Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 064 (Preaching in Cyprus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)

2. சீப்புரு தீவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:4-12)


அப்போஸ்தலர் 13:4-12
4 அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள். 5 சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். 6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். 7 அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். 8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். 9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: 10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? 11 இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். 12 அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

பரிசுத்த ஆவியானவர் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களை அனுப்பினார். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்திய காரணத்தினால் அவர்களை அவர் வழிநடத்தி அவர்களுக்கு அவர் உதவினார். முதலில் அவர் அவர்களை அந்தியோகியாவிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த செலூக்கியா என்ற துறைமுகப் பட்டணத்திற்கு வழிநடத்தினார். அங்கு அவர்கள் முழங்கால் படியிட்டு தங்களை வழியனுப்ப வந்திருந்த சகோதரர்களோடு சேர்ந்து விண்ணப்பம் செய்தார்கள். அங்கிருந்து அவர்கள் கப்பலேறி பர்னபாவின் பிறப்பிடமான சீப்புரு தீவிற்குப் போனார்கள். பர்னபா அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்த காரணத்தினால் தம்முடைய சொந்த நாட்டு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து ஊழியத்தை நன்கு வளர்க்கலாம் என்று அவர் கருதினார்.

அவர்கள் சீப்புரு தீவின் கிழக்குக் கடற்கரையிலிருந்த சாலமி பட்டணத்திற்கு வந்தபோது சந்தைவெளியில் இருந்த புறவினத்து மக்கள் நடுவில் பேசும்படி அவர்கள் நிற்கவில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குச் சென்று இறைவனுடைய வார்த்தையை அவர்களுக்கு வழங்கினார்கள். மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரத்தில் அமைந்திருந்த இந்தத் தீவில் பழைய ஏற்பாட்டு அங்கத்தவர்கள் பலர் காணப்பட்டார்கள். ஆயினும் சீப்புரு தீவில் இயேசுவை விசுவாசித்த யூதர்களைப் பற்றியோ அவரைக் கோபத்தோடு புறக்கணித்த யூதர்களைப் பற்றியோ நாம் எதுவும் வாசிப்பதில்லை. அங்கிருந்தவர்களில் யாரும் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை என்பது தெரிகிறது. பல்வேறு வித்தியாசமான சிந்தனைகளுடன் பலர் அங்கு வந்து செல்வதால் இவர்களை அந்த மக்கள் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் தங்கள் வழியில் தொடர்ந்து சென்றார்கள். அவர்களோடு பர்னபாவின் மருமகனாகிய யோவான் மாற்கும் சென்றார். அவர் இந்தப் பணிக்காக பரிசுத்த ஆவியினால் அழைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவரும் அவர்களுக்குத் துணையாக சேர்ந்து பிரயாணம் செய்துகொண்டிருந்தார். 160 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்தத் தீவை அவர்கள் சுற்றிலும் நடந்து, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, மக்களை மனந்திரும்பும்படி அழைத்தார்கள். அவர்களுடைய பிரசங்கத்தை யாரும் செவிகொடுத்துக் கேட்டார்கள் என்றோ, அவர்களுடைய அழைப்பை யாரும் கேட்டார்கள் என்றோ, அல்லது திருமுழுக்குப் பெற்றார்கள் என்றோ நாம் வாசிப்பதில்லை. அங்கு எந்தத் திருச்சபையும் நிறுவப்படவில்லை. இவ்வாறு பரிசுத்த ஆவியானவரால் தெரிவுசெய்யப்பட்டவர்களுடைய சேவை பயனுள்ளதாக ஆரம்பத்தில் காணப்படவில்லை.

பவுலுடைய காலத்தில் சீப்புரு தீவின் தலைநகரமாயிருந்த பாப்போ பட்டணத்தை அவர்கள் இறுதியில் வந்தடைந்தார்கள். அது ரோம ஆளுனராகிய செர்கியுபவுல் என்பவர் குடியிருந்த இடமாயிருந்தது. அவர் அந்த நாட்டை ஆளுகை செய்யும் உயரதிகாரியாக இருந்தார். அவர் நாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவிற்குப் பதிலளிக்கத் தேவையில்லாவராகக் காணப்பட்டார். அந்த ஆளுனர் ஞானமுள்ளவராகவும், அறிவாளியாகவும், தம்முடைய காலத்திற்குரிய தெளிவுள்ளவராகவும் காணப்பட்டார். அவர் இந்தப் புதிய உபதேசத்தைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்த உபதேசத்தைப் பற்றி இன்னும் அறிந்துகொள்வதற்கு, அந்தப் பிரசங்கிகளைத் தன்னிடத்திற்கு அழைத்தனுப்பினார்.

ஆனால் அவருடைய அரண்மனையில் எலிமாஸ் என்ற யூதன் வாழ்ந்து வந்தான். அவன் மாயவித்தைக்காரனாயிருந்தான். எலிமாஸ் தமக்கு தீர்க்கதரிசன வரம் இருப்பதாகக் கூறிக்கொண்டு சாத்தானுக்குச் சேவைசெய்யும்படி அதைப் பயன்படுத்தி வந்தான். சில மனிதர்களையும் எதிர்காலத்தையும் பற்றிய காரியங்களை ஆளுனருக்கு அறிவித்ததன் மூலம் தன்னை ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக நிலைநிறுத்திக்கொண்டான். இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி ஆளுனரையும் அந்நகரத்திலிருந்த மக்கள் அனைவரையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தான்.

நகரத்திற்குள் புதிய ஆவியைக் கொண்டு வந்த பவுலையும் பர்னபாவையும் குறித்து அந்த எலிமாஸ் என்பவன் ஆளுனரை எச்சரித்திருந்தான். ஆனால் ஆளுனர் இவ்விருவருடைய நற்செய்தியைக் கேட்டபோது அது அவருடைய உள்ளத்தைத் தொட்டது. இவ்வாறு நரகத்தின் ஆவியினால் நிறைந்தவன் எல்லா தந்திரத்தோடும் சவுலையும் பர்னபாவையும் எதிர்ப்பதையே தன்னுடைய தொழிலாகக் கொண்டிருந்தான். இறைவனுடைய அரசு தங்கள் பகுதிக்குள் வருவதைத் தடைசெய்வதற்கு தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் அவன் செய்தான். தன்னுடைய எஜமான் இந்தப் புதிய விசுவாசத்திற்குச் செவிகொடுத்துவிட்டால், முழுத் தீவுமே கிறிஸ்தவத்தைத் தழுவி விடும் என்று அதைத் தடைசெய்வதற்கு கடுமையாகப் போராடினான். பல சந்தர்ப்பங்களில் பிரசங்கங்கள் தோற்றுப் போவதற்கு இதுதான் காரணம். சில நாடுகளில் அசுத்த ஆவிகள் அமர்ந்துகொண்டு நற்செய்தி உள்ளே நுழைவதை எதிர்த்துக்கொண்டிருக்கின்றன. பரலோகத்தின் ஆவி பூமியிலுள்ள ஆவியோடு ஒத்துப்போவதில்லை. அனைத்து மதங்களின் கூட்டும் மேலோட்டமான பொய்யாகவே இருக்கிறது.

பர்யேசு என்று மறுபெயர் பெற்றிருந்த அந்த எலிமாஸ் என்பவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த கிறிஸ்துவுக்கு முற்றிலும் எதிரானவன் என்பதை சவுலும் பர்னபாவும் சீக்கிரமாகவே உணர்ந்துகொண்டார்கள். சாத்தானால் நிறைந்திருந்த அந்த மாயவித்தைக்காரன் பழைய ஏற்பாட்டு சத்தியத்தைப் புரட்டிப் போதித்தான். தனக்கிருந்த மார்க்க அறிவைப் பயன்படுத்தி தன்னுடைய பொய்களை பரப்பிவந்தான். ஞானமான முறையில் அவன் எடுத்துரைத்த பெருமையின் வார்த்தைகள் சத்தியத்தையும் சரியானதையும் மறுதலிப்பதாகவும் புறக்கணிப்பதாகவும் இருந்தது.

அந்த ஆளுனருக்குப் சவுலுடைய பெயரும் அந்த மாயவித்தைக்காரனுக்கு இயேசுவின் பெயரும் இருந்தது. ஆகவே அப்போஸ்தலர்கள் ஆளுனர் மூலமாக அந்தத் தீவு முழுவதும இறையாட்சிக்கு ஆயத்தப்படும் என்றும் அதன் மூலமாக முழு ரோமப் பேரரசும் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் என்றும் நினைத்தார்கள். ஆனால் அவர்களுடைய கனவு பொய்த்துப் போனது, கிறிஸ்துவினுடைய சத்தியத்திற்கும் பிசாசின் மாயத்திற்கும் இடையில் பெரிய மோதல் ஏற்பட்டது. பொய்த் தீர்க்கதரிசியும் மாயவித்தைக்காரனுமாகிய அவனுடைய முகத்திரையை சவுல் அனைத்து மக்களுக்கும் முன்பாகக் கிழித்தெறிந்தார். பவுல் அவனுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் பிரசங்கிக்கவில்லை. மாறாக, கிறிஸ்துவின் நாமத்தில் அவனைச் சபித்து, செயல்படும் கர்த்தருடைய கரத்திலுள்ள விசுவாசத்தினால் பவுல் அவனுடைய தீய ஆவியை மேற்கொண்டார். பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்ட பவுல் அந்தக் கள்ளத்தீர்க்கதரிசியின் உள்ளான மனிதனை உருவக்குத்தினார். அந்த ஏமாற்றுக்காரனை உடல்ரீதியாக அவர் கொலை செய்யவில்லை. ஆனால் அவர் ஒரு அற்புதத்தைச் செய்யும்படி இயேசு கிறிஸ்து அவரை பெலப்படுத்தினார். தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் தான் குருடானபோது எவ்வாறு தனது பாவங்களை உணர்ந்து மனந்திரும்பினாரோ அதேபோல இந்த மாயவித்தைக்காரனும் தன்னுடைய பாவங்களை உணர்ந்துகொள்ளும்படி அவனைக் குருடாக்கினார். ஆனால் பவுலைப் பொறுத்தமட்டில் தான் குருடாக்கப்பட்டபோது, தான் யார் என்றும் உண்மையான கர்த்தர் யார் என்றும் இரட்சிப்பு என்றால் என்ன என்றும் உணர்ந்துகொண்டார்.

இயேசு தம்முடைய பணியாளாகிய பவுலுடைய சாட்சியின் மூலமாக தாமே அனைத்து ஆவிகளுக்கும் மேலான கர்த்தர் என்றும் பிசாசுகளை வெற்றிகொள்பவர் என்றும் தம்மைக் காண்பித்தார். அங்கிருந்தவர்கள் மாபெரும் இறைவனுடைய வெற்றியை உணர்ந்துகொண்டார்கள். அதன் பிறகு அப்போஸ்தலனாகிய பவுலுடைய பணிகளைக் குறித்துத்தான் அப்போஸ்தலர் நடபடிகள் பேசுகிறது. ஏனெனில் உங்களில் சிறியவன் பெரியவனாவான் என்று கர்த்தர் உரைத்திருக்கிறார். கிறிஸ்துவின் மகிமைக்காக வைராக்கியம் கொண்டிருந்த அவர் இரட்சகருடைய நாமத்தை உயர்த்தும்படியான வல்லமையைப் பெற்றுக்கொண்டார். இந்த மகிமையே பரிசுத்த ஆவியானவருடைய முழுமையான நோக்கமாயிருக்கிறது.

அந்த ஆளுனர் நடைபெற்ற அற்புதத்தைப் பார்த்ததால் மட்டுமே விசுவாசம் வைத்தாரே தவிர முழு இருதயத்தோடும் விசுவாசிக்கவில்லை. அவர் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவருடைய பெயர் “பவுல்” என்றிருந்தாலும் பவுலைப் போல கிறிஸ்துவை பிரசங்கிக்கிறவராக அவர் மாறவில்லை. அவருக்கு விசுவாசமிருந்தும் அவர் நடுநிலையிலேயே இருந்தார். அவர் மந்தமாக இருந்த காரணத்தினால் இறைவனுடைய அரசின் பரவுதல் அங்கு தடைபட்டது. தானே இயேசுவின் நாமத்தை அறிந்திருந்த காரணத்தினால் அத்தீவில் அந்த நாமத்தைப் பிரசங்கிப்பதற்கு அவர் தடையேதும் விதிக்கவில்லை. இதற்குப் பிறகு நாம் செர்கியுபவுலைப் பற்றி திருச்சபை வரலாற்றில் எங்கும் வாசிப்பதில்லை.

கர்த்தருடைய உபதேசம் வெறும் சிந்தனையல்ல, பரத்திலிருந்து உண்டாகும் வல்லமை என்று பவுலும் பர்னபாவும் அறிந்துகொண்டார்கள். கர்த்தரே தம்முடைய வெற்றிப்பயணத்தில் அவர்களை வழிநடத்தினார். உண்மையுள்ள பர்னபாவினுடைய சொந்த நகரத்தில் தாங்கள் நிறைவேற்றிய பணி அவர்களுக்கு அதிக மக்கள் மனந்திரும்புதலைக் கண்டடைவதற்கு ஏதுவாக இருக்கவில்லை.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீரே அனைத்து தீமைக்கும் மேலாக வெற்றிகொள்பவர். எங்களைச் சுற்றிலும் உம்முடைய நற்செய்திக்குத் தடையாயிருக்கிற சக்திகள் அனைத்தையும் அழிக்கும்படி நாங்கள் விண்ணப்பிக்கிறோம். உம்முடைய வெற்றிப் பயணத்தில் யாரும் குறுக்கே நில்லாதபடிக்கு உம்முடைய பணியாளர்களுடைய செய்தியை நீர் ஆசீர்வதித்தருளும். உம்முடைய கரம் எங்களுடைய சாட்சியோடு தொடர்ந்து வரும்படியாகவும் உம்முடைய பாதுகாப்பு உமது பணியாளர்கள் அனைவர் மீதும் இருக்கும்படியாகவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி:

  1. பவுல் ஏன் கோபமடைந்தார்? பவுலுடைய வார்த்தைகளை உறுதிசெய்யும்படி கர்த்தருடைய கரம் எவ்வாறு பணியாற்றியது?

கேள்விகள் – 4

அன்பார்ந்த வாசகருக்கு,
நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுக்கு நாங்கள் எழுதியிருக்கும் இந்த விளக்கங்களை வாசித்ததால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும். உங்கள் பதில்கள் 90 சதவீதம் சரியாக இருந்தால் இந்த வேதவிளக்க வரிசையின் அடுத்த நூலை உங்கள் நன்மைக்காக இலவசமாக அனுப்பித் தருவோம். உங்கள் விடைத்தாளில் உங்கள் பெயரையும் முகவரியையும் முழுமையாகக் குறிப்பிடத் தவறவேண்டாம்.

  1. பவுல் தம்முடைய முந்தைய நண்பர்களால் உபத்திரவங்களைச் சந்தித்தபோதும் திருச்சபை அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கிய போதும் கிறிஸ்து அவரை எவ்வாறு ஆதரித்தார்?
  2. லித்தாவில் இருந்த ஐனேயாவை கிறிஸ்து எவ்வாறு குணப்படுத்தினார்?
  3. மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள் என்று இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை எவ்வாறு நிறைவேறியது?
  4. ரோம அதிகாரியாகிய கொர்நேலியுவிற்கு தேவதூதன் காட்சிகொடுத்ததன் முக்கியத்துவம் என்ன?
  5. “இறைவன் சுத்தமாக்கியவைகளை நீ அசுத்தம் என்று அழைக்காதே” என்று பேதுருவுக்கு இறைவன் சொன்னதன் பொருள் என்ன?
  6. ஒரு மீனவனாகிய பேதுருவை வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை ரோம இராணுவ அதிகாரியாகிய கொர்நேலியுவின் உள்ளத்தில் ஏற்படுத்தியது என்ன?
  7. “இயேசு கிறிஸ்து அனைவருக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்ற கூற்றின் பொருள் என்ன?
  8. மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வாசம் செய்கிறார்?
  9. யூதக் கிறிஸ்தவர்களில் நியாயப்பிரமாணத்தை வலியுறுத்தியவர்கள் பேதுருவோடு ஏன் முரண்பட்டார்கள்?
  10. அந்தியோகியாவிலிருந்த அந்த புகழ்பெற்ற திருச்சபை எவ்வாறு தோன்றியது?
  11. உண்மையான கிறிஸ்தவனுடைய அடையாளங்கள் என்ன?
  12. அகிரிப்பா அரசன் கிறிஸ்தவர்களை ஏன் துன்பப்படுத்தினான்? இந்த துன்புறுத்தலின் விளைவாக மக்கள் அவனைக் குறித்து என்ன நினைத்தார்கள்?
  13. பேதுரு கதவைத் தட்டியதைக் கண்டபோது வீட்டில் விண்ணப்பித்துக்கொண்டிருந்தவர்கள் ஆச்சரியமடைய வேண்டிய காரணம் என்ன?
  14. உபத்திரவங்கள் நடுவிலும் இறைவனுடைய வார்த்தை எவ்வாறு வளர்ந்து பெருகிறது?
  15. பரிசுத்த ஆவியானவர் யார்? அந்தியோகியாவில் ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பங்களை அவர் எவ்வாறு வழிநடத்தினார்?
  16. பவுல் ஏன் கோபமடைந்தார்? பவுலுடைய வார்த்தைகளை உறுதிசெய்யும்படி கர்த்தருடைய கரம் எவ்வாறு பணியாற்றியது?

நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் எழுதுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அதன்மூலம் நீங்கள் நித்திய பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நாங்கள் உங்கள் பதில்களை விண்ணப்பத்துடன் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய விலாசம்.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)