடைய சித்தத்தை மனப்பூர்வமாகச் செய்கிறோம். நாங்கள் உம்முடைய ஆவியின் வல்லமையில் உம்மைப் பின்பற்றும்படி உம்முடைய சமாதானத்தில் எங்களைக் காத்துக்கொள்ளும். மாம்சத்தில் வாழ்கிற மனிதர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மாற்றப்பட்டு, பரிசுத்தமாக்கப்படும்படி, உமக்கு அவர்கள் தங்களை ஒப்புக்கொடுக்க, நாங்கள் அவர்களை அழைக்க வேண்டிய ஞானத்தை எங்களுக்குத் தாரும்.

கேள்வி:

  1. ஆவிக்குரிய மனிதனுடைய ஆர்வங்கள் என்ன? மாம்சத்திற்குரியவர்கள் எதைச் சுதந்தரிப்பார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:03 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)