Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 029 (The Faith of Abraham is our Example)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21-4:22)
3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்து ஆபிரகாம் மற்றும் தாவீதின் உதாரணங்கள் (ரோமர் 4:1-24)

ஈ) ஆபிரகாமுடைய தைரியமான விசுவாசம் நமக்கு முன்மாதிரி (ரோமர் 4:19-22)


ரோமர் 4:19-22
19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். 20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். 22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ஆபிரகாம் பல இன மக்களுக்குத் தகப்பனாக இருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டார் என்பதை முன்னுரைத்த இறை வார்த்தையை அவர் கேட்டார். இதுவரை ஒரு மகனைப் பெறாத அவருக்கு இந்த வாக்குறுதி ஆச்சரியமளிப்பதாக இருந்த போதிலும், விசுவாசத்தினால் அவர் அதை ஏற்றுக்கொண்டார். மனித நம்பிக்கைகள் அனைத்தும் அற்றுப்போன பிறகு இறைவன் நம்பிக்கையைக் கொடுக்கிறார் என்று அவர் நம்பினார். ஒரு எகிப்திய அடிமையின் மூலமாக ஆபிரகாம் இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, அவர் தன்னுடைய விசுவாசப் போராட்டத்தில் ஏற்கனவே தோற்றுப்போயிருந்தார். இப்போது தன்னுடைய வயது முதிர்ந்த மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தபோதிலும், அவர் இயற்கையின் விதிமுறைகளைப் பார்க்கவில்லை. இயற்கையைப் படைத்தவரும் இயற்கையின் விதிமுறைகளை மாற்றக்கூடியவருமாகிய இறைவனை அவர் பார்த்தார். தன்னுடைய மனைவியாகிய சாராளின் மூலமாக ஒரு மகனைப் பெற்றெடுப்பது நடக்காத காரியம் என்று அவர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அவர் தன்னுடைய விசுவாசத்தை தேற்றிக்கொண்டு, இறை வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொண்டு, நித்திய சத்தியத்தைச் சார்ந்துகொண்டார். மனிதர்களுடைய வழியில் வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லாபோதிலும், மகிமையின் ஆண்டவர் பொய்யுரைக்க மாட்டார் என்றும் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற தவற மாட்டார் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

ஆபிரகாமுடைய இந்த விசுவாசப் போராட்டத்தில் அவர் இறைவனுடைய வாக்குறுதியை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தபடியால் அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது (ஆதியாகமம் 15:1-6; 17:1-8).

ஆபிரகாமுடைய இந்த விசுவாசத்தை நீங்களும் பெற்றிருக்க வேண்டும் என்று இறைவன் இன்று உங்களை அழைக்கிறார். நம்மை நாம் ஆராய்ந்து, நம்முடைய திருச்சபைகளை நாம் ஆழ்ந்து நோக்கினால் நம்முடைய சமூகம் ஆவிக்குரிய நிலையில் சோர்ந்துபோய், பெலனற்று, மரணத்தில் இருக்கிறது என்பதைக் காண முடியும். ஆயினும் உங்களுடைய, என்னுடைய விசுவாசத்தின் மூலமாக ஆயிரக் கணக்கானவர்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுக்க இறைவன் விரும்புகிறார். நம்முடைய சாட்சியை ஆசீர்வதித்து அதை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ண அவர் நாடுகிறார். உங்களுடைய விசுவாச வார்த்தையின் மூலமாக நீங்களும் ஆவிக்குரிய பிள்ளைகளைப் பெற்றெடுப்பீர்கள் என்பதற்கான இறைவனுடைய வாக்குறுதியையும் இயேசுவின் அழைப்பையும் நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுடைய இயலாமையை இறைவனால் மேற்கொள்ள முடியும் என்றும், அனலுமின்றி குளிருமின்றி இருக்கும் உங்கள் திருச்சபையை அவரால் உயிர்ப்பிக்க முடியும் என்றும், கடின இருதமுள்ள மக்கள் நடுவில் இருந்து அவர் தமக்கென்று பிள்ளைகளை ஏற்படுத்த முடியும் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் உண்மையில் மனந்திரும்பவில்லை என்றால் வனாந்தரத்திலுள்ள இந்தக் கல்லுகளிலிருந்து இறைவன் தமக்கென்று பிள்ளைகளை உண்டாக்குவாரே என்று திருமுழுக்கு யோவான் குறிப்பிட்டார். நீங்கள் இறைவனைக் கனப்படுத்துகிறீர்களா? அனலுமின்றி குளிருமின்றி இருக்கும் உங்கள் திருச்சபையைப் பற்றியும் உங்கள் துர் நடத்தைகளைப் பற்றியும் நம்பிக்கை இழந்து விடாமல், மகிமையின் கர்த்தரை நம்பிச் சார்ந்துகொள்கிறீர்களா? அவருடைய வாழ்வின் வல்லமையை நீங்கள் பலரிடம் சுமந்து செல்லும்படி அவரால் உங்களைப் பயன்படுத்த முடியும். ஆபிரகாமின் இறைவனும் பவுலுடைய ஆண்டவருமாகிய நமது இறைவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நம்புங்கள். இவ்வுலகத்தை வெல்லும் வெற்றியே நம்முடைய விசுவாசமாயிருக்கிற காரணத்தினால் அந்த விசுவாசத்தை அவர் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார். நீங்கள் உறங்க வேண்டாம். ஆபிரகாமைப் போல அவருடைய விசுவாசத்தின் எதிர்பார்ப்பு நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஈசாக்கில் நிறைவேறும்வரை காத்திருந்ததைப் போல நீங்களும் காத்திருங்கள். ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தில் போராடிய போதிலும் இறைவன் அவரைத் தீர்க்கதரிசிகளின் தகப்பனாக மாற்றினார். உங்கள் ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். அவர் உங்களை விசுவாசத்தினால் நீதிமானாக்க விரும்புகிறார். ஆகவே, எழுந்திருங்கள் தளர்ந்த கைகளையும் பெலவீனமான உங்கள் முழுங்கால்களையும் நிமிர்த்துங்கள். கர்த்தர் உயிரோடு இருக்கிறார். அவர் ஆவிக்குரிய போராட்டத்தில் உங்களுக்கு முன்பாகச் செல்கிறார்.

ரோமர் 4:23-25
23 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

ஆபிரகாமுக்குக் கொடுக்கபட்ட விசுவாசத்தைப் பொறுத்த மட்டில் நம்முடைய விசுவாசத்தின் அறிவு முழு நிச்சயமாக வளருகிறது. இன்று இறைவன் தம்மை எல்லாம் வல்லவராகவும், மறைவானவராகவும், மாபெரியவராகவும் மட்டும் காண்பிப்பதில்லை. தகப்பனாகிய அவருடைய அன்பை நாம் புரிந்துகொள்ளும்படி அவர் தம்முடைய மகனாகிய இயேசுவை நமக்காக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். நடக்க முடியாத காரியம் நடைபெற்றது. இறைமகன் நம்முடைய பாவத்தை நீக்குவதற்காக மரணமடைந்தார். பாவிகளுடைய குற்றத்தின் நிமித்தமாக பரிசுத்தமுள்ள இறைவன் அவர்களை அழித்துவிடாமல், அந்தத் தீய மனிதரை மீட்கும்படி அவர் தன்னைத் தானே அழித்துக்கொண்டார். இவ்வளவு இரக்கமும், அன்பும், தியாகமும், ஒப்படைப்பும், பொறுமையும் உள்ள இறைவன் நம்முடைய இறைவன்.

கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிரோடு எழுந்தபோது தியாகத்தின் வெற்றி வெளிப்பட்டது. இறைவன் தம்முடைய கோபம் முழுவதையும் சிலுவையில் தம்முடைய மகனாகிய ஆட்டுக்குட்டியின் மீது பொழிந்தருளின போது, அவர் முற்றிலும் அவரைக் கைவிட்டு விடவில்லை. குற்றமற்ற அவரை பிதா உயிரோடு எழுப்பி, அவருடைய பலி தம்முடைய தெய்வீக சித்தத்திற்கு உட்பட்டது என்பதை தெளிவாக நிரூபித்துக் காண்பித்தார். இவ்விதமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நீதிமானாக்கப்படுதலின் உண்மையை மெய்ப்பிக்கிறது. கிறிஸ்து அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக பரலோகத்திற்கு எழுந்து செல்வதோ, பிதாவுக்கு நெருங்கி வருவதோ சாத்தியமல்ல. ஆனால் இறைவனுக்கும் உலகத்திற்கும் இடையிலான ஒப்புரவாகுதலை இறைவன் சிலுவையில் நிறைவேற்றி முடித்தார் என்பதை கிறிஸ்துவை உயிரோடு எழுப்பியதன் மூலமாக நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்.

இன்று நம்முடைய ஒரே பரிந்துரையாளராகிய கிறிஸ்து, இறைவனுக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் பரிசுத்தமுள்ள இறைவனுக்கும் நமக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்கிறார். தம்முடைய தியாக பலியின் விளைவை நடைமுறைப்படுத்துகிறார். நாம் குழப்பமின்றி நம்முடைய விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், கிறிஸ்துவின் மூலமாக இறைவனை விசுவாசிக்கிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்கவும், நமக்காக அவர் நித்தியமாகப் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.

ஆகவே, அனைத்து பிரச்சனைகள், பயங்கள் மற்றும் ஆபத்துக்களில் உங்கள் விசுவாசம் எங்கே? இன்று இறையரசின் வருகையைக் குறித்த உங்கள் நம்பிக்கை எங்கே? ஆயிரக்கணக்கானவர்கள் மறுபடியும் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை எங்கே? கிறிஸ்து இறைவனோடு நம்மை ஒப்புரவாக்கியிருக்கிறார். இன்று தன்னுடைய பரிந்துபேசுதலின் பணியின் மூலமாக நம்முடைய நீதிமானாக்கப்படுதலை அவர் உண்மை என்று விளங்கச் செய்கிறார். உங்கள் விசுவாசத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த உயிருள்ள தண்ணீர், கனியற்ற, செத்த இருதயங்களை உயிர்ப்பிக்கும் என்று விசுவாசியுங்கள். விசுவாசியுங்கள், ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து உயிரோடிருக்கிறார்.

விண்ணப்பம்: ஓ, ஆண்டவராகிய இறைவா, நீர் உயிருள்ளவராக இருந்து உலகத்திற்குப் பிரசங்கிக்கும்படி எங்களை அனுப்புகிறீர். உம்முடைய பணியாளனாகிய ஆபிரகாம் உம்மை விசுவாசித்தார். அதன் மூலமாக அவருக்கும் முதிர்வயதுள்ள அவருடைய மனைவியாகிய சாராளுக்கும் உம்முடைய இரக்கத்தினால் ஒரு குழந்தையைக் கொடுத்தீர். அந்தக் குழந்தை மூலமாகவே உலக மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கிறது. எங்கள் பெலவீனங்களில் உம்முடைய வல்லமை விளங்கும்படி, எங்களுக்கு நேரிடுகிற பாவச் சோதனைகளின் போதும் உம்மை நம்பும்படி, எங்கள் பெலவீனமான விசுவாசத்தை நீர் பலமுள்ளதாக்கும். இன்றும் நீர் உயிருள்ளவராக இருந்து என்றென்றும் ஆட்சிசெய்கிற காரணத்தினால் ஆயிரக் கணக்கானவர் உமக்காகப் பிறப்பார்கள் என்று உறுதியளிப்பதால் நாங்கள் உமக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

கேள்வி:

  1. ஆபிரகாமுடைய விசுவாசப் போராட்டத்தில் இருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே
நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

(ரோமர் 5:1)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 10:18 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)