Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 043 (In Christ, Man is Delivered)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

6. கிறிஸ்துவுக்குள்ளாக மனிதன் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து விடுவிக்கப்படுகிறான் (ரோமர் 8:1-11)


ரோமர் 8:9-11
9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். 11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

ரோமாபுரியிலும் மற்ற இடங்களிலும் இருக்கின்ற விசுவாசிகளுடைய வாழ்வில் அவர்களுடைய சோம்பலான உடல்களையும் தீய எண்ணங்களையும் பரிசுத்த ஆவியானவர் மேற்கொண்டு, தம்முடைய வல்லமையையும் நல்லெண்ணங்களையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்ற உண்மையை பவுல் அவர்களுக்கு அறிவிக்கிறார். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் அவர்களை உருவாக்கி, அவர்களை மறுபடியும் பிறக்கச் செய்து, அவர்களைக் காத்துக்கொண்டு, ஆறுதல்படுத்தி, உறுதிப்படுத்தி, இறைவனுடைய அன்பினால் நிறைத்து, பல்வேறு சேவைகளைச் செய்யும்படி அவர்களைத் தூண்டி, அவற்றைச் செய்வதற்கு வேண்டிய பெலத்தையும் அவரே அவர்களுக்குக் கொடுக்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாழ்வது அவர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

தன்னுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராதவன் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிறிஸ்தவனல்ல. ஏனெனில் கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவின் ஆவியைப் பொழிந்தருளப் பெற்றவன் என்று பொருள். கிறிஸ்து எப்படி தம்முடைய பிதாவின் ஆவியானவரினால் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தாரோ அப்படியே ஒரு விசுவாசியும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறான். உங்களுடைய பெயரோ, உங்களுடைய பிறப்போ, திருமுழுக்கோ, திருச்சபைக்கு நீங்கள் கொடுக்கும் சந்தா பணமோ உங்களை ஒரு கிறிஸ்தவராக மாற்றாது. உங்களில் வாழும் ஆண்டவருடைய வல்லமையின் மூலமாக மட்டுமே நீங்கள் கிறிஸ்துவின் அங்கத்தவராக மாறி, அவருக்குச் சொந்தமாகி, அவருடைய ஆலயத்தில் உயிருள்ள கல்லாக மாற முடியும். இறைவன் அருளும் ஈவாகிய இந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், இறைவனுடைய அன்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களாக இருப்பதால், கிறிஸ்துவுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவன் மட்டுமே கிறிஸ்துவுக்கு அருகில் இருப்பவனாகவும், கிறிஸ்துவைச் சேர்ந்தவனாகவும், அவருடைய அரசின் குடிமகனாகவும் இருக்கிறான். ஆகவே, நீங்கள் அனலுமின்றி, குளிருமின்றி இருக்கக்கூடாது. நீங்கள் கிறிஸ்துவை முழுவதுமாக, நிலையாகப் பற்றிக்கொண்டிருக்கவில்லை என்றால், அவரில் உங்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது. கிறிஸ்து உங்கள் முழுமையையும் விரும்புகிறார், அவர் முழுமையாக உங்களில் வாழ விரும்புகிறார். அல்லது நீங்கள் அவரை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள். அறைகுறையான விசுவாசம் விசுவாசமே அல்ல.

அன்புள்ள சகோதரனே, கிறிஸ்துவினுடைய அன்பு உங்களுடைய உள்ளத்தில் ஊற்றப்பட்டிருந்தால், கிறிஸ்து உங்களில் வாழ்கிறார்; அதனால் நீங்கள் அவரை தொழுதுகொள்ள வேண்டும். ஆவியில் வாழ்கிற அனைவருமே இந்த அற்புதத்திற்கு சாட்சியிடுகிறார்கள்; ஏனெனில் அவர் அவர்களில் குடியிருப்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறார்.

பாவமும் கிறிஸ்துவும் உங்கள் உடலில் ஒன்றாக வாழ்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கிறிஸ்துவை நீங்கள் நேசிக்கிறவராக இருந்தால் அதே வேளையில் யாரையும் உங்களால் வெறுக்க முடியாது. அசுத்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்துவிட்டு, பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பதாக நீங்கள் உரிமைபாராட்ட முடியாது; ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் வைராக்கியமுள்ள ஆவியாக இருந்து, உங்களில் உள்ள பாவத்தை இரக்கமுள்ள வகையில் கொலை செய்கிறார். உங்கள் பாவங்கள் அனைத்தையும் கிறிஸ்துவினிடத்தில் அறிக்கை செய்து, கண்ணீரோடு அவற்றிலிருந்து மனந்திரும்பி, அவற்றை முழு வெறுப்பாக வெறுத்து, உங்கள் பெருமையை விட்டொழித்து, அழுக்கடைந்த உங்கள் மனதை மீண்டும் அவரிடத்தில் ஒப்படைத்தால் ஒழிய உங்கள் மனசாட்சியால் ஆறுதல் அடைய முடியாது. கிறிஸ்து உங்களை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிற காரணத்தினால், இறைவனுடைய ஆவியானவர் உங்களுடைய பாவங்களுக்கு எதிராகப் போராடி, உங்களை முழுவதுமாகப் பரிசுத்தப்படுத்துகிறார்.

நீங்கள் கிறிஸ்துவிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் நம்பிக்கை வைப்பீர்களாயின் அவருடைய இரத்தம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் உங்களைச் சுத்திகரிக்கும். உங்களுடைய பெலவீனத்தில் அவருடைய பெலன் மகிமையாக விளங்கும். உங்களுடைய சித்தம் பெலப்படுத்தப்படும், நீங்கள் உங்களை வெறுத்து, இறைவனுக்காக வாழ்வீர்கள். உங்களுடைய உடல் பாவத்தின் காரணமாக மரணமடையும், ஆனால் உங்களில் இருக்கும் ஆவி நித்திய காலமாக வாழும் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய ஆண்டவர் வரும்போது மகிமையான வாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிற காரணத்தினால், இந்த நம்பிக்கை ஒப்பற்றதாக இருக்கிறது.

கிறிஸ்து கல்லறையில் இருந்து வெளியே வந்தபோது செயல்பட்ட அதே வல்லமை இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு விசுவாசியிலும் செயல்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்து இரண்டாம் முறை வருகிற போது, இறைவனுடைய வாழ்வின் ஓட்டம் நமக்குள்ளாக ஓடும். கிறிஸ்துவை விசுவாசிக்காத எண்ணற்ற மக்களுடைய ஆன்மாக்கள் மரணமடைந்த நிலையில் இருக்கின்றன. ஆனால் நாமோ இறைவனுடைய கிருபையினால், அவருடைய ஆவியானவரை நமக்குள் பெற்று, அவர் தரும் மகிமையையும், மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் அனுபவிப்பதால் நிலைவாழ்வைப் பெற்றிருக்கிறோம்.

விண்ணப்பம்: உயிருள்ள இறைவா, நாங்கள் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி நீர் உம்முடைய ஆவியானவரை எங்களுக்குக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கிறிஸ்துவினுடைய மரணத்தினால் நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரினால் பாதுகாக்கப்படுகிறோம். எங்களுடைய அவநம்பிக்கையிலும் கேட்டிலும் இருந்து நீர் எங்களை மீட்டிருக்கிறீர். மரணம் எங்களை அடிமைப்படுத்த முடியாது என்பதற்காகவும், உம்முடைய மகிமை எங்களில் வாழ்வதால் நாங்கள் உம்முடைய மகனாகிய கிறிஸ்துவைப் போல இவ்வுலகத்தில் வாழக்கூடியவர்களாக இருக்கிறோம்.

கேள்வி:

  1. கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் எதைக் கொடுக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:06 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)