Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 030 (Peace, Hope, and Love Dwell in the Believer)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
இ - நீதிமானாக்கப்பட்டவர்களுக்கு இறைவனோடும் மனிதர்களோடும் புதிய உறவு ஏற்படுகிறது (ரோமர் 5:1-21)

1. விசுவாசமும் நம்பிக்கையும் அன்பும் ஒரு விசுவாசிக்குள் இருக்கிறது (ரோமர் 5:1-2)


ரோமர் 5:1-2
1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். 2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

இயற்கையாக மனிதன் இறைவனுக்கெதிரான கலகத்தில்தான் வாழ்கிறான். நம்முடைய பாவங்கள் இறைவனுக்கு எதிரான மீறுதல்களாக இருப்பதால் அனைத்து மனிதர்களும் பரிசுத்தருக்கு எதிரான மீறுதல்களை நடப்பிக்கிறார்கள். ஆகவே, மனிதர்களுடைய அனைத்து அநியாயத்திற்கும் அவபக்திக்கும் விரோதமாக இறைவனுடைய கோபம் வெளிப்பட்டிருக்கிறது.

இப்போது கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்து மனிதர்களை இறைவனோடு ஒப்புரவாக்கியிருக்கிறார். மனிதர்களையும் இறைவனையும் பிரிக்கிற பாவத்தை குமாரன் நீக்கிவிட்ட காரணத்தினால் இப்போது நாம் சமாதானத்தின் யுகத்திற்குள் நுழைந்திருக்கிறோம். இறைவனுடைய இரட்சிக்கும் கிருபை அனைத்து மனிதர்களுக்கும் தோன்றியிருக்கிறது. மீட்பராகிய இயேசுவின் மூலமாக இறைவனை விசுவாசிப்பவர்களுக்கு எத்தனை பெரிய ஆசீர்வாதங்களும், விடுதலையையும், அமைதியும் கிடைக்கிறது! தீமை செய்கிறவர்களுக்கு சமாதானம் இல்லை, சிலுவையில் அறையப்பட்டவரை விசுவாசிக்காவிட்டால் அந்த ஆத்துமாக்களுக்கு அமைதியில்லை.

பழைய உடன்படிக்கையில் தலைமைக் குருக்கள் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை மகா பரிசுத்த இடத்திற்குள் சென்று, இஸ்ரவேல் மக்களுக்காக பாவ நிவர்த்தி செய்வார். புதிய உடன்படிக்கையில் ஒவ்வொரு விசுவாசிகளும் கிறிஸ்துவினால் பரிசுத்தப்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்படுவதால் இவ்வாறு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்லும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்தபோது மகா பரிசுத்த இடத்தை மறைத்திருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது, அதனால் பரிசுத்தருக்கு முன்பாக நிற்கும் உரிமையை நாம் பெற்றிருக்கிறோம். இறைவன் தம்மை நம்பி தம்மிடம் வரும்படி ஒவ்வொருவரையும் அழைக்கிறார். அவர் பயங்கரமானவரும் அல்ல, நம்மை அழிப்பவரும் அல்ல, நமக்குத் தூரமானவரும் அல்ல. மாறாக, அவர் அன்பும் இரக்கமும் நிறைந்த பிதாவும் மீட்பருமாக இருக்கிறார். அவர் நம்முடைய விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறார், நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கிறார், தங்கள் ஆத்துமாவுக்கு ஓய்வைத் தேடுகிற அனைவருக்கும் சிலுவைத் தியாகத்தின் ஆசீர்வாதத்தைக் கொண்டு செல்லும்படி தம்முடைய குமாரனுடைய நற்செய்தியைப் பரப்புவதற்கு நம்மைப் பயன்படுத்த விரும்புகிறார்.

கிறிஸ்து உயிரோடு எழுந்த பிறகு தம்முடைய சீடர்களுக்குக் காட்சியளித்தபோது பல தருணங்களில் “உங்களுக்குச் சமாதானம்” என்று வாழ்த்தினார். அதற்கு இரண்டு பொருள் இருக்கிறது:

  1. இயேசுவின் சிலுவை மரணத்தின் நிமித்தமாக இறைவன் உங்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார்.
  2. எழுந்து போய் இயேசுவின் கட்டளைப்படி நற்செய்தியைப் பரப்புங்கள். அவர், “பிதா என்னை அனுப்பியதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் சமாதானத்தினால் நிறைந்திருக்கிறார்கள். தங்களுக்காக மட்டுமல்ல, உலகத்தில் இருக்கிற மக்களுக்கு சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கும்படி இறைவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நீதிமான்களாக்கப்படுவதினால் உண்டாகும் மனச் சமாதானமும், பரிசுத்தருடைய சமூகத்தில் செல்லத்தக்க உரிமையும் கிடைத்திருப்பதோடு, நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையையும் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று பவுல் குறிப்பிடுகிறார். இறைவன் நம்மைத் தம்முடைய சாயலில் படைத்தார், ஆனால் நம்முடைய பாவத்தினால் நமக்குக் கொடுக்கப்பட்ட இறைவனுடைய மகிமையை இழந்தோம். இப்போது இறைவனிடத்தில் இருக்கிறதும் அவருடைய குமாரனில் ஒளிருகிறதுமான அதே மகிமையை பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர் நமக்குத் திரும்பக் கொடுப்பார் என்ற நம்பிக்கை நம்முடைய இருதயத்தில் வந்திருக்கிறது. இறைவனுடைய மகிமைக் குறித்து நீங்கள் பெருமை கொள்கிறீர்களா? உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையை நீங்கள் பற்றிக்கொள்ளுகிறீர்களா? நம்முடைய எதிர்காலம் ஒரு கற்பனையோ, நினைவோ, விருப்பமோ அல்ல. அது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நம்மில் பலன் செய்திருக்கிறது. நம்மில் வெளிப்படப்போகும் மகிமைக்கு அவரே அச்சாரமாயிருக்கிறார்.

ரோமர் 5:3-5
3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

நாம் இப்போது பரலோகத்தில் அல்ல பூமியில்தான் வாழ்கிறோம். அனைத்து துன்பங்கள் மற்றும் உபத்திரவங்கள் மூலமாக இயேசு கடந்து சென்றதுபோல, நாமும் விசுவாசத்திலும் ஆவிக்குரிய கனிகளிலும் வளரும்போது, மனிதர்களுடைய தாக்குதல்கள், நோய்கள் மற்றும் பிசாசினுடைய தூண்டுதல்கள் ஆகியவற்றையும் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால், பவுல் இவற்றை எழுதும்போது கண்ணீரோடும், கவலையோடும் எழுதவில்லை. நாம் உபத்திரவங்களில் மேன்மை பாராட்டுகிறோம், ஏனெனில் அவற்றின் மூலமாக கிறிஸ்துவை நாம் பின்பற்றுகிறோம் என்பதை அவற்றினால் அறிந்துகொள்கிறோம் என்று அவர் குறிப்பிடுகிறார். நாம் அவருடைய உபத்திரவங்களில் பங்குகொள்வோமானால் அவருடைய மகிமையிலும் பங்குபெறுவோம். ஆகவே எதையும் முறுமுறுப்பில்லாமல் செய்யுங்கள், ஏனெனில் நம்முடைய கர்த்தர் உயிரோடிருக்கிறவராகையால் அவருடைய அனுமதியின்றி எதுவும் நம்முடைய வாழ்வில் நடந்துவிடாது.

இவ்வுலக பாரங்களை நாம் சுமப்பது நம்முடைய சுயத்தை வெறுப்பதற்கும், நம்முடைய நோக்கங்கள் தூய்மை அடைவதற்கும், நம்முடைய சித்தத்தை இயேசுவின் வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுப்பதற்கும் நம்மை நடத்தும். பொறுமை நம்மில் வளருவதோடு இயேசுவின் மீதான நம்முடைய நம்பிக்கையும், அவர் நமது வாழ்வில் இடைப்பட வேண்டும் என்ற எண்ணமும் நம்மில் வளரும். பாடுகளின் பள்ளியில் நம்முடைய இயலாமையை எப்படி மேற்கொள்வது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். நம்முடைய தோல்விகள் நடுவிலும் ஆபிரகாமைப் போல வெற்றி பெறுவதை உறுதிசெய்துகொள்வோம்.

இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் ஆபிரகாமுடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாக்கியம் நமக்கிருக்கிறது. ஏனெனில், இந்தக் கிருபையின் காலத்தில், உண்மையான இறைவனாகிய பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் கொடுக்கப்பட்டிருப்பதால், இறைவனுடைய அன்பு நமது வாழ்வின் நடுவில் ஊற்றப்பட்டிருக்கிறது. ஐந்தாம் அதிகாரத்தின் ஐந்தாம் வசனம் நாம் எடுத்துக்கூற முடியாத அளவுக்கு உன்னதமானதாகவும் அற்புதமானதாகவும் இருக்கிறது. இந்த வசனத்தை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அது வேதாகமத்தின் பொக்கிஷங்களில் ஒன்று. மனிதர்களுடைய அன்போ இரக்கமோ நம்முடைய இருதயங்களில் ஊற்றப்படவில்லை. நித்தியமான, பழுதற்ற, உறுதியான இறைவனுடைய அன்பு, அதாவது இறைவனே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறார். அது நம்முடைய இருதயங்களில் வாழ்கிறது என்று சொல்லப்படவில்லை. அது நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லப்படுகிறது. நம்முடைய நற்குணத்தினால் அல்ல, கிறிஸ்துவின் இரத்தம் நம்மைச் சுத்திகரித்திருப்பதால் அந்த அன்பு நம்மில் ஊற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான் நம்முடைய அழிந்துபோகும் உடலை இறைவனுடைய ஆலயமாக மாற்றி பரிசுத்த ஆவியானவர் அதில் குடிகொள்கிறார். தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து கொடுக்கிற இந்த பரலோக வல்லமை, அடிப்படையான இறைவனுடைய பரிசுத்த வல்லமை. இறைவனுடைய அன்பின் ஆவியைப் பெற்றுக்கொள்கிற அனைவரும் மறுபிறப்பையும் நித்திய வாழ்வையும் அனுபவிக்கிறார்கள். தெய்வீக ஆவியானவர் நம்மில் வாழ்வது நமக்கு சமாதானத்தைக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நம்முடைய பொறுமையை பலப்படுத்துகிறதாகவும், எதிரிகளையும் நேசிக்கும் அன்பை நமக்குக் கொடுக்கிறதாகவும், நம்முடைய வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் துணை செய்வதாகவும் அமைகிறது. கிறிஸ்து நம்மைத் திக்கற்றவர்களாக விட்டுவிடாமல் உடனடியாக வெளிப்படும் அவருடைய வல்லமையையும் அன்பையும் மகிமையின் நம்பிக்கையையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவா உம்மை நாங்கள் தொழுகிறோம். அழிந்துபோகக்கூடிய ஏழைப் புளுக்களாகிய எங்களை நீர் புறக்கணித்துவிடாமல், உம்முடைய பரிசுத்த அன்பை எங்களுடைய அழியக்கூடிய உடலில் ஊற்றினீர். உம்முடைய இரக்கத்தின் மாபெரும் உதாரணங்களாக எங்கள் வாழ்க்கை மாறும்படி உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாங்கள் அன்பு செய்யும்படி அப்படிச் செய்தீர். நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதித்து, எங்கள் இருதயங்களில் நீர் இருப்பதால் மகிழ்ச்சியடைகிறோம். உம்முடைய அன்பின்படி நடந்துகொள்ள எங்களுக்கு அனுக்கிரகம் காண்பித்தருளும்.

கேள்வி:

  1. இறைவனுடைய சமாதானம் நம்முடைய வாழ்வில் எப்படிக் கொண்டுவரப்படுகிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 11:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)