Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 041 (In Christ, Man is Delivered)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

6. கிறிஸ்துவுக்குள்ளாக மனிதன் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து விடுவிக்கப்படுகிறான் (ரோமர் 8:1-11)


ரோமர் 8:2
2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

விசுவாசிகள் தங்கள் இருதயத்தைக் கிறிஸ்துவுக்குத் திறந்துகொடுக்கும்போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களில் ஊற்றப்படுவதால் நம்முடைய விசுவாசம் உயிருள்ள விசுவாசமாக இருக்கிறது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்கும் அனைவரையும் உயிரோடு எழுப்பும் இறைவனுடைய வல்லமையுள்ளவராகப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

ஆதியில் ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்த தெய்வீக ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். இன்று அதே ஆவியானவர் இலட்சக் கணக்கான மனிதர்களில் நம்பிக்கையின் உயிரைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறார். விசுவாசிகளாக நாம் நம்முடைய சொந்த சக்தியில் உயிர் வாழாமல், அவருடைய பராமரிப்பு, ஆதரவு மற்றும் பொறுமை ஆகியவற்றினால்தான் உயிர் வாழ்கிறோம். கிறிஸ்துவின் ஆவியானவரை ஏற்றுக்கொண்டு யாரெல்லாம் தங்கள் இருதயத்தை அவருக்குத் திறந்துகொடுக்கிறார்களோ அவர்கள் இறைவனுடைய வல்லமையினால் நிரப்பப்படுகிறார்கள். நீங்கள் உங்களுடைய சொந்த சித்தத்தினாலோ, சிந்தனையினாலோ, பெலத்தினாலோ மீட்கப்படவும் இல்லை, பரிசுத்தமாக்கப்படவும் இல்லை. பரிசுத்த ஆவியின் வல்லமையினால்தான் நீங்கள் மீட்கப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். அவரே உங்கள் விசுவாசத்தைப் படைத்தவர், உங்கள் அன்பிற்குக் காரணமானவர், உங்கள் மகிழ்ச்சியின் ஊற்றானவர், உங்கள் நற்குணத்தின் ஆதாரமானவர். இரக்கத்தின் செயல்களுக்கும், அன்பின் பரிபூரணத்திற்கும் நம்மைத் தூண்டும்படி உண்மையோடு நம்மில் தொடர்ந்து செயல்படுகிறார்.

காற்று அவ்வப்போது தன்னுடைய திசையை மாற்றுவதைப் போல தெய்வீக ஆவியினால் நமக்குக் கிடைக்கும் இந்த வாழ்வு மாற்றமடைவதில்லை. மாறாக, அது ஒழுங்கானதாகவும், சரியான கட்டளையின்படி நடத்தப்படுவதாகவும் இருப்பதால் “உயிருள்ள ஆவியின் பிரமாணம்” என்று பவுல் அதை அழைக்கக்கூடியதாக இருந்தது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களில் இருக்கும் அவருடைய வாழ்வே ஆவியின் பிரமாணமாக இருக்கிறது என்று வேறு வார்த்தைகளில் சொல்லலாம். பரிசுத்தராகிய இறைவன் புதிய உடன்படிக்கையில் தம்மை விசுவாசிக்கிறவர்களை தம்மோடு இணைத்துக்கொள்கிறார். இந்தப் புதிய உடன்படிக்கையை அவர் தம்முடைய மரணத்தினால் ஏற்படுத்தினார். அவருடைய உண்மை நித்தியமாக நிலைத்திருக்கிற காரணத்தினால் இந்த உண்மையும் இறுதிக் காலமாகிய இக்காலத்திலும் நிலைத்திருக்கிறது. பிதா மற்றும் குமாரனுடைய இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும் பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய விண்ணப்பங்கள், உபவாசங்கள் மற்றும் நீதி ஆகியவற்றின் காரணத்தினால் உங்களிடத்தில் வருவதில்லை. மாறாக, கிறிஸ்து உங்களுக்காக சிலுவையில் நிறைவேற்றி முடித்த நீதியின் காரணத்தினால்தான் அவர் உங்களிடம் வருகிறார். அவருடைய வல்லமை யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. அவர் பரிசுத்த இரக்கத்தோடும் ஒழுங்கோடும் செயல்படுகிறார். அவர் சத்தமிடுவதும் இல்லை, கூக்குரலிடுவதும் இல்லை. கிறிஸ்து பாவிகளை நேசிப்பதால் தாழ்மையோடு இறைவன் தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்து உங்களில் வாழ்கிறார், நீங்கள் கிறிஸ்துவில் வாழ்கிறீர்கள். ஆகவே, அந்நிய ஆவிகள் எதுவும் உங்களுக்குள் வாழ்வதற்கு அனுமதித்து விடாதீர்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவிக்குரிய வாழ்வு கிறிஸ்துவுக்கு அப்பாற்பட்ட உங்கள் சொந்த சொத்து அல்ல. மாறாக, உங்கள் இரட்சகரோடு நீங்கள் தொடர்ந்து தொடர்புகொண்டு, அவரோடு நெருங்கிய முறையில் ஐக்கியம் கொள்வதன் மூலமாகவே நீங்கள் அவருடைய ஆவிக்குரிய உடலில் அங்கமாக விளங்க முடியும்.

கிறிஸ்தவர்கள் தீமைசெய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று கருதுவது சரியானதல்ல. அப்படிக் கூறுவது கிறிஸ்துவை அவமானப்படுத்தும் செயலாகவும், சிலுவைக்கு எதிரான நிந்தனையாகவும் காணப்படுகிறது. கிறிஸ்துவைப் போல நாமும் முன்பைவிட அதிகமாக பாவச் சோதனையை எதிர்த்து நிற்கிறவர்களாக இருப்போம். நாம் சில தருணங்களில் தீவிரமான பாவங்களுக்குள் விழுகிறவர்களாக இருக்கிறோம். கவனமின்றி பாவம் செய்கிறவர்களாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்து பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவித்திருக்கிறார் என்பதுதான் அடிப்படை உண்மையாகும். அதன் காரணமாக நம்முடைய பாவத்திற்கு மரணம் சம்பளமாகக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், நியாயப்பிரமாணம் நமக்கு மரணத்தை வாக்களிப்பதில்லை. நாம் இன்னும் பாவம் செய்யும்படி அது நம்மைத் தூண்டுவதுமில்லை. மாறாக, நாம் மகிழ்ந்திருக்கும்படி நியாயப்பிரமாணம் நம்முடைய இருதயங்களில் குடியிருக்கிறது. ஆகவே, நாம் பாவத்திற்கு அடிமைகள் அல்ல, இறைவனுடைய அன்பின் பிள்ளைகளாக இருக்கிறோம். நம்பிக்கையற்ற மற்றவர்களைப் போல நாம் மரணமடைவதில்லை. மாறாக, கிறிஸ்து என்றென்றும் உயிரோடு இருப்பதைப்போல நாமும் உயிர்தரும் ஆவியினுடைய பிரமாணத்தின்படி என்றென்றும் வாழ்கிறோம். பொருள் செறிந்த அப்போஸ்தலருடைய வார்த்தைகளை ஆழ்ந்து கவனியுங்கள். அப்போது உங்களுடைய உரிமைகளை அறிந்து அவற்றைப் பற்றிக்கொள்ளவும், பாவத்தின் பிரமாணத்திலிருந்து விடுதலையடையவும், தீமையை மேற்கொள்ளவும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி இறைவனுடைய ஆவியில் வாழவும் உங்களால் முடியும்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் பிதாவாகிய இறைவனை மகிமைப்படுத்தி, பரிசுத்த ஆவியானவருடைய நியாயப்பிரமாணத்தின்படி வாழவும் மரணத்திலிருந்து வாழ்வுக்கு நீர் எங்களைக் கொண்டு வந்தமைக்காக உமக்கு நன்றி. எங்களைச் சுற்றியிருக்கிற மக்கள் எங்களில் மரண வாசனையை அல்ல, வாழ்வின் வாசனையை நுகரும்படி உம்முடைய அன்பு எங்களில் வெளிப்படவும், உம்முடைய நடத்தையினால் நாங்கள் உம்மை மகிமைப்படுத்தவும் எங்களுக்கு உதவிசெய்யும்.

கேள்வி:

  1. இந்தப் பகுதியில் அப்போஸ்தலன் ஒப்பிடும் இரண்டு பிரமாணங்கள் யாவை? அவற்றின் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 01:01 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)